22 க்கு ஆளும் கட்சிக்குள் இருந்தே கிளம்பும் எதிர்ப்பு; சர்வஜன வாக்கெடுப்புக்கும் வலியுறுத்து

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்திக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தக் கட்சியின் ஒரு தரப்பினர் 22ஆவது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் இன்னுமொறு தரப்பு அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்றும், பெறப்பட்டுள்ள சட்ட ஆலோசனைகளின்படி இதனைச் சட்டமாக்கிக் கொள்ள முடியும் என்பது அவர்களின் கருத்தாக இருந்துள்ளது என்றும் கொழும்பு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே அண்மையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளதுடன், இதன்போது இவ்வாறு இருவேறான நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீதே அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும். ஒருவேளை உயர்நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தால், அது அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாகப் பாதகமாக அமையக்கூடும் என கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்வதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய மாற்றுத் திட்டம் குறித்தும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் உருவெடுத்துள்ள முதன்மை யோசனை யாதெனில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனைக்கு மட்டும் வரம்புக்குட்பட்ட சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல், முழு அரசியலமைப்பையுமே திருத்தியமைக்கும் புதிய அரசியலமைப்புக்கான யோசனையொன்றை நாட்டிற்கு முன்வைப்பதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மக்களிடையே நிலவும் உண்மையான நிலைப்பாட்டை அளவிடுவதற்காக அரசாங்கம் நாடு முழுவதும் சிறப்புக் கருத்துக்கணிப்பு நடவடிக்கையொன்றை தொடங்கியுள்ளதாகவும் சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிராம மட்டத்திலான மக்களின் ஆதரவு தற்போது எந்தப் பக்கம் உள்ளது என்பதையும், சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்றால் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வதே இதன் நோக்கமாகும் என்றும் கூறப்படுகின்றது.
![]()