கொவிட் பெருந்தொற்று காவுகொண்ட கலைஞன் ரகுநாதன்!…. முருகபூபதி.

இன்று 22 ஆம் திகதி இரண்டாவது ஆண்டு நினைவு தினம் !!
முருகபூபதி.
கலைஞர் ரகுநாதனை நான் முதல் முதலில் சந்தித்தது நேற்று நடந்த நிகழ்வுபோன்று இன்னமும் மனதில் பசுமையாக பதிந்திருக்கிறது.![]()
சுமார் ஐம்பது வருடங்களின் முன்னர் அவர் கொழும்பில் ஒரு அரசாங்கத் திணைக்களத்தில் பணியிலிருந்தார். ஒரு நாள் மதியம் எழுத்தாளர் மு.கனகராஜன் என்னையும் அழைத்துக்கொண்டு ரகுநாதனிடம் வந்தார். அங்கே கலைஞர் டீன்குமாரும் இன்னும் சிலரும் அச்சமயம் இலங்கையில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படத்தின் காட்சிகள் தொடர்பாக உரையாடிக்கொண்டிருந்தனர். அங்கே டீன்குமார்தான் அதிகமாகப்பேசினார். குறிப்பிட்ட படத்தைப்பற்றிய தமது கடுமையான விமர்சனங்களை மிகவும் கேலியாக முன்வைத்துக்கொண்டிருந்தார்.
ரகுநாதன் தமது ஆசனத்தில் அமர்ந்தவாறே மிகவும் அமைதியாகச் சொன்னார்:-
“ நண்பர்களே, எங்கள் நாட்டில் இன்னமும் தமிழ்த்திரைப் படத்துறையானது நாம் