“சீறிப்பாய்….. செவியில் அடி”…. சிறுகதை …. சோலச்சி.

முற்றத்து கைப்பிடியைப் பிடித்தவாறு வாசலை வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தான் கவியரசு. அவன் அசைவில்லாது நிற்பது, ஏதோ தீவிர யோசனையில் இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அவனது விழிகள்.. திறந்த கதவைப் போல் நின்றன. முற்றத்து மூலையொன்றில் வீடு கட்டிய சிலந்தி ஒன்று அவனது கால்களில் ஏறி முதுகுப்புறமாய் விளையாடிக்கொண்டிருந்தது.
“விடிஞ்சு மணி எட்டாவப் போவுது தொரை அப்புடி என்ன ரோசணையில இருக்கீக. படிப்புதான் முடிஞ்சுருச்சுல. பசங்க கூட சேர்ந்து நல்லா ஊர் சுத்துற… இப்புடி ஊர் சுத்துறதுக்கு அச்சுக்காட்ல இருக்க சீமக்கருவய புடுங்கி போட்டானாச்சும் கரி மூட்டம் போடலாம்ல. சேவ கூவுனதுல இருந்து வாசல வெறிக்க வெறிக்க அப்புடி என்னத்த பாக்குறீயோ. காலுகையி கடுக்கலயா. அந்த ஆம்பள காத்தால போனது. நீச்சத்தண்ணி கூட குடிக்காம வாச்சாத்தையும் வம்பட்டியையும் தூக்கிட்டுப் போச்சு” சொல்லிக்கொண்டே தட்டுக்கூடையில் சோறு குழம்பு சட்டிகளை லாவகமாய் அடுக்கினாள்.
உப்புப் பையை எடுத்துக் கூடையில் வைத்தவள் தலை முடியை வாரி சுருட்டிக் கொண்டாள். கிழிந்து கிடந்த பாதி வேட்டியில் சும்மாடு கோலி தலையில் வைத்து தட்டுக்கூடையைத் தூக்கினாள்.
“இந்தப் பயலுக்கு என்னாச்சு. இம்புட்டுக் கத்துறேன். காதுலயே வாங்கிக்க மாட்டேனுறான். அய்யனாரு சாமி மாறி அசையாம இருக்கான். பொழுதுசாய பேச்சியம்மா கோயிலு பூசாரிகிட்ட கூட்டிப்போயி தின்னூறு போட்டாதான் சரி வரும்.” புலம்பிக் கொண்டாள்.
” ஏலே கவியரசு… குண்டான்ல கஞ்சி வச்சுருக்கேன். ராத்திரி வச்ச வெந்தயக்கொழம்பும் கத்தரி வத்தலும் பொறிச்சு வச்சுருக்கேன். வாசல்லயே நின்னு பிராக்கு பாக்காம. வெளிய தெருவ போய்ட்டு பல்ல வெலக்கிட்டுச் சாப்புடு. பயலுவ கூட ஊர் சுத்தாம வீட்ல இரு. அப்பறமாத்துக்கு அச்சுக்காட்டுகாச்சும் வா. அந்த மனுசனுக்கு ஒத்தாசையா இருக்கும்ல. அந்த சீமைக்கருவக்கூட அந்த ஆம்பள மட்டும் தனியா போராடிட்டு இருக்கு.” சொல்லிக்கொண்டே புறப்பட்டாள் சித்ரா.
மெதுவாய் ”ம்…..” என்றவன் வாசலின் தெற்குப்புறமாய் திரும்பிப் பார்த்தான்.
இரண்டு வெள்ளாடுகளை ஓட்டியபடி போய்க்கொண்டு இருந்தாள் சித்ரா. சும்மாட்டுச் சிம்மாசனத்தில் அந்தத் தட்டுக்கூடை அவள் பிடிக்காமலேயே சொகுசாய் பயணித்துக் கொண்டு இருந்தது.
காலை நேரத்திலும் உச்சி வெயில் போலிருந்தது அவனுக்கு. கண்களை மூடி தனக்குள் ஏதோ சமாதானம் செய்துகொண்டான். நாக்கால் பற்களைத் துலாவினான். வீட்டுக்குப் பின்புறம் கிடந்த பெரிய மரக்கட்டையில் அமர்ந்து பல் துலக்க ஆரம்பித்தான். அவனை ஏதோ ஒன்று தொந்தரவு செய்து வருவதை உணர்ந்தான். திடீரென்று பற்பசையையும் பிரசையும் குப்பையை நோக்கி வீசினான்.
” இதுக்கு முன்னாடி நம்ம தாத்தா பாட்டியெல்லாம் இதுலயா வெலக்குனாங்க. தாத்தா சாகுற வரைக்கும் கறிக்குழம்புல கெடக்குற எலும்ப கடிச்சு மென்னுருவாரே. அவரு இதுல வெலக்கி ஒருநாளுகூட பாத்தது இல்லயே. அப்புடினா… வணிக நோக்கத்தோடு வாழ்க்கைய மாத்திட்டானுகளா. இல்ல மாத்திக்கிட்டோமா” நடக்க ஆரம்பித்தான். நான்கைந்து வீடு தள்ளி நின்ற வேப்பமரத்தில், கீழே நின்றுகொண்டே குச்சியை ஒடித்து பல் துலக்கினான்.
” என்னடா பயலே… இப்ப குச்சில வெலக்க ஆரம்பிச்சுட்ட. காசுகன்னி முத்துபய கொடுக்க மாட்டேங்கிறானா. சொல்லுல. அவன உண்டு இல்லனு ஆக்கிப்புடுறேன். குச்சியை ஊன்றியபடி சென்ற பெரியவர் மலையப்பனிடம் ”அப்புடியெல்லாம் இல்ல தாத்த” என்றான்.
“எல்லாரும் விடிஞ்சுருச்சுனு சொல்றாங்க. ஆனா இப்பதான் இருட்டாயிகிட்டே இருக்கு. இந்த இருட்டுல இருந்து எப்படி தப்பிக்கிறது. நம்ம படிச்சப் படிப்பு இந்த இருட்ட வெலக்காதா. வெளிச்சத்த கொடுத்துறாதா” யோசனையோடு தொட்டியில் இருந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தான். முதன்முதலாக சோப்பு போடாமல் குளித்து முடித்தான். அவனுக்குள் ஏதோ புதிதாய் பிறந்தவன் போல் இருந்தது. அடிக்கடி கண்ணாடியில் முகத்தைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டான்.
தெருவில் நின்ற வேப்ப மரம் அவனுக்கு மெல்லிய காற்றை வாரி வழங்கிக்கொண்டு இருந்தது. சாப்பிட்டுக்கொண்டே அந்தத் தூயக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினான்.
”இந்தக் காற்று இத்தனை நாள் என்ன செய்துகொண்டு இருந்தது. ஒருவேளை சிறையில் அடைபட்டுக் கிடந்ததா. இல்லை நான்தான் நேசிக்க மறந்துவிட்டேனா” தனக்குள் கேட்டுக்கொண்டான்.
”இத்தனை நாள் யோசிக்கக்கூட நேரம் ஒதுக்காமல் பொழுதை வீணாகக் கழித்துவிட்டோமே. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணியே செம்மறி ஆட்டுக் கூட்டம்போல் வாழ்ந்து விட்டோமே” தனக்குள் எண்ணி வெட்கப்பட்டுக் கொண்டான்.
“எதற்காக அச்சுக்காட்டு ஓரமாய் நின்ற சீமைக்கருவை மரத்த வேரோடு வெட்ட அம்மாவும் அய்யாவும் அவசரப்படுறாக. பேரூராட்சி மூலமா நேத்து பூராவும் ஆட்டோவுல மைக் வச்சு அறிவிச்சது எதுக்கு. சீமைக்கருவ மரம்தான் மழையத் தடுக்குது. நெலத்தடி நீரு கொறயுதுனு எந்த விஞ்ஞானி சொன்னாரு. எதுக்கு இப்புடி பண்றாங்க”
அவன் வீட்டுத் தெரு வழியே, சாணம் தெளித்து கோலம் போடும் அம்மாவைப்போல் இரண்டு தண்ணீர் லாரிகள், தண்ணீரை மண் சாலையில் சிந்தியபடி சென்றுகொண்டு இருந்தன. மண்வாசனை அவனை கிறங்கடித்தது.
பல ஆண்டுகளாகவே இந்தத் தண்ணீர் லாரிகள் அவன் வீட்டு வழியாகத்தான் சென்று வருகின்றன. லாரிகள் சென்றதும், தண்ணீர் சிந்திய இடத்தில் தங்களது பெயர்களை நண்பர்களுடன் எழுதி விளையாடியது நினைவுக்கு வந்தது. யோசிக்க ஆரம்பித்தான். மழை வராததுக்கும் நிலத்தடி நீர் குறஞ்சதுக்கும் சீமைக்கருவ மரங்கள் மட்டும் என்னடா பாவம் பண்ணுச்சு”
சாப்பிட்டு முடித்தவன் கதவைப் பூட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானம் பார்த்த பூமிதான். சீமைக்கருவ மரத்துக்கு இணையாக சோளக்காடும் சக்கரவள்ளிக்கிழங்கும் எப்படி வெளஞ்சுச்சு. அப்பவுலருந்து மழை கொஞ்சமாதானே பேஞ்சுச்சு. குடிக்கிற தண்ணிக்கு பெரிய கொறை ஒன்னும் வரலயே….”
“ஏலே மாப்ளே.. கால்ல செருப்பு கூட போடாம எங்கள கெளம்பிட்ட. எப்பவும் என்னயக் கூப்படுவ. இன்னக்கி மறந்துட்டேளோ. அப்புடி என்னலே… தல போற காரியம்” மாரிமுத்து கூப்பிட்டதும் திரும்பி பார்த்தான்.
“எதுக்குலே.. இப்ப மூஞ்சி வாட்டமா இருக்கு. ஏலே சவுதில இருந்து வந்து ஏழுநாளாச்சு. எங்காச்சும் ஒன்னவிட்டு பிரிஞ்சுருக்கேனா. இந்த ஒட்டப்பிடாரத்துல ஒன்னய காயப்படுத்துனவன் எவன்லே. மூஞ்ச பேத்தர்றேன்” கைகள் இரண்டையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
” மாப்ள ஒனக்கு தெரியும்ல. எங்க அய்யா அடிக்கடி சொல்வாருலே அப்ப சோளப் பஞ்ச காலமா. அந்த நேரத்துல இந்தச் சீமைக்கருவதான்ல எல்லாருக்கும் சோறு போட்டுருக்கு. இன்னக்கிவரைக்கும் நம்மாளுகளுக்கு இந்த சீமைக்கருவதான்ல கரி மூட்டம் மூலமா கஞ்சி ஊத்திகிட்டு இருக்கு. சீமைக்கருவ தண்ணிய உறிஞ்சுதுங்குறதுகூட உண்மையா இருக்கலாம். அதுக்காக நெலத்தடி நீரு வத்துற அளவுக்கு அது உறிஞ்சுதா என்ன. இத்தன வருசமா உறிஞ்சாத சீமைக்கருவயா இப்ப அதிகமா உறிஞ்சப் போகுது”
“என்னலே ஆச்சு.. இப்புடி பேசுற. எதையும் புதுசா கெளப்பி விட்றாதலே. நாடே கெட்டுப்போயி கெடக்குது. வய வாக்கானு அத்தனையும் திட்டங்கிற பேருல அவனுகளே எடுத்துக்கிறமாறி சட்டத்த போட்டு நாட்டக் கெடுத்துக்கிட்டு இருக்கானுக… மாடா மனுசனானு பாத்தா. மாடுதான் முக்கியமுனு மனுசன கொல்லுற காலமா இருக்குலே. போற போக்கப்பாத்தா பெரிய பணக்காரனுககிட்ட நாட்ட ஏலம் விட்டு சம்பாதிக்கிற அளவுக்கு இந்த நாட்டோட அரசியல் போயிகிட்டு இருக்கு. இதுல நீ எதயாவது சொல்லப் போயி தேசத்துரோகினு சொல்லி காலம்பூரா களி திங்க வச்சுருவானுகலே….”
“அப்புடினா வாய மூடிக்கிட்டு இருக்க சொல்றியா. நம்ம ஊர்லயே போர் போட்டு தண்ணிய எடுத்து அதயே ஒரு கேனு தண்ணி நாப்பது ரூவானு விக்கிறானுக. பாத்துக்கிட்டு சும்மா இருக்கனுமா”
“மாப்ள நமக்கெல்லாம் ஒத்து வராதுலே. படிச்சு முடிச்சுட்டியல்ல. பாஸ்போட்டுக்கு அப்ளே பண்ணு எங்கூடவே சவுதி வந்துரு. கண்ணுக்குத் தெரியாம கஷ்டப்பட்டாலும் கடைசி காலத்துல நாலு காசு பணத்தோட நிம்மதியா வாழலாம்லே…”
“தங்கண்ணே … ரெண்டு டீ போடுண்ணே” சொல்லிக்கொண்டே இருவரும் டீக்கடை மேசையில் உட்கார்ந்தனர்.
![]()
நான்கு அலுமினியக் குடங்களை சைக்கிளில் கட்டிக்கொண்டு வேகமாய் அழுத்திக்கொண்டு புறவழிச்சாலை நோக்கி போய்க்கொண்டு இருந்தான் செல்லத்துரை.
“மாப்ள பாத்தியல்ல. புறவழிச்சாலை தாண்டி விளாத்திகுளம் பக்கத்துலதான் நல்ல தண்ணி கெடக்கிதுனு தண்ணி எடுக்க போயிகிட்டு இருக்கான். அவன் வீட்டுக்கு வர்றதுக்குள்ள பொழுது சாஞ்சுரும்டி. நீ சவுதி போன மூனு வருசத்துல என்னன்னமோ நடந்துருச்சு”
மாரிமுத்து கையில் இருந்த டீ குவளை இப்போது அதிகமாக சூடாகி இருந்தது. அவனால் டீயை குடிக்க முடியவில்லை. சூட்டோடு குடிக்க முயற்சித்தான். உப்புக்கரித்ததாக உணர்ந்தான்.
” மாப்ள நாம ஏதாவது செஞ்சே ஆகனும்டா” உதட்டைக் கிழித்துக்கொண்டு வார்த்தைகள் குதித்தன. கவியரசும் இதைத்தான் எதிர்பார்த்திருந்தான்.
இருபது ரூபாய்த் தாளை எடுத்து தங்கச்சாமியிடம் நீட்டினான் மாரிமுத்து.
“தம்பி காசு வேண்டாம்பா. நீங்க ஏதோ பண்ணப்போறிகனு எம்மனசு சொல்லுது. நம்ம ஒட்டப்பிடாரத்த காப்பாத்திருங்கய்யா. ஒங்களோட என்னயவும் சேத்துக்கங்கய்யா.அது போதும்” தங்கச்சாமியின் கண்களில் ஏக்கம் குவிந்து கிடந்தது.
“இது ஒன்னோட உழைப்புண்ணே. வாங்கிக்க. ஆனா எப்பவும் எங்க கூட இரு” சொல்லிக்கொண்டே காசை நீட்டீனான் கவியரசு.
இருபது ரூபாயை வாங்கிக்கொண்டு மீதி எட்டு ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார்.
“வெளிநாட்லருந்து என்னக்கி வந்தியோ அன்னயிலருந்து இவன கூட்டிக்கிட்டே திரியுற. ஒரு எடத்துல இருக்க மாட்டேளா. பொழுது சாய ஆரம்பிச்சிருச்சு இப்ப எந்தப் பஞ்சாயத்துக்குலே கெளம்பிட்டிய. நல்லா சேந்துருக்கானுக கூட்டாளிகளா. சின்னாத்தாகிட்டய்யா நீ சரிபட்டு வருவ. ஆட்ட மேச்சு தேஞ்சு போறா. நாலு காசப் பாத்தவுடனே ராசாமாருக சுத்த ஆரம்பிச்சுட்டீக” சித்ரா சொல்வதை இருவரும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
பைக்கில் இருவரும் தூத்துக்குடி நோக்கி பயணித்தனர். எதிரே தண்ணீர் குடங்களுடன் செல்லத்துரை சைக்கிளில் வந்து கொண்டு இருந்தான்.
” குடிக்க தண்ணி கெடக்காம பஞ்சாயத்துபோர்டு முன்னால நம்மாளுக எத்தனையோ தடவ போராட்டம் பண்ணுனாங்க. தண்ணி லாரி மூலமா ரெண்டு தடவ அதிகாரிக கொடுத்தானுக. அவ்ளோதான். அம்மாடி இனி தண்ணி கஷ்டமே வரக்கூடாது. பெய்யிர மழை மண்ணுல தங்கி காலகாலத்துக்கும் உதவனும்…” எண்ணியவாறு மாரிமுத்தோடு போய்க்கொண்டு இருந்தான் கவியரசு.
இரவு முழுவதும் மாரிமுத்துவும் கவியரசும் ஊர்ஊராகச் சென்று வந்ததில் விடிந்தது கூட தெரியாமல் அவரவர் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தனர்.
”ஊருக்குள்ள ஒரே கலவரமா கெடக்குது. இந்த பய சித்ரா மயன்கூடதான் திரிஞ்சான். எல்லாரும் இவனுகளத்தானே சொல்றானுக. நமக்கு எதுக்கு ஊர் வம்புங்கிறேன். ரோட்டுல போகும்போது லாரியவிட்டு அடிச்சுப் போட்டுட்டு போயிட்டானுகனா. உசுரு திரும்ப வந்துருமா.” சின்னாத்தாள் ஒப்பாரியே வைத்துவிட்டாள்.
“பய எந்திரிக்கலையாத்தா… ” ஒருவர் கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள் சின்னாத்தாள்.
“ஏந்த்தா… ஓம்மயன் எந்திரிச்சுட்டானா…” பதற்றமானாள் சித்ரா.
“இன்னும் எந்திரிக்கலயே. அசந்து தூங்கிட்டுல்ல இருக்கான். விடிஞ்சதும் விடியாமல ஏகப்பட்ட சனம் இவன கேட்டுட்டுப் போயிட்டாங்க. என்ன நடக்கப்போவுதோ. பயமா இருக்கு….”
“அவனையும்தான் ஆளாளுக்கு வந்து வாசலயே பாத்துட்டு பாத்துட்டு போறாங்க….”
தங்கச்சாமி டீக்கடையில் கூட்டம் இன்று அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. தனக்கு எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டார் தங்கச்சசமி.
![]()
“நம்ம பசங்க சரியாதானய்யா போஸ்டரு ஒட்டிருக்கானுக. தலைப்ப பாத்தீகளா. அந்தக் காரம்சாரம்தானய்யா நமக்கு இப்ப வேணும். பசங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராம நாமதான் பாத்துக்கனும் ”
” ஊரெல்லாம் ஆரசுவதி மரத்த நட்டு வச்சா எப்புடிலே நெலத்துல தண்ணி நிக்கும். மழைதான் எப்புடிலே பெய்யும். கருவ மரத்த அழிச்சுப்புட்டா அடுப்பெரிக்க கேசு கம்பெனி காரனுககிட்ட கையேந்தி நிக்கணும். கரி மூட்டம் போட்டு பொழப்பு நடந்துச்சு. கல்யாணம் காச்சிக்கி வெட்டிக்கிட்டோம். இனிமே அதுக்கும் வழி இருக்காது. காசு கொடுத்தா ஓட்டு போடுற வக்கத்த கூட்டமுனு பல பேரு நெனச்சுக்கிட்டு இருக்காக”
“எனக்குத் தெரிஞ்சு அஞ்சாறு தண்ணி லாரிதான் போச்சு. இப்ப அங்க இங்க ஆத்துலனு போர்போட்டு ஆயிரக்கணக்குல தண்ணி லாரிக பெருகிருச்சு. ஓசில வர்ற தண்ணிய காசாக்கி சொகுசு வாழ்க்க நடத்துறானுக”
“கூல்டிரிங்ஸ் கம்பெனி காரனுகளையும் தண்ணி கேனு கம்பெனி காரனுகளையும் நம்ம பயலுக சொல்ற மாறி வெரட்டுனாலே நெலத்துல உள்ள தண்ணி தங்கிடும்”
“அவனுககிட்ட வேல பாக்குறதுல முக்காவாசி பேரு நம்ம ஊர சுத்தி உள்ளவனுகதானே….”
“அவனுகள அங்க வேலக்கி போகாதனு சொல்லுவோம். கம்பெனிக்காரனுக தடுக்க வந்தா அவனுகளுக்கும் தம்பிக சொன்னமாதிரி செவில ஒரக்கிற மாறி போட்டா அடங்கப் போறானுக. நம்மல மீறி என்னத்த பண்ணிருவானுக. ஆனா நம்மோட ஒத்துமைதான் ரொம்ப முக்கியம்”
“நெலத்தடி நீரு கொறஞ்சதுக்கு சீமக்கருவையும் ஒரு காரணம்னு தெரிஞ்சா காலப்போக்கில கொஞ்சம் கொஞ்சமா நாமலே அழிச்சிருவோம்….”
“பதனி எறக்குவோம். எளநீ குடிக்க வைப்போம். இதத்தானே இத்தனகாலமா குடிச்சோம். நீச்சத்தண்ணி குடிச்சா சக்கர வியாதி வருதுனு எவனோ கெளப்பி விட்டத நம்பி இன்னக்கி வரைக்கும் ஏமாந்திட்டோம்”
“தண்ணி கம்பெனியவும் கூல்டிரிங்ஸ் கம்பெனியவும் மூடச் சொல்லி கலைட்டர் கிட்ட எல்லாரும் முறையிடுவோம். அதிகாரத்துல யாரு இருந்தாலும் பேச வந்துதானே ஆகனும்”
இப்படியாக அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். டீ ஆத்திக்கொண்டே ” சீறிப்பாய்…. செவியில் அடி….” உரக்க முழக்கமிட்ட தங்கச்சாமியால் அந்த இடம் சற்று நேரம் நிசப்தமானது…..
” இன்னக்கி பொழப்பு தலப்புக்கு யாரும் போக வேணாம். புள்ளக்குட்டிகள கூட்டிக்கிட்டு கலைட்டர் ஆபிசுக்கு வந்துருங்கலே. இல்லனா… நாம செத்தா எள்ளு தண்ணீ எறக்க கூட அவனுககிட்டதான் கையேந்தி நிக்கனும்….” சரண்ராசு சொல்லிக்கொண்டே வீட்டுக்கு விரைந்தார்.
தொலைக்காட்சி ஒலி அளவு அதிகமாய் இருக்கவும் கவியரசு மெதுவாய் கண் விழித்துப் பார்த்தான். நாற்காலியில் அமர்ந்தவாறு தலைப்புச் செய்திகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான் மாரிமுத்து.
” சீறிப்பாய்…. செவியில் அடி…..” அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இதுதான் முக்கியச் செய்தியாக இருந்தது.
……………..******……………….
![]()
தண்ணீர் பஞ்சம் தீர்க்க வேண்டும் எனில் மக்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தான் சாத்தியம்.
உங்க எழுத்து அனைவரையும் சிந்திக்க வைத்தது ஆதிக்க சக்திகள எதிர்க்க வைக்கும்.
புரட்சிகரமான சிந்தனை. புதுமைகளின் சூழ்ச்சிகளில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு பழமையின் எதார்த்தங்களை பயனுள்ள வகையில் உறுதிப்படுத்தி இருப்பது மழைக்கால மண்வாசனையாய் மணக்கிறது…
வாழ்த்துக்களும்…நன்றிகளும்…