மோகன் வாத்தியார்!…. சிறுகதை …. சோலச்சி.

“நாம அப்புடி பேசிருக்ககூடாதோ. போயும் போயும் கல்யாணம் நடக்குற எடத்துல அப்புடி நா பேசினது சரியில்ல. இல்ல.. பேசுனது சரிதான். அப்புடிப் பேசுனாத்தான் மத்தவனுகளும் திருந்துவானுக. நாட்ட ஆளுறதுல இருந்து நாசமா போக வைக்கிற வரைக்கும் ஏதோ ஒரு
வாத்தியாருகிட்ட படிச்சவனுகதானே. புத்தகத்துல உள்ளத மட்டும் சொல்லிக் கொடுக்குறதுக்கா இந்த வாத்தியாரு பொழப்பு”
“கொட்ட வேண்டிய எடத்துல கொட்டியும் தட்டிக்கொடுக்க வேண்டிய எடத்துல தட்டியும் கொடுத்தாதான் நல்ல வழிக்கு வருவானுக. ரிட்டேரு ஆயிட்டாக்க நா வாத்தியாரு இல்லயா. வாத்தியாரு கேள்வி கேப்பாருங்குற பயம் எல்லாருக்கும் சாகுற வரைக்கும் இருக்கனும். படியாத மாடு ஒழவுக்கு ஒத்து வருமா” என்ற சிந்தனையோடு வீட்டுத் திண்ணையில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த மோகன் வாத்தியார் பழைய நினைவுகளில் மூழ்கினார்.
“அய்யா, எங்க கல்யாணத்த நடத்தி வச்ச மாதிரி எம் மக கல்யாணத்தயும் நீங்கதான் முன்னாடி நின்னு நடத்தி வைக்கனும்…” என்றார் ஆனந்த்.
அவ்வப்போது கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்ட ஆனந்திடம்…
” என்னப்பா வேர்க்குதா. எனக்குப் பழகிருச்சு. அம்மாடி நீ வேணா அப்புடி படில ஒக்கந்துக்கவே”
” இல்லங்கய்யா இப்புடி திண்ணையிலயே ஒக்காந்துக்குறேன்”
” நாங்க ரெண்டு பேருமே கிராமத்துல பொறந்து வளந்தவங்கதானே’. இந்த வாழ்க்கை நீங்க கொடுத்ததுங்கய்யா”
” நீ நல்லா படிச்ச. ஒன்னோட தெறமைக்கு கெடச்ச வேலைய்யா. இதுல நா எங்க”
“எனக்கான ஆணிவேரு நீங்கதானய்யா” ஆனந்த் சொன்னபோது மோகன் வாத்தியார் கண்களில் குபீரென்று நீர் எட்டிப்பார்த்தது. நாற்காலியில் கிடந்த துண்டால் துடைத்துக் கொண்டார்.
” நீங்கெல்லாம் வந்துருக்கீக. தண்ணி மோந்து கொடுக்கக்கூட இங்க ஆளு இல்ல. ஊருக்குள்ள இருக்கே வேலு கேண்டீனு அங்கருந்துதான் மூனு நேரமும் சாப்பாடு வருது. அண்ணன் மருமகதான் தட்டுகிட்ட கழுவி வச்சிட்டு தண்ணி மோந்து வச்சிட்டு போகும்..”
“அய்யா ஒங்க பையன் ஒருத்தரு இருந்தாரே” சொற்களைக் கோர்த்தாலும் ஒலியளவை குறைத்தார்.
“கெவுர்மெண்ட் வேல பாக்குறான்ல. அதுனால கெவுர்மெண்ட் வேல பாக்குற பொண்ணதான் கட்டிக்குவேனு சொல்லி கட்டிக்கிட்டு குடும்பத்தோட ஆரணில இருக்கான். ஏங்கூடவே வந்துருனு எவ்ளவோ சொன்னான். எனக்குத்தான் ஓட்டு வீட்டயும் இந்த ஊரயும் விட்டுட்டுப் போக மனசில்ல. ஆனா ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவயாச்சும் வந்துட்டு போயிருவான்” பெருமூச்சுடன் நிமிர்ந்து உட்கார்ந்து வசந்தாவைப் பார்த்தார்.
