“வந்தேறி” …. சிறுகதை – 23 …. அண்டனூர் சுரா.

சிங்காரம் சோப்பும் நுரையுமாக இருந்ததால் அழைப்பவர் யாரென்று அவரால் பார்க்க

முடியவில்லை. அவரை அழைக்கும் நேரம் பார்த்து அவரது வீட்டு நாய் தொங்கும் நாக்கைத் துப்புவதைப் போல குரைப்பதை வைத்து, தன்னை அழைப்பவர் வீட்டுக்குப் புதிதாக குடிவந்திருக்கும் வெள்ளை மீசைக்காரர் என்பதாகக் கணித்துக் கொண்டார். நாய் வளர்ப்பதே குரைப்பதற்குத்தான். அந்நாய் எப்பொழுதும் குரைப்பதில்லை. அந்த வெள்ளை மீசைக்காரரை எப்பொழுது பார்த்தாலும் குரைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததது.
“ சிங்காரம் ”
திரும்பவும் அதே அழைப்பு. நாயிடமிருந்து அதே குரைப்பு. இந்த நாய்க்கு என்ன வந்தது? அந்த மீசைக்காரர் இந்த வீட்டுக்குக் குடிவந்து எத்தனையோ நாட்களாகிவிட்டன. எத்தனை முறை அந்நாயை மருவி, விலகி, கடந்து சென்றிருக்கிறார். ஓரிரு முறை ரொட்டிகள் கூட வாங்கி எறிந்திருக்கிறார். தின்பண்டத்திற்காக அழும் குழந்தைகள் தின்பண்டம் வந்ததும் அதை வாங்கித் தின்றுவிட்டு திரும்பவும் அழுவதைப் போலதான் அந்நாய், அவர் தூக்கியெறியும் ரொட்டியைத் தின்றுவிட்டு திரும்ப அவரைப் பார்க்கும் பொழுது குரைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
சிங்காரத்திற்கு அது காலை குளியல். அவர் குளிக்கையில் சூரியன் உச்சிக்கு வந்திருந்தது. வீட்டிற்கு வெளியிலிருந்த ஒரு திறந்தவெளி தொட்டியில் அவர் குளித்துக்கொண்டிருந்தார். வீடு கட்டுகையில் தேவையானளவிற்குத் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ள உதவிய தொட்டி அது. தொட்டியையொட்டி இரண்டு வாழைமரங்கள் இலை பரப்பி நின்றன. அம்மரத்தின் ஓர் இலைத் தண்டில் அவர் உடுத்தியிருந்த கைலி தொங்கிக்கிடந்தது. அவர் இரண்டு முறை சோப்பிட்டு குளிக்கக்கூடியவர். இரண்டாவது முறை அக்குள், முதுகு, கால், கை, மார்பகத்திற்குச் சோப்பிட்டு முகத்திற்குப் போடுகையில் முதல் அழைப்பு வந்தது.
“ யாரு…?”
அவரது கேள்விக்கு அவர் வீட்டு நாய் பதில் சொன்னது. “ வவ், வாவ், வவ் ”
நாயின் மொழியை அவர் புரிந்துகொண்டவராய், கண்களிலிருந்த சோப்பின் நுரையை இரண்டு விரல்களால் வழித்து உதறியபடி நிமிர்ந்து பார்த்தார். அவர் வீட்டு நாயும் நிமிர்ந்து பார்த்தபடி குரைத்தது. நாய் குரைக்கையில் அதன் பற்களைப் பார்க்கக் கூடாது, வாலைப் பார்க்க வேண்டும். வாலை ஆட்டிக் கொண்டு குரைக்கும் நாய்கள் வளர்ப்பவனுக்குச் செய்திகள் சொல்பவை. அந்நாய் அப்படியாகத்தான் குரைத்துக்கொண்டிருந்தது.
மாடியில் வெள்ளை மீசைக்காரர் நின்றிருந்தார். அவரது திடகாத்திரம், பருமன், கத்தையான வெள்ளை மீசைக்கு அவர் நின்றிருந்த உயரம் பொருத்தமாக இருந்தது.
சிங்காரத்தின் கையில் கொத்து இருந்தது. அதனால் இரண்டொரு கொத்துகள் தண்ணீர் முகர்ந்து ஊற்றிக்கொண்டு, சோப்பு நுரையை மொத்தமாகக் கழுவியவராய் கேட்டார், “ எதுவும் அவசர சேதிங்களா..?”
மீசைக்காரர் “ ஆமாம்…” என்றார்.
சிங்காரம், மீசையிடமிருந்து பார்வையை எடுத்து காக்கா குளியலில் இறங்கினார். அவரது யோசனைகள் மீசையைச் சுற்றி வந்தன. “என்னவாக இருக்கும்?, டேங்கில் தண்ணீர் இல்லையோ? இரவுதானே ஏற்றினேன். ஃபேன் ஓடவில்லையோ? அத்தனை ஃபேனையும் ஓடவிட்டு காட்டினேனே! பாத்ரூம், டாய்லெட், கிச்சன்….ஒவ்வொரு அறையும் சிங்காரத்தின் கண் முன்னே வந்து சென்றன.
சிங்காரம் சற்றே பயந்த சுபாவம். அலுவலகத்தில் உயர் அதிகாரியின் கீழ் பணியாற்றும் சுபாவம் வீட்டிலும் இருந்தது. அவருக்கு மீசைக்காரரின் பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை. பெரிய மீசைக்காரர்களுக்கும் தாடிக்காரர்களுக்கும் பெயர்கள் ஏன்தான்? ஊர் அரைகுறையாக நினைவுக்கு வந்தது. மதுரைக்கும் பக்கம். என்னவோ ஒரு பட்டி, உசிலம்பட்டியைப் போல.
நாய் குரைக்கவில்லை, அதே நேரம் நிறுத்தவுமில்லை. என்னவோ செய்தி சொல்வதைப் போல முணங்கிக் கொண்டிருந்தது. அந்த மீசைக்காரர் வாடகை வீடு தேடி ஒரு தரகர் மூலமாக வீட்டுக்கு வருகையில் இப்படித்தான் குரைக்கவும் முணங்கவும் செய்தது. மீசைக்காரர் கீழே நின்றபடியே வீட்டை நிமிர்ந்து பார்த்துவிட்டு சொன்னார், “ என் மகள் ஆர்டிஓ ஆபிஸில வேலை பார்க்கிறாள். மருமகனார் வெளிநாட்டில. கைக்குழந்தையா பேரன். அவனைப் பார்த்துக்கிறதான் வந்திருக்கேன். வாடகைக்கு வீடு வேணும்…” இதை சொல்லி முடிப்பதற்குள் அவர் இரண்டு முறை மீசைகளை நீவி விட்டுக்கொண்டார். நாய் அவரைப் பார்த்து குரைக்கவும் முணுங்கவும் இருந்தது. தரகர் மாடிப் படியேறி வீட்டை ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு கீழே வந்தவர், “ வீடு புதுசு. ஆனா இன்னும் ஏகப்பட்ட வேலை இருக்கே” என்றார்.
சிங்காரம் “ சின்னச்சின்ன வேலைதே. பார்த்துறலாம்…” என்றார். மீசைக்காரர் மாடிப் படியேறி வீட்டை ஒரு கணம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தார்.
“வீடு எனக்குப் பிடிச்சிருக்கு. வாடகைக்கு விடுறதா இருந்தா இருந்துக்கிறேன். அட்வான்ஸ் எவ்வளவுனு சொல்லுங்க” என்றார் மீசைக்காரர்.
சிங்காரத்திற்கு வீட்டுக்கடன் தலைக்கு மேல் இருந்தது. புது வீடு கட்டி தரையில் படுத்து மேலே பார்த்தால் வீட்டின் கூரை தெரிய வேண்டும். அவருக்குக் கடன்காரர்களின் முகங்கள் தெரிந்தன. வீட்டை வாடகைக்கு விடுத்தால் கடன் அடையாது, என்று யோசித்த சிங்காரம் “ வாடகைக்கு விடுறதா இல்ல. ஒத்திக்குத்தான்….” என்றவராய் மீதச் சொற்களைத் தொண்டைக்குள் அதக்கினார்.
“ ஒத்தினாலும் பரவாயில்லை” என்றார் மீசைக்காரர்.
சிங்காரம் மெல்ல திரும்பி அருகில் நின்றிருந்த துணைவியாரைப் பார்த்தார். அவள் கொடுக்கலாம் என்பதைப் போல முகத்தைப் பவ்வியமாக வைத்தபடி நின்றாள்.
“ எவ்வளவு எதிர்பார்க்கிறீங்க…?” கேட்டார் தரகர்.
சிங்காரம் தொகையைச் சொன்னார்.
“ அவ்வளவு ஆகாது ” என்றவாறு தலையை ஒடித்து, முகத்தைச் சுழித்து, இமைகளைச் சுருக்கினார்.
“ மத்த இடங்கள்ல இவ்ளோதான் வாங்குறாங்க…”
“ கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க”
“ அவ்ளோதான்”
ஒரு வாரத்தில் பணமும் சாவியும் கைமாறின.
சிங்காரம் விலாப்புறத்து அழுக்கைத் தேய்க்கையில் அழுக்கோடு அழுக்காக மீசைக்காரர் உடனான சந்திப்புகள் வலை பின்னின.
ஒரு வாழை மட்டையில் அவரது கைலி தொங்கிக் கிடந்தது. அதை எடுத்து உதறி உடம்பை அதற்குள் நுழைத்துக் கொண்டார். துண்டால் முகத்தில் வழிந்த நீர்த் திவாலைகளைத் தொட்டு எடுத்தார். கைலி தொடையின் ஈரத்தால் உடம்போடு ஒட்டிப்போயிருந்தது. துண்டை கொடிக்கயிற்றில் காயவிட்டு வீட்டுக்குள் நுழைகையில் அவரது துணைவியார் மல்லிகா வீட்டிற்குளிலிருந்து வெளியில் வந்தாள். தலை முடியை விரல்களால் கோதிவிட்டுக்கொண்டே சொன்னார். “ ஏன்னு தெரியல. குடிவந்தவர் கூப்பிடுறாரு….”
என்னவாக இருக்கும், அவளது யோசனைகள் அந்த இடத்தில் நிலைக்குத்தி நின்றன. “ஒத்திப்பத்திரம் அவருடன் கொடுத்திட்டீங்க தானே?”
“ இம், கொடுத்திட்டேன்”
“ கோயில், குளம், பொழுது போறதுக்கு உகந்த எடம் எங்கேயாவது இருக்கானு கேட்கிறதுக்காக இருக்கும்”
சிங்காரம் கொடியில் தொங்கிய பனியனை எடுத்து உதறியபடி சொன்னார். “அவர் கூப்பிட்ட தொனி அப்படியாத் தெரியலயே”
“ சரி, சரி அதான் கேட்கப் போறீங்களே, அதற்குள்ள என்ன யோசனை வேண்டிக்கிடக்கு? உங்க ஆபிசரா கூப்பிட்டாரு. இப்படி பம்முறீங்க. நம்ம வீட்டுக்குக் குடி வந்தவர்தானே கூப்பிடுறாரு. போங்க, பைப்ல தண்ணீ எதுவும் அடைச்சிக்கிட்டு இருந்திறப் போகுது”
“இருக்கலாம்.” சீப்பால் தலையைச் சீவிக் கொண்டார்.
“ சிங்காரம்” திரும்பவும் அதே அழைப்பு. கடந்த முறையைப் போலில்லாமல் இந்த முறை அழைப்பின் தடிமன் பருத்திருந்தது. அந்த அளவிற்கே நாயின் குரைப்பும் இருந்தது.
![]()
மல்லிகா சற்றே எரிச்சலானாள். “என்னங்க அந்த மீசைக்காரரு இப்படிக் கூப்பாடு போடுறாரு. புது வீட்டுல புது மனுசன்னு குடி வச்சோம். இப்படி அலறுறாரு? ஒத்திப் பணம் கூட வாங்கிட்டோமென நினைக்கிறாரோ?“
“ நானும் அப்படித்தான் நினைக்கேன்” பவ்வியமாகச் சொன்னார் சிங்காரம்.
“ இருக்காது, வேறென்னத்துக்காக இருக்கும்” என்றவள் இடுப்பிற்கு ஒரு கையைக் கொடுத்து நிமிர்ந்து நின்று யோசிக்கலானாள்.
“கரண்ட் பில் அவங்களோட. செப்டிக் டேங்க் கிளினிங்க் ஆளுக்குப் பாதி, சுவத்தில எதையும் கிறுக்கக் கூடாது, இதெல்லாம்….”
“ இம், சொல்லிட்டேன்…”
சிங்காரம் சட்டையை மாட்டிக்கொண்டு மாடிக்கு ஏறினார். இதோ வருகிறேன், என்று சொல்லும் விதமாக தொண்டையைச் செருமிக்கொண்டார். மீசைக்காரர், உனக்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருக்கேன், என்று சொல்வதைப் போல முகத்தை வைத்திருந்தார். தடித்த சுருண்ட மீசை கொசகொசத்திருந்தது. மீசையைப் புறங்கையால் நீவிக்கொண்டார்.
“ என்னங்க?” என்றார் சிங்காரம்.
மீசைக்காரர் அவரை ஒரு கணம் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “காசுக்காக என்னனாலும் பண்ணுவீங்களா, எதையும் மறைப்பீங்களா?” என்றவாறு முகத்தை இறுக்கமாகக் காட்டினார். அவரிடமிருந்து வந்திருந்த சொற்கள் வெந்து மட்டுமல்ல குழைந்தும் இருந்தன. சிங்காரத்திற்குக் குழப்பமாக இருந்தது. என்ன சொல்ல வருகிறார் என்கிற குழப்பம் அது!
உரத்தக் குரலைக் கேட்டு மாடிக்கு ஓடிவந்தாள் மல்லிகா. இரண்டு கைகளையும் இடுப்பிற்குக் கொடுத்து விடைத்து நின்றாள். மெல்லப் பதுங்கி மீசைக்காரரைப் பார்த்து, “ஏன், என்னத்துக்கு இப்படி சத்தம் போடுறீங்க, உங்களுக்கு என்ன வேணும்?” என்றதும் அவருடன் சேர்ந்து நாயும் கூட சேர்ந்துகொண்டது.
சிங்காரம் மல்லிகாவின் தோள் மீது கை வைத்து அமைதிப்படுத்தினார். அவரது பக்கமாகத் திரும்பிய மல்லிகா, “ குடி வந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள ஏன் இப்படி கத்துறாரு…” எனக் கேட்டு நின்றாள்.
மீசைக்காரரின் உதடுகள் துடிக்க, கண்கள் வெறித்து இருந்தன. மல்லிகா கணவர், மீசைக்காரர் இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள். பின் கணவன் பக்கமாகத் திரும்பி, “என்னதாங்க பிரச்சனை? இவரோடு ஒரே ரோதனையாக இருக்கு” என்பதைப் போல நின்றாள்.
“ உங்களுக்கு என்னங்க வேணும்? ஏன் இப்படிச் சத்தமா பேசுறீங்க?” மல்லிகாவின் தடித்தக் குரல் மீசைக்காரரின் குரலை வாயடைத்தது. அதற்கும் மேல் அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. “பொம்பளைக்கிட்ட என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு” என நினைத்தவராய் அமைதியாக நின்றார்.
சிங்காரம், மல்லிகா இருவரும் தன் சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தார்கள். சுவரை மெல்ல தடவிக் கொடுத்தார்கள். இத்தனை சிரமப்பட்டு வீட்டைக்கட்டி அதைக் கூடாத ஒருவரிடம் கொடுத்துவிட்டோமோ என்கிற உணர்வு அவர்களைக் குறுகுறுக்க வைத்தது.
என்னதான் பிரச்சனை, வீட்டுக்குள் நுழைந்து பார்த்துவிட நினைத்தாள். வீட்டில் ஒரு குடும்பத்தைக் குடி வைத்துவிட்டு அதற்குள் நுழைவது தவறென்று பின்வாங்கிக்கொண்டாள். நிலைக்கதவு பாதி அடைத்திருந்தது. அத்திறப்பின் வழியே எட்டிப் பார்த்தாள். குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தது. கொலுசுகள் வெளியே தெரிந்தன. ஃபேன் சுற்றிக்கொண்டிருந்தது. தண்ணீர் சொட்டிடும் அரவம் கேட்டது. வெறென்ன குறை? சிங்காரம் நெற்றியைச் சுழித்து, நாசித் தண்டு இமைகளுடன் கூடுமிடத்தில் ஒரு விரலைக் கொடுத்து, “ என்னங்க, நாங்க வளர்க்கிற நாய் எதுவும் உங்கள கடிக்கப் பார்த்ததா?” எனக் கேட்டு வைத்தார்.
மீசைக்காரர் ஒன்றும் பேசவில்லை. எல்லாம் என் தலை விதி என்பதைப் போல நாற்காலியில் அமர்ந்தார்.
“என்னதாங்க பிரச்சனை?” மல்லிகா உரக்கக் கேட்டிருந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. அதேக் கேள்வியைச் சிங்காரம் சற்று சாந்தக் குரலில் கேட்டார்.
மீசைக்காரர் இரு விரல்களால் மீசையை விரித்துவிட்டுக் கொண்டு சொன்னார். “என்ன பிரச்சனை, எல்லாமே பிரச்சனைதான்!”
“ கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லுங்களே”
“இனி புரிஞ்சி என்ன ஆவப் போகுது, இவ்ளோ பொருளையும் மேலே கொண்டு வந்து சேர்த்தாச்சு. இனி அவ்வளவையும் அள்ளிக்கிட்டு கீழே எறங்க முடியுமா? கட்டிலென்ன, பண்டம் பாத்திரமென்ன?” ரொம்பவே அலுத்துக்கொண்டார் மீசைக்காரர்.
மல்லிகா, தன் வீட்டுக்குக் குடி வந்தவரென பார்க்கவில்லை. “ என்னதாங்க பிரச்சனை. சொன்னதையே கிளிப்பிள்ளையைப் போல சொல்லிட்டிருக்கீங்க…” அவளது தோள் மீது ஒரு கையை வைத்து அமைதிப்படுத்தினார் சிங்காரம். “ நீ ஒன்னும் பேசாதே, நான் என்னென்னு கேட்டுக்கிறேன்….”
மல்லிகா அமைதியடைவதாக இல்லை.
“வீட்டுக்கு ஒத்தி இவ்ளோ வேணுமெனக் கேட்டீங்க, தந்தேன். அப்போதாவது சொல்லியிருக்கலாம். கரண்டு பில், செப்டிக் டேங்க் செலவுல ஆளுக்குப் பாதினு சொன்னீங்க. சரியென ஒத்துக்கிட்டேன். அப்போதேனும் சொல்லியிருக்கலாம். சுவத்துல எதையும் கிறுக்கக்கூடாது, வீட்ல ஒட்டடை படிய விடக் கூடாது. அது, இதுவென ஆயிரம் சொன்னீங்க, நான் ஒரு மறுப்பும் சொல்லாம ஒப்புக்கிட்டேன். அப்போதேனும் சொல்லியிருக்கலாம். அப்ப, உங்களுக்குப் பணம்தான் பெரிசு. அப்படித்தானே?”
சிங்காரத்திற்கு மீசைக்காரரின் கேள்வி மெல்ல புரிய வந்தது. அவர் வீட்டு நாய் இன்னும் கூட நன்கு புரிந்துகொண்டு, முன்பு குரைத்ததை விடவும் உக்கிரமாகக் குரைத்தது. மல்லிகாவுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. இடுப்பிற்கு இரு கைகளையும் கொடுத்து நிமிர்ந்து நின்றவளாய் சொன்னாள், “என்னங்க பேசுறீங்க. நாங்களா உங்களை எங்க வீட்டுக்கு வாங்க, வந்து எங்க வீட்ல குடியேறுங்கனு சிவப்புக் கம்பளம் விரிச்சோம். நீங்களா வந்தீங்க, வீடு பிடிச்சிருக்கெனச் சொன்னீங்க, தந்தாகணுமென ஒத்தக்கால்ல நின்னீங்க, உங்க மகள் கர்ப்பிணியாக இருந்தாங்க. கையில் குழந்தை வேறு. போனாப்போகுதென வீடு தந்தோம். வாடகைய மாசாமாசம் கேட்டுக்கிட்டிருக்க முடியாதென ஒத்திக்குத் தந்தோம். அக்கம் பக்கத்தில எவ்வளவு வாங்குறாங்க, கொடுக்குறாங்கனு விசாரிச்சிக்கிட்டுதான் கொடுத்தீங்க, வாங்கிக்கிட்டோம். இத்தனை நாளு குடியிருந்திட்டு இன்னைக்கு மறைச்சிட்டோம், மறைச்சிட்டோமென சொல்றீங்க. எதைங்க நாங்க உங்கக்கிட்ட மறைச்சோம்?” வெடிப்பதைப் போலவும் அதே நேரம் வீட்டு உரிமையாளருக்கு இருந்தாக வேண்டிய பொறுப்புணர்வுடனும் கேட்டாள்.
