சங்கதிகள்

அரசு பேருந்துகளில் அசம்பாவிதங்களை தடுக்க ‘சிசிடிவி’ கேமராக்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில், பஸ் பயணியர் பாதுகாப்பு கருதியும், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் அடாவடியைமுடிவுக்கு கொண்டு வரவும், அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் வாயிலாக, பிக்பாக்கெட் திருட்டுகளை தடுப்பதுடன், படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் தேவையற்ற உயிரிழப்பை தடுக்க முடியும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுதும் சமீப காலமாக பேருந்துகளின் உள்ளே அமர்ந்து செல்ல இடம் இருந்தும், சிலர் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு அபாயகரமான முறையில் பயணம் செய்கின்றனர். சிலர் பேருந்தின் பின்பக்க படிக்கட்டு, பேருந்துகள் மேலே பயணிக்கின்றனர்.குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அடாவடியால், பயணியர் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.சில சமயம், பேருந்துகளில் பிக்பாக்கெட் போன்ற திருட்டு சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

அதே போல், படிக்கட்டில் பயணிக்கும் சிலர், அவ்வப்போது விபத்தில் சிக்கி, உயிரிழப்பு நிகழ்கிறது.இவற்றை தடுக்க, திருவள்ளூர் மாவட்டம் முழுதும் இயக்கப்படும் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.திருவள்ளூரில், 2009ம் ஆண்டில் இருந்து, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.சோதனை ஓட்டம்இங்கிருந்து, வடபழநி – தடம் எண்.501, பெரிய பாளையம் – 505ஏ, தாம்பரம் – 566ஏ, ஆவடி – 572 கட் சர்வீஸ், அம்பத்துார் எஸ்டேட் – 572, பிராட்வே – 571, தி.நகர் – 597, கோயம்பேடு – 596ஏ, ஸ்ரீபெரும்புதுார் – 583ஏ, செங்குன்றம் – 505 ஆகிய ஊர்களுக்கு, 54 பேருந்துகள் மூலம், 536 நடைகள் இயக்கப்படுகின்றன.இதில், 22 பேருந்துகள் விரைவு பேருந்துகளாகவும், 30 பேருந்துகள் சொகுசு பேருந்துகளாகவும் இயக்கப்படுகின்றன.

இவ்வளவு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், பேருந்துகளை பராமரிப்பதற்கான பணிமனை, மாவட்டத்தின் தலைநகரமான திருவள்ளூரில் இல்லை.தற்போது, திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும் மாநகர பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி, அம்பத்துார் தொழிற்பேட்டை, ஆவடி, கே.கே.நகர் போன்ற பணிமனைகளுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன.திருவள்ளூருக்கு வரும் ஐந்து பேருந்துகளில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது சோதனை ஓட்டம் என மாநகராட்சி பேருந்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.முழுவீச்சில் பணிபொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், புதுச்சேரிமேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, சென்னை பாடியநல்லுார், மாதவரம் பணிமனைகளில் இருந்து, 20 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இவற்றில் பயணியரின் பாதுகாப்பு கருதி ‘சிசிடிவி’க்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, 10 பேருந்துகளில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.மற்ற பேருந்துகளில் ‘சிசிடிவி’ பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக பணிமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கும்மிடிப்பூண்டி பகுதிக்கு, மாதவரம் மற்றும் பாடியநல்லுார் ஆகிய இரு மாநகர் பேருந்து பணிமனைகளில் இருந்து, நான்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில், ஒரு பஸ்சில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழக- – ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிக்கின்றனர்.இவர்கள், ஊத்துக்கோட்டையை சுற்றி, 10 கி.மீ., துாரத்தில் இருந்து வருகின்றனர். இவர்கள் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகள் மற்றும் மாநகர பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.

பாடியநல்லுார் மாநகர பேருந்து டிப்போவில் இருந்து ஊத்துக்கோட்டை — செங்குன்றம் வழித்தடத்தில் எட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரண்டு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.இங்கு இயக்கப்படும் பேருந்துகளிலும், சோதனை அடிப்படையில் கேமரா பொருத்தும் பணி நடக்கிறது.பாடியநல்லுார் மாநகர பேருந்து டிப்போவில், 83 பேருந்துகளில் கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. பேருந்தில் பயணியர் ஏறும், இறங்கும் படிக்கட்டுகளை பார்த்தபடி இரண்டு, ஓட்டுனர் அருகில் ஒன்று என மூன்று கேமராக்கள் உள்ளன. அவசர கால தேவைக்கு ஆண்கள் இருக்கை வரிசைகளில் இரண்டு பொத்தான், பெண்கள் இருக்கை வரிசைகளின் கம்பிகளில் இரண்டு பொத்தான் உள்ளன.

இவற்றை அழுத்தினால் மூன்று கேமராக்களில் விழும் படங்கள் மற்றும் அலாரம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மாநகர பேருந்து தலைமை அலுவலகத்தில் உள்ள கன்ட்ரோல் அறைக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து சம்பந்தப்பட்ட பேருந்தின் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்படும். விரைவில் அனைத்து பேருந்துகளிலும் பொருத்தப்படும். கிளை மேலாளர்மாநகர பஸ் டிப்போ, பாடியநல்லுார்

Loading