“நா வேலக்கிப் போகாம பசங்களப் பாத்துக்கிட்டு வீட்லதாங்கய்யா இருந்தேன். பசங்க இப்ப பெரியாள வந்துட்டாங்க. வீட்ல அவ்வளவா வேலயில்லயா. அதுனால பார்வையற்றோர் பள்ளிக்கூடத்து புள்ளைங்களுக்கு சம்பளமில்லா டீச்சரா போய்க்கிட்டு இருக்கேன்” மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள்.
தலையை மேலும் கீழும் அசைத்தவர் ”ம்….” என்று கண்களை மூடித் திறந்தார்.
“ஈப்பி ஆபிசுலதாயா ஒங்க ஊரு மலையரசன் வேல பாக்குறான். அவன் ஓங்கூடவா படிச்சான்”
“அவன் எனக்கு பின்னாடி செட்டுங்கய்யா. அன்னைக்கு அவனப்பாத்தேன். அவன் சொல்லிதாங்கய்யா நா இங்க வந்தேன்”
“ம்…. அவன்தான் இந்தப்பக்கமா வந்தா பாத்துட்டுப் போவான். யாருக்கிட்டயும் எதும் பேசுறது இல்ல நா. வெளில என்ன நடக்குதுனே தெரியாம போச்சு. மனசு ஒருமாதிரி இருக்கவும் போன தடவ ஓட்டுப்போடக்கூட போகலப்பா. ஒத்தக்கையா இப்புடி ஒக்கார வச்சுட்டுப் போயிட்டாளே. அது போகட்டும் போறப்ப அவனுக்கும் ஒன்னு வச்சுட்டு சொல்லிட்டுப் போ. அவன்கூடவே வந்தர்றேன்”
“இனமாற்றிக் கழித்தல்னு நம்ம வாத்தியாரு சொல்லிட்டாலே ஒன்னுக்குப் போயிருவான் இந்த மலையரசன். இப்ப வாத்தியாருக்கு புடுச்ச புள்ளயா மாறிட்டானே… “தனக்குள் நினைத்துக்கொண்டார்.
பேசிக்கொண்டு இருக்கும்போதே, மோகன் வாத்தியார் காலைத்தொட்டு இருவரும் வணங்க முயன்றபோது “காலுல எதுக்குயா விழுந்துகிட்டு. என்னோட அன்பு எப்பவும் என் புள்ளைங்களுக்கு உண்டு” என்று கூறி வழி அனுப்பி வைத்தார்.
முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றும் ஆனந்த் தன் மனைவி வசந்தாவுடன் காரில் வந்து மகளின் திருமணவிழா அழைப்பிதழை கொடுத்துச் சென்றதிலிருந்து உற்சாகமாகக் காணப்பட்டார் எழுபத்தெட்டு வயது மோகன் வாத்தியார்.
“குடியரசு தலைவரா இருந்தாலும் அவருக்கு எழுதப் படிக்க சொல்லிக் கொடுத்ததே இந்த ஒன்னாங்கிளாசு வாத்தியாருகதான். சின்னக்கிளாசு வாத்தியாருகனா அரசாங்கமே எளக்காரமா பாக்குது. வெத போட்டு மொளக்க வைக்கிறதே நாங்கதானே. எங்களுக்கு நல்லது பண்ணணும்னா அரசாங்கத்துக்கு கையே வர மாட்டேங்கிது. சின்னக்கிளாசு வாத்தியாருகள அவ்ளோ வெரசா எல்லாரும் மறந்துற முடியுமா” தன்னுள் பெருமை பேசிக்கொண்டே மேலச் சுவரில் தொங்கிய மனைவி பேச்சியம்மாளின் புகைப்படத்தைப் பார்த்து மெல்லியதாய் சிரித்துக் கொண்டார்.
மோகன் வாத்தியார் முப்பத்தொன்பது வருடம் தொடக்கப்பள்ளி வாத்தியாராக பணியாற்றினார். அதில் கடைசி பதினாறு ஆண்டுகள்
தலைமை ஆசிரியராக பணி. முழு அதிகாரமும் தன் கைக்குள் வந்துவிட்டால் மாணவர்களுக்குத் தேவையானதை செய்தும் சொல்லியும் கொடுக்கலாம் என்று சக ஆசிரியர்களிடம் சொல்லிக் கொள்வார்.
ஈராசிரியர் பள்ளியில் எத்தனையோ தலைமை ஆசிரியர்களிடம் பணிபுரிந்து இருந்தாலும் இராஜேஸ்வரி டீச்சரைப் பற்றி எல்லோரிடமும் பெருமையாக பேசுவார்.
” வாரவாரம் வெள்ளிக்கிழமை மத்தியானம் முழுசும் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள மட்டும் வச்சு, சிந்திக்கிறதுக்கான வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுத்தா, பசங்க படிக்கிறதோட மத்த விசயத்துலயும் ஆர்வம் காட்டுவானுகதானே”
“ஏங்க சார். பாடம் சொல்லித்தரலயானு அதிகாரிக கேட்டா என்ன சொல்றதாம்”
“புத்தகத்த தாண்டியும் சொல்லிக் கொடுப்போம் டீச்சர். அன்னைக்கியாச்சும் பாடப் புத்தகத்த மூட்டகட்டி வைக்கட்டுமே. எப்பப்பாத்தாலும் படிபடினு சொன்னா அவனுகளுக்கு வெறுப்பு வராதா. புள்ளைகள படிக்கிறதே தெரியாம படிக்க வைக்கனும் டீச்சர்”
“நல்லாதான் சார் இருக்கு. ஆனா…” அவர் பேச்சை இழுப்பதற்குள் “விடுங்க டீச்சர் பாத்துக்கலாம்” மோகன் வாத்தியார் முகத்தில் புன்னகை நடனமாடியது.
அதேபோல்தான் வியாழக்கிழமை மதியம் முழுவதும் மாணவர்களுக்கு விளையாட்டு என்று சொன்னபோதும் இராஜேஸ்வரி டீச்சர் மறுக்கவில்லை. இப்படி புதுமைகளை புகுத்திய போதெல்லாம் மறுக்காமல் ஒத்துக் கொண்டதால்தான் அவரை எப்போதும் பெருமையாகவே பேசுவார். நாம் தலைமை ஆசிரியராக இருந்தால் இன்னும் நிறைய புதுமைகளை புகுத்தலாமே என்று எண்ணியதால்தான் அதிகாரம் தன் கைகளுக்கு கிடைக்க வேண்டும் என எண்ணினார்.
“அதிகாரத்தைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும். அதிகாரம் கைகளுக்கு கிடைத்துவிட்டால் மக்களுக்கு எவ்ளோ நல்ல காரியங்கள் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்யிங்கய்யா…”என்று அடிக்கடி சொல்லுவார்.
ஆசிரியர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்தபோது தன் மகனை தாய்மொழிக்கல்வி உள்ள அரசுப்பள்ளியிலேயே சேர்த்து படிக்க வைத்தார்.
புதிதாக ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களை சந்தித்துவிட்டால் போதும் தான் முதலில் பணியில் சேர்ந்த பள்ளியின் அனுபவத்தை மறக்காமல் சொல்லி சிலாகித்துக்கொள்வார்.
காண்டாம்பட்டியிலிருந்து எருக்கலாங்காடு பள்ளிக்கூடத்துக்கு முப்பத்தேழு கிலோமீட்டர் எட்டு ஆண்டுகள் சைக்கிளில்தான் சென்றார். பிறகுதான் அவருக்கு இருபது கிலோமீட்டர் அருகில் மாறுதல் கிடைத்தது.
அன்று பணியில் சேர்ந்த முதல்நாள். மாணவர்களோடு பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் பேசும் சொற்கள் பலவற்றுக்கு பொருள் புரியவில்லை. யாவும் புதிதாக இருந்தது இருந்தது. இளம் வயதிலேயே ஆசிரியர் ஆகிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் மீசையை அடிக்கடி தடவிக் கொள்வார். அவை அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைவிட்டுக்கொண்டு இருந்தது.
முதல்வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தை இவ்வாறு ஆரம்பித்தார்.
“நம்ம வீட்ல வந்து உட்காரும். கருப்பா இருக்கும் .. கா… கா…னு கத்தும் அது என்ன…?
காக்காய்….![]()
காகம் னு சொல்லுங்க…
காகவம்….
இல்ல…இல்ல… காகம்
காகவம்…..
காகவம்… என்றே மீண்டும் மீண்டும் சொல்லவும் அவர்கள் சொன்னதில் திருப்தி அடையாமல் தனித்தனியே சொல்லச் சொன்னார். மாணவர்கள் பலரும் “காவம் ” என்றும் ” காகவம்” என்றும் சொல்ல திகைத்துப் போனார். ஒரு மாணவன் இடது ஆள்காட்டி விரலால் கண்களை குத்தி குத்தி அழ ஆரம்பித்து விட்டான். ஒருவழியாக அவனது அழுகையை நிறுத்தினார்.
அவனை அருகே அழைத்து “காகம் ” சொல்லு என்றபோதும் அவன் “காவம்…. காவம்….”என்றே திரும்பத் திரும்ப சொன்னான்.
அய்யா… இவன் சின்ன ஆயம்மா மயன்” மாணவன் ஒருவன் சொல்லி முடிப்பதற்குள் தங்கமணி ஆயம்மா வகுப்புக்குள் வந்து சேர்ந்தாள்..
பெரிய ஆயம்மாவை சமைக்கச் சொல்லிவிட்டு தங்கமணி ஆயாம்மாவை தன் மகனுக்கு காகம் என்ற சொல்லை மரத்தடியில் உட்கார்ந்து சொல்லித்தரும்படி சொல்லிவிட்டு பாடத்தை தொடர்ந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியிலிருந்து அழுகைச் சத்தம் கேட்கவும் அமைதியானது வகுப்பறை.
“சொல்லுடா காவம்… காவம்….”என்று அதட்டிக்கொண்டு இருந்தாள் தங்கமணி ஆயம்மா. தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டார் மோகன் வாத்தியார். எலுமிச்சம் பழத்தை எம்பிளிச்சம் பலம் என்றும் திங்கிற பூந்தியை பூவந்தி என்றும் அவ்வூர் மக்கள் சொன்னதையும் தாம் அதை மாற்றி அமைத்ததாகவும் பலரிடமும் சொல்லி பெருமைபட்டுக் கொள்வார். எப்போது காகத்தை பார்த்தாலும் தனக்குள் காவம் என்று சொல்லி சிரித்துக்கொள்வார்.
”மலையரசன் கூட சீக்கிரமா மண்டபத்துக்கு போயிரனும். வெளியில போயி எவ்ளோ காலமாச்சு. வெளியுலகமே தெரியாம முடங்கிப் போயிட்டேன். எனக்கு மத்தவங்கள நெனவு இல்லாட்டியும் இந்த மோகன் வாத்தியார ஒரு பயலும் மறந்துருக் மாட்டானுக. எவ்ளோ வெசயம் சொல்லிக் கொடுத்துருப்பேன். வகுப்புல ஏங்கிட்ட அடி வாங்காம எந்தப் பயலும் தப்பிச்சதுல்ல. கொஞ்சிக்கிட்டே இருந்தாலும் நம்ம தலயில அரப்பு தேச்சுருவானுக” தனக்குள் பேசிக் கொண்டார்.
திருமண அழைப்பிதழை புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தார். சிறப்பு விருந்தினர் இடத்தில் மாண்புமிகு திரு. கோ.சரவணன் அவர்கள் போக்குவரத்து துறை அமைச்சர் என்றிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அதற்கு மேல் வேறு எந்தப் பெயரையும் பார்க்கவில்லை. அவர் மனைவி இறந்து பதினைந்து வருடங்களாக வெளி உலகத்தை பார்க்க விரும்பாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தவருக்கு நாட்டு நடப்புகளே தெரியாமல் போய்விட்டது.
“இவன் கோயிந்தன் மயனா இருக்குமோ… ” பிரபல கட்சி மூலமாக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றுப் போனதாக சொல்லி அவர் முன்னால் வந்து தலையை சொறிந்தது அவரது நினைவுக்கு வந்தது.
சார் ஒங்களத்தான் பாக்க வந்தேன். நல்லா சொல்லித்தர்றதா எம்மக வேணி சொன்னுச்சு. படிக்கலனாக்க கண்ணு காதுல பட்ராம நாலுசாத்து சாத்திருங்க சார்.. ” கோவிந்தன் சொன்னார்.
“ஒங்கமயன்தான் சரிபட்டு வரமாட்றான். சொல்லிட்டிங்கள்ள கவனுச்சுக்குறேன்”
“நாலெழுத்து படிக்கத் தெரிஞ்சு, கணக்கு வழக்கு போடுற மாதிரி கத்துக் கொடுங்க சார் போதும். கடகண்ணில சேந்தாவது பொழச்சுக்குவான்ல….”
”அவனோட பேச்சையும் நடையையும் பாத்தா பின்னாடி அரசியல்வாதியா வந்தாலும் வந்துருவான்க” மோகன் வாத்தியார் சொன்னபோது கண்கலங்கி போனார் கோவிந்தன். கோவிந்தனோடு பேசியது ஏதோ நேற்று பேசியது போல் இருந்தது.
நான்கு மணி நேர பயணத்திற்குப் பிறகு மலையரசனோடு திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். மண்டப வாசலில் மோகன் வாத்தியாரை வரவேற்று வைக்கப்பட்ட ஒரு பதாகையை தவிர வேறு யாருக்கும் பதாகை வைக்கப்படவில்லை.![]()
மோகன் வாத்தியாரின் பணிநிறைவு விழாவுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் வாழ்த்துப் பதாகை வைக்க முயற்சித்தபோது, பதாகை வைக்கிற காசுக்கு பிள்ளைகளுக்கு பேனா பென்சில் வாங்கிக் கொடுங்கய்யா. புள்ளைங்களுக்கு ஒதவியா இருக்குமுனு மோகன் வாத்தியார் சொன்னதும் அதேபோல் வாங்கிக் கொடுத்ததோடு புதிய கணினி ஒன்றையும் வாங்கிக் கொடுத்தனர்.
மோகன் வாத்தியார் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டியதும் ஆசி பெற கீழே குனிந்தவர்களை ”அப்பா அம்மா கால்ல தவிர வேறு யாரு கால்லயும் விழக் கூடாதுயா. என்னோட ஆசி எப்போதும் உண்டு” சொல்லிக் கொண்டு இருக்கும்போதே ஆனந்தும் அவரது மனைவியும் அவரது காலை தொட்டு வணங்கி “எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த நீங்க, எங்க அப்பா அம்மாவுக்கு சமம்தானங்கய்யா ” என்றபோது அனைவரையும் தனது கைகளால் அரவணைத்து கண்களை மெதுவாக மூடி திறந்தார். ”இந்த வாத்தியாருக்கு இதவிட வேற என்ன வேணும்” கண் கலங்கினார் மோகன் வாத்தியார்.
திருமண மேடையில் முதன்மை நாற்காலியில் மோகன் வாத்தியார் உட்கார அருகிலேயே மணமக்களும் உட்கார்ந்தனர். பத்து பதினைந்து பேர் கட்சி கறை கட்டிய வேட்டி அணிந்தபடி மண்டபத்துக்குள் வர கீழே உட்கார்ந்தவர்கள் எழுந்து திரும்பி பார்த்தனர். நடுவில் வருபவர் அமைச்சர் என்பதை புரிந்து கொண்டார். கையில் சிறிய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு பேண்ட் சட்டை அணிந்த ஒருவர் வியர்வை துளிகளை முத்தமிட்டபடி ஓடி வந்து கொண்டு இருந்ததையும் மேடையில் இருந்தபடி கண்ணுற்றார்.
“உனக்கு பேச்சு தெறம இருக்குடா வக்கீலுக்கு படி. இல்லனா அரசியலுக்கு வந்து நல்லது பண்ணுடானு எங்க சாருதான் சொன்னாங்க. ரொம்ப வருசத்துக்குப் பிறகு இப்பதான் பாக்கிறேன். எங்க சாரு ஆசிர்வாதத்துல இன்னைக்கி நல்லா இருக்கேன். மணமக்களும் நல்லா இருப்பீங்க ” அமைச்சர் சரவணன் பேசியபோது கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது.
மாவட்ட ஆட்சித்தலைவர் இப்போது வாழ்த்திப் பேசுவார்கள் என்று தொகுப்பளர் சொன்னபோது மோகன் வாத்தியார் அரங்கத்தை சுற்றும்முற்றும் பார்த்தார். வேர்த்து விறுவிறுக்க கைப்பையோடு ஓடிவந்தவர் பேச ஆரம்பித்தார்.
“எங்கள் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில் திருமணம் நடந்திருப்பது மணமக்கள் பெற்ற புண்ணியம். லெக்கணாப்பட்டியில் பணியாற்றிய போது நான் அவரிடம் முதல்வகுப்பும் மூன்றாம் வகுப்பும் படித்தேன். அவரிடம் நான்தான் அதிக பரிசுகள் வாங்கினேன். கொஞ்சமா அடி வாங்குனதும் நான்தான். மிகவும் கண்டிப்பு மிக்கவர் என்றாலும் அதிகமாக இரக்க குணம் உடையவர். யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால்
தனது டிவியஸ் பிப்டியில் உட்கார வச்சு அருகில் இருக்கும் கடம்பூர் ஆசுபத்திரியில் சேர்த்து சிகிச்சை செய்து அழைத்து வருவார். எங்க சாரு மேல டாக்டர் நர்ஸ் எல்லாம் அவ்ளோ மரியாதையா இருப்பாங்க. என் வலது கால் கட்டைவிரல்ல புண்ணு வந்து சீழ் புடுச்ச போது எங்க சாருதான் சுத்தம் பண்ணி மருந்து போட்டாங்க. என்னால மறக்கவே முடியாது “என்று கண் கலங்கினார் மாவட்ட ஆட்சித்தலைவர் சுதாகர்.
முன்னாள் மாணவர்கள் பலரும் சேர்ந்து மோகன் வாத்தியாருக்கு பாராட்டு விழா நடத்துவதற்காகவே நடத்தப்பட்ட திருமண விழாவாக அமைந்திருந்தது.
நிறைவாக மோகன் வாத்தியார் இப்படி பேசத் தொடங்கினார்…
“என் பேரப்புள்ளைங்க ஒருத்தர ஒருத்தர் புருஞ்சுக்கிட்டு வாழுங்க. ஒருத்தரே விட்டுக் கொடுத்தாலும் நல்லா இருக்காது. நா என்ன ஆசப்பட்டனோ, எத வெதச்சேனோ அதுல நெறய மொளைக்கலயேனு வருத்தமா இருக்கு. ஆனந்து மலயரசன, கதிரேசன் மாதிரி புள்ளைகள பாக்கும்போது கொஞ்சூண்டு ஆறுதலா இருக்கு. வல்லங்காடு கிராமத்துல வேல பாத்தப்ப ஏங்கிட்ட கதிரேசன் படிச்சானாம். என்னப் பாத்ததும் கட்டிப்புடுச்சு அழுகுறான். வெவசாயம் பாக்குறதா பெருமையா சொல்றான். வெவசாயத்த ஒரு பயலும் கண்டுக்காம அனாதயா கெடக்குது.
நாடு என்னமோ டிஜிட்டல் ஆயிருச்சாம்ல. சோத்துக்கு மண்ண நோண்டிதானே ஆகனும்”
”நா எதயும் அப்பலருந்து ஒளிச்சு மறச்சு பேச மாட்டேனு என் புள்ளைங்களுக்கு தெரியும்” அப்போது அனைவரும் வாயை குறுங்கோணத்தில் திறந்தபடி மேடையைப் பார்த்தனர்.
“போக்குவரத்து துறைல இன்னக்கி வரைக்கும் அதே ஓட்டை பஸ்தான். பஸ் ஓட்டுற ட்ரைவர் கண்டைக்டருக்கு சம்பளமே ஒழுங்கா கொடுக்க முடியலயாமே. அவுக சம்பளத்துல புடுச்ச காச கூட ரிட்டேயர் ஆனவுகளுக்கு கொடுக்க முடியாம அலக்கழிக்கிறாங்களாமே. ஆனா அமைச்சரோட வாழ்க்க மட்டும் உச்சத்துல ஒசந்துருக்கே எப்புடி”
”நீங்கள்ளாம் உள்ள வர்றப்போ ஒரு கைப்பைய கொண்டுக்கிட்டு வேர்த்து விறுவிறுக்க நீ ஓடிவரும்போது அமைச்சருக்கு பிஏ னுதான் நா நெனச்சேன். ஆனா நீ கலைக்டர் வேலய பாக்காம பிஏ வேலயத்தான் பாக்குறாபோல. ஒன்ன பாத்ததும் எல்லாருமே நக்கலா சிரிக்கிறத நானே பாத்தேனே. நீ உயர் பொறுப்புல இருக்க
அதிகாரிதானே. ஒன்னப் பாத்துதான் அரசியல்வாதிக பயப்புடனும். எதுக்கு கூழக்கும்புடு போடுற”
“இதைத்தானா ஒங்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். எப்ப தப்பு செஞ்சாலும் வாத்தியாரு கேள்வி கேட்பாரு அடிப்பாருங்குற பயம் எல்லாருக்கிட்டயும் இருக்கனும். எந்த வாத்தியாரு கேட்கலனாலும் இந்த மோகன் வாத்தியாரு கேள்வி கேட்பான்…” கொஞ்ச நேரம் மவுனமாயிருந்தார் மோகன் வாத்தியார். சரவணன் முகத்திலும் சுதாகர் முகத்திலும் எண்ணெய் வழிந்து கொண்டு இருந்தது. கைக்குட்டையால் துடைத்தும் போகவில்லை. மண்டபத்தில் சலசலப்பும் ஆனந்த் முகத்தில் ஒருவித படபடப்பும் குடி கொண்டிருந்தது.
நினைவுகளிலிருந்து திரும்பியபடி சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு வீதியைப் பார்த்தார் மோகன் வாத்தியார். சாயங்காலப்பொழுதின் அடையாளமாக குழந்தைகள் சிலர் ஏழெட்டு புத்தகப் பைகளை ஒரு குச்சியில் தொட்டில் போல் தொங்க விட்டபடி ஆளுக்கொரு முனையை இருவர் பிடித்துக்கொள்ள ஆட்டிக்கொண்டே வீடுகளுக்கு சென்றுகொண்டு இருந்தனர்.
———-&—–
![]()
வாழ்த்துகள் சோலாச்சி
கண்ணில் கசிகிறது துளி. இன்று மந்திரியாக, கலெக்டராக இருக்கும் என் முன்னாள் மாணவர்களை நினைக்கையில் மனதில் பேரும் ஏமாற்றம்.
கண்ணில் கசிகிறது துளி. இன்று மந்திரியாக, கலெக்டராக இருக்கும் என் முன்னாள் மாணவர்களை நினைக்கையில் மனதில் பெரும் ஏமாற்றம்.
இன்றைய கல்வி அறிவார்ந்த மாணவர்களை உருவாக்குவதாக நினைத்து மனிதம் தனை அழிக்கும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
“அப்பா அம்மா கால்ல தவிர வேறு யாரு கால்லயும் விழக் கூடாதுயா” அறிவுபூர்வமான அறிவுரை. பதவி வேண்டுமென்றால் சிறுவயதானாலும் பரவாயில்லையென்று காலில் விழுகிறார்கள். வாழ்த்துக்கள் பெறவதற்கு வயதில் குறைந்தவர்கள் காலிலும் விழுகிறார்கள். பூசாரி என்றால் பொசுக்கென காலில் விழுகிறார்கள். காலில் விழும் இந்த புரையோடிப்போன வழக்கை இப்படி கதைவாயிலாகவாவது சாடவும் அறிவறுத்தவும் வாய்ப்பு கிடைக்கிறதே. வாழ்த்துக்கள்.