இலக்கியச்சோலை

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் …. தமிழ் எழுத்தாளர் விழா 2022 — மெய்நிகர் அரங்கு… இம்மாதம் 29 ஆம் திகதி!

கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள் என்பதை வலியுறுத்தி, அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயற்சிக்கும் நோக்கத்துடன் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கமாக 2001 ஆம் ஆண்டு தோற்றம் பெற்று, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கமாக விக்ரோரியா மாநிலத்தில் பதிவுபெற்ற அமைப்பின் வருடாந்த எழுத்தாளர் விழா இம்முறை மெய்நிகரில் நடைபெறுகிறது.

கடந்த காலங்களில் 2001 ஆம் ஆண்டு முதல் மெல்பன், சிட்னி, கன்பரா, குவின்ஸ்லாந்து ( கோல்ட் கோஸ்ட் ) மாநில நகரங்களில் தமிழ் எழுத்தாளர் விழா மண்டபங்களிலும் திறந்தவெளி அரங்குகளிலும் நடந்திருக்கிறது.

கொவிட் பெருந்தொற்றையடுத்து, உலகளவில் பலரையும் இணத்துக்கொள்ளும் வகையில் கடந்த ஆண்டு முதல் மெய்நிகரில் எழுத்தாளர் விழா நடைபெறுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கருத்தரங்குகள், கண்காட்சிகள், குறும்பட காட்சிகள், மறைந்த எழுத்தாளர்களின் ஒளிப்படக்காட்சிகள் மற்றும் ஓவியக்கண்காட்சிகள் முதலானவற்றையும் வாசிப்பு அனுபவப் பகிர்வுகளையும் கவிதா மண்டலங்களையும் நடத்தி வந்திருக்கும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் நடைபெறுகிறது.

சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வில், தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளர்கள் திலகவதியும், பவா செல்லத்துரையும் உரையாற்றுவர்.

திலகவதி:

இந்திய சாகித்திய அகடமி விருதை தனது கல்மரம் நாவலுக்காக பெற்றிருக்கும் திலகவதி, தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனராக ( I P S ) பணியாற்றி ஓய்வுபெற்றவர். மகளிர்நல ஆணைய உறுப்பினர், சாகித்ய அகாதமி உறுப்பினர் பதவிகளையும் வகித்தவர்.

சிறுகதை, நாவல், கவிதை , மொழபெயர்ப்புத் துறைகளில் பல நூல்களை வரவாக்கியிருக்கும் திலகவதி, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதையும் கடந்த 2020 ஆம் ஆண்டு பெற்றவர்.

திலகவதி “ தமிழ்ச் சிறுகதைகள்- இன்று “ என்ற தலைப்பில் உரையாற்றுவார்.

பவா செல்லத்துரை :

பவா செல்லத்துரை, சிறுகதை எழுத்தாளராக, பதிப்பாளராக, மொழிபெயர்ப்பாளராக, கதை சொல்லியாக, திரைப்பட நடிகராக நன்கு அறியப்பட்டவர். திரைப்பட ரசிகர்களின் வரவேற்பினைப்பெற்ற ஜோக்கர் திரைப்படம் உட்பட சில திரைப்படங்களிலும் தோன்றியவர்.

தேர்ந்த வாசகரான பவா செல்லத்துரை, வாசிப்பு அனுபவங்கள் சார்ந்து உரையாற்றி வருபவர். சிறந்த கதைசொல்லி. இவர் “ வாசிப்பு – ஒரு மானுடத்திறப்பு “ என்ற தலைப்பில் உரையாற்றுவர்.

வாசிப்பு அனுபவப்பகிர்வு

சிட்னியில் வதியும் எழுத்தாளரும் நாட்டியக் கலாநிதியுமான கார்த்திகா கணேசரின் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் ( கட்டுரைகள் ) நூல் பற்றி எழுத்தாளர் லெ. முருகபூபதியும், மெல்பனில் வதியும் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தியின் “நோபோல் “ என்ற சிறுகதைத் தொகுதி பற்றி, இலங்கையிலிருந்து கலாநிதி சு. குணேஸ்வரனும் உரையாற்றுவர்.

நிகழ்வில் இணைந்திருப்பவர்களின் கலந்துரையாடலும் இடம்பெறும்.

கலை, இலக்கியவாதிகளையும் , மற்றும் ஊடகவியலாளர்களையும் வாசகர்களையும் இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.

 

 

மெய்நிகர் இணைப்பு : https://us02web.zoom.us/j/89529543173?pwd=bUUrQVBrZlZiMjNxcEVNdllXUVVnZz09

Meeting ID: 895 2954 3173 Passcode: 202886

—————————————————————————————————————————–

அவுஸ்திரேலியா : இரவு : 8.00 மணி

இலங்கை – இந்தியா : பிற்பகல் 2-30 மணி.

இங்கிலாந்து : முற்பகல் 10.00 மணி .

பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே : முற்பகல் 11.00 மணி.

கனடா : காலை 5-00 மணி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *