கதைகள்

பெரியோர்களே தாய்மார்களே!… ( சிறுகதை ) …. ..யாழ் ராகவன்.

நள்ளிரவைத் தாண்டி வேன் அந்த ஊருக்குள் வந்தது.வண்டிக்குள்எல்லோரும் போதை மயக்கத்தில் கிடக்க மாசானம் தான் ஓட்டுநரிடம் இடத்தைத் தேர்வு செய்து இந்த இடத்தில் வண்டியை நிப்பாட்டுங்க என்று சொன்னார்.அந்த வேனில் இருந்த இளைஞர்கள் எல்லோரும் இரவு அருந்திய மது போதையிலும் கஞ்சா போதையிலும்அரை மயக்கத்தில் கிடந்தனர்.

மாசானம் மட்டும் எப்பொழுதும்உள்ளுக்குள் நெருப்பு பிடித்தவனாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றவெறி கொண்டவனாக இருந்தான்.

கண்கள் எப்போதும்ஏதோ ஒரு தேடலில் இருப்பதைப் போலவே இருக்கும்.இவர்கள் அந்த ஊருக்குள் வந்த பொழுது பௌர்ணமி அவர்களை வரவேற்றது.வேலையை தவிர அவனை எதுவும் போதையேற்றியது இல்லை.

பசி ,தூக்கம், பயணம் எல்லாம் அவனுக்கு பொருட்டே இல்லை.

அதனால் தானோ என்னவே 13வயதில் தூரிகை பிடித்தவனை அது 53 வயதிலும் அவனை ஓட வைத்து கொண்டிருக்கிறது. அவன் மூலம் எத்தனை பேருக்கு வருவாய் எத்தனை பேருக்கு பதவிகிடைத்துள்ளது

சுற்றியிருந்த தெரு நாய்கள் வாஞ்சையோடு ஓடி வந்து எட்டிப் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு சென்றது.கண்ணாடியைத் துடைத்து மாட்டிக்கொண்டுதன் கையில் உள்ள அலைபேசியில் அந்த கான்ட்ராக்டருக்குப் போன் பண்ணினான் மாசானம்.

அண்ணே ஊருக்குள்ள வந்துட்டோம் என சன்னமான குரலில் அவன் சொன்னான். எதிர் முனையில் ஹலோ மாசானம் வேலை சுத்தமா இருக்கணும்யா வழக்கம்போல.சரிங்கண்ணேஅந்த ஊரில் வேலை மொத்தம் மூணு வீட்ல. மெயின் ரோட்டில் உள்ளது வேட்டி சட்டவிளம்பரம்ஊர் கடைசியாக தோப்பு வீடுவந்து நகைக்கடை விளம்பரம்

ஊருக்கு நடுவுல உரக்கடைவிளம்பரம் என்ன புரிஞ்சுதா பொருளைப் பார்த்து அளவாய் செலவு செஞ்சு வேலைய முடிச்சு விடுங்க. உன் கூட இருக்கற இளவட்டங்களை கவனித்து வேலைய முடிச்சிட்டு எனக்கு கூப்பிடு. செலவுக்கு காசு இருக்குள்ள என்னப்பா மாசானம் என்று கான்ராக்டர் சொன்னபோதுமாசானம் கான்க்ட்ரை கடவுளாய் ப்பார்த்தான்.

அடுத்த மாதம் முதல்வாரம் வரை தொடுத்து வேலை இருக்குப்பா

கான்ட்ராக்டர் ஒவ்வொரு கடையாக இவர்களுக்கு ஆடர் எடுத்துக் கொடுப்பார் நகை கடை , பெரிய ஜவுளி கடைகள்

பெரிய துணி கம்பெனிகளின் விளம்பரங்கள்

போன்ற நிறுவனங்களின்எல்லாம் எடுத்து மாசானம் வசம் ஒப்படைக்கப்படும்.மாசனம் அவற்றுக்கு வண்ணம் எல்லாம் கலந்துபுதுப்பொலிவோடு ஓவியம் திட்டுவார்.

