இலக்கியச்சோலை

சகலகலா வித்தகர் கலாநிதி தம்பி ஐயா கலாமணி!….. முருகபூபதி.

முதல் சந்திப்பு…. முருகபூபதி.

நாடகம், கூத்து, முதலானவற்றை ஏற்கனவே பார்த்திருந்தாலும், நான் பார்த்து ரசித்து வியந்த முதலாவது இசை நாடகம் கலாநிதி த. கலாமணியின் பூதத்தம்பிதான்.

வடமராட்சி பல கலை, இலக்கிய ஆளுமைகளை வரவாக்கிய பிரதேசம். அங்கே இசை நாடகக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவரான கலாமணியுடனான எனது நட்பு அவுஸ்திரேலியாவில்தான் நெருக்கமானது.

மெல்பனில் நாம் முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவை 2001 ஆம் ஆண்டு நடத்தியபோது கலாமணியின் பூதத்தம்பி இசை நாடகமும் மேடையேறியது. அந்த நாடகத்தின் இறுதிக்காட்சியைப் பார்த்த ரசிகர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டதையும் கண்களை கசக்கிக்கொண்டதையும் அருகிருந்து அவதானித்தேன். கலாமணிக்கு சிறந்த குரல் வளம்.

1999 களில் அவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வுக்காக சிட்னிக்கு வந்தார். நான் வசிப்பது மெல்பன்.

அவர் குடும்பத்தை விட்டுப்பிரிந்து படிக்க வந்தார். மனைவி பிள்ளைகளை விட்டுப்பிரிந்து வரும் துயரத்தை கடந்துவருதல் என்பது எத்தகைய மனஉளைச்சல் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன்.

எனினும், தான் வந்தநோக்கத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து அந்த இக்கட்டான காலகட்டத்தையும் கடந்தவர். சிறிது காலத்தில் மனைவி மக்களை இங்கு அவர் அழைத்துக்கொண்டபின்பு ஓரு குடும்பத்தலைவனாக அவர்களின் எதிர்காலம் குறித்த ஏக்கமும் கவலையும் அவரது மனதில் குடியேறியது. யாழ். பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் இங்கே ஆய்வை முடித்துவிட்டால் திரும்பிச்சென்று அதே பல்கலைக்கழகத்தில் அவர்

தனது பணிகளைத்தொடரவேண்டும். இங்கேயே குடியுரிமைபெற்று தங்கிவிட்டால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகவேண்டும்.

இங்குவந்த அவரது பிள்ளைகள் மூவரும் ஆங்கில மொழிமூலம் கல்வியை தொடர்ந்தனர். மீண்டும் திரும்பிச்செல்லும்போது அவர்களின் கல்வி சார்ந்த எதிர்காலத்திற்கு என்ன வழி? ஏதும் சர்வதேச பாடசாலைகளை நாடவேண்டும். குடும்பத்திற்காக – ஒரு மனைவியின் தாயின் அன்றாடக் கடமைக்காக ஆசிரியப்பணியையும் ஊதியம் அற்ற விடுமுறையில் துறந்துவிட்டு வந்த நேசமும் பரிவும் மிக்க மனைவியின் தொழில்சார் எதிர்காலம்…? இப்படி பல கேள்விகளுடன் கலாமணி தமது ஆய்வுக்கல்வியை தொடர்ந்தார்.

அப்போது கலாமணியின் முன்னே ஆச்சரியக்குறிகள் இருக்கவில்லை. தொடர்ந்தும் கேள்விக் குறிகள்தான் பூதாகரமாக தோன்றிக்கொண்டிருந்தன. அந்தக்கேள்விக்குறிகளையெல்லாம் தனது அமைதியான இயல்புகளினாலும் ஆற்றல்களினாலும் கடந்து வந்து ஆச்சரியக்குறிகள் ஆக்கினார்.

சிக்கலான முடிச்சுகள் தோன்றினால் பிரச்சினைகள் உருவானால் முடிச்சுகளை அவிழ்ப்பதற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றுவர். நண்பர் கலாமணி எவ்வாறு அத்தனை சோதனைகளையும் கடந்தார் என்பது சிதம்பர ரகசியம்.

உள்ளார்ந்த அவரது கலைத்தாகம் அவரை உளைச்சல்களிலிருந்து மீட்டெடுத்தது. அவரை உடனிருந்து மீட்டபெருமை அவர் நேசித்த கலை இலக்கியத்திற்கு மட்டும் உரித்தானதல்ல. உடனிருந்த மனைவி மக்களையும் அந்தப்பெருமை சாரும்.

திருமதி கலாமணியிடம் நான் இப்படி வேடிக்கையாக சொல்வதுண்டு:- “ உங்களுக்கு மூன்று பிள்ளைகள் இல்லை. கலாமணியுடன் சேர்த்து நான்கு பிள்ளைகள்”

கலாமணியின் குரல்வளம். அவருக்குக் கிடைத்த கொடை. எழுத்தாற்றல், பாடும் திறன், நடிப்பாற்றல் இசைநாடகங்களை இயக்கும் அனுபவம் நிரம்பியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை.

