வெனிசுலா வன்முறை வெடித்தது; போராட்டக்காரர்களை நோக்கி துணை இராணுவ குழு துப்பாக்கிச் சூடு
வெனிசுலா ஜனாதிபதி தேர்தலின் சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதேவேளை, தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தலைநகர் கராகஸில் திரண்டிருந்த கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் அவரது தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை கிழித்தெறிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சில போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையான மிராஃப்ளோரஸ் நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நகரம் முழுவதும் பொலிஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர், மேலும் தேசிய காவலர்கள் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிக்கோலஸ் மதுரோ ஆதரவு துணை இராணுவக் குழுக்களும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மதுரோ 2025-2031 வரை மற்றொரு ஆறு ஆண்டு காலத்திற்கு வெனிசுலாவில் பெரும்பான்மையினரால் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் சபை நேற்று உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால், பொதுமக்களின் கோபம் அதிகரித்து, போராட்டங்களும் தொடங்கியுள்ளன.
இதேவேளை நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனது வேட்பாளர் எட்மண்டோ கொன்சாலஸ் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் அதனை மறைக்க அரசாங்க ஆதரவாளர்கள் முயற்சித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று தலைநகர் கராகஸில் இருந்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 61 வயதான மதுரோ, வெனிசுலாவில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்த சில பிரிவுகள் முயற்சிப்பதாக கூறினார்.