எழுத்துக்கள் ஆகட்டும் படங்கள் ஆட்டும் ஓவியங்களாகட்டும்கண் முன்னே நிற்பது போல அற்புதமாக வரைகலை. எல்லாவற்றையும் அழகாக்குவது அவன் கைவண்ணம்சொல்லில் அடங்காத மாய ரூபம். அரை மணி நேரத்தில் வண்டியில் உள்ள பொருள்கள் எல்லாம் இறக்கி வைக்கப்பட்டது.எல்லோரையும் சுறுசுறுப்பாக்கினாா் மாசானம்.

ராசு சங்கர்-கணேஷ் மணிகண்டன் விஜய் அட்டாக் குமார் கடா பாண்டி ஆகியோர்மாசானம் கூட இருக்கும் உதவியாளர்கள்.

அவர்களுக்கு வேலையும் வண்ணமும் ஒரு பொருட்டே இல்லை.அன்றைய பொழுதை கடத்த வேண்டும் பணத்தை வாங்க வேண்டும் போதைஅடிக்க வேண்டும்.அதில் ராசு மட்டும் விதிவிலக்கு எப்படிமாசானம் தனது குருநாதரிடம் தொழில் கற்று சிறந்து உயர்ந்து வந்தானோஅந்த நெருப்பில் பாதி ராசுவிடம் இருந்தது.அவன் தான் கண்ணும் கருத்துமாக வேன் செலவு சாப்பாடு ஆட்கள் கூலி வேலை பிரித்தல் எல்லாவற்றையும் சிறப்பாக பார்த்து கொண்டான்.

ராசு டீ கடைக்கு போய் பலகாரமும் காப்பியும்வாங்கிட்டு வந்து வைத்தான்.எல்லோரும்வண்டியில் இருக்கும் கோபால் பல்பொடியில்பல் துலக்கிவிட்டுபலகாரத்தை கடித்துக் கொண்டே காப்பியைக் குடித்துக் கொண்டும்மாசானம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மூணு பேரும்இந்த இடத்துல செவத்த கரெக்ட் பண்ணி, வச்சிருக்கிற மூன்று கலவை மிக்ஸ் பண்ணி அவுட் பார்டர் போட்டு வைங்க

நான் அந்த இடத்தை பார்த்துட்டு அவங்களுக்கு வேலை சொல்லிட்டு இங்கே வந்துடறேன். தண்ணிய இளக்கமாக விடு பிரச நல்ல எண்ணெய்ல்ல ஊற வைத்து எடு சொல்லிக்கொண்டே வந்தான் ராசுநீ என்கூட வா.ஏல ராசு மச்சக்காரன்டா நீ சாவி உனக்குத்தான் அவரு மகளும் உனக்குத்தான் என்று கேலி பேசுவதை ராசு ரசிக்கவே செய்தான் ஆனால் காட்டிக்க மாட்டான்.சரக்க எடு சரக்க எடு என மாசானம் சொல்வது பெயிண்ட் வாளியை

உங்க மாமா சரக்கு சரக்கு என்று சொல்லும் போதெல்லாம் எனக்குஞாபகம் வேற எங்கேயோ போகுதய்யா என

கடா குமார் சொன்னதற்கு எனக்கு செருப்பு செருப்பு கேக்குது நைட்ல போட்டது இன்னும் தெரியவில்லையா வேலைய பாருயாகடா இது ராசு

ராசுவும் மாகானமும் வேனில் ஏற்றிக்கொண்டு மற்றொரு இடத்தை பார்க்கச் சென்றார்கள்.இப்பொழுது ராசு தயங்கித் தயங்கி மாமா௭ப்போ பாத்தாலும் வேலை வேலைனு இருக்கீங்களே உள்ளுக்குள்ள சோகமாகவே நீங்க ஏன் மாமா.ஆனா இந்த வயசுலயும் ஜீன்ஸ் டிசர்ட் போட்டு இளவட்டம் போல எப்படி மாமா. அதுவா பழையகதைய எல்லாம் எதுக்கு கிளறுற இருந்தாலும் இப்ப இருக்கிற இளசுகள மாறி நீ இல்ல அதனால உனக்கு சொல்ல வேண்டி இருக்கு.கமல்ஹாசன் நற்பணி மன்ற தலைவராக இருந்ததெல்லாம் ஒரு காலம் சத்யா படம் வந்தபோது இந்த கெட்அப். அப்படியே அமஞ்ச்சு போச்சு.

ஆறாப்பு வரைக்கும் படிச்சிட்டு அதுக்கு மேல படிக்கிறதுக்கு விருப்பமல்லாமல் வீட்டை விட்டு ஓடி வந்தவன் நான்.ஓவியமா எல்லா நோட்டு பேப்பரிலும்நல்லா வரைவேன்.

வீட்டைவிட்டு ஓடிப்போய் மதுரைக்கு வந்தபோதுஎங்க போறதுன்னு தெரியலை சரவணா ஆர்ட்ஸ் கிளப்இப்படி ஒரு இடத்தில் வந்து நின்றேன் ராஜசேகரன் ஒருத்தரு நல்லா படம் வரைந்து கொண்டிருப்பார்.

அங்க போய் சின்ன ப்பையனா டவுசரை போட்டுட்டு போய் நின்னேன்.

என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு உனக்கு வரைய தெரியுமா என கேட்டு என் கையில் புரசை கொடுத்தார்ஆரம்பிச்சது இன்னி வரைக்கும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.வீட்டில் ஒருவனாகவே நான் வளர்ந்தேன்ஆட்களைக் கூட்டி செல்வது கணக்கு பார்ப்பதுமீதமுள்ள பொருட்களை ஒழுங்காக கட்டி வைப்பது என்று நான் பார்த்த வேலைகளைப் பார்த்துஅவர் மகள் என் மேல் காதல் கொண்டாள்.

நான் பலமுறை மறுத்தேன்.இதுல சேகர் அண்ணனுக்கு விருப்பம் தான்ஆனால் அவர் மனைவி என் சாதியை மற்ற விஷயங்களை யோசித்து காட்டு பயலே நம்பி நம்ம பொண்ண க்கொடுக்கலாமா எனக் கடிந்து கொண்டாள் இருந்தாலும் துணிந்து எனக்கு அவர்திருமணம் முடித்து வைத்தார்.தலைவர்முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தேறியது. இதுவரைக்கும் மாமியார் மனசுல இருந்து அது மாறவே இல்ல எப்ப பார்த்தால் என்ன சாடை மாடையா கரித்துக் கொட்டிக் கொண்டே இருப்பது வேலையா போச்சு.

வீட்டை விட்டு ஓடி வந்தேன் ஊர்ல சொந்தக்காரங்க யாரும் இல்ல அதனால அந்த அம்மா பேசும்போதெல்லாம் நெஞ்சுக்குள்ள வலித்துக் கொண்டே இருக்கும்.அப்போதெல்லாம் எனக்கு ஆறுதல் சொன்ன பொண்டாட்டி பிள்ளைகள் பெருசான போது அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு அவளும்பேய் பிடித்து ராங்கி காரி ஆட்டம் மாறிட்டா.

ரோட்டில் சண்டை போட்டு இருக்கா. பேசி பல வருஷமாகுது வெளியில தான் சாப்பிட்டுகிட்டு இருக்கேன்.இருந்தாலும் இரண்டும் பொம்பள பிள்ளை ஆச்சு வாழ்க்கை நிம்மதியில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறதே என சொல்லி மாசானம் பெருமூச்சு விட்டார்.

சேகர் மாமா ஊருக்குள்ள பலபேரிடம் என்னை நல்ல விதமாக அறிமுகம் செய்தார்.அதுவரை இருந்த உறவு மேலும் வலுப்பெற்றது ஓவியம் வரைவது என்வேலை. என்னிடம் ஆர்ட்ஸ் கிளப் பொறுப்புகளை ஒப்படைத்த பின்னர்அவர் அரசியலில் தீவிரமாக இறங்கலானார்.நிறைய ஆடர் பிடித்து வரைந்தேன் வருமானம் கூடியது.

தேர்தல் காலங்களில் உணவு தூக்கம் இல்லாமல் நிறைய அலைந்தோம்.வரைந்தோம்.

