குறட்டை விடுபவர்களுக்கு வாரத்திற்கு ரூ.15,000 உதவித்தொகை: இங்கிலாந்து அரசு அதிரடி அறிவிப்பு!
குறட்டை விடுவது ஒருவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கருதி அதற்கு மனித சுதந்திர உதவித் தொகையாக வாரத்திற்கு இந்திய மதிப்பு படி 15,000 ரூபாய் வழங்குவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
நம்மில் பலருக்குத் தூங்கும் போது குறட்டை விடும் பழக்கம் இயல்பாகவே இருக்கிறது. இவ்வாறு குறட்டை விடும் பழக்கம் உள்ள பலருக்கு உடலளவில் பெரிதாகப் பாதிப்பு இல்லையெனினும், தன்னுடைய இந்த குறட்டை சத்தத்தினால் பலர் பாதிப்புக்குள்ளாவதாக எண்ணி தன்னை தானே நொந்து கொள்கின்றனர். நம்மூரில் இன்றும் பலர் இந்த குறட்டை விடும் பழக்கத்தால் பலரால் நகைச்சுவைக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஆனால் இந்த குறட்டை விடுவதையே காரணமாக வைத்து வாரத்திற்கு 15௦௦௦ ரூபாய் கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
குறட்டை விடுதல் என்பதை ஒரு தனிப்பட்ட நீண்டகால அல்லது மன அளவில் பாதிக்கக் கூடிய ஒரு குறையாகக் கருதித் தனி மனித சுதந்திரத்திற்கான தொகை(personal Independent Payment) அதாவது பி ஐ பி (PIP) என்ற திட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வாராந்திர உதவித் தொகையாக ரூபாய் 15,000 வழங்குவதாக யு.கே அரசு அறிவித்துள்ளது. இந்த செய்தியை யு.கே வை சேர்ந்த கென்ட் லைவ் (Kent Live) என்னும் செய்தி சேகரிக்கும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குறட்டை விடுவதால் யாருக்கும் எந்தவித தீங்கும் ஏற்படாது எனினும் அது அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா எனப்படும் மூச்சுத் திணறல் வகையைச் சேர்ந்த ஒரு நோய் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தூங்கும்போது மேல் சுவாசம் சரிவர இயங்காமல் பத்து வினாடிகளுக்கு மேல் மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதால் இந்த நோய் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இதன் அறிகுறியாகவே குறட்டை சத்தம் வெளிப்படுகிறது.
யூ கே வில் மறைமுக ஆரோக்கிய குறைபாடுகளான மன அழுத்தம், மனச்சோர்வு, மனக்கவலை, சர்க்கரை நோய் மற்றும் குறைவான கேட்கும் திறன் ஆகியவற்றுடன் இந்த குறட்டை அல்லது ஸ்லீப் அப்னியா எனப்படும் இந்த மூச்சு திணறல் நோயும் உதவித்தொகை பெற தகுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கென்ட் லைவ் செய்தி நிறுவனம் அளித்த அறிக்கையின் படி யூகே வில் மட்டும் 2,217 பேர், பி ஐ பி திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் பல பேர் இந்த திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை அறிந்து கொண்ட அரசு, இந்தத் திட்டத்தின் கீழ் பணம் பெற சில வரைமுறைகளைக் கொண்டு வந்தது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் நபர், குறட்டை பிரச்சனையினால் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுகிறது மற்றும் இந்த குறைபாடு ஆனது மூன்று மாதத்திற்கு மேல் நீடித்துள்ளது என்று ஒரு உடல் நல மருத்துவரிடம் சான்று பெற்றால் மட்டுமே அவர் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது.
![]()