நடந்தாய் வாழி களனி கங்கை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் நூர் மஃரூப் முகம்மட்டின் மதிப்பீடு!… ( தமிழில் : விஜி இராமச்சந்திரன் )

முக்காலத்தினூடாக முன்னோக்கி நகர்த்த உதவும்
The Mystique of Kelani River![]()
நடந்தாய் வாழி களனி கங்கை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் நூர் மஃரூப் முகம்மட்டின் மதிப்பீடு
( தமிழில் : விஜி இராமச்சந்திரன் )![]()
குந்திதேவி தங்களுக்கு நேர்ந்த துயரங்களைச் சொன்னபோது, “எந்தவொரு நல்லொழுக்கமுள்ள மனிதனும் எல்லா நேரங்களிலும் நல்லொழுக்கத்துடன் வாழும் அளவுக்கு வலிமையானவனும் அல்ல, எந்த ஒரு பாவியும் எப்போதும் பாவத்தில் உழலும் அளவுக்கு மோசமானவனும் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு சிக்கலான வலை மற்றும் நன்மை, தீமை இரண்டுமே செய்யாதவர்கள் உலகில் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் செயலின் விளைவை அனுபவிக்க வேண்டும். துக்கத்திற்கு வழிவிடவேண்டாம்”. வியாசர் இவ்வாறு அவளை ஆறுதல்படுத்தினார். (சி.ராஜகோபாலாச்சாரியின் மகாபாரத மொழிபெயர்ப்பு)![]()
முருகபூபதியின் நினைவுப் பாதையில் அவர் எழுதியிருக்கும் நடந்தாய் வாழி களனி கங்கை நூலில் அது கடந்த பயணத்தை வாசிக்கும்போது ஏற்பட்ட அதே சிந்தனைத் தூண்டுதலும் வசீகரமும் மொழிபெயர்க்கும் போதும் ஏற்பட்டது. “நடந்தாய் வாழி களனி கங்கை” என்பது இலங்கை வரலாற்றின் அறியப்படாத வசீகரிக்கும் விபரங்களை அடக்கியுள்ளது . நீங்கள் கேள்விப்படாத நிகழ்வுகள், ஆச்சிரியமூட்டும் அல்லது அதிர்ச்சிக்குள்ளாக்கும் சில பகுதிகள் கூட இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் சேர்ந்து அந்தக்கால நினைவுகளையும் நாம் இலங்கையர்கள் என்ற நமது அடையாளத்தையும் மீட்டெடுக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
கம்பீரமான களனி நதி மற்றும் ஆற்றங்கரைகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதையானது, வழி நெடுக ஓடி பல திருப்பங்கள், நெளிவுசுளிவுகள் என்று குறுக்கும் நெடுக்குமாக அதன் வழியை விரிக்கிறது. இது பல வியப்பூட்டும் அரசியல் தலைவர்கள் அவர்களின் சூழ்ச்சிகள், லட்சியங்கள், துரோகங்கள், படுகொலைகள்
மற்றும் அவர்கள் விட்டுச் சென்ற மரபுகள் போன்ற சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது. தெய்வங்கள் மற்றும் புராண பாத்திரங்கள், பிரமுகர்கள், அண்டை நாடான இந்தியாவில் இருந்து வந்த பிரபலங்கள் மற்றும் அமைதித் தூதர்கள், தீவில் அவர்களின் குறுகிய ஊடுருவல்கள் பற்றிய சுவாரசியமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. தொழில்முனைவோர், பொழுதுபோக்கு வித்தகர்கள், தேர்ந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தி வளப்படுத்திய மூங்கில் மரங்கள், பழுப்பு காகித பைகள், பால்பாயிண்ட் பேனா மற்றும் பீடி முதல் சப்பாத்து வரையிலான பல சுவாரஸ்யமான குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டு அமையப்பெற்றுள்ளது. இவை அனைத்தும் நம் நினைவில் ஓடிச் சுழன்று களனி நதி போல் பாய்ந்து இறுதியாக கடலெனும் நம் உணர்வுடன் சங்கமிக்கிறது.
சகோதரர் முருகபூபதியைப் போலவே நானும் சில கதைகளைக் கேட்டும் படித்தும் இருக்கிறேன். கொழும்பில் பிறந்து வளர்ந்த எனக்கு முருகபூபதியின் ஊரும் சில மைல்கல் தூரத்தில்தான் என்றாலும் இந்த நிகழ்வுகள் சந்தேகத்திற்கு இடமின்றி என் வீட்டிற்கு மிக அருகில் அரங்கேறியவையே. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போது விவரிக்கப்பட்ட இடங்கள், ஆளுமைகள் மற்றும் நிகழ்வுகள் ஏக்கத்தோடு பூட்டி வைக்கப்பட்டிருந்த நினைவுகளின் வெள்ளத்தை மீட்டு கொணர்ந்தன. இவை எனக்கு பியானோ வாசிப்பவர் பில்லி ஜோயலின் “என் நினைவுகளை மீட்டெடுக்கும் அந்த இசையை எனக்காக இசைக்கமுடியுமா?, அது எத்தகையது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.ஆனால் அது சோகமானதும் இனிமையானதுமாகும். என் இளமைக்கால உடைகளை அணியும் பொழுதெல்லாம் நான் அதை முழுமையாக உணரமுடிகிறது” எனும் பொருத்தமான வரிகளை நினைவூட்டுகின்றன.
