மகிந்த தரப்பு கைவிட்டதால் சஜித் தரப்பை இழுக்கும் முயற்சிகள் தீவிரம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவர்கள் நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளதால், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ரணில் தரப்பு துரிதமாக செயற்பட்டு வருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் குழுவை ஜனாதிபதியின் பக்கம் அழைத்துச் செல்வதற்கான கோரிக்கைகளுடன் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகள் அக்கட்சியின் எம்.பி.க்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த காலமாக அந்த தொலைபேசி எண்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நிராகரிக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் ஜனாதிபதி மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்து எப்படியாவது அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுப்பதாக அறியமுடிகிறது.

இந்நிலையில் எதிர்வரும் புதன்கிழமை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.

தம்மிக்க பெரேராவே வேட்பாளராக வருவார் என பலரும் நினைத்திருக்கின்ற போதிலும், கடந்த வாரம் ஏற்பட்ட சில அரசியல் குழப்பங்கள் காரணமாக பொதுஜன பெரமுனவில் மேலும் இரு வேட்பாளர்களின் முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

தற்போது வேறு இரு கட்சிகளில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் இரண்டு பிரதான வேட்பாளர்கள் கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவை சந்தித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை கோரியிருந்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் முன்வைக்கப்படும் எந்தவொரு நிபந்தனைகளுக்கும் உட்பட்டு இந்த ஆதரவைப் பெறுவதற்குத் தயார் என இவ்விரு பிரதான வேட்பாளர்களும் அறிவித்துள்ளதாகவும் இறுதிவரை பொதுஜன பெரமுன இந்த பிரேரணையை ஏற்கவில்லை அல்லது நிராகரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button