ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா; ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டு
சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு தொடர்பாக எதிர்கொண்ட சிக்கலால், கடந்த 5ஆம் திகதி தன் பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார் ஸேக் ஹசீனா.
அதன் பிறகு, அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் கான் அதிபர் முகமது ஷஹாபுதீனால் நியமிக்கப்பட்டார். மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை இந்த ஆட்சி தொடரும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், பதவி விலகிய பின் முதல்முறையாக ஷேக் ஹசீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ;
“மார்ட்டின் தீவுகளையும் வங்காள விரிகுடாவையும் அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுத்திருந்தால் நான் பதவியில் நீடித்திருக்க முடியும். ஆனால் அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை.
தற்போது அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்துள்ளேன். ஒருபோதும் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளுக்கு விட்டுத்தர இயலாது. பிரதமர் பதவியில் நீடித்திருந்தால் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்திருக்கும். அதனால் மேலும் பலர் உயிரிழக்கக்கூடும். நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டிருக்கும். எனவேதான், பதவியை ராஜிநாமா செய்தேன்.
மக்களின் வாக்குகளால்தான் நான் வெற்றிபெற்றேன். என்னுடைய வலிமையே மக்களாகிய நீங்கள் தான். நான் வேண்டாம் என நீங்கள் முடிவெடுத்ததால் நாட்டைவிட்டு வெளியேறினேன்.
மாணவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த வேளையில் நான் கூறிய வார்த்தைகள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டன. போராட்டம் நடத்தும் மாணவர்களை பயங்கரவாதிகள் என ஒருபோதும் நான் கூறவில்லை. அந்த நாளில் வெளியான காணொலிகளை மீண்டும் ஒருமுறை நீங்கள் பார்த்தால் உண்மை புரிய வரும்.
அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொல்லப்படுவதாகவும் அவர்களின் வீடுகள் சூறையாடப்படுவதாகவும் வெளிவந்த செய்திகளைக் கேட்டு துயரடைந்தேன். கடவுளின் கருணையால் மீண்டும் வங்கதேசம் திரும்புவேன் என நம்புகிறேன்.
எந்த நாட்டுக்காக என் தந்தையும் குடும்பத்தினரும் உயிர்த்தியாகம் செய்தார்களோ அந்த நாட்டின் நலனுக்காக எப்போதும் பிரார்த்திக்கிறேன். போராட்ட சூழலை பயன்படுத்தி சில குழுக்கள் மக்களை திசை திருப்பினர். இதை ஒருநாள் கண்டிப்பாக உணர்வீர்கள் என நம்புகிறேன்”இவ்வாறு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசத் (Sajeeb wazed)அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதுவும் தற்போத பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.