அமெரிக்காவின் துணை ஜனாதிபதி வேட்பாளர்; உலக புகழ் பெறுகிறார்
குடியரசுக் கட்சியைப் பிரதிநிதித்து அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனல்ட் டிரம்ப், தமது துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜேம்ஸ் டேவிட் வேன்சைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை வேன்ஸ் ஏற்றுக்கொண்டார்.
விஸ்கோன்சின் மாநிலத்தின் மில்வாக்கி நகரில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய அவர், தொழிற்துறைக்குப் பேர்போன ஒஹாயோ மாநிலத்தைச் சேர்ந்தவராக அவர் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டார்.
மில்வாக்கி அவரது சொந்த ஊர். அங்கு வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வேன்ஸ், படிப்படியாக முன்னேறி இன்று துணை ஜனாதிபதி வேட்பாளராக உயர்ந்துள்ளார்.
நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்றால், ஊழியர் வர்க்கத்துக்குக் குரல் கொடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
“துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை எண்ணி மனம் நெகிழ்கிறேன். மிகுந்த நன்றி உணர்வுடன் அதை ஏற்கிறேன்,” என்றும் வேன்ஸ் கூறினார்.
அமெரிக்க இராணுவத்தில் சிறிது காலம் இருந்த வேன்ஸ், யேல் சட்டப் பள்ளியில் சேர்ந்து பட்டம் பெற்றார். பிறகு முதலீட்டுத் துறையில் பணிபுரிந்தார்.
அதையடுத்து, அரசியலில் காலடி எடுத்துவைத்து செனட்டர் ஆனார்.
தமது சொந்த ஊரான ஒஹாயோவில் ஊழியர் வர்க்கத்தைச் சேர்ந்த பலர் இருப்பதை அவர் சுட்டினார். ஒஹாயோவையும் அதில் உள்ள ஊழியர் வர்க்கத்தையும் அமெரிக்காவை ஆட்சி செய்யும் உயர்மட்டத்தினர் மறந்துவிட்டதாக அவர் குறைகூறினார்.
வேன்ஸ், தமது உரையின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைக் கடுமையாக விமர்சித்தார்.
ஜனாதிபதி பைடனின் தவறான வர்த்தகக் கொள்கைகள், வெளிநாட்டுப் போர்கள் தொடர்பாக அவர் எடுத்த முடிவுகள் ஆகியவை அமெரிக்க மக்களைப் பாடாய்படுத்துவதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் நலனுக்காக டிரம்ப் முன்வைத்துள்ள பரிந்துரைகள், அவர் கொண்டுள்ள திட்டங்கள் மிகவும் எளிமையானவை, வலிமைமிக்கவை என்று வேன்ஸ் புகழ்ந்தார்.
வேன்ஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அவர் உலக புகழ்பெற்ற ஒருவராகவும் மாறியுள்ளார்.
இவருக்கு பல உலக பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.