கட்சியினருக்கு ‘பளார்’ விட்ட லாலு மனைவி

பாட்னா; சோதனையை முடித்துக் கொண்டு வெளியேறிய சி.பி.ஐ., அதிகாரிகளை தடுத்த ராஷ்ட்ரீய ஜனதாதள தொண்டர்களை, கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி தாக்கி, அதிகாரிகளை பத்திரமாக வெளியே அனுப்பி வைத்தார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ௨௦௦௪ – ௦௯ வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, அத்துறையில் பணி நியமனங்கள் செய்ததில், 1 லட்சம் சதுர அடி அளவுக்கு நிலங்களை லஞ்சமாக பெற்றதாக, லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து, லாலு, அவருடைய மனைவி மற்றும் மகள்களுக்கு சொந்தமான இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். சோதனை நடப்பதை அறிந்த ராஷ்ட்ரீய ஜனதாதள தொண்டர்கள், பாட்னாவில் உள்ள லாலு வீட்டின் முன் குவிந்தனர்.

ஆர்ப்பாட்டம்

 

மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். லாலு பிரசாத், டில்லியில்
உள்ளார். சோதனையின் போது, அவரது மனைவியும், முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி, அவரது மகன்கள் தேஜ் பிரதாப், தேஜஸ்வி ஆகியோர் தான் வீட்டில் இருந்தனர்.
சி.பி.ஐ., அதிகாரிகள், ௧௨ மணி நேரத்துக்கு மேல் சோதனை நடத்திய பின், லாலு வீட்டிலிருந்து
புறப்பட்டனர். அவர்களை வழிமறித்து, ராஷ்ட்ரீய ஜனதாதள தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், அவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அப்போது அங்கு வந்த ரப்ரி தேவி, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு வழிவிட தொண்டர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால், தொண்டர்கள் கேட்கவில்லை.

இதையடுத்து, அவர்களை கடுமையாக திட்டிய ரப்ரி தேவி, தொண்டர்கள் சிலரை அடித்து, அதிகாரிகளுக்கு வழி விடவைத்தார். இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *