நீங்காத நினைவுகள் …நிகழ்வு!… ஏலையா க.முருகதாசன்.

கடந்த 16.06.22 அன்று ஜேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள தமிழ் அரங்கம் மண்டபத்தில், பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினரால்,மேற்படி ஒன்றியத்தில் தமிழுக்காய் தொண்டாற்றிய காலஞ்சென்ற திருமதி.கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களுக்கும்,திருமதி.நிவேதா மோகன்ராஜ் அவர்களுக்கும் நீங்காத நினைவுகள் என்று தலைப்பிட்டு அவர்கள் இருவரும் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்துடன் இணைந்தாற்றிய பணிக்காக நினைவு கூர்ந்து ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியிருந்தனர்.![]()
கவிஞையும், தமிழாலய ஆசிரியையுமான திருமதி.கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும்,அதன் ஊடகவியலாளராகவும் சிறப்பாக தொண்டாற்றியவர்.அத்துடன் அவர் அன்ரனா றூக என்ற வானொலியின் தமிழ்ப் பிரிவின் அறிவிப்பாளராகவும் இருந்தவர்.
பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின்,உட்பிரிவான இளஞ்சூரியன் படைப்பாளிகள் அகத்துக்கு பொறுப்பாளராக இருந்து இளஞ்சூரியன் என்ற பெயரில் மூன்றுமாதத்துக்கொருமுறை அச்சஞ்சிகையை வெளியிட்டதுடன்,ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து விழாக்களையும் இளஞ்சூரியன் படைப்பாளிகள் அகத்தின் இளந்தலைமுறையினரே சிறப்பாக நடத்தி வைத்தமைக்கு திருமதி.நிவேதா மோகன்ராஜ் அவர்களே காரணகர்த்தாவாகவும் இருந்தார்.இவர் ஒரு பாடகி என்பதுடன் தமிழாலய ஆசிரியையுமாவார்.
![]()
இவ்விழாவினைப் பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவர் திரு.வி.சபேசன் ஆரம்பித்து வைத்து ஆரம்ப உரையாற்றினார்.
திருமதி.கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் உருவப்படத்துக்கு முல்கைம் நகரைச் சேர்ந்தவரும், திரு.திருமதி சொர்ணலிங்கம் கோசல்யா தம்பதிகளின் நண்பருமாகிய திரு.புஸ்பகாந்தன்(முல்கைம் கண்ணன்) அவர்களும், திருமதி.நிவேதா மோகன்ராஜ் அவர்களின் உருவப் படத்துக்கு, அவரின் பெற்றோரான திரு.திருமதி.புவனேஸ்வரன் தம்பதிகள் ஆகியோர் முதன்மை தீபத்தை ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சபையோர் அனைவராலும் தீபாஞ்சலியும் மலரஞ்சலியும் செய்யப்பட்டன.
![]()
அகவணக்கத்தில் தமிழீழ விடுதலைக்காக போராடிய அனைத்து பேராளிகள், திருமதி.கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள்,திருமதி.நிவேதா மோகன்ராஜ் அவர்கள், திரு.திலகேஸ்வரன், திரு.தியாகேஸ்வரன், திரு.ஜெகநாதன் ஆகியோருக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
![]()
இந்நினைவு விழாவில்,ஒன்றியத்தின் தலைவர் திரு.வி.சபேசன்,செயலாளர் ஏலையா க.முருகதாசன், ஒன்றியத்தின் கௌரவ அவைத் தலைவர் திரு.சு.பாக்கியநாதன்,ஒன்றியத்தின் பொதுக்குழு உறுப்பினரும் பண்ணாகம் இணையத்தள ஆசிரியருமாகிய திரு.இ.க.கிருஸ்ணமூர்த்தி,தமிழருவி என்ற பத்திரிகையை வெளியிட்டவர்களும்,இப்பொழுது தமிழருவி வானொலியை நடத்திக் கொண்டிருப்பவர்களுமாகிய திரு.திருமதி.நயினை விஜயன் சசிகலா தம்பதிகள்;, ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவரும் ஆசிரியருமாகிய திரு.பொ.சிறீஜீவகன், இளஞ்சூரியன் படைப்பாளிகள் அகத்தில் உறுப்பினராக இருந்த சுதர்சினி கெந்தீஸ்வரன், திரு.மோகனதாஸ்,ஊடகவியலாளர் திரு.முல்லை மோகன்,என்னப்பெற்றால் நகரத்தில் இயங்கிவரும் சர்வோதயத்தின் தொடர்பாளர் திரு.க.மகாலிங்கம்,ஜேர்மனி டோட்முண்ட் நகரில் தமிழர் வரலாறு என்ற நூலை எழுதிய திரு.நா.அன்னராசா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
![]()
உரை நிகழ்த்திய அனைவருமே திருமதி.கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களினதும்,திருமதி.நிவேதா மோகன்ராஜ் அவர்களினதும் படைப்பிலக்கிய ஆற்றல் பற்றியும்,பன்முக ஆளுமை பற்றியும் நெகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் அவரவர் பார்வையில் நின்று உரையாற்றினார்கள்.அவர்கள் இருவரும் விட்டுச் சென்ற இடத்தை அவர்களல்லாத எவராலும் இட்டு நிரப்ப முடியாது என்பதை ஊன்றித் தமதுரையில் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்வில் திருமதி.கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களால் அன்னை பூபதி பற்றி எழுதிய கவிதையை ஒல்லாந்து நாட்டில் உள்ள பாடகர் திரு.விஜயன் அவர்களால் பாடபட்டுஅதனை திரு.வி.சபேசன் ஒழுங்கமைத்த கணொளி இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கிணங்க இதனை ஒருங்கிணைத்தவர் பாடகர் திரு.முல்லைசசி அவர்கள்.
செய்தியாளர்: ஏலையா க.முருகதாசன்
![]()