இங்கிருக்கும்போது இசை நாடகப்பிரதிகள் எழுதினார். நாட்கள். கணங்கள்… நமது வாழ்க்கைகள்… என்ற கதைத்தொகுப்பை வெளியிட்டார். எமது வருடாந்த எழுத்தாளர் விழாக்களில் கலந்துகொண்டு ஆய்வுகள் சமர்ப்பித்தார். இதழ்களுக்கு எழுதினார். அண்ணாவியார் இளைய பத்மநாதனின் ஒரு பயணத்தின் கதை கூத்து சிட்னியிலும் மெல்பனிலும் மேடையேறியபோது, தனது கணீரென்ற குரல்வளத்தினால் அந்தக்கூத்து காலம்கடந்தும் பேசப்படுவதற்கு பக்கத்துணையாக நின்றார்.

கொழும்பில் 2011 இல் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் கலாமணியின் பூதத்தம்பி மேடையேறியது.

மெல்பனில் எனது வெளிச்சங்கள் (சிறுகதைகள்) சந்திப்பு (நேர்காணல்) ஆகிய நூல்கள் வெளியானபொழுது அந்த நிகழ்வுக்கு தலைமைதாங்கியவர் கலாமணி. சந்திப்பு நேர்காணல் தொகுப்பு வெளியானவேளையில் அதில் இடம்பெற்ற பிரான்ஸில் வசித்த மூத்த படைப்பாளி அகஸ்தியரும் அவுஸ்திரேலியாவில் வசித்த ஓவியர் செல்லத்துரை ஐயாவும் மறைந்துவிட்டார்கள். அதனால் இருவரதும் பெரிய உருவப்படங்களை நூல்வெளியீட்டு விழாவில் திறந்துவைத்துப்பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

அகஸ்தியரின் படத்தை அவருடன் கண்டியில் நன்கு உறவாடிய எனது நண்பரும் சமூக செயற்பாட்டாளருமான கொர்ணேலியஸ் திறந்துவைத்தார். ஓவியர் செல்லத்துரை ஐயாவின் உருவப்படத்தை கலாமணி திறந்துவைத்து ஓவியக்கலை குறித்து சிறப்பான உரையை நிகழ்த்தினார்.

கலமணியின் தமிழ் – ஆங்கில கையெழுத்துகள் ரசனைக்குரியவை. முத்துக்களை வரிசையாக கோர்த்தது போல் ஓவியமாக காட்சிதரும். அவரது அமைதி – ஆற்றல் – ஆர்ப்பாட்டமற்ற ஆளுமை என்பவைதான் என்னை அவரிடம் நெருங்கச்செய்திருக்கும் என நம்புகின்றேன்.

கலாமணியின் ஆன்ம பலம் அவர் உளமாற நேசிக்கும் கலை இலக்கியத்தில் மட்டும் தங்கியில்லை. அவரது அன்பு மனைவி – அருமை மக்கள் மருமக்களிலும் நல்ல நட்புகளிலும் தங்கியிருக்கிறது.

கலாமணியின் தந்தையார் ( அமரர் ) ச. தம்பிஐயா புகழ்பெற்ற அண்ணாவியார். தனது தந்தை வழியில் தான் பெற்ற இசை நாடக அனுபவங்களை தனக்குப்பின்னர் வந்த இளம் தலைமுறையிடத்திலும் சேர்ப்பித்தார்.

கலாமணியின் புத்திரர்கள் பரணீதரன், முரளீதரன், மதனாகரன் ஆகியோரும் வடமராட்சியைச்சேர்ந்த மேலும் பல இளம்தமுறையினரும் பூதத்தம்பி இசை நாடகத்தில் நடித்திருக்கின்றனர.

எனவே இந்த இசைநாடகமானது தலைமுறைகள் தாண்டியும் நீட்சி பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

1970 களில் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கியிருக்கும் கலாமணி, இதுவரையில் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், கல்வி முதலான துறைகள் சார்ந்து பல நூல்களை வரவாக்கியிருப்பவர். அத்துடன் சில நூல்களின் பதிப்பாசிரியர்.

கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் வெளியான ஜீவநதி , கலாமணி சிறப்பிதழாக வெளியானது. இதில் கலாமணியின் ஆளுமைப்பண்புகளை படித்து தெரிந்துகொள்ள முடிகிறது.

தந்தையை பேட்டி கண்டு எழுதிய தனையன் எவரையேனும் நீங்கள் பார்த்திருப்பீர்களா..? படித்திருப்பீர்களா..? குறிப்பிட்ட ஜீவநதி இதழை அவசியம் படியுங்கள். ஜீவநதி ஆசிரியர் பரணீதரன், தமது தந்தையார் கலாமணியை பேட்டிகாண்கிறார்.

இந்த ஆண்டு இறுதியில் தனது 72 வயதை நெருங்கும் இந்த அயர்ச்சியற்ற கலைஞருக்கு எமது வாழ்த்துக்கள்.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.