தென்சீனக் கடல் விவகாரம்: “குவாட்“ சீனாவுக்கு மறைமுக எதிர்ப்பு
தென்சீனக் கடல் விவகாரத்தில் எழுந்துள்ள அச்சுறுத்தல் மற்றும் அபாயம் தொடர்பாகத் தாங்கள் தீவிர அக்கறை செலுத்துவதாக ‘குவாட்’ எனப்படும் நான்கு நாடுகளின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
அந்த அமைப்பில் அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடம்பெற்று உள்ளன.
அந்த நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தோக்கியோவில் ஒன்றுகூடி பேச்சு நடத்திய பின்னர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அவுஸ்திரேலியாவின் பென்னி வோங், இந்தியாவின் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், ஜப்பானின் யோகா காமிகாவா, அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் அந்த வெளியுறவு அமைச்சர்கள்.
தென்சீனக் கடல் வட்டாரத்தில் கடல்துறை பாதுகாப்பை அதிகரிக்க அந்த நான்கு நாடுகளும் உறுதி தெரிவித்தன.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் நடைபெற்ற பாதுகாப்புப் பேச்சுவார்தையின்போது, அந்த வட்டாரம் எதிர்நோக்கும் ஆகப்பெரிய உத்திபூர்வ சவாலாக சீனா விளங்குகிறது என்று அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.
“கிழக்கு சீனக் கடல் மற்றும் தென்சீனக் கடல் விவகார சூழ்நிலை குறித்து நாங்கள் பெரிதும் கவலை கொள்கிறோம்.
“அங்கு நிலவும் சூழலை வலுக்கட்டாயம் அல்லது வற்புறுத்தல் மூலம் மாற்ற எடுக்கப்படும் எந்தவொரு தன்னிச்சையான நடவடிக்கையையும் நாங்கள் உறுதியாக எதிர்ப்போம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என்று அமைச்சர்களின் கூட்டறிக்கை தெரிவித்தது.
இருப்பினும், சீனாவை நேரடியாகக் குறிப்பிட்டு எதனையும் அந்த அறிக்கை கூறவில்லை.
தென்சீனக் கடலில் சர்ச்சைக்குரிய அம்சங்களை ராணுவமயமாக்குவது, வற்புறுத்துவது, அச்சுறுத்தும் சூழ்ச்சிகளில் ஈடுபடுவது, கடலோரக் காவற்படையையும் ராணுவக் கப்பல்களையும் அபாயகரமான முறையில் பயன்படுத்துவது போன்றவை குறித்து தாங்கள் பெரிதும் கவலை கொள்வதாக அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டனர்.
சுதந்திர, தாராள கடல்துறை ஒழுங்கைக் கட்டிக்காப்பதற்கான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து தாங்கள் இணைந்து பணியாற்றி வருவதாக குவாட் குழு கூறியது.
பயிற்சி, ஆற்றல் வளர்ப்பு மற்றும் செயற்கைக்கோள் தரவுகள் வாயிலாக கடற்பரப்பு விழிப்புணர்வை அதிகரிக்க பங்காளித்துவ நாடுகளுக்கு உதவுவதும் அந்த நடவடிக்கைளில் அடங்கும்.
புதிதாக கடல்துறை சட்டக் கலந்துரையாடல் வசதியை ஏற்படுத்துவதற்கான திட்டம் ஒன்றையும் அந்தக் குழு அறிவித்தது.