ரணில் நல்ல புத்திசாலி; மகிந்தவை மக்கள் இன்னும் விரும்புகின்றனர்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பவர் நல்ல புத்திசாலி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச எனும் அரசியல் கதாபாத்திரத்திற்கு இன்னும் பொதுமக்கள் மத்தியில் ஈர்ப்பு காணப்படுகிறது என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ சஜித் பிரேமதாசவுடன் இணையும் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டும். எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி அதனை செய்ய முன்வரவேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க வீட்டிலிருந்து கொண்டு வந்து நாட்டை கட்டியெழுப்பவில்லை. மக்களின் பணத்தைக் கொண்டே அனைத்தையும் செய்கிறார்.
ஏதோ ஒரு விதத்தில் பதவியைப் பெற ரணில் மிகவும் திறமையானவர்.
கடந்த தேர்தலில் நாம் 55 இலட்ச வாக்குகளை பெற்றோம் இந்த தடவை 19 இலட்ச புதிய வாக்குகள் காணப்படுகின்றன. யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் 30 வீதம் இன்னும் தீர்மானிக்கவில்லை, ஆகவே இந்த 30 வீதத்தில் சுமார் 7 வீதத்தையாவது நாம் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
“அரகலய“ புரிந்த நாட்களில் மட்டுமல்ல மக்கள் ஆரம்பத்திலிருந்தே துன்பங்களை அனுபவித்தே வந்தனர்.” எனத் தெரிவித்தார்.
மேலும், என்னுடைய அரசியல் வாழ்க்கை என்றும் பூப்பாதையில் அமைந்ததில்லை. கடுமையான ஒரு பயணத்தை நான் கடந்து வந்துள்ளேன். ஆகவே, இந்த சிறை வாழ்க்கை எனது அரசியல் வாழ்க்கைக்கு அநேக படிப்பினைகளை வழங்கியது என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.