16 வயது முஸ்லிம் பெண்ணின் திருமணம் சட்டப்படி செல்லுமா?

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டைச் சேர்ந்த, 16 வயது பெண்ணும், 21 வயது இளைஞரும் காதலித்து திருமணம் செய்தனர். இருவரும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு கோரி, புதுமணத் தம்பதி தரப்பில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பேடி பிறப்பித்த உத்தரவு:மனுதாரர்கள் தங்கள் குடும்பத்தினர் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்துள்ளனர். இந்த காரணத்தைக் கூறி, அரசியல் அமைப்பு சட்டம் அவர்களுக்கு அளித்த உரிமையை, அவர்களது குடும்பத்தினரால் பறிக்க முடியாது. முஸ்லிம் பெண்ணின் திருமணம் என்பது, முஸ்லிம் தனி நபர் சட்டத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.
இதன்படி, அந்த பெண், 16 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதால், தான் விரும்பும் நபருடன் திருமணம் செய்து கொள்வதற்கான தகுதி அவருக்கு உள்ளது. அவரை திருமணம் செய்தவர், 21 வயதுக்கு மேற்பட்டவர் என ஆவணங்கள் கூறுகின்றன. முஸ்லிம் தனி நபர் சட்டப்படி இருவரும் திருமண வயதை எட்டியுள்ளனர்.
இருவரும் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி, புதுமணத் தம்பதியின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய சட்டப்படி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
![]()