“தவறுகளுக்கு வருந்துகிறோம்”: மன்னிப்பு கோரினார் சுமந்திரன் எம்.பி
“வவுனியா மக்களாக, வவுனியாவின் மகனுக்கு ஒரு கௌரவிப்பு நிகழ்வை செய்கின்ற போது நாங்கள் செய்த தவறுகளை ஒத்துக் கொள்ளுகின்றோம்.
அதனை நீங்கள் பொறுத்து மன்னிக்க வேண்டும்” என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கான கௌரவிப்பு நிகழ்வு வவுனியா வைத்தியசாலை நோயாளர் நலம்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“எவராவது எனக்கு அரசியலில் அக்கறையில்லை என சொல்வார்களானால் அவர்களுடைய நிலைப்பாடு தங்களுடைய பிள்ளை செல்கின்ற பாடசாலை தொடர்பில் அக்கறையில்லை, எனது ஊரில் உள்ள வைத்தியசாலை தொடர்பில் அக்கறையில்லை, எங்களுடைய வீதி தொடர்பில் அக்கறை இல்லை, போக்குவரத்து தொடர்பிலும் அக்கறையில்லை என்ற நிலைப்பாட்டை உடையவர்களாக இருப்பார்கள்.
அரசியல் இது எல்லாவற்றையும் சார்ந்ததாகத்தான் இருக்கும். ஆகவே அரசியல் பேசாத பொது நிகழ்வுகள் இருக்கவே முடியாது.
ஒரு சரித்திர தவறை நாங்கள் திருத்தி அமைக்கிறோம் என்கின்ற போது அந்த சரித்திர தவறு என்ன என்பதை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
அது சில வேளைகளில் சங்கடமாக கூட இருக்கலாம். இதை எப்படி சொல்வது என சிந்திக்கலாம். ஆனால் தவறை சொல்லாமல் அதை திருத்திக் கொள்ள முடியாது.
ஒருவரை பெரியவர், நல்லவர், வல்லவர் என தலையிலே தூக்கிக் கொண்டு வந்து வடக்கு மாகாண மக்களுக்கு அறிமுகம் செய்ததில் எனக்கு ஒரு பங்கு இருக்கிறது. அது நான் செய்த முதலாவது தவறு.
அடுத்து வைத்தியர் சத்தியலிங்கத்திற்கும் வேறு இரண்டு அமைச்சர்களுக்கும் ஒரு அநீதி இழைக்கப்பட்ட போது ஒரு அரசியல் கட்சியாக அதற்கு எதிராக குரல் கொடுக்கவோ அதை அந்த நேரத்தில் திருத்தி அமைக்கவும் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்ற தவறும் இருக்கின்றது.
அந்தத் தவறில் எனக்கும் ஒரு பாரிய பங்கு இருக்கிறது.
இன்று வவுனியா மக்களாக வவுனியாவின் மகனுக்கு ஒரு கௌரவிப்பு நிகழ்வை செய்கின்ற போது நாங்கள் இந்த தவறுகளை ஒத்துக் கொள்ளுகின்றோம்.
அது நாங்கள் செய்த தவறு. அதனை நீங்கள் பொறுத்து மன்னிக்க வேண்டும்.
ஏனெனில் இந்த சரித்திர தவறுகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.