மீண்டும் பனிப்போர் வெடிக்கும்; அமெரிக்காவிற்கு புடின் எச்சரிக்கை
ஜேர்மனியில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை நிறுவும் நடவடிக்கைக்கு அமெரிக்கா சென்றால் மீண்டும் பனிப்போர் போன்ற நெருக்கடி ஏற்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த ஏவுகணைகளை மேற்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப் போவதாகவும் டொஸ்கோ கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2026 முதல் ஜேர்மனியில் SM-6 மற்றும் கப்பல் ஏவுகணைகளை நிலைநிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கு பதிலடி கொடுத்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்ய கடற்படை தினத்தில் பேசியுள்ள புடின்,
“எதிர்காலத்தில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் ஜேர்மனியின் தளங்களில் இருந்து ரஷ்யாவை அடைய 10 நிமிடங்கள் மட்டுமே இருக்கும்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஐரோப்பாவின் பிற பகுதிகள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் நகர்வுகளைக் கருத்தில் கொண்டு எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று புடின் தெரிவித்துள்ளார்.
500 முதல் 5,500 கிலோ மீட்டர் வரையிலான ஏவுகணைகளை நிலைநிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவும் முன்னாள் சோவியத் யூனியனும் 1987 இல் ஒப்பந்தம் செய்து கொண்டன.
இருப்பினும், பல ஒப்பந்தங்கள் மீறப்படுவதைக் காட்டி, இரு நாடுகளும் 2019 இல் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறின.
நேட்டோ நட்பு நாடான ஜேர்மனியில் ஏவுகணைகளை நிறுவுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை, உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருவதால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
முன்னதாக, உக்ரைனின் நேட்டோ உறுப்புரிமையை எதிர்த்து ரஷ்யா உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடங்கியது.
இதனால், நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத ஆதரவை வழங்கியுள்ளன. ஆனால் நேரடியாக போரில் தலையிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.