கதைகள்

“சிணுங்கி” ….. சிறுகதை….. 31….. அண்டனூர் சுரா.

தொட்டாற்சிணுங்கி செடியைத் தன் வீட்டில் தேசிய செடியைப் போல வளர்த்துவந்தார் தாத்தா. அச்செடி மீது அவருக்கு அதீதமான பரிவும், இரக்கமும் இருந்தது. தினமும் அச்செடியைப் பார்க்கவும், கண்காணிக்கவுமாக இருந்தார். கண்காணித்தல் என்பது, அச்செடியின் மீதான மற்றவர்களின் பார்வையைக் கவனித்தலாக இருந்தது. அவரைப் பொறுத்தமட்டில் ஒரு வளர் செடிக்கான தழைச்சத்து என்பது, அச்செடியைத் தினமும் பார்வையிடுவதுதான். அப்படியாகவே அச்செடியை அவர் பார்வையிட்டு வந்தார்.

ஒரு காட்டுச்செடியைத் தன் வீட்டில் நீர் வார்த்து வளர்ப்பது அம்மா உட்பட பலருக்கும் பிடிப்பதாக இல்லை. வீட்டிற்கு வரும் உறவினர்கள்கூட அதைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தார்கள். தாத்தா அவர்களுக்குக் காதை மட்டுமே கொடுத்தார். அப்பாவின் அகால மரணத்திற்கு இந்தக் காட்டுச்செடியே காரணமென அக்கம்பக்கத்தினர் பேசிக்கொண்டது, காற்று வழியே அம்மாவின் காதை எட்டியிருந்தது. அச்செடியை வீட்டிலிருந்து எப்படியேனும் அப்புறப்படுத்திட வேண்டும் என்பதில் அம்மா குறியாக இருந்தாள்.

அப்பா, மலேயா நாட்டில் வேலை பார்க்கையில், ஒரு விபத்தில் இறந்துவிட்டிருந்தார். அப்போது நான் அம்மாவின் வயிற்றில் எட்டு மாத சிசுவாக இருந்தேன். அப்பாவின் மரணத்திற்கு நஷ்ட ஈடாக அந்நாடு கொடுத்த ஈட்டுப் பணத்தில்தான் தாத்தா இந்த வீட்டைக் கட்டியிருந்தார். அப்பா கடைசியாக இரண்டு மாத விடுப்பில் வீட்டிற்கு வந்து செல்கையில், அப்பாவின் கனவு, வீடு குறித்ததாகவே இருந்திருக்கிறது. வீடு என்பது மனிதனின் சுயமரியாதை, என அப்பா அடிக்கடி சொல்வாரென அம்மா பலமுறை சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே தோட்டத்தில் அழகான வீடொன்றைக் கட்டி, அதற்கு ‘ பழனி இல்லம் ’ எனப் பெயர் வைத்திருந்தார்.

தாத்தா இந்த வீட்டைக் கட்டி குடியேறாத வரை, அவரைக் கண்டிக்காரன் என்றும், இதற்கு முன்பு அவர் வாழ்ந்த வீட்டை கண்டிக்கார வீடு என்றும் ஊரார்கள் அழைத்திருக்கிறார்கள். அப்பா மரணத்திற்குப் பிறகு தாத்தா கட்டிய இவ்வீட்டை ‘ பழனி வீடு ‘ , எனச் சொல்லிப் பழகியிருந்தார்கள்.

அப்பா இறந்துபோகையில், அக்காவிற்கு மூன்று வயது. நான் பிறந்து விவரம் தெரிந்த ஒரு நாள், பாட்டியின் நெற்றியைப் பார்த்து, “அம்மா, நீயும் பாட்டி மாதிரி நெத்தியில பொட்டு வச்சிக்கோம்மா” எனச் சொல்கையில், அம்மா உகுத்த கண்ணீரால் அப்பா எனக்குப் புகைப்படமாக மட்டுமே இருக்கிறாரெனத் தெரிந்துகொண்டேன்.

அப்பா இல்லாத குறையைத் தாத்தா போக்கியிருந்தார். என் மீது காட்டும் அதே அக்கறையை அவர் தொட்டாற்சிணுங்கிச் செடியின் மீதும் காட்டிவந்தார். நான் தெருவில் விளையாடி வீடு திரும்புகையில், என் வயிற்றைப் பார்த்து இரங்கும் அக்கறையொத்தே செடியின் மீதான அவரது அக்கறை இருந்தது. எனது முகத்தைப் போல அச்செடியின் இலை சோர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனம் கொண்டவராக இருந்தார்.

இச்செடி மேல்மாடத்தின் கூரையில், யார் கைக்கும் எட்டா உயரத்தில் தொங்கியிருந்தது. அதன் இலை தழைகள் தொட்டிக்குள் படர்ந்து, தொட்டிக்கும் வெளியே கிளை பரப்பி இருந்தன. அச்செடியின் மீது சூரிய ஒளி படும்படியாகவும்; மழை, சாரல் அதன் மீது படாதபடியும் அதை அவர் தொங்கவிட்டிருந்தார். அச்செடிக்குத் தண்ணீர் ஊற்ற சின்னதாக ஒரு பூட்டக்கட்டையுடன் கூடிக் கயிற்றை இணைத்திருந்தார். கயிற்றை இழுத்தால் தண்ணீர்க் குவளை கீழே வரும். அதில் தண்ணீரை நிரப்பி மற்றொரு கயிற்றை இழுத்தால் அக்குவளை மேலே செல்லும். தண்ணீர் அச்செடியில் ஊற்றுவதற்குத் தனியே தும்புக்கயிறு இணைத்திருந்தார். அதன் வழியே அச்செடிக்குத்

தண்ணீர் வார்க்கையில், “ எங்க காலத்தில கிணத்துத் தண்ணீய இப்படித்தே இறைச்சோம்” எனச் சொல்லி முகம் பூரிப்பார்.

ஒரு நாளும் அச்செடியின் இலையை அவர் வாடவிட்டதில்லை. ஒரு நாள் அவரில்லாத நேரம் பார்த்து, ஒரு குச்சியால் அச்செடியின் இலையைத் தொட்டிருந்தேன். பள்ளியில் வரிசையாக நிறுத்திய மிதிவண்டிகள் காற்றினால் சாய்ந்து ஒன்றின்மேல் ஒன்றாகச் சரிவதைப்போல தொட்டாற்சிணுங்கி இலைகள் சாய்ந்து படிவதாக இருந்தன. சிணுங்கிய இலைகள் நிமிர்வதற்குள்ளாக தாத்தா வீடு திரும்பி, அச்செடியைக் கவனித்திருந்தார். “ இந்த வேலைய யார் செஞ்சா?” எனக் கேட்கச் செய்தார். நான் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்பதைப் பார்த்து, “இந்தச் செடி உன்ன என்ன செஞ்சதாம், அதெ ஏன் சிணுங்க வச்சாய்?” எனக் கண்டிக்கச் செய்தார்.

தாத்தா, வீட்டைச் சுற்றிலும் நிறைய செடிகள் வளர்த்திருந்தார். அத்தனையும் மூலிகைச் செடிகளாக இருந்தன. துளசி,கண்டங்கத்திரி, ஆடாதொடா, தூதுவளை, குப்பைமேனி, இப்படியாக. தானாக முளைக்கும் அரிதான செடிகளை அவர் களையெடுப்பவரில்லை. ஆடு மாடுகள் செடியில் வாய் வைத்திடாமலிருக்க சுற்றிலும் உயிர்வேலி அமைக்கிறவர்.

இவ்வளவு செடி கொடிகள் தரையிலிருக்கையில் இந்த தொட்டாற்சிணுங்கியை மட்டும் ஏன் இவர் இவ்வளவு உயரத்தில் வளர்க்கிறார், எனப் பல நாட்கள் நினைத்திருக்கிறேன். அம்மாவிடம் இதைச் சொல்லிக் கேட்கையில், “ இதை உன் தாத்தாவிடமே கேட்டுக்கோ” எனச் சொல்லி என் தலையைக் கோதினாள். தாத்தாவிடம் எத்தனையோ நாட்கள், இது குறித்து கேட்டிருக்கிறேன். அப்போது அவர் தொட்டாற்சிணுங்கிச் செடியை நிமிர்ந்து பார்க்க மட்டும் செய்வார்.

தாத்தாவுக்குப் போட்டியாக அக்கா சில செடிகளை வளர்த்துவந்தாள். பூச்செடிகள் அவை. மல்லிகை, கனகாம்பரம், சேவல்கொண்டை, சிறுமல்லி,… பூச்செடியோடு மூலிகைச் செடிகளும் ஒரே நேரத்தில் பூத்துக் குலுங்கும். பூக்கள் மலரும்போது பூக்கள் மட்டுமல்லாது, அதன் காம்புகளும் தோட்டத்தை அத்தனை அழகாக்கும். பூக்களை அவள் பூக்களுக்கே வலிக்காதபடி இணுக்குவாள். அவள் வளர்த்த பூச்செடி பூக்களை வைத்துக்கொண்டு, மூலிகைப் பூக்களை எனது காதினில் வைத்துவிடுவாள். அப்படியாக வைத்துவிடுவது எனக்குப் பிடிக்கவே செய்யும். அக்கா எல்லாச் செடி பூக்களையும் பறித்தாலும் தொட்டாற்சிணுங்கிப் பூவைப் பறிக்க அவளது கை நீண்டதில்லை. மற்ற பூக்களைக் காட்டிலும் தொட்டாற்சிணுங்கியின் பூ பார்க்க மென் ஊதா நிறத்தில் அத்தனை அழகானதாக இருக்கும். அப்பூ மீது அவளது கை நீளாமல் இருப்பதற்குக் காரணம், தாத்தாதான். அக்கா பூக்களை இணுக்குகையில், “ தொட்டாற்சிணுங்கி பூவப் பறிச்சிடாதே” எனக் கண்டிப்புத் தொனியில் சொல்வார்.

இத்தனை பூக்களில் தாத்தாவுக்குப் பிடித்தது, தொட்டாற்சிணுங்கி பூவுதான். அப்பூவை அவர் ரசிக்கும் பாங்கு அலாதியானதாக இருக்கும். அவர் அளவுக்கு என்னால் அப்பூவை ரசிக்க முடியாதென்றாலும் அப்பூ மற்ற பூக்களைவிடவும் அழகாக தெரியும். ஒரு மரத்திற்கும் மனிதனுக்குமான கம்பீரம் அப்பூவில் பளிச்சிடும். மிக உயரமான கம்பத்தில் அலங்கரிக்கப்பட்ட வண்ண மின் விளக்குகளாகத் தெரியும். சூல் சுற்றிலும் மகரந்தத் தண்டுகள். அதன் ஒவ்வொரு முடிச்சிலும் வெள்ளை வெளீரென மகரந்தங்கள் தறித்திருக்கும். வீட்டில் உடைந்த நாற்காலி ஒன்றிருந்தது. அதில் ஏறித்தான் தாத்தா அச்செடியைப் பராமரிப்பார். பூத்து அதுவாகவே உதிரும் பூக்களை அவர் தொட்டியிலிருந்து அப்புறப்படுத்திட மாட்டார். அதன் பூ அதற்கே உரமாகுமென விட்டுவிடுவார்.

வீட்டிற்கும் வெளியே தோட்டத்து வரப்புகளில் தொட்டாற்சிணுங்கி செடிகள் நிறைய படர்ந்திருக்கும். அச்செடிகளை நான் கால்களால் தீண்டியிருக்கிறேன். அச்செடியின் இலைகள் ஒன்றின்மீது ஒன்றாகச் சாய்ந்து, என்னைப் பரவசமூட்டும். அப்பொழுதெல்லாம் அச்செடியின் பூ எனக்கு அழகாகத் தெரிந்ததில்லை. பாம்பைக் கண்டால் அடித்துவிட வேண்டும் என்கிற எழுதப்படாத விதியைப் போல அச்செடியை நான் பார்க்கும்பொழுதெல்லாம் கால்களால் தீண்டச் செய்வேன்.

ஒரு நாள் தாத்தாவுடன் நடந்து செல்கையில் , அவரது நடையைப் பின்வாங்கி, செருப்புக் காலுடன் அச்செடியை உராய்த்தேன். அதைக் கண்டுவிட்ட தாத்தாவுக்கு சட்டெனக் கோபம் வந்திருந்தது. என்னை ஓர் அதட்டு அதட்டினார். “அது உன்னை என்ன செஞ்சதாம்? அதையேன் அப்படி மிதிக்க. அதுவும் செருப்புக் காலோட?” அவர் கேட்ட கேள்வியில் எனக்கு அழுகை வந்துவிட்டது. அதன்பின் அச்செடியை நான் தூரத்தில் நின்று பார்ப்பதோடு சரி. நான் படித்த பள்ளி வளாகத்தைச் சுற்றிலும்கூட தொட்டாற்சிணுங்கி செடிகள் நிறைய இருந்தன. எப்போதும் அதன் இலைகள் சோர்ந்தே இருக்கும். யாரேனும் அச்செடியைத் தீண்டியிருப்பர்.

ஒரு நாள் தாத்தாவிடம் வம்படியாகக் கேட்டுவிட்டேன். “இச்செடி காட்டுச்செடி. இச்செடிய யாரும் வீட்டில வளர்க்கிறதில்ல. இச்செடிய நீங்க வளர்க்கிறது அம்மாவுக்கும்கூட பிடிக்கல. இச்செடிய இவ்ளோ உசரத்தில வச்சி ஏன் வளர்க்குறீங்க?” இக்கேள்விக்கு தாத்தா என்ன பதில் சொல்லப் போகிறாரென அம்மா கவனித்தாள். அக்கா, “ நல்ல கேள்வியா கேட்டேடா”, என்றாள். பாட்டிக்கு இதுபோன்ற கேள்விக்குப் பதில் தெரியும். எதையும் தாத்தா சொல்லாத வரைக்கும் அவள் வாய் திறந்து சொல்லிவிட மாட்டாள். தாத்தா, தொண்டையைச் செருமிக்கொண்டார். அப்படியாகச் செருமினால் அதற்குள் பெரிய கதை இருக்கிறதென்று நாங்கள் தெரிந்து வைத்திருந்தோம்.

கண்டியிலிருந்து குடும்பத்துடன் தாய் நாடு திரும்பியவர்தான், சடையப்பன். ஊரில் அவருக்கு கண்டிக்காரன், என்றே பெயர். இலங்கை – சுதந்திர இந்தியா உடன்படிக்கையால் பல்லாயிரம் தமிழர்களைக் கண்டி தேசம் திருப்பி அனுப்பியிருந்தது. தாய் மண்ணுக்குத் திரும்பிய சடையப்பன், அவருக்கான சொந்த ஊரில் சின்னதாக வீடு கட்டிக் குடியேறினார். அப்போது அவரது மகன் பழனிக்கு மூன்று வயது.

நாடு திரும்பிய அவரது கையில் பணம் புழங்கியிருந்தது. பணம் பெட்டிக்குள்ளிருந்தாலும் அதன் மவுசு வெளியே தலை நீட்டவே செய்யும். ஊர்க்குடியானவர்கள் பலரும் அவர் வீட்டுக்குப் பண உதவி கேட்டு வந்துசெல்வதாக இருந்தார்கள். அவரது நடை உடை, பழக்கவழக்கம் மலைவாசிக்குரியதாக இருந்தாலும் பேச்சிலும் பழகுவதிலும் வாக்குச் சுத்தமிருந்தது. யார் வீட்டுத் தேவையென்றாலும் அவருக்கு அழைப்பு வரும். மொய் செய்யாமல் அவர் யார் வீட்டிலும் கை நனைக்காதவராக இருந்தார்.

அப்படியாகத்தான் அவருடன் நட்பாகப் பழகியிருந்த ஒரு குடியானவர், மகன் திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். எப்போதும் தான் மட்டுமே விசேச வீட்டிற்குச் செல்லும் சடையப்பன் அன்றைய தினம், மகனை அழைத்துச் சென்றிருந்தார். திருமணம் முடிந்து, சாப்பாட்டுப் பந்தி நடந்தேறியது. மூன்று வகையான பந்திகள். நெருங்கிய உறவுக்காரர்களுக்கு மாத்துவிரிப்பாக வேட்டிகள் விரித்திருந்தன. இது சம்பந்தி பந்தி. பெரிய இலை. விசேசமான கவனிப்புகள். அடுத்து, சேலைகள் மாத்தாக விரிக்கப்பட்ட பந்தி. இதில் உள்ளூர் சாதிக்காரர்கள் அமர்ந்து சாப்பிடுவதாக இருந்தார்கள். அடுத்ததாக வெறுந்தரை பந்தி. அதற்கும் வெளியே சடையப்பனின் தெருவினர் சோறு வாங்கிச் செல்ல, சட்டி முட்டி பாத்திரங்களுடன் ஒற்றைக்காலில் கொக்கைப் போல நின்றிருந்தார்கள்.

தேவைக்காரர், சடையப்பனை சேலைகள் விரிக்கப்பட்ட பந்தியில் அமரவைத்தார். அப்படியாக அவர் அமர வைப்பதற்கு சடையப்பன் செய்த பண உதவியும் ஒரு காரணமாக இருந்தது. அருகில் மகனை அமர வைத்துக்கொண்டார். இலை விரிக்கப்பட்டது. தண்ணீர் தெளித்தார்கள். கூட்டும் பொரியலும் வைத்தார்கள். சோறு வைத்து, குழம்பு ஊற்றினார்கள். இலையில் சூடு பறந்தது.

பழனி, சாப்பிட ஆவல் பறந்தான். சோற்றில் கையை வைக்கவும், சோறும் குழம்பும் சுட, விரல்களை அத்தனை வேகமாக வாயில் வைத்தான். சோறு சுடுகிறதென, அழுதாள். சடையப்பன், மகனுக்கு சோற்றைப் பிசைந்துகொடுத்தார். அவன் வாஞ்சையோடு சோற்றைக் கையில் அள்ளி வாயில் வைக்கப்போகையில், ஒரு செருப்புக்கால் இலையை உதைத்தது.

சடையப்பன் குலை நடுங்கிப் போனார். அவரது இலையை உதைத்திருந்தால்கூட அவரது ஈரக்குலை அப்படியாக நடுங்கியிருக்காது. இலையில் கால் தெரியாமல் பட்டிருக்குமென்றே முதலில் நினைத்தார். மறுகால் அவரது இலையை உதைத்தது. மகனைத் தூக்கிக்கொண்டு எழுந்துவிட்டார். அவரைச் சுற்றிலும் சாதிக்காரர்கள். “ஒன் சாதியென்ன, ஒன் பொறப்பென்ன? உன் தராதரம் என்ன? ஒனக்கு மாத்துவிரித்த பந்தியில சோறு கேட்குதா?” மற்றொருவன் காலைத் தூக்கியபடி ஓடி வந்து ஓங்கிய வேகத்தில் உதைத்தான்.

சடையப்பன் உதைத்த காலினைப் பார்த்தார். கால்கள் என்பது நடப்பதற்கானது என்றே இத்தனை நாட்கள் நினைத்திருந்தார். படைப்பின் நோக்கை மீறும் எந்த உறுப்பும் தள்ளாத வயதில் நோகவே செய்யும், என மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டார். அவரை நோக்கி ஓங்கிய கால்கள், மகனின் பக்கம் திரும்பிவிடக்கூடாது, என்பதில் கவனமாக இருந்தார். மகனைத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டார். இலை எட்டி உதைத்ததில் பருக்கைகள் பூப்பூவாய் பறந்து பலரின் தலையில் அட்சதையாக விழுந்தன.

கல்யாணத் தேவைக்காரர் ஓடிவந்தார். சடையப்பனுக்காகப் பரிந்து பேசினார். ” அவர் ஒங்களுக்கு நிகரா மொய் வச்சிதே சாப்பிடுறார்” என்றார். “அதுக்காக நம்ம சாதிக்கு நிகரா உட்கார்ந்து சாப்பிடுவானோ?” எனச் சாதிக்காரர் ஒருவர் கேட்டதும் தேவைக்காரர் வெறுங்கை பிசைந்து நின்றுபோனார்.

“சாதி, சமயம் சங்கடம்” வள்ளலாரின் சொற்களை உதிர்த்தவராய், மகனைக் கூட்டிக்கொண்டு பந்தலிலிருந்து வெளியேறினார் சடையப்பன்.

தான் கண்டியில் கொத்தடிமையாக வேலை செய்கையில், சிங்கள முதலாளிகள் தமிழகத் தொழிலாளிகளை இப்படிக் கீழ்த்தரமாக நடத்தியதில்லை. ஆனால் சொந்த நாட்டில், சொந்த ஊரில், என நினைக்கையில் அவரது கீழுதடு பிதுங்கியது. இந்தச் சோற்றுக்காகவா நான் இந்தக் கல்யாணத்திற்கு வந்தேன். இல்லை, அழைக்காமல் வந்தேனா? என்னை உதைத்தவனைவிடவும் நான் எந்த வகையில் தாழ்ந்தவன்? அவரது முகத்தில் உளியால் தோலுரிக்க முடியாத அவமானம் தின்று கிடந்தது. ஊசிப்போனதை உண்பதைவிட பசித்திருப்பது நல்லது என நினைத்தவராய் அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை மனதிற்குள் மென்று செரித்தார். அவரது மகன், பால்ய குழந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைத்து நெஞ்சுக்குள் பொருமினார்.

மூன்று வயதான பாலகன் பழனிக்கு என்ன நடந்ததென்றே விளங்கவில்லை. மகனின் முகத்தைக் குனிந்து பார்த்தார். முகம் சோர்ந்து சுணங்கியிருந்தது. முதிய வயது நோயும், இளவயது அவமானமும் பொல்லாதது. அவமானம் என்பது பனை மரத்தில் விழும் ஆலவிதை. அதை வளர விடுத்தால் விருட்சத்தை அழித்து ஆலம் வாழும். சின்னஞ்சிறிய விதை, திடமான பனையை அழித்துவிடுவதைப்போல, இந்த அவமானம் என் மகனை அழித்துவிடுமோ, என நடுங்கினார். இந்த அவமானத்திலிருந்து மகனை மீட்டெடுக்கும் மூச்சில் இறங்கினார்.

ஏற்றத் தாழ்வுகளைக் களையும் மருந்து பணமோ, வசதியோ அல்ல படிப்புதான்! மகனை என்ன விலை கொடுத்தேனும், படிக்கவைத்து ஆளாக்க வேண்டுமென நினைத்தவர், மகனை உடம்போடு அணைத்தவாறு வீட்டுக்கு அழைத்துவந்தார். உச்சி வெயிலின் இளஞ்சூடு அவர்களது பிடரியில் ஊர்ந்தது.

அவரது மனக்கூட்டை கரையான் சேனைகள் அடையடையாக விழுந்து பிடுங்குவதைப் போலிருந்தது. வீடு அடைவதற்குள் பந்தியில் ஏற்பட்ட அவமானத்தை மகன் மறக்க நினைத்தார். அதற்காக அவர் மகனிடம் விளையாட்டு காட்டிக்கொண்டு வந்தார். பிஞ்சு முற்றிக் கனியாக வேண்டும். அப்பொழுதுதான், அந்தக் கனியிலிருந்து வீரியமான விதைகள் கிடைக்கும். இளமையிலேயே அந்தப் பிஞ்சு வெம்பிவிடக் கூடாது, என நினைத்தவர் மகனைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு, பறவை, மேகம், வானத்தைக் காட்டியபடி அவனின் நினைவுகளைத் திசை திருப்பினார். மகன் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தான். இப்போது அவனது முகம் முன்புபோல் சோர்ந்தோ, சொடுங்கியோ இருந்திருக்கவில்லை. இயல்பான முகவெட்டில் வார்த்திருந்தது.