மறக்கப்பட்ட சில முக்கியமான நிகழ்வுகளின் நினைவுகளை மீண்டும் தூண்டுவது மட்டுமின்றி இந்த புத்தகம் சமீபத்திய வரலாற்றில், தலையாய பிரச்சினைகளான இன வாத பிளவுகளை பற்றியும் முக்கியப்படுத்தி எடுத்துரைக்கிறது. முருகபூபதி குறிப்பிடுவது போல, நம் நாட்டைப் பாதித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினர் இடையே இருக்கும் அசிங்கமான பிளவு என்பது சமீபத்திய நிகழ்வு மட்டும் அல்ல, காலம்காலமாக வரலாற்றில் தொடர்ந்து வருவதே. அழகான வளங்களும் வாய்ப்புகளும் திறமையானவர்களையும் கொண்ட இந்த
நாட்டின் அழிவுப்பாதைக்கு, திறமையற்ற ஆட்சிகளாலும், அவர்களின் நேர்மையற்ற தலைவர்களாலும், பாரபட்சமான முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளாலும், சிறுபான்மையினர் மீதான பொறாமை மற்றும் வெறுப்பாலும் பல தசாப்தங்களாக இந்த தொடர் நிகழ்வுகள் வழி வகுத்தது. இந்த மனித அவலமான இனப்பிளவு மற்றும் திணிக்கப்பட்ட வெறுப்புணர்ச்சி உண்மையில் நமது வெட்கக்கேடான வரலாற்றுப் பகுதியையே எடுத்துக்காட்டுகிறது. ஆக மொத்தம் இந்த அவல வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு ரத்தமும் சதையுமாக அடித்து செல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் அப்பாவி மக்கள்தான் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இன்றும் பெரும்பாலானோர் வாழ்க்கை எனும் நீரோட்ட சுழலில் ஆபத்தான முறையில் சிக்கிக்கொண்டாலும் விரக்தியுடன் அடுத்து என்ன நடக்குமோ என்று, நம்பிக்கை எனும் மரக்கிளையில் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனாலும், முருகபூபதியின் இந்த புத்தகம் பழைய காயங்களைத் தோண்டுவதாக இல்லை. மாறாக, இது காயத்தை குணப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. “காலம் அனைத்தையும் சரி செய்யும் வல்லமை கொண்டது” என்று கூறுவார்கள். இந்த நிகழ்வுகள் பல்லின மக்களின் வாழ்வில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தி இருந்தாலும் மன்னிப்பை விட பெரிய ஆயுதம் எதுவும் இல்லை என்று பலரும் சமாதானப் படுத்திக்கொள்கிறார்கள். நமது கடந்த கால தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பது இந்த சிறந்த புத்தகத்தின் மற்றொரு நோக்கம். ஏனெனில் நமது கடந்த காலம் நிகழ்காலத்திற்கு வழிவகுப்பது போல சிறந்த எதிர்காலப்பாதையை முன்னோக்கி நகர்த்த அனைவருக்கும் உதவும். மற்றும் நம்மிடையே இல்லாத நம்மால் மறக்கப்பட்டுவிட்ட சில ஆளுமைகளின் பங்களிப்பையும் கவனத்தில் கொள்ள முருகபூபதி முயற்சி செய்துள்ளார். சுருக்கமாக சொல்லப்போனால், அவர்களை அங்கீகரிப்பதன் மூலம், தனக்கே உரித்தான முறையில் முருகபூபதி, அவர்களுக்கு தலை வணங்குகிறார்.
இதை நான் எழுதும் சமயம் நமது அழகிய தீவில் மற்றுமொரு மனதை உருக்கும் துயர்மிகு அத்தியாயம் துவங்கியுள்ளது. அங்கு வாழும் அனைத்து இன மக்களும் திறமையற்ற அரசாங்கத்தின் நம்பமுடியாத ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் கூட்டம் கூட்டமாக எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்பாவி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனால் அவர்களின் நலனைப் பற்றி சிறிதும் அக்கறையின்றி பேராசை பிடித்த அரசியல்வாதிகளின் கூட்டம், அலட்சியத்துடன் அதிகாரத்தில் தொங்கிக்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, அத்தியாவசிய தேவைகளை மறுத்து, வளமான எதிர் காலத்திற்கான அவர்களின் நம்பிக்கைகளை முறித்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சமீபத்திய எழுச்சி நாளுக்கு நாள் வலுவடைந்து மக்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இனவெறி, வன்முறை, ஊழல் இல்லாத மற்றும் உறவினர்களுக்குள்ளேயே அதிகாரம் தாவாத ஆட்சியை நிலைநாட்டும் என்று நம்புவோமாக.
முருகபூபதி ஒரு சிறந்த எழுத்தாளர், புகழ்பெற்ற பத்திரிகையாளர் மற்றும் பத்திரிகை மரபுகளின் சிறந்த கோட்டை. அவரது எழுத்துக்களில் அவரது தாய்நாட்டுப்பற்றைப் பார்க்கலாம். தமிழை வாசிக்க முடியாத அனைவருக்கும், இந்த புத்தகம் ஒரு பார்வையை வழங்குவதோடு, அவரது மற்ற சிந்திக்கத் தூண்டும் படைப்புகளை மொழிபெயர்ப்பதற்கான பசியைத் தூண்டும் என்று நம்புகிறேன்.
—0—
![]()
Reading a few of the books brings back good memories of our motherland; this one cannot be an exception. Having crossed the river thousands of times and witnessed the local’s life and the changing of rivers scenarios are exceptional.
Thank you
மிகவும் பிடித்த தமிழ்நடை குந்தி….