“நடுகைக்காரி” …. 55 …. ஏலையா க.முருகதாசன்.

தாயிடம் கொர்லிக்ஸ் போத்தலை வாங்கிக் கொண்டு கல்லூரிக்குப் போவதற்காக கேற்றை நோக்கிப் போய்க் கொண்டிருந்த மகளை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் புஸ்பகலாவின் தாய்.
என்னதான் பிள்ளைகள் மீது பெற்றோருக்கு அவர்களின நடத்தைகள் மீது நம்பிக்கை இருந்தாலும் இளந்தாரி வயது மகன்களைப் பற்றியும் குமர்ப்பிள்ளையான தமது பருவ வயதுப் பெண்பிள்ளைகள் பற்றியும் மனதின் ஏதோ ஒரு மூலையில் நம்பிக்கையீனம் ஒழிந்து கொண்டுதானிருக்கும்.
அதற்குக் காரணம் அவர்கள் அன்றாடம் கேள்விப்படும் இளம்பிள்ளைகள் பற்றிய கதைகளே.
சிநேகிதியோடை யாழ்ப்பாணத்துக்கு துணி வாங்கப் போகிறன் என்ற பொய் சொல்லி தனக்கு விருப்பமான பொடியனோடு படம் பார்க்கப் போவதும் தற்செயலாக அதைக் காணும் அந்தப் பெண்பிள்ளையின் அயல் வீட்டுக்காரன்,என்ன உன்ரை மோள் யாரோ ஒரு பொடியனோடை பக்கத்திலை உட்கார்ந்து படம் பார்த்ததைக் கண்டனான், அந்தப் பொடியன் உங்கடை சொந்தக்காரப் பொடியனோ என்று கேட்:க ஓம் என்றும் இல்லை என்றும் சொல்ல முடியாத தாய் ஒருத்தி தடுமாறி பிறகு எங்கடை சொந்தந்தான் என்று பொய் சொல்வதும் மகளைக் கூப்பிட்டு நீ சினேகிதிகளோடை யாழ்ப்பாணத்துக்குத் துணி வாங்கப் போறெணெண்டு சொல்லி எங்களை ஏமாற்றிப் போட்டு யாரோ பொடியனோடை படம் பார்க்கப் பொயிருக்கிறாய் யாரடி அது என்று கேட்க இல்லாத பொய்களைச் சொல்லித் தப்பித்துக் கொள்ளும் பெண்பிள்ளைகள் பற்றிய கதைகளையும் அப்பப்ப கேட்டறிந்து கொள்ளும் புஸ்பகலாவின் தாய் தனது வகுப்புச் சினேகிதிக்குக் காய்ச்சல் என்று பொய் சொல்லித்தான் தன்னிடமிருந்து கொர்லிக்ஸ் போத்தலை வாங்கிக் கொண்டு பேகிறாளோ,சிலவேளை தன் மகளோடை படிக்கிற பொடியங்களில்; யாராவது சுகமில்லாமல் இருக்கிறானோ அவனைப் பார்க்கத்தான் போகிறாளோ எனவும் யோசிக்கத் தொடங்கினாள்.
வீட்டிலிருந்து வெளிக்கிட்டு கலலூரிக்குப் போவதும்;; அங்கிருந்து திரும்பி வருவதற்குமிடையில் கல்லூரியில் தனது மகள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறாளோ தெரியாதே என்று குழம்பிக் கொண்டெயிருந்த தாய் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று ஆறுதலடைந்தாள்.
கல்லூரிக்கும் போனதும் புஸ்பகலா தனது தோழி மங்களேஸ்வரியிடம் இண்டைக்கு ஞானம் பள்ளிக்கூடம் வரமாட்டார்,அவருக்கு நல்ல காய்ச்சல்,நான் கொர்லிக்ஸ் கொண்டு வந்திருக்கிறன் அவரைப் பார்க்கப் போகிறன்.உனக்குக் காய்ச்சல் உன்னைத்தான் பார்க்கப் போறன் என்று அம்மாவுக்கு பொய் சொல்லி அவாட்டை ஒரு கொர்லிக்ஸ் போத்தல் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன்,எப்பவாவது தற்செயலாக அம்மா உன்னைச் சந்திக்க வேண்டி வந்தால் அம்மா உன்னட்டை நீ காய்ச்சலாக இருந்தனியா என்று கேட்டால் ஓம் என்று பொய் சொல் என்னைக் காட்டிக் குடுத்திடாதை
என்று கெஞ்சாத குறையாகக் கேட்க, தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே பயப்படாதை உன்னை யாருக்கும் காட்டிக் குடுக்கமாட்டன் என்று புஸ்பகலாவின் தோளில் கைவைச்சுச் சொன்ன மங்களேஸ்வரி நீ முந்தி தாய் தகப்பனுக்குப் பொய் சொல்லக்கூடாது தாய்தகப்பனோடை உண்மையாக நடக்க வேணும் என்று எங்களுக்கு உபதேசம் செய்வாய் இப்ப எல்லாம் தலைகீழாக மாறிவிட்டுது காதலென்று வந்துவிட்டாலே பொய் சொல்வது சர்வசாதரணமாகிவிடும்,வாயிலை பொய் மட்டுந்தான் வரும் என்பதற்கு நீ ஒரு உதாரணம் என்று மங்களேஸ்வரி கிண்டலடித்தாள்.
காணும் பேசாமலிரு என்று புஸ்பகலா மங்களேஸ்வரியை அடக்கினாள்.பாடங்கள் ஆரம்பிப்பதற்கான முதல் மணியடித்து தேவாரமும் சொல்லத் தொடங்கியாச்சு.
அதிபரின் அறையிலிருந்து மைக்கில் தேவாரம் சொன்னால் எல்லா வகுப்புகளுக்கும் அது கேட்கும்.நிரையாக கட்டப்பட்டிருக்கும் வகுப்புகளுக்கு இரண்டு வகுப்புகளுக்கு ஒன்றாக நடுவில் ஒலிபெருக்கிப் பெட்டி வைக்கப்:பட்டிருக்கும்.
கிராமத்தில் உள்ள கல்லூரியென்றாலும் மகாஜனாக் கல்லூரி இலங்கையிலேயே நவீனமயப்படுத்தப்பட்ட கல்லூரியாக முன்மாதிரியாக இருந்தது.
தேவாரம் சொல்லி முடிஞ்சதும் வகுப்புகள் ஆரம்பமாகின.முதல் பாடம் ஆங்கிலம்,கறுவல் செல்லத்துரை மாஸ்ரர்தான் ஆங்கில ஆசிரியர், வகுப்பாசிரியரும் அவர்தான்.
கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் வகுப்புக்குள் நுழைஞ்சதும் ஒரு முறை வகுப்பை கண்களால் துழாவினார்.
தனபாலசிங்கத்தைப் பார்த்து என்ன தனபாலசிங்கம் ஜெமினி கணேசனைக் காணேலை என்று கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் கேட்டு முடிக்கமுந்தி அவர் யாரை ஜெமினி கணேசன் என்ற சொல்கிறார் என்பதை அறிஞ்சு வைச்சிருந்த தனபாலசிங்கம் சேர் அவருக்கு காய்ச்சல் அதுதான் வரேலை நேற்றுக் காய்ச்சலோடை வந்தவர் அது கொஞ்சம் கடுமையாக்கி போட்டுது போல அதுதான் இண்டைக்கு வரேலை என்று நினைக்கிறன் சேர் என்று சொன்னான் தனபாலசிங்கம்.
ஞானத்;தைத்தான் ஜெமினி கணேசன் என்று கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் சொல்கிறவர் என்பது வகுப்பிலுள்ள எல்லாருக்குமே தெரியும்.கல்லூரிக்குள் ஞானம் புஸ்பகலா இருவரினதும் காதல் விவகாரம் மெல்ல மெல்லக் கசிஞ்சு இப்ப கல்லூரி முழுவதற்குமே தெரியும் நிலைமைக்கு வந்துவிட்டது.
கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் சொல்லிக் கொண்டே,மெய்யே தனபாலசிங்கம் ஜெமினி கணேசனக்குக் காய்ச்சலென்றால் சாவித்திரிக்கு கவலை வரவேணுமே,அது சரி கொர்லிக்ஸ்ஸென்று ஏதாவது வாங்கிக் கொண்டு போய் ஞானத்துக்கு குடுத்து வருத்தம் பார்க்கப் போகேலையோ என:றுபுஸ்பகலாவைப் பார்த்துக் கேட்டதும் புஸ்பகலாவுக்குச் சுருக்கென்றது.
தான் ஞானத்தைப் பார்க்கப் போவதற்காக கொர்லிக்ஸ் கொண்டு வந்திருப்பதை மாஸ்ரர் அறிஞ்சு வைச்சுப் பேசுவது போலப் பேசுகிறாரே என்று திகைச்சவள், அவர் சும்மா ஒரு ஊகத்திலை கதைக்கிறார் எனச் சமாதானம் அடைநஞ்சாள்.
புஸ்பகலாவை குத்திட்டுப் பார்த்த கறுவல் செல்லத்துரை மாஸ்ரர்,புஸ்பகலா சோர்ந்து போயிருப்பதைக் கண்டதும் என்ன புஸ்பா சோர்வாயிருக்கிறாய்: உடம்புக்கு ஏதாவது செய்யுதா என்று கேட்க இல்லைச் சேர் நான் நல்லாய்த்தான் இருக்கிறன் அப்படி ஒன்றுமில்லை எனச் சமாளிக்கிறாள்.
ஆனால் அவளின் முகத்தில் காணப்பட்ட சோர்வைக் கண்ட கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் ஞானம் பள்ளிக்கூடத்துக்கு வராததால்தான் அவள் சோர்வாக இருக்கிறாள் என்பதை ஊகித்துக் கொள்கிறார்.
அது சரி ஞானத்தை வருத்தம் பார்க்க ஆருமே போகேலையோ கொர்லிக்ஸ் கிர்லிக்ஸை வாங்கிக் கொண்டு போய் குடுத்து வருத்தம் பார்க்க வேண்டியதுதானே,ஆரேன் போனால் நான் சுகம் கேட்டதாயும் சொல்லுங்கோ என்றவர்,மெய்யே புஸ்பகலா நீ பார்க்கப் போகலையோ என்ன இருந்தாலும் உங்களோடை படிக்கிற சக மாணவன் போய்ப் பார்க்கிறது நல்லதுதானே என ஒரு மெதுவான சிரிப்புடன் செருமுகிறார்.
தான் ஞானத்தை வருத்தம் பார்க்கப் போவதை ஊகிச்சுத்தான் மாஸ்ரர் கதைக்கிறாரோ என நினைக்கிறாள் புஸ்பகலா.புஸ்பகலாவின் முகம் வாடியிருப்பதை கறுவல் செல்லத்துரை மாஸ்ரரும் கண்டு கொள்கிறார்.
(தொடரும்)
![]()