யார் எழுத்தாளன்?….. ( கிறுக்கல் மூன்று ) ….. சங்கர சுப்பிரமணியன்.

வெளிநாட்டுவாழ் எழுத்தாளர்களுக்கு நூல் வெளியீட்டினைச் செய்ய பொருளாதாரப்
பிரச்சனை என்பதை முறியடிப்பதுசாத்தியமாகிறது. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் வாழும் எழுத்தாளர்களுக்கு அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்கவே அல்லல் படும்போது நூல்வெளியீடென்பது ஆடம்பரமாகிறது.சில எழுத்தாளர்கள் மிகவும் வறியநிலையில் இருப்பதால் வாங்கிய கடனுக்கே வட்டிகட்ட முடியாதவனுக்கு நூல்வெளியீடெல்லாம் ஒருகேடா என்ற வசைபாட்டுக்குள் சிக்கித்தவிப்பார்கள். இதில் வசதிபடைத்த எழுத்தாளர்கள் அடங்கமாட்டார்கள். இதனால் தம்மையே நொந்து முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா என்று மலராமல் மொட்டிலேயே கருகிப்போவார்கள். கடலில் அமிழ்ந்து கிடக்கும் பனிக்கட்டியைப்போல எத்தனையோ எழுத்தாளர்கள் கரைந்து போகிறார்கள்.அவர்களுக்கெல்லாம் பொருளாதார வசதியிருக்குமானால் ஏனைய எழுத்தாளர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு தரவரிசையில் முன்நின்றாலும் நிற்கலாம். ஒரு போட்டியில் திறமைசாலிகள் அனைவரும் கலந்திருந்தால்தான் அதில்வெற்றி பெற்றவர் திறமைசாலி. இந்த ஒரு பொருளாதார சிக்கல் என்னும் படுகுழியில் பல தரமான எழுத்தாளர்கள் வீழ்ந்து கிடப்பதால் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூவைப்போல சமானியமானவர்கள் எல்லாம் சாதனையாளர்கள் ஆகிறார்கள்.இதைக்காட்டிலும் எழுத்துலகில் பயணிப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பதுபோல எழுத்தாளர்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் இருப்பார்கள். இது அந்த எழுத்தாளர்கள் பின்பற்றி எழுதும் சித்தாந்தத்தின் அடிப்படையில் மாறுபடும். ஒரு எழுத்தாளன் புரட்சிகரமாக எழுதினால் அதிலுள்ள புரட்சிகரமான கருத்தைப் பார்க்க மாட்டார்கள். பகுத்தறிந்து எழுதினால் அதன் உண்மையை உணரமாட்டார்கள். அரசியலை எழுதினால் அதெல்லாம் நமக்கெதற்கு என்பார்கள்.இதனால் பெரும்பாலானவர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அதற்குத் தகுந்தமாதிரி எழுதுவார்கள். செருப்புக்கு தகுந்தவாறு காலை நறுக்கலாமா என்பதெல்லாம் இவர்களுக்கு வேண்டாத ஒன்று. இந்த இக்கட்டுக்குள்ளும்நல்ல கருத்துக்களையும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் அளவுக்கு எழுதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை வாசிப்பாளர்கள்தான் இனம் காணவேண்டும்.தோட்டத்தில் நாமாகவே விதை போட்டு செடிவளர்த்து பூ, காய், கனியென அவற்றை கண்டு மகிழ்வாரும் உண்டு. நர்சரியில்செடிவாங்கி தோட்டக்காரனிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லி அதைக் கண்டு ரசிப்பவர்களும் உண்டு. அதுபோல் மற்றவர்களை எழுதச்சொல்லி தன் பெயரை போட்டுக் கொள்பவர்களும் தாம் எழுதியதை மற்றவரைக் கொண்டு திருத்தியமைத்து படைப்புக்களை வெளியிடுபவர்களும் உண்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுபோலவும் எழுத்தாளர்கள் இருப்பதாக சிலர் சொல்லிக் கேள்விப்பட்டேன்.
ஒருவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். காதலியை வர்ணிப்பது தவறில்லை. அந்த வர்ணிப்பு எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும். காதலில் களவு காண்பது நம் இலக்கிய மரபு. ஆனால் பாம்பு கொத்தும் அளவுக்கு காதல் கண்களை மறப்பதுதான் தவறு. காதலர்கள் ஒரு மரத்தடியில் தம்மை மறந்த நிலையில் இருக்கும்போது அங்கு வந்த காதலனின் அண்ணன் பாம்பைக் கொன்றபின் காதலர்களிடம் இப்படி கூறுவதாக விரபாண்டிய கட்டமொம்மன் என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் வருகிறது.இதைப்போன்று காதலியை வர்ணிப்பதில் தவறில்லை. ஆனால் அதை எப்படி வர்ணிப்பது என்று மற்றவர்களிடம் கேட்டு அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி காதலியை வர்ணிப்பது தவறு. எழுத்தாளனின் கற்பனையில் உதித்து உணர்வுபூர்வமான கருத்துக்களாக இருக்கவேண்டும்.ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்றளது. மற்றவரின் இசைக்கு நீ ஆடாதே என்பதே அப்பழமொழி. இது எதைச் சொல்ல வருகிறதென்றால் மற்றவர் ஆட்டுவிக்கும்படி ஆடாதே என்பதைத்தான் சொல்ல வருகிறது. ஆகவே எழுத்தாளர்கள் மற்றவர்கள் திருத்தியமைத்துக் கொடுத்த படைப்பை தன் படைப்பாக வெளியிடக் கூடாது. இதவும் ஒருவகை கலப்படம் என்பதை எழுத்தாளர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
அப்படியென்றால் புதிதாக எழுதுபவர்கள் எப்படி எழுதுவது? இதற்கு வாசிப்பு அனுபவம் துணைநிற்கும். பல நூல்களை வாசிக்கும்போது அந்த நூல்களின் ஆசிரியர்களின் கற்பனை வளம் எவ்விதம் ஒடுகிறது? கருப்பொருளை எவ்வாறு கையாள்கிறார்? கருப்பொருளை உள்வாங்கியபின் எவ்வாறு நகர்த்திச் செல்கிறார் என்பனவற்றை ஓரளவுக்கு உணரமுடியும். இது ஆசிரியரிடம் பாடம் படிப்பதைப் போன்றது.நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர் சொன்னது இன்னும் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது. அந்ந ஆசிரியர் கேள்விகளுக்கு பதிலை கரும்பலகையில் எழுதிப்போடுவார். அப்படி எழுதிப்போட்ட பின் ஒன்று சொல்வார். இந்த விடையை அப்படியே எழுதுபவர்களுக்குநடக்கும் தேர்வில் முழு மதிப்பெண்ணும் கொடுக்கமாட்டேன். ஏனென்றால் உங்களுக்கு பாடம் எடுப்பதுதான் என் தொழில். பாடப்புத்தகத்தில் இருந்து பதிலைத் தேர்ந்தெடுத்து எழுதுவது உங்கள் வேலை.ஆனால் இங்கு எழுதிப்போட்டிருப்பது என் பதில். இந்த பதிலை அப்படியே எழுதினால்தேர்வில் மற்ற மாணவர்களை பார்த்து எழுதுவது போன்றதாகும். எனவே இந்த பதிலை மாதிரியாக வைத்துக் கொண்டு நீங்களே உங்கள் சொந்த வரிகளில் பதிலை எழுதவேண்டும் என்பார். அதுமாதிரிதான் பிற நூலாசியர்களின் படைப்புக்களை படித்து அனுபவம் பெறவேண்டுமேயன்றி அவர்களின் நடையை அப்படியே பின்பற்றக்கூடாது.பின்பற்றினால் என்னவாகும்? தேர்வில் மற்ற மாணவனைப் பார்த்து எழுதியவன் கதைதான். தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பெறலாம் தேர்வடையாமலும் போகலாம். நான் சொல்வது பிழையென்றால் சற்றே சிந்தித்து பாருங்கள். ஒரு எழுத்தாளரைப்போலவே இன்னொருவர் எழுதுகிறாரா?-சங்கர சுப்பிரமணியன்.(கிறுக்கப்படும்)
![]()