பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதல்: 36 பேர் பலி, 162 பேருக்கு படுகாயம்
வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையில் ஏற்பட்ட மோதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் போஷேரா என்ற கிராமம் உள்ளது.
இந்நிலையில் போஷேரா, மலிகேல், தண்டர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஷியா பிரிவைப் பின்பற்றும் பழங்குடியினருக்கும், சன்னி பிரிவைப் பின்தொடரும் பழங்குடியினருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் எழுந்து வந்துள்ளன.
அண்மையில் இரு தரப்பினரிடையும் சமாதானப் பேச்சு வார்த்தையை அரசு நிகழ்த்தினாலும் நான்கு நாட்களுக்கு முன்னர் நிலத் தகராறு காரணமாக மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அதிநவீன துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இரு தரப்பினருக்குமிடையே நான்கு பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதில் 36 பேர் பலியாகியுள்ளதோடு, 162 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஒளிந்திருந்த பதுங்கு குழிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸார் இந்த வன்முறை குறித்த பிரதேசத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி உள்ளதால், நிலைமையை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.