அரசியல் தலைவர் படம் என்றால்எனக்கு மிகவும்பிடிக்கும்.அதுவும் கொள்கையின் படி வாழும் தலைவனுக்கு மட்டும் மற்றவருக்கு அல்ல மற்றவர்கள் அழைத்தால் போக மாட்டேன் . தலைவர் கட்சி ஆட்கள்மாசானம் வரைந்தால் மிக பொருத்தமாக இருக்கும் என எல்லோரும் சொல்லி என்னை பலவிதமான மாநாடு,பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் ,ஊர்வலம் என்று எது நடந்தாலும் அழைத்துச் சென்று வரைய வைப்பார்கள்.

அந்த காலத்துல எல்லாம் பிளக்ஸ் பேனர் போட்டோ இதெல்லாம் இல்லாத காலம்கையில் வரைந்த ஓவியங்களுக்கு அவ்வளவு மவுசுசினிமா நடிகை நடிகர் படங்கள் ஊர் முழுக்க ஜொலிக்கும்

அரசியல்வாதிகள் படங்கள் அப்படியே அச்சு அசலாக தத்ரூபமாகவரைந்து அதன் மூலமா சம்பாதிச்சுபெரிய அளவில் அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தார் ராஜசேகர் மாமா..ஒரு குறிப்பிட்ட தலைவரின் படத்தை மட்டும்தான் அவர் அடிக்கடி வரைவார்முகம் பிடிப்பதால் மட்டுமல்ல அவர் கொள்கையும்அவர் பேசுகின்ற பேச்சு வார்த்தை வேறு வாழ்க்கை வேறு என்று நினைக்காத மனம் கொண்ட அவரை பார்த்து தான்வரைந்து வரைந்து தன் வாழ்க்கையை க்கரைந்து கொண்டவர்.

அவர் பெயரைச் சொன்னால் எந்த கட்சி என்று அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் அதனால் பெயர் வேண்டாம்இப்போதைக்கு தலைவர் என்று வைத்துக்கொள்ளலாம்.

நகர்மன்றத் தலைவர்பதவியிலிருந்து வட்டம் மாவட்டம் சதுரம் செவ்வகம் எனபடிப்படியாக வளர்ந்து இரண்டு முறை மந்திரியாகவும் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

ஏதாவது ஊரில் பொதுக்கூட்டம் பேசி முடித்துவிட்டுதலைவர் காரில் செல்லும் போது நாங்கள் நடுரோட்டில் ஓவியம் வரைந்து கொண்டு இருப்போம் மட்ட மத்தியானத்தில் இறங்கி எங்களைப் பார்த்துநலம் விசாரித்து கையில் சில ஆயிரம் கொடுத்து விட்டுச் செல்லும்போது ராஜசேகர் மாமாவுக்கு வானத்தில் பறப்பது போல இருக்கும்.பல மாநாட்டு வேலை செய்வதற்கு தலைவன் பின்னாடியே சென்ற காலங்கள் என் பேரையும் தலைவர் தெரிந்து வைத்திருந்தார்.

எனக்கு ஓவியத்தின் மேலதான் கிறுக்கு மாமனுக்கு தலைவன் பேச்சில் மயக்கம்” பெரியோர்களே தாய்மார்களே ரத்தமே சதையை கொழுப்பே குடலே வயிறு மூளையே” என அடுக்கடுக்காக வசனம் பேசும்போது பேச்சின் மயக்கத்தில் மக்களையெல்லாம் கட்டிப்போடும் வித்தகத்தை கண்டு மாமா சொக்கித் தான் போனார்.

இப்படியாக சிறந்த ஓவியர் சேகர் மாமா தொழிலை விட்டுவிட்டு அரசியல்ஆர்வத்தில் தொண்டர்ளுடன் சேர்ந்துபல்வேறு கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது தண்ணி வாங்கி கொடுப்பதுஎங்கு கூட்டம் நடந்தாலும் சேர் எடுத்து

போடுவது என கட்சியாளகவே மாறிவிட்டார்.அவரின் நடை உடை பாவனை மாறி விட்டது கட்சி வேட்டிதான் கட்டுவார்.

எதுக்குமாமா நமக்கு இதெல்லாம் என்று ஒருமுறை நான் கேட்டுவிட்டேன்.

நம்மல நாலு பேரு மதிக்கணும்னா நாமகட்சி அரசியலில் இருக்கணும் ஆள்பலம் பண பலம் செல்வாக்கு எல்லாமே இதுல கிடைக்கும்எப்பவுமே நமக்கு கட்சிதேவைப்படும்.மற்ற விஷயங்களை தலைவர் பார்த்து கொள்வார்.

ஒருமுறை தலைவனுக்கு தெரியாமல்அவர் வெளியூர் சென்ற பொழுதுமாற்றுக் கட்சிக்கு படம் வரைய அவர்கள்காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கேட்டுக்கொண்டதால் இரவு முழுவதும் யாருக்கும் தெரியாமல் படத்தை வரைந்து முடித்தேன் ஆனால் யாரோ மாமாவிடமும் தலைவன் காதிலும்போட்டுவிட்டார்கள்.

தலைவர் மாமாவை தனியா தோட்டத்து வீட்டுக்கு அழைத்து மிரட்டியும் ஆசை வார்த்தை காட்டி கட்சியில் முக்கியமான பொறுப்பை குடுக்கலாம்னு இருக்கேன் இப்ப போய் எதிர்க்கட்சி காரனுக்கு படம் வரையலாமா சேகரு.உன் மாப்பிள்ளை பார்த்து நடந்துக்க சொல்லு என சொல்லி விட்டதும் மாமா என்னை அடித்து துவைத்து விட்டார்.

இனி எதிர்க்கட்சிக்கு படம் போடபோனா நடக்கிறது வேற என சொல்லி ஒருமாதம் என்னிடம் அவர் பேசவில்லை. அப்படியெல்லாம் இருந்த மாமாவை என மாசானம் சொல்ல முடியாமல் கண்ணீர் பொங்க அந்த சம்பவத்தை நினைத்து அழுது விட்டார். வேன் ஊரில் நடுவே நின்றது

சுத்தி முத்தி பார்த்து விட்டு தேர்வு செய்த வீட்டை அடைந்து

அதில் இருந்த தலைவன் படத்தை பார்த்து மீண்டும் அழத்தொடங்கிய

மாசானத்தை கட்டுபடுத்த முடியாமல் ராசு கைத்தாங்கலாக அழைத்து

சென்றான்.

ராசு வேனை மீண்டும் எடுக்கச் சொல்லி வேற இடங்களில் ஒரு முறை பார்த்துவிட்டு பின்னர் இந்த இடத்துக்கு வருவோம்.வேனில் ஏறிய மாசானம் அந்த படத்தை ப்பார்த்து கொண்டே திரும்பினான்.

அன்று மட்டும் அந்த பொதுக்கூட்டத்தில் ஒரு கலவரம் ஏற்படாமல் இருந்தால்தலைவன் பேசியபோது யாரோ ஒருவன் பெட்ரோல் குண்டு வீசாமல் இருந்தால் என்று யோசித்துக் கொண்டே வந்தான் மாசானம்.

எங்கள் தெருவில் நல்ல பேர் எடுக்க வேண்டும் தலைவனின்அன்புக்கு பாத்திரமாக வேண்டும் எனமாமா ஒரு பெரிய பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள்எல்லோரும் சேர்ந்து அதற்கு ராப்பகலாக ஒரு மாத காலம் வேலை பார்த்து படம் வரைந்து தட்டி ஒட்டி பந்தல் போட்டு எல்லா வேலைகளையும் ஓடியாடி செய்தோம்.

தலைவர் காரில் வந்து இறங்கினார் மாநாட்டு பந்தலை பார்வையிட்டு இன்னும் பல விஷயங்களை கூடுதலாக சேர்க்கச் சொல்லிச்சென்றார்.

மாமா இந்த மாநாட்டுக்காக ஏற்கனவே பல இடங்களில் கடன் வாங்கி வைத்திருந்தார்செலவு அதிகமாகவே யோசிக்காமல் நகைகளை விற்று எப்படியும் கட்சிகள் நமக்கு ஒரு இடம் கிடைத்துவிடும் அதற்கானஅச்சாரம் தான் இந்த விழா என்று சொல்லி ஓடி ஆடி வேலை செய்தார்.ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை கலைப்பதற்கு பல வேலைகளை செய்து வைத்திருந்தார்கள்.

விழா நாளும் வந்தது தலைவர் பிரமாண்டமாக உரையாற்றினார் அவர் பேச்சு அனல் கக்கும் வீச்சாக இருந்தது. கொள்கையை குவளையில்கரைத்து உடன்பிறப்பின் குடலில் ஏற்றிவிடும் அற்புதத்தை அவர் தனது பேச்சினூடே காட்டினார்.

தேன் மழை பொழிந்தார். யாரோ எரிந்த பெட்ரோல் குண்டு மாமாவின் முதுகில் பட்டு கணநேரத்தில் அது கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது நாங்கள் எல்லோரும் எவ்வளவோ முயன்றும் ஓடியாடி பார்த்தும் அந்த தீயை அணைக்க முடியாமல் தடுமாறினோம்.நெருப்பு யாவற்றையும் மிச்சமின்றி எரித்து அழித்து விடும் என்று எங்கோ படித்தது ஞாபகம் அதை கண்முன்னே பார்க்கும் நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே கடன் அதிகமானாதால் குடும்பம் சின்னாபின்னமானது.தலைவன் தான் தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய மாமாவின் மேல் கட்சிக்கொடி போட்டு மூடி அவரது இறுதி யாத்திரை நடந்தது.

எந்த தலைவனுக்காக உடல் பொருள் ஆவி அத்தனையும் இழந்தாரோ அவன் பேச்சைக் கேட்டு அத்தனையும் தொலைத்தாரோ அந்த

தலைவன் பெரியோர்களே தாய்மார்களே என்ற என்ற குரல் வேறொரு கட்சி மாறி இருந்தது.எப்படித்தான் வேட்டி மாற்றுவது போல கட்சி மாறுவார்கள் தெரியாது. ஒருவனை புகழ்ந்த வாயால் இகழ்வதும் இகழ்ந்த வாயால் புகழ்வதும்அரசியல்சாகசம் போல.

அவன் வீட்டில் சென்று ஏதாவது காசு கேட்கலாம் என்று எல்லோரும் சொன்ன பொழுது என் மனம் ஏனோ அதை ஏற்க மறுத்து விட்டது.

கொள்கையை குழி தோண்டிப் புதைத்த இடத்தில் என்ன நியாயம் கிடைக்கும்பதவிபளபளப்பில்வெல்வெட்டு வாழ்க்கையில் இருக்கும் அவனுக்கு தொண்டனின் நிலைஎன்ன புரிந்து விடப் போகும்அப்போதே முடிவு எடுத்தேன்.

இனி எந்தத் தலைவன் படத்தையும் போடக்கூடாது. பிறகு நாங்கள் அந்த ஊரை விட்டு வந்து விட்டோம்விளம்பரப் படங்களைமட்டும் தான் வரைந்து கொண்டிருக்கிறேன். இனி யாராவது பெரியோர்களே தாய்மார்களே என்று பேசினால் என் மாமாவின் ஞாபகம்தான் வரும் என்னை க்குழி தோண்டி புதைத்து விட்டார்கள்

என மாசானம் சொன்ன பொழுது அந்த வேன் அந்த ஊரின் வேலையை முடித்துவிட்டு அடுத்த ஊருக்கு சென்றது.

கோழி கூவியதும்குஞ்சுகள் பின்னாடி ஓடி வருவது போல அவன் கட்டளைக்கு பம்பரமாகஇளவட்டங்கள் பல பேர் கடமையாற்றினார்.மானசானம் கையில் தூாிகை எடுத்து விட்டான் உணவு ,பொழுது ,ஓய்வு சோகம் என எதுவுமே தெரியாது.தூரத்தில் ஒலிபெருக்கி முழங்கியது பெரியோர்களே தாய்மார்களே…

..யாழ்ராகவன்…

தேனி மாவட்டம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *