சஜித் தரப்பை இழுக்க கோடிக்கணக்கில் பேரம் பேசல்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விரும்பத்தகாத குணம் கொண்டவர் எனவும் இந்த குணத்தாலேயே அவர் ராஜபக்ஷ காலத்தில் சிறையிலடைக்கப்பட்டதாகவும் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசகருமான கலாநிதி தனவர்தன குருகே, ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கோடி ரூபாக்களுக்கு பேரம் பேசல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பதவி நீக்கம் செய்து கட்சியின் தலைமைத்துவத்தை பெறுவதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முயற்சித்ததாக இணைய சனல் ஒன்றுடனான கலந்துரையாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச காலத்தில் ஜம்பர் அணிந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டதற்கு காரணம் அவரின் இந்த குணாதிசயங்கள் தான் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கோடி ரூபாக்களுக்கு பேரம் பேசல்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் இதற்கு அடிபணிந்து சிலர் அரசாங்கத்துடன் இணைந்தாலும் ஏனையோர் அவ்வாறு இணைவதற்கு தயாராக இல்லை.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விரும்பத்தகாத குணம் கொண்டவர். அவர் ராஜபக்ச காலத்தில் இராணுவத் தளபதியாக செயற்பட்டவர். அதன் பின்னர் ராஜபக்சக்களை விமர்சித்து அதிகார மோகத்தால் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜம்பர் அணிந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை வழங்கியது சஜித் பிரேமதாச. கட்சியில் இருந்து கொண்டு கட்சியின் தலைவரையே விமர்சிப்பது, அவர்களுடைய தாய், தந்தையரை விமர்சிப்பது போன்றது. அவர் கட்சியின் தலைமைப் பதவியை பெற்றுக் கொள்வதற்கு தம்மாலான எந்த விடயத்தையும் செய்வார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.