பழனி, அப்பாவின் தோளிலிருந்து இறங்கி நடந்தவனாக இருந்தான். பாதையின் இரு புறமும் தொட்டாற்சிணுங்கிச் செடிகள் முளைத்திருந்தன. அச்செடியை அவன் பார்க்கையில் ஒரு குதூகலம் அவனைத்

தொற்றச் செய்யும். அச்செடிகள் அவனை விளையாட, வா என அழைக்கும். அவன் கைகளைக் கொட்டிக்கொண்டு அச்செடியை நோக்கி ஓடினான். காலால் அதன் இலைகளை உதைத்தான். இலைகள் சிணுங்கி தரையோடு படிந்தன. இதை மகன் உள்ளூற ரசிப்பான் என்றே நினைத்தார். பழனி அதை ரசிக்கவில்லை. இலையின் சிணுங்கல் அவனை வசியூட்டுவதற்கு மாறாக, சற்று முன்பு அவன் எதிர்கொண்ட அவமரியாதையை நினைவூட்டுவதாக இருந்தது. அவனது முகம் மாறியதைப் போலத்தான் அந்த இலையின் சுணங்கல் இருந்தது. அதைப் பார்த்ததும் அவனது கண்கள் நீர் கொண்டன. மதிய சூரியனைச் சற்று கூர்ந்து பார்த்தது போல, அவரது கண்கள் கடுகடுத்தன. உடனே உடையும் அழுகையைக் காட்டிலும், காலம் கடந்து உடையும் அழுகை கனமானது என்பதைத் தன் மகனின் கண்களைக் கண்டு உணர்ந்திருந்தார் சடையப்பன்.

சடையப்பன் முட்டிக்காலிட்டு அச்செடியின் முன்பு அமர்ந்தார். அவரையொட்டி மகன் அமர்ந்தான். இருவரும் செடியின் இலை, தழைகளைப் பார்ப்பதாக இருந்தார்கள். இலைகள் பந்தியில் விரிக்கப்பட்ட வாழை இலையாகவும் இலையின் சிணுங்கல் மகனின் முகமாகவும் தெரிந்தன. தொட்டாற்சிணுங்கியின் இலையில் மகனின் முகத்தையே பார்த்தார். மகனின் முகத்தில் தொட்டாற்சிணுங்கிகள் தெரிந்தன. மகன், சோர்ந்திருந்த இலைகளைத் தடவிக்கொடுத்தான்.

செடியில் முட்கள் இருந்தும் இச்செடியை ஏன் மிதிக்கிறார்கள்? இலை, காம்பிடை முட்களை நினைக்கையில் சடையப்பனுக்குக் கோபம் வந்தது. இந்த முட்கள் தன்னை உதைப்பவர்களையும் மிதிப்பவர்களையும் குத்திப் பதமாக்கினால், இப்படியாக மிதிப்பார்களா, என நினைத்தவர் வீரிய முட்களில்லாத அச்செடிக்காக இரங்கினார். அதிலிருந்தே தொட்டாற்சிணுங்கி செடியின் செழிப்பையும் அதன் சிணுங்கலையும் கவனிக்கத் தொடங்கினார். யாரும் போகிற போக்கில், அச்செடியைக் காலால் உதைப்பதைத் தனக்கும் தன் மகனுக்கும் ஏற்பட்ட அவமானமாகவே பாவித்தார். ” அச்செடி உங்கள என்ன செய்ததாம், அதை ஏன் அப்படி அவமதிக்கிறீங்க?” எனக் கேட்கச் செய்தார். அச்செடியை அவர் தன்னையொத்த எளியவர்களின் முகமாகவே பார்க்கத் தொடங்கினார்.

பழனிக்கும் அச்செடியின் மீது கரிசனம் வந்துவிட்டிருந்தது. அச்செடியை அவன் காணும்போதெல்லாம் குனிந்து அதன் இலைகளைப் பார்க்கவும் அதன் தழைகளைத் தடவிக் கொடுப்பதுமாக இருந்தான். அவனது பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் தொட்டாற்சிணுங்கி செடி அவனது வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட செடியாக ஆகிவிட்டிருந்தது.

பழனி வெளியூரில் படித்த காலத்தில் அச்செடியை இங்கேயிருந்து வேரோடு பிடுங்கிச் சென்று தொட்டியில் வைத்து வளர்ப்பதாக இருந்தான். அச்செடியை வாஞ்சையோடு வளர்த்ததில்லாமல், அதன் இலைகள் சோர்ந்து போகாதளவிற்குப் பார்த்துக்கொண்டான்.

சடையப்பனுக்குத் தன்னோடு மகனில்லாத குறையை இந்த தொட்டாற்சிணுங்கிச் செடி போக்கியிருந்தது. இச்செடி அவருக்குத் தன் மகனாகத் தெரிந்தது. இந்தப் பாவிப்பு அவர் மனதில் அடி ஆழத்திற்குச் செலுத்தப்பட்டுவிட்டது. வேலியோரத்தில் மண்டிக் கிடந்து, பலராலும் அவமதிப்பிற்குள்ளாகும் அச்செடியை மாளிகை மேல் ஏற்றி அழகு பார்ப்பதில் குறியாக இருந்தார். அப்படியாகவே அச்செடியை அவர் பால்கனியில் வளர்த்து வந்தார்.

அவரது தோட்டத்தில் பல செடிகள், தரைச் செடியாக இருக்கையில் இந்த தொட்டாற்சிணுங்கிச் செடியை இவ்வளவு உயரத்தில் வைத்து வளர்ப்பதற்கான காரணம், இதுதான் எனச் சடையப்பன் காரணக் கதையைச் சொல்லி நிறுத்துகையில், அவரது முகம் இதுநாள் வரையில்லா பிரவாகமெடுத்தது.

நான், தொட்டியில் வளர்ந்து கிளைபரப்பியிருந்த பாசிப்பச்சை நிறத்தினாலான தொட்டாற்சிணுங்கிச் செடியை வைத்தகண் எடுக்காமல் பார்த்தேன். என்னைப் போலவே அம்மாவும் அக்காளும் பார்த்திருந்தார்கள்.

கதையைக் கேட்ட அம்மாவின் கண்கள் குழம்பிக் கலங்கியிருந்தன. அம்மா முதன்முறையாக அச்செடியைக் கரிசனத்தோடு பார்க்கத் தொடங்கியிருந்தாள். பாட்டியின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. கண்களைத் துடைத்தவளாய், “இதையெல்லாம் புள்ளக்கிட்ட ஏன் சொல்றீங்க?” என்றாள்.

“சொன்னாத்தானே எதற்குள்ளாக நாம் வாழ்கிறோமெனத் தெரியும் ” என்றார் தாத்தா.

எங்களைச் சுற்றி முழு அமைதி நிலவியது. அம்மா, அப்பாவை நினைத்துத் தேம்பியிருந்த அழுகையை நிறுத்தியிருந்தாள். பூர்ண அமைதியைக் குலைக்கும்படியாக நான் கேட்டேன். “தாத்தா, நீங்கதான் அடிக்கடி சொல்வீங்க. அவமான சம்பவங்கள ரொம்பக் காலத்திற்கு மனதிற்குள் போட்டு அடைக்கக்கூடாது. அது உடம்பை வதைக்குமென. இப்ப நீங்களே இந்தச் செடியை வளர்த்து, அந்த அவமானத்த நினைக்க வச்சிட்டீங்களே?” என்றேன்.

தாத்தா என்னைக் குனிந்து பார்த்தவர், ” நான் இந்தச் செடிய வளர்க்கிறது தொட்டவுடன் சிணுங்கும் இலைக்காக அல்ல. அதன் பூவுக்காக” என்றார். இப்போது எங்கள் எல்லோருடைய கவனமும் அச்செடி பூத்திருந்த பூக்களின் மீது குவிந்தது. நான் நாற்காலியில் அத்தனை வேகமாகத் தாவி ஏறி தொட்டியை நெருங்குகையில், என் விரல் என்னையும் அறியாமல் இலைகள் மீது பட்டுவிட்டது. இலைகள் சிணுங்கி, காம்போடு சாய்ந்தன. அடுத்து நான் பூவைத் தொட்டேன். அப்பூ சிணுங்கவில்லை. தாழவில்லை. புகைப்படத்தில் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் அப்பாவைப் போல நிமிர்ந்து நின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *