‘மலக்குழி மரணங்களுக்கு’ காரணம் ஆட்சியாளர்களா, ராமரா?: பகுத்தறிவு படைப்பாளிகள் பார்க்க மறுக்கும் உண்மை
இந்து கடவுளர்களை இழிவாக கவிதை பாடிய ‘கக்கூஸ்’ கவிஞர் விடுதலை சிகப்பிக்கு, கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, சட்டப்படி வழக்குப்பதிவு செய்திருக்கிறது தமிழக காவல்துறை. இது, கருத்துச்சுதந்திரத்தின் கழுத்தைப்பிடிக்கும் செயலென கதறியிருக்கும் சினிமா இயக்குனர் பா. ரஞ்சித் போன்றவர்களின் பகுத்தறிவு புத்திக்கு, ‘மனித கழிவை மனிதனையே அள்ள வைப்பது யார்’ என்ற உண்மை தெரியாதா, அல்லது, தெரியாதது போல நடிக்கிறார்களா?
‘மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அகற்றும் வேலைக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம்’ நாடு முழுவதும், 2013, டிச., 6 முதலே அமலுக்கு வந்துவிட்டது. மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்’ என்கிறது சட்டம். இச்சட்டத்தை அமல்படுத்தி இழிச்செயலை தடுக்க வேண்டியது யார்? ஆட்சி அதிகாரத்தில் இருப்போரோ அல்லது, ராமரா?
ஆட்சி அதிகாரத்தில் இருப்போரின் பொறுப்பு. அரசாங்கத்தின் முதுகெலும்பாக விளங்கும் அதிகார வர்க்கத்தின் கடமை. அவர்கள் சட்டத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் நீட்டி, மனிதக்கழிவை மனிதனே அகற்றும் இழி செயலை அடியோடு ஒழித்திருக்க வேண்டும்.
அதை ஏன் செய்யவில்லை?
படைப்புச்சுதந்திரத்தை பாதுகாப்பதாக பறைசாற்றிக்கொண்டிருக்கும் அறிவுக்குருடர்களின் ஆத்திரமும், ஆதங்கமும், ஆட்சியதிகாரத்தில் இருப்போர் மீதே பாய்ந்திருக்க வேண்டும். ‘ராமரை’ குறிப்பிட்டதற்கு பதிலாக, அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு கவிதையாக கதறியிருக்க வேண்டும்.
ஒருவேளை அவ்வாறு செய்திருந்தால்… படைப்புச்சுதந்திரத்துக்காக தாடை கிழிய கதறும் கருத்துரிமைப் போராளிகளின் பற்கள் தெறித்துவிடும். அதனால்தான், ‘குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்வது போல’ இருட்டுலக இலக்கியவாதிகள், தொட்டதெற்கெல்லாம் இந்துக்கடவுள்களின் மீதும், இறை நம்பிக்கையின் மீதும் பாய்ந்து, தங்களுக்கு தாங்களே சொரிந்து கொண்டு சுகம் தேடிக்கொள்கிறார்கள்.
இந்துக்களின் இறை நம்பிக்கை மீது மட்டுமே இவர்கள் குறிவைப்பதற்கும் முக்கிய காரணம் உண்டு. ‘எவ்வளவு அடித்தாலும் சகித்துக்கொள்வார்கள்; திருப்பி அடிக்கமாட்டார்கள்’ என்ற நம்பிக்கை; துணிச்சல்.
போலி போராளிகளே…
‘மலக்குழி மரணங்களுக்கு’ உண்மையான காரணகர்த்தாக்களாக விளங்கும் ஆட்சி அதிகாரத்திலிருப்போர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு கவிதை பாடி பாருங்களேன்… உங்களது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தில் மாலைகள் விழுகிறதா என்று பார்ப்போம்
![]()