“ இந்த வீட்ட இவ்ளோ தொகைக் கொடுத்து நான் ஒத்திப் பிடிச்சிருக்க வேண்டியதில்ல…”
“ஏன் அப்படிச் சொல்றீங்க, இந்தத் தெருவுல நீங்க கொடுத்த ஒத்திப் பணத்துக்கு ஓட்டு வீடு கூட கிடைக்காது. போனாப் போகுதென புதுமனுசன்னு கொடுத்தோம்….”
“ அந்த வீடுகளுக்கு எவ்வளவு வேணுனாலும் கொடுக்கலாம். இந்த வீட்டுக்கு இவ்வளவு கொடுத்திருக்கக்கூடாது. என்னை ஏமார்த்தி வாங்கிட்டீங்க….”
“ ஏன் இந்த வீட்டுக்கு என்னவாம்?”
“ என்னது என்னவாம்! சொல்ல வேண்டியதைச் சொல்லாமல், மறைக்க வேண்டியத மறைச்சில இந்த வீட்டை என் தலையில கட்டியிருக்கீங்க?”
“ என்னது, இந்த வீட்டை உங்கத் தலையில கட்டிட்டோமா? புது வீட்டில உட்கார்ந்துக்கிட்டு என்னங்க பேசுறீங்க. உங்கக்கிட்ட நாங்க அப்படி எதைங்க மறைச்சிட்டோம்? பெரிய மனுசன், வெளியூருனு விட்டா ரொம்பத்தான் போறீங்க. ரெண்டுல ஒன்னு பார்த்தேயாகணும். நான் விடப்போறதில்ல, என்னை யாரென நினைச்சீங்க, சொல்லுங்க. உங்கக்கிட்ட நாங்க எதைங்க மறைச்சோம்?” தொங்கிக் கிடந்த முந்தானையை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டு மீசைக்காரர் முன் வரிந்து கட்டி நின்றாள் மல்லிகா.
மீசைக்காரர் மீசையைப் புறங்கையால் நீவி விட்டுக்கொண்டு, “வீட்டைப் பத்தி சொன்னீங்க, ஒத்தினு சொன்னீங்க. நீங்க யாரு, என்ன சாதி, சமூகமெனச் சொன்னீங்களா, சொன்னீங்களாங்கிறேன்..?” எனக் கேட்டார்.
மல்லிகாவால் பேசமுடியவில்லை. பெரும் கோபம் கொள்கையில் அவளுக்குப் பேச்சு வராது. சிங்காரம் அமைதியின் சொரூபமாய் நின்றார். இருவரின் முகத்தையும் பார்த்துவிட்ட அந்நாய், வாலைத் தூக்கிக்கொண்டு உக்கிரமாக மீசைக்காரரைப் பார்த்து விடைத்து குரைக்கத் தொடங்கியது.
![]()
யப்பப்பா… சிறுகதை அருமை!
கோபம் நன்றாகச் சிவந்துருக்கிறது.
நடை….பாக்கு வெத்தலையும் வைத்து சுண்ணாம்பு தடவியது போல்……..!
வந்தேறி மீசைக்காரரைநாய் நன்றாகக் கடிக்கட்டும்..!
அன்புடன்
முனைவர் சிவகவி காளிதாசன் புதுக்கோட்டை