உக்ரைன், காசாவில் கொடூர தாக்குதல்; புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

உக்ரைன் நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா மேற்கொண்டு வரும் போரானது 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர்.

இதேபோன்று, காசாவுக்கு எதிரான இஸ்ரேல் போரும் தொடர்ந்து நீடித்து வருகிறது. காசாவில் கடந்த வாரம், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், பள்ளியில் அடைக்கலம் புகுந்திருந்த 30-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இந்த பள்ளியில் இருந்துதான் ஹமாஸ் பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் ஆக்மத்தித் என்ற குழந்தைகள் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது.

அந்நாட்டில் குழந்தைகளுக்கான மருத்துவ வசதி கொண்ட மிக பெரிய மருத்துவமனையான இதன் மீது ரஷியா நேற்று திடீரென அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனினும், உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்று கூறிய ரஷியா, இதற்கு பொறுப்பேற்க முடியாது என மறுப்பு தெரிவித்து விட்டது.இந்நிலையில், உக்ரைன் மற்றும் காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு போப் பிரான்சிஸ் தன்னுடைய வேதனையை தெரிவித்து உள்ளார். உக்ரைன் மற்றும் காசாவில் சமீபத்தில் நடந்த கொடூர தாக்குதல்களை குறிப்பிட்டு, புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபற்றி வாடிகன் ஊடகம் வெளியிட்டு உள்ள செய்தியில், படுகொலை செய்யப்பட்ட ஒன்றுமறியாத மக்கள் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு தன்னுடைய வருத்தங்களை தெரிவித்து கொள்வதுடன், நடந்து வரும் மோதல்களுக்கு முடிவு ஏற்படுத்துவதற்கான வலுவான பாதைகள் அடையாளம் காணப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறார். அதற்கான நம்பிக்கையையும் தெரிவித்து கொள்கின்றார் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

உக்ரைனில் மரணம் அடைந்தவர்களுக்காக இறைவனிடம் வேண்டி கொள்ளும்படி அவ்வப்போது பிரான்சிஸ் கேட்டு கொண்டு வருகிறார்.காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவது பற்றி அடிக்கடி குறிப்பிட்டு வரும் அவர், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஆகியோரை பற்றியும் அடிக்கடி குறிப்பிட்டு அதில் சமரச தீர்வு ஏற்பட வேண்டும் என கோரி வருகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button