அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை!
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் காரணமாக இவ்வாறு குறித்த இரு பகுதிகளிலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு வருடத்தில் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய பகுதிகளில் சுமார் 3 இலட்சம் பேர் குடியேறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மெல்போர்ன்
சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை அவுஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தலைநகரங்களாகக் கருதப்படுகின்றன.
மெல்போர்னின் மக்கள் தொகை 2022-2023 நிதியாண்டில் 166,000 அல்லது ஒரு நாளைக்கு சுமார் 455 பேர் அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர அறிக்கைகளின்படி, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
சிட்னி
இதற்கிடையில், சிட்னியில் கடந்த நிதியாண்டில், 142,600 பேர் புதிதாக குடிபெயர்ந்துள்ளனர்.
இதன்படி, நாளாந்தம் 391 பேர் கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக சிட்னிக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.
இரண்டு நகரங்களிலும் ஓராண்டு காலத்துக்குள் அதிகளவானோர் புலம்பெயர்ந்தது இதுவே முதல்முறை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக மக்கள் தொகை
மெல்போர்ன் 1850 மற்றும் 1905 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இருந்தது.
மெல்போர்னின் தற்போதைய மக்கள் தொகை 5.1 மில்லியன் ஆகும். அதேவேளை, சிட்னியின் தற்போதைய மக்கள் தொகை 5.04 மில்லியன் எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.