உலகம்

காசாவின் கான் யூனிஸ் நகரத்தில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ்: சடலங்கள் மீட்பு

மத்திய காசாவில் புதிய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்த இஸ்ரேலியப் படை தெற்கு நகரான கான் யூனிஸில் இருந்து திடீரென்று வாபஸ் பெற்ற நிலையில் இடிபாடுகளுக்கு மத்தியில் பலஸ்தீனர்கள் அங்கு திரும்பியுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டு இரண்டு இலட்சம் வரையானோர் வெளியேற்றப்பட்ட நிலையிலேயே படையினார் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் வாபஸ் பெற்ற பகுதிகளில் இருந்த பல டஜன் உடல்களை மீட்க முடிந்திருப்பதாக காசா மருத்துவ பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இங்கு தொடர்ந்து 200 பேர் வரை காணாமல்போயிருப்பதாக காசா சிவில் சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களால் கான் யூனிஸின் கிழக்குப் பகுதி மேலும் அழிவுகளை சந்தித்திருக்கும் நிலையில் மக்கள் கால் நடையாக அங்கு திரும்பும் வீடியோ காட்சிகளை அங்குள்ள ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். கான் யூனிஸில் இருந்து வெளியேறிய இஸ்ரேலியப் படையினர் மத்திய காசாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

‘இறைவனிடம் நம்பிக்கை வைத்து நான் திரும்பி வந்திருக்கிறேன். எனது பூமிக்காக நான் உயிர் வாழ்வேனா அல்லது இறப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை’ என்று சுமார் ஐந்து கிலோமீற்றர் நடந்து கான் யூனிஸ் திரும்பிய அல் மஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய இராணுவம் நகரின் பிரதான அடக்கஸ்தலமான பானி சுஹைலாவை அழித்திருப்பதாகவும், அருகில் இருக்கும் வீடுகள் மற்றும் வீதிகளை தகர்த்திருப்பதாகவும் அங்கு திரும்பியவர்கள் விபரித்துள்ளனர்.

பத்து மாதங்களை நெருங்கும் போரில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த காசா பகுதியையும் இஸ்ரேலியப் படை கைப்பற்றியபோதும் அண்மைய வாரங்களில் முன்னர் கட்டுப்பாட்டை கொண்டுவந்ததாகக் கூறிய பகுதிகளில் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதோடு பலஸ்தீன போராளிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மத்திய காசாவின் சிறு நகர் ஒன்றான டெயர் அல் பலாஹ்வில் இருந்து கடந்த திங்கட்கிழமை தொடக்கம் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். இங்கிருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் கடந்த ஞாயிறன்று உத்தரவிட்டிருந்தது.

காசாவின் தென் முனை நகரான ரபா, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நேற்று இஸ்ரேலின் செல் தாக்குதல்கள் இடம்பெறதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவின் வெறும் 14 வீதமான பகுதியே இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவுக்கு உட்படாத பகுதிகளாக உள்ளன என்று பலஸ்தீனர்களுக்கான ஐ.நா. நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி குறிப்பிட்டுள்ளது. காசாவில் உள்ள மக்கள் ஒருசில மணி நேர அவகாசத்தில் பல தடவைகள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் பொது சுகாதார நெருக்கடி மோசமடைந்து வரும் சூழலில், அங்குள்ள கழிவு நீரில் போலியோ தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காசா சுகாதார அமைச்சு, போலியோ தொற்று பதிப்புக் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அமைச்சு கடந்த திங்கட்கிழமை டெலிகிராமில் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்த நிலைமை காசா குடிருப்பாளர்கள் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு கடந்த ஒக்டோபர் தொடக்கம் இஸ்ரேலின் இனப்படுகொலை காரணமாக பொது சுகாதார அவசர நிலை மோசமடைவதற்கான சமிக்ஞையாக இது உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மலம் – வாய் வழியாக ஏற்படும் இந்தத் தொற்று நரம்பு மண்டலத்தில் ஊடுருவி பக்கவாதத்தை ஏற்படுத்தும். தடுப்புசி காரணமாக 1988 தொடக்கம் போலியோ சம்பவங்கள் உலகெங்கும் 99 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பு காசாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்பவுள்ளது. எனினும் தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர் நிறுத்தம் தேவை’ என்றார்.

எனினும் சர்வதேச மத்தியஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய சுற்றுப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் நீடித்து வரும் முன்மொழிவு ஒன்றில் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகுவின் இஸ்ரேலிய அரசு புதிய நிபந்தைகளை நுழைத்து போர் நிறுத்தம் ஒன்றை தடுத்து வருவதாக காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தத்தில் தொடர்ந்து முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. காசாவில் தொடர்ந்து 100க்கும் அதிகமான பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களை மீட்டுவர அழுத்தும் கொடுக்கும் வகையில் இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகு அரசுக்கு எதிராக வாராந்தம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோமில் புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் இஸ்ரேலிய அதிகாரிகள் அங்கிருந்து திரும்பியபோதும் அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. உடன்பாடு ஒன்றை நெருங்கி இருப்பதாக இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கும் அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மே மாதம் முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

எனினும் இஸ்ரேல் அளித்த பதில்களும் இதில் புதிய நிபந்தனைகளாக உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

‘புதிய நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளை அமைப்பதன் மூலம் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதை தள்ளிப்போடுவது, ஏமாற்றுவது மற்றும் தவிர்க்கும் மூலோபாயத்திற்கு நெதன்யாகு திரும்பி இருப்பதையே மத்தியஸ்தர்கள் வழங்கிய செய்தி தெளிவாகக் காட்டுகிறது’ என்று ஹமாஸ் அமைப்பு திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா மக்கள் போர் நிறுத்தம் ஒன்று பற்றிய எதிர்பார்ப்பை இழந்துவிட்டார்கள் என்று டெயிர் நகரில் அடைக்கலம் பெற்றிருக்கும் காசா நகர குடியிருப்பாளரான 30 வயது அயா முஹமது குறிப்பிட்டுள்ளார். ‘இது அனைத்தும் பொய்யானது. இங்கேயே இறந்து விடுவேன் என்று நான் நினைக்கிறேன். இங்கே முதலில் இறப்பது யார் என்று யாருக்கும் தெரியாது’ என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 37 பேர் கொல்லப்பட்டு 73 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,400 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 90,996 பேர் காயமடைந்துள்ளனர்.

காசா போரை ஒட்டி பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வரும் சூழலில் இஸ்ரேலின் லெபனான் எல்லையிலும் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் கட்டுப்பாட்டு கோலன் குன்றில் லெபனானில் இருந்து விழுந்த ரொக்கெட் குண்டினால் 12 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு அது பதில் தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தெற்கு லெபனானில் ஏழு இடங்கள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒரு ஹிஸ்புல்லா போராளி கொல்லப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை தொடக்கம் இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் சுமார் 10 ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.