இலங்கை

இந்த அரசில் இனியும் நம்பிக்கையில்லை;  வடக்கு, கிழக்கில் செப்.12 முதல் பாரிய தொடர் போராட்டங்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது இனிமேல் நம்பிக்கை வைக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இது தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் பங்கேற்புடன்  நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அக்கட்சியின் பிரமுகரும் ஊடகப் பேச்சாளருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:

அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்பாக, தங்களது தேர்தல் அறிக்கையில் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. குறிப்பாக தமிழ் மக்களுக்குப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. முப்படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டது. அரசாங்கம் அமைந்து ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும் அது நடைபெறுவதாக இல்லை. இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகள் விடுவிப்பு என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கின்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் இப்போது, அதற்குப் பதிலாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டம்’ என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், ‘இப்போது அரசியல் கைதிகள் என்று எவருமில்லை’ என்ற புதிய கருத்தையும் முன்வைக்கின்றனர். ஆனால் இவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தபோதும், எதிர்க்கட்சியாகச் செயற்பட்டபோதும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்திருந்தனர்.

இதேபோன்றுதான் தையிட்டி, மயிலிட்டி, வசாவிளான், கேப்பாப்பிலவு போன்ற இடங்களில் காணி விடுவிப்புத் தொடர்பாகத் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கன்னியா வெந்நீரூற்றில் மீண்டும் புத்த விகாரை கட்டுவதற்கான ஆரம்பக் கட்ட ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை விவகாரம் ஆயிரக்கணக்கான நாட்களைக் கடந்து நீடித்து வருகின்றது. தாம் ஆட்சிக்கென வந்தால் மேய்ச்சல் தரைகள் மீள வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்திருந்தனர்.

ஆகவே, தமக்கு வாக்களிக்குமாறு கோரி, ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக ஒரு மாதத்திற்குள் அல்லது ஒரு வருடத்திற்குள் செய்து முடிப்பதாக அளிக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

செப்டம்பர் 12 ஆம் திகதியுடன் இவர்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இவர்கள் என்ன செய்ய எதிர்பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது. கடந்த 3 ஆம் திகதி வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து ஜனாதிபதியைச் சந்தித்தபோது, மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக முன்வைத்தோம். அதற்கு ஆக்கபூர்வமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை; மாறாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை வந்த பின்னரே அது குறித்து யோசிக்கலாம் என்ற பதிலே வழங்கப்பட்டது.

காணி விடுவிப்புத் தொடர்பாக வினவியபோதும், முப்படைகளிடமும் நிலங்கள் தொடர்பான பட்டியல்கள் கோரப்பட்டுள்ளதாகவும், அவை கிடைத்த பின்னரே அது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தும், எந்தெந்தக் காணிகளை விடுவிப்பது என்ற பட்டியலே அவர்களிடம் இல்லை என்ற தொனியில்தான் ஜனாதிபதியின் பதில் அமைந்திருந்தது.

எங்களைப் பொறுத்தவரையில், இந்த அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் காணிகளை முழுமையாக விடுவித்திருக்க முடியும்; மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருக்க முடியும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. பழைய சட்டத்தின்படி தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் உடன்பட்டிருந்தன. ஆனால், இவற்றைச் செய்வதற்கு அரசாங்கத்திற்கு இயலாமல் போயுள்ளது.

இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே படிப்படியாகக் குறைந்து வருகின்றது. காணிகள், கைதிகள் விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வுகள் விஷயத்தில், முந்தைய அரசாங்கங்களைப் போலவே இவர்களும் எதனையும் செய்யமாட்டார்கள் என்ற விரக்தி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்கவுள்ளனர். மேலும் 2027, 2028 ஆம் ஆண்டுகளில் சர்வதேசக் கடன்களை மீளச் செலுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதற்குப் பல பில்லியன் டொலர்கள் தேவைப்படும் நிலையில், எதிர்காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவரும்.

தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் சிங்கள மக்களின் வாக்கு வங்கியையும் ஆதரவையும் இழக்க நேரிடும், இனவாத சக்திகள் தலைதூக்கும் என்ற அச்சமும் அரசாங்கத்திற்கு உள்ளது.

எனவே, இந்த அரசாங்கத்தின் மீது இனியும் நம்பிக்கை வைத்திருக்க முடியாது என்பதில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உறுதியான முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து இவர்கள் மீது நம்பிக்கை வைப்பது தவறானது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில், ஜனநாயக வழியிலான தொடர் போராட்டங்களை வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.

இப்போராட்டங்களை ஒருங்கிணைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் சார்பில் ஏற்பாட்டுக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button