கதைகள்

“செவ்வகப் பந்து” …. ( சிறுகதை 19 ) …. அண்டனூர் சுரா.

மட்டைப்பந்தாட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லோரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டத்திலிருந்து தங்களை விடுவித்துகொள்ள , இனி ஆட வேண்டியது அபிமன்யு மட்டும்தான்.

அபிமன்யு இன்னும் ஆட்டத்தைத் தொடங்கவில்லை. அதற்குள் அவனது ஆட்டத்தைக் காண தேங்காய் பருமனுள்ள சிறுவர்களின் தலைகள் முண்டியடித்து மோதிக்கொண்டன. ஒருவரையொருவர் கைகளால் தள்ளிக்கொண்டு விசும்பிக்கொண்டு அவனது ஆட்டத்தைப் பார்க்க ஆர்வம் காட்டினர்.

“ இப்படி நெருக்கினா நான் எப்படி விளையாடுறதாம். எல்லோரும் தள்ளுங்க “ என்றவாறு உடலை ஒரு குலுக்கு குலுக்கினான் அபிமன்யு.

‘ஆமாங்டா தள்ளுங்க” என்றவாறு விலகி நின்றார்கள். “

“டேய் அபி. எப்படியும் முப்பது ரன்னாவது எடுத்திருடா. அப்பதான்டா நாம ஜெயிக்க முடியும்” என்றார்கள் அவனது அணியினர்.

“எடுப்பே எடுப்பே மூனு ஓவர்ல முப்பது ரன் நீ எடுப்பே” என்றவாறு அவன் தலையைச் சிலுப்பிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தான்.

“அபி, நீயே இப்படி சொன்னா எப்படிடா?“ ஒருவன் சொல்ல, மற்றொருவன் “ஏன்டா அபி முடியாது, தினேஷ் எடுக்கல…?” என்றவாறு ஓரிழு இழுத்தான்.

அப்பொழுது தினேஷ் முகத்தில் அத்தனை பூரிப்பு. வலது கையால் பின் தலை முடிகளைக் கோதிவிட்டுக்கொண்டான். அவனது ஆட்டத்தை மற்றவர்கள் மெச்சியதில் அத்தனை பெருமை அவனுக்கு. ஆட்ட நாயகன் விருது பெறுகிற ஓமளிப்பு .

ஆட்டத்தில் மூழ்கியிருந்த அபிமன்யு ஆட்டத்திலிருந்து சற்றே விடுபட்டு தினேஷை ஒரு கணம் கவனித்தான். அவன் இறுமாப்போடு ரிக்கி பாண்டிங்கைப் போல நகத்தைக் கடித்துக்கொண்டு எச்சிலைத் துப்பிக்கொண்டு நின்றுகொண்டிருந்தான்.

“அபி, .அவன் நிக்ற ஸ்டைல்ல பார்த்தியா? அவன் முகத்தில கரிய பூசணுமுடா. நீ எப்படியும் முப்பது ரன் எடுத்திறடா”

“ ஆட்டம் சூடு பிடிக்கலையே” என்றபடி அவன் உதட்டைப் பிதுக்கினான் .

“அபி, நீ முப்பது எடுக்காட்டியும் பரவாயில்ல. இருபத்து ஒன்பதாவது எடுத்திறடா. ஆட்டத்தை ட்ரா பண்ணிறலாம்”

“ம், பார்க்கலாம் பார்க்கலாம்” என்றான் அவனுக்கே உரித்தான மேதாவித்தனத்தில்.

சற்றுநேரத்தில் விசில் சத்தம் கிளம்பியது. ‘ஒவ்வேவே’ என்றவாறு பழிப்புகள் வேறு. வானத்திற்கும் பூமிக்குமாக குதிப்புகள். கும்மாளங்கள். அந்த இடத்தில் ஒரே களேபரம். அபிமன்யு அணியினர் தினேஷ் அணியினரை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திருந்தார்கள்.

அது நோக்கியா கைப்பேசி. கறுப்பு நிறத்தில் கரிச்சான் குஞ்சைப் போல கைக்கு அடக்கமாக இருக்கும். அழகாகவும் இருக்கும். அபிமன்யு அம்மா செல்லக்கிளி சித்தாள் வேலைப் பார்த்து இரண்டாம்

விலைக்கு வாங்கியது. அந்தக் கைபேசியை அவள் வாங்கி வந்ததோடு சரி. அன்றைய தினம் முதலே அது அபிமன்யுக்கு இன்னொரு கையாகிவிட்டது.

அந்தக் கைபேசியை வாங்குவதற்கு முன்புவரை அபிமன்யு வீட்டிற்கு யார் விருந்தாளி வந்தாலும் அவர்களது சட்டைப்பைக்குள் கையை விட்டுக் கைப்பேசியை எடுத்து அதிலிருக்கும் விளையாட்டை தேடிப் பிடித்து ஆடத் தொடங்கிவிடுவது அவனது பழக்கமாக இருந்தது. அப்படிப்பட்டவனுக்குச் சொந்தமாக ஒரு கைப்பேசி கிடைத்து விட்டால் சொல்லவா வேணும்.

செல்லக்கிளி கைப்பேசியை மகன் கையில் கொடுத்தவுடன் முதலில் அதற்குள் மட்டைப்பந்து விளையாட்டு இருக்கிறதா, என்று பார்த்தான். இருந்தது. அவனது மனத்தில் இறக்கைகள் முளைத்துக் கொண்டன. மட்டைப்பந்து வீரர்கள் முதல் சதம் அடிக்கையில் அடையும் மகிழ்ச்சி அப்போது அவனுக்கு.

வாசலில் ஒரு பெரிய பாத்திரத்தைக் கவிழ்த்துகொள்வான். அதில் ஏறி விசாலமாக உட்கார்ந்துகொள்வான். கைப்பேசியை உள்ளங்கைகளுக்குள் வைத்துகொண்டு இரண்டு கட்டை விரல்களால் பட்டன்களை அழுத்துவான். அவனது கருவண்டு கண்கள் குறு,குறுவென கைப்பேசியையே பார்த்துகொண்டிருக்கும். தலையையும் கால்களையும் ஆட்டத்திற்கேற்ப அப்படி, இப்படியென ஆட்டிக்கொள்வான். தனக்குத்தானே குதித்துக்கொண்டு, விசில் அடிப்பான். தேங்காய்ச் சில்லு மாதிரியான வெளீர் பற்களைக் காட்டிச் சிரித்துகொள்வான்.

அபிமன்யு மட்டை பந்து விளையாட்டில் பெரிதும் லயித்துப்போயிருந்தான். விளையாட்டை விடவும் அவன் பெரிதும் ரசிப்பது அவனைச் சுற்றி நிற்கும் கும்பலைத்தான். கிரிக்கெட் மட்டை தூக்கிக்கொண்டு வேகாத வெயிலில் ஓடி, விழுந்து எழுந்து ரன் எடுப்பவர்கள் எல்லாம் அவனைச்சுற்றி நிற்பதைப் பார்க்கையில் அவனுக்குள் கொம்பு முளைக்கும். எல்லோர் வீட்டிலும் கைப்பேசி உண்டு என்றாலும் அவனிடம் இருக்கும் கைப்பேசியில் மட்டும்தான் மட்டைப்பந்து விளையாட்டு இருக்கிறது என்பதை நினைக்கையில் அவனுக்குள் கர்வம் எழுந்து அடங்கும்.

எத்தனைபேர் விளையாடினாலும் கடைசியில் அதிக ரன் எடுத்து சச்சினாகவோ, வீரேந்திர சேவாக்காகவோ திகழப்போவது அபிமன்யுவாகவே இருக்கும். ஆட்டத்தைத் தொடங்குகையில் கைப்பேசிக்கு ஒரு முத்தம் கொடுத்துகொள்வான். ஆடி முடிக்கையில் உள்ளங்கையால் மொபைலை செல்லமாக நெறிப்பான். மேலே தூக்கிப்போட்டுப் பிடிப்பான். இரண்டு கைகளையும் உயரத்தூக்கிக்கொண்டு குதிப்பான். நடனமாடுவான்… அவன் செய்யும் திருவிளையாடல்கள் இப்படியாக இருக்கும்.

அன்றைய தினம் சனிக்கிழமை. அதிகாலை பனி மூட்டம் புகையைப் போல மூடிக்கிடந்தது. கடைக்குச் சென்ற அபிமன்யு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தான். அவன் கையில் உப்பு பொட்டலம் இருந்தது. எதேச்சையாக ஒரு வீட்டைக் கவனித்தான். அது தினேஷ் வீடு. அந்த வீட்டில் சிறுவர்கள் கதம்பமாக நின்றுகொண்டிருந்தார்கள். அவசரமாக தினேஷை தேடினான். அவன் அந்தக் கும்பலுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தது தெரிந்தது. போன வாரம் வரைக்கும் தன் வீட்டில், தன்னைச் சுற்றி குழுமி நின்றவர்கள் இன்று தினேஷ் வீட்டில் குழுமி நிற்பதைப் பார்க்கையில் அவனுக்குப் பகீரென இருந்தது. அதே இடத்தில் சிலையாக நின்று அவர்களை வெறிக்கப் பார்த்தான். அவனையும் அறியாமல் அவனது கால்களை அவர்களே நோக்கி ஊர்ந்தன. அபிமன்யுவைக் கண்டதும் சிறுவர்கள் கிசு,கிசுத்துகொண்டார்கள். ஒன்றிரண்டு பேர் ‘கெக்கே,பிக்கே’ என்று சிரித்தார்கள்.

“ என்னங்கடா பண்றீங்க?” கேட்டான் அபிமன்யு.

“ கிரிக்கெட் விளையாடுறோம்” இதைக் கேட்டதும் அவனுக்கு மூச்சுத் திணறல் வருவதைப் போன்ற உணர்வு. தலைகளை விலக்கி எட்டிப் பார்த்தான் . தினேஷ் கையில் கைப்பேசி இருப்பதைக் கண்டதும் பேயறைந்தவனாக நின்றான்.

“ இது யாருடைய செல்லுடா?”

“ உங்க வீட்டு செல்லு” சொன்னான் தினேஷ்.

“ இது எப்படி உன் கைக்கு வந்துச்சு?”

“உன் அம்மா என் அம்மாக்கிட்ட வித்துட்டான்க”

அவனது முகம் விகாரமெடுத்தது. உள்ளுக்குள் பதற்றம். கைப்பேசியுடன் அவன் கழித்த பொழுதுகள் பாலைவனத் தடங்களாக மாறின. அவனது கண்களில் பனி போலக் கண்ணீர் அரும்பியது. நெற்றியில் வியர்வைக்காடு . மூக்கு வேறு விடைத்தது. வாய்க்குள் வார்த்தைகள் முட்டின. அழுகை உடைத்துகொண்டு வந்தது.

“ என்னடா சொல்றீங்க..?“

வெறிப்பிடித்தவனைப் போல வீட்டை நோக்கி ஓடினான். அம்மாவின் தலைமுடியைப் பிய்த்தான். இத்தனை நாட்கள் அவன் வைத்திருந்த செல்லை விற்றுவிட்ட அம்மாவை அடித்தான். உருண்டுப் புரண்டு அழுதான். மகனைத் தேற்றினாள் தாய்.

அபிமன்யு மெல்ல இயல்புநிலைக்கு வந்தான். அவனது பார்வை தினேஷ் பக்கமாகச் சென்றது. தினேஷைச் சுற்றிலும் நண்பர்கள். அவன் உடம்பை அசைத்து, ஆட்டி செல்போனில் மட்டைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தான். அதைப் பார்க்க அவனது கண்கள் உறுத்தின. அவனைச் சுற்றி நிற்கும் கும்பலைப் பிரிக்க நினைத்தான். மூளையைக் கசக்கினான். அவனுக்குள் ஒன்று உதித்தது.

“அடேய்….“ என்றவாறு அடித்தொண்டையிலிருந்து குரல் எழுப்பினான். கும்பலாக நின்றவர்கள் தலையை எடுத்து அபிமன்யுவைப் பார்த்தார்கள்.

“அடுத்த வாரம் பக்கத்து ஊர்ல கிரிக்கெட் மேட்ச். ப்போர் லைன். பஸ்ட் ப்ரைஸ் ஐயாயிரத்து ஒன்னு. நான்தான் கேப்டன். என் தலைமையில விளையாட விரும்புறவங்க ப்ராக்டிஸ் எடுக்க என் கூட வரலாம்….” என்றபடி உடலைக் குலுக்கினான்.

தினேஷைச் சுற்றி நின்றவர்கள மந்திரித்து விட்டவர்களைப் போல அபிமன்யு பின்னே ஓடினார்கள்.

Loading

2 Comments

  1. பேராசிரியர் முனைவர் சிவகவி காளிதாசன் says:

    கதை அருமை.திறமையானவர்களுக்குஎன்றும் மரியாதை உண்டு மதிப்பு உண்டு
    எனக்காட்டியுள்ளது தங்கள் கதை .பாராட்டுக்கள்
    சிவகவி
    புதுக்கோட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *