அ, ஆ’ கற்க வந்தோருக்கு ‘அதிமேதாவித்தன’ கேள்விகள்: வினாத்தாளை பார்த்து தேர்வர்கள் அதிர்ச்சி…

அடிப்படை எழுத்தறிவுத் தேர்வில், பள்ளியில், ரெகுலராக படித்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இணையாக, வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டதால், வயதான தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் நடைமுறையில் இருந்த வயது வந்தோருக்கான ‘கற்போம் எழுதுவோம்’ திட்டம், தி.மு.க., ஆட்சியில், ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’ என பெயர் மாற்றப்பட்டது; கற்பித்தல் முறையில் எவ்வித மாற்றமும் இல்லை.

இத்திட்டத்தில், 15 வயதுக்கு மேல், முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு, எண்ணறிவு, கற்பித்து, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். இந்தாண்டு 5.28 லட்சம் பேருக்கு, எழுத்தறிவு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 28 ஆயிரத்து 848 மையங்களில், தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்களுக்கான எழுத்தறிவுத்தேர்வு, அனைத்து மையங்களிலும் நேற்று நடந்தது. தேர்வர்களுக்கு 10 பக்க வினாத்தாள் வழங்கப்பட்டது. அதில், பத்தாவது, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது போல ஏராளமான கடினமான வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. வாசித்தல் 50, எழுதுதல் 50, கணிதம் 50 என 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

வாசித்தல் பகுதியில் ஆறாவது வினா, நோயற்ற வாழ்வுக்கு நாம் கடைபிடிக்க வேண்டியவை என்ற வரியில் துவங்கி, 13 வரிகளுடன் இரண்டு பத்தி அளவில் இடம் பெற்றிருந்தது. அதைப் படித்து பார்த்து, ஆறு வினாக்களுக்கு சரி, தவறு என பதில் அளிக்க கூறியிருந்தனர்.

எழுதுதல் பகுதியில் ஆறாவது வினா, ‘ஹிந்தி, ஆங்கில சொற்களுடன் ‘மாதிரி’ ரயில் டிக்கெட் படம் கொடுத்து, அதை வைத்து, நான்கு வாக்கியங்கள் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது. கணிதம் பகுதியிலும் எட்டாம் வகுப்பு தரத்திற்கு இணையாக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

இதனால் தேர்வு எழுத வந்த வயதானோர், ‘அ, ஆ எழுத்துகளை கற்க வந்த எங்களையும் மதிச்சு, கல்வி அதிகாரிகள் இவ்வளவு பெரிய கேள்விகளாக கேட்டிருக்கீங்களே… ரொம்ப சந்தோஷமா இருக்கு; ஆனா எப்படி எழுதணும்தான் தெரியல’ என திகைத்தனர்.

பல மையங்களில் தன்னார்வலர்களே தேர்வை எழுதியதாக சர்ச்சை எழுந்துள்ளது. பல மாவட்டங்களில் அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த திட்டத்தில் தேர்வு எழுதியவர்களே இந்தாண்டும் பங்கேற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கல்வியாளர்கள் கூறியதாவது:

கல்வித்துறையில் சமீபத்தில் நடக்கும் திட்டங்கள் ஆவணங்களுக்கான டேட்டா, போட்டோவுடன் முடிந்து விடுகிறது. ஆனால், களநிலவர முடிவுகள் வேறு மாதிரியாக உள்ளன; மறைக்கப்படுகிறது.

அதில் இத்திட்டமும் ஒன்று. இத்தனை பேரை படிக்க வைத்தோம் என்பதற்கான ஆதாரம் தான் இந்த தேர்வும், சான்றிதழும்.

உண்மையிலேயே ‘ரயில்வே டிக்கெட்’ வினாவுக்கு வயதான தேர்வர்கள் விடையளிக்க முடியுமா என்பது கல்வித்துறைக்கே வெளிச்சம்.

இவ்வாறு கூறினர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button