கட்டுரைகள்

கடந்து வந்த பாதையும் காலிமுகம் கடக்கும் பாதையும்!…. அவதானி.

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ஷவை பதவி விலகக்கோரும் ஆர்ப்பாட்டம் காலிமுகத்திடலில் தொடங்கிய நாள் முதல் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும், ராஜபக்ஷ குடும்பத்தினர் மத்தியில் தோன்றியிருக்கும் மாற்றங்களையும் தினம் தினம் சமூக ஊடகங்களில் பார்த்து வருகின்றோம்.

மகிந்த ராஜபக்ஷவும் அவரது தம்பி பஸில் ராஜபக்ஷவும் தமது அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டனர், சமல் ராஜபக்ஷ, மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

எனினும் தம்மால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ பூர்த்தி செய்துவிடுவார் என சகோதரர்கள் நினைத்திருந்தாலும், இக்குடும்பத்தின் இளவரசன் எனக்கருதப்படும் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலத்தை இந்த மூத்த தலைமுறை அரசியல் சகோதரர்கள் விரும்பியோ விரும்பாமலோ நிர்மூலம் செய்துவிட்டனர்.

மிகவும் குறைந்த வயதில் அரசியலுக்கு வந்து நாட்டு மக்களின் நாடி பிடித்துப்பார்த்து நாடாளுமன்றத்திற்குள் வந்துள்ள நாமல், இனி அடுத்துவரும் தேர்தலில் எத்தகைய வகிபாகத்தை கொண்டிருப்பார் என்பது பற்றி தற்போது ஆரூடம் கூறமுடியாது.

அவரைப்போன்ற இளம் தலைமுறை முன்னெடுத்துள்ள காலிமுகத்திடல் போராட்டம் இரண்டு மாதங்களையும் கடந்திருப்பதை அவர் அவதானித்துக்கொண்டுதான் இருப்பார்.

காலிமுகத்திடலில் தொடரும் போராட்டத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகள் இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னர் நடைபெறவில்லை.

அதில் முக்கியமாக ஈழத்தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்கள் முக்கிய கவனத்தை ஈர்த்திருந்தது.

இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு அனுமதிக்காத இந்த அரசுக்கு , குறிப்பாக பேரினவாதிகளுக்கு சாட்டை அடி கொடுப்பதுபோன்று காலிமுகத்திடலில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது. மூவினத்தவர்களும் கேட்டு மகிழ்ந்தனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழின அழிப்பினை நினைவுகூரக்கூடாது என்று வட, கிழக்கு எங்கும்

தடைவிதித்திருந்த அரசுக்கு சவால் விடும் வகையில், அதன் தலைவரான – சிங்கள மக்களால் மாத்திரம் தெரிவுசெய்யப்பட்டவன் என்று திமிருடன் சொல்லி வந்தவரின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி தீபம் ஏற்றுவதில் தொடங்கி அகவணக்கம் செலுத்தி, கஞ்சி காய்ச்சி விநியோகித்தது வரையில் சிக்கல் எதுவும் இன்றி நிறைவுற்றது.

இதிலும் மூவின மக்களும் மதகுருமாரும் இன, மத, மொழி வேறுபாடின்றி இணைந்துகொண்டனர்.

41 ஆண்டுகளுக்கு முன்னர் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி நள்ளிரவு சிங்கள பேரினவாதிகளின் தூண்டுதலினால் அரச காவலர்களினால் தீக்கிரையாக்கப்பட்ட யாழ். பொது நூலகத்தை நினைவு கூர்ந்தும் அதே தினத்தில் காலிமுகத்திடலில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் பேராசிரியர் நுஃமான் குறிப்பிட்ட நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் எழுதிய புத்தரின் படுகொலை கவிதையும் மும்மொழிகளிலும் வாசிக்கப்பட்டது. அத்துடன் யாழ். பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் வழங்கப்பட்டது.

அன்று அந்தச் சம்பவத்தை கண்டித்து மனித உரிமை ஆர்வலர்கள் கொழும்பில் புதிய நகர மண்டபத்தில் நடத்தவிருந்த கூட்டத்தை அன்றைய ஜே. ஆர். அரசு தடைசெய்தது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கோத்தபாய அரசு தடைசெய்திருந்தது.

இந்த பேரினவாதிகள் எவற்றை தடைசெய்து அரசியல் ஆதாயம் தேடினார்களோ, அவற்றையெல்லாம் காலிமுகத்திடலில் கோத்த கோ கம எற்ற நகரத்தையே உருவாக்கியிருக்கும் மூவினங்களையும் சேர்ந்த இளம் தலைமுறை செயல்படுத்திக்காண்பிக்கின்றார்கள்.

இனி அடுத்து, 1983 கறுப்பு ஜூலையும் காலிமுகத்திடலில் நினைவுகூரப்படும் என்பதை எதிர்பார்க்கலாம்.

இலங்கையில் அரசாங்க ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறவேண்டும் என்பது நியதி. ஆனால், மக்களின் வாக்குகளினால் நாடாளுமன்றம் சென்று மக்களின் வரிப்பணத்தில் வசதியான வாழ்க்கையை பெருக்கிக்கொள்ளும் அரசியல்வாதிகளை மாத்திரம் இந்த வயதெல்லை எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை.

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவிருக்கும் அரசியல்வாதிகளின் வயது 60 இற்கும் குறைவாக இருக்கவேண்டும்

என்ற சட்டம் இயற்றவேண்டும் என்ற குரலை இளம் தலைமுறை ஒலிக்கவேண்டும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் இங்கு நடந்த அரசியலில் தொடர்ச்சியாக நீடித்துவரும் முறைகேடுகள் முற்றாக களையப்படுவதற்கான முன்னெடுப்புகளையும் காலிமுகத்திடல் போராட்டம் மேற்கொள்ளவேண்டும்.

கோத்தபாய மாத்திரமல்ல, நாடாளுமன்றில் ஆசனங்களை சூடாக்கிக்கொண்டு , கிடைக்கும் சம்பளத்திற்கு அப்பால், வீடு – வாகன வசதிகளையும் பெற்றவாறு ஒவ்வொரு அமர்வுக்கும் குந்தி எழுவதற்காக இரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் வேதனமும் பெற்றுவரும் 225 உறுப்பினர்களும் வீட்டுக்குச்செல்லவேண்டும் என்ற குரலும் காலிமுகத்திடலில் எழுந்ததை மறந்துவிட முடியாது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளர்கள் கோத்தா கோ கம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் எதிரொலியை பார்த்தோம். அந்த எதிரொலி தென்னிலங்கை எங்கும் பரவி தீயாகவும் கொழுந்து விட்டு எரிந்தது. அதனையடுத்து நடந்த மாற்றங்களை மீண்டும் இங்கே நினைவுபடுத்தவேண்டியது அவசியமில்லை.

இது இவ்விதமிருக்க, எரிபொருள் தட்டுப்பாடு உட்பட மருந்து வகைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி முதலான சிக்கல்களிலிருந்து நாட்டை மீட்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா, புதிய புதிய செய்திகளை தினம் தினம் வெளியிட்டுவருகின்றார்.

அத்துடன் வெளிநாட்டு தூதுவர்களையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்.

மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலை காப்பாற்றுவதற்கு அதன் மாலுமி மேற்கொண்டு வரும் பிரயத்தனங்களுக்கு ஒப்பானது அவரது செயல்.

அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கடமைக்கு வரவேண்டாம். அந்நாட்களில் பயிரிடும் பணிகளில் ஈடுபடலாம் என்கிறார். அத்துடன் பாடசாலை நாட்களை குறைப்பதற்கு ஆலோசிக்கப்படுகிறது.

ஆஸ்பத்திரிகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு வந்துள்ளமையால், வாள் வெட்டுக் குத்து சண்டைகளில் ஈடுபட்டுவரும் சண்டியர்களிடத்திலும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

காயப்பட்டு வருபவர்களுக்கு மருந்துகளும் இல்லை. காயங்களுக்கு கட்டுப்போடுவதற்கு பண்டேஜ்களும் இல்லை.

அவ்வாறாவது இந்த சண்டியர்கள் திருந்தி பயிர் உற்பத்தியில் ஈடுபடவேண்டும்.

இத்தனை காட்சிகளுக்கு மத்தியில் இனி காலிமுகத்திடலிலும் பயிர்ச்செய்கையில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டாலும் ஆச்சரியமில்லை.

அங்கு கூடாரம் அமைத்து முகாமிட்டிருப்பவர்கள் இலங்கை வரைபடத்தில் மற்றும் ஒரு நகரத்தையும் பதிவுசெய்துவிட்டார்கள்.

கோத்தபாய தோல்வி கண்ட ஜனாதிபதியாக வெளியேறினாலும், கோத்த கோ கம மக்களின் மனதை விட்டு வெளியேறாது.

—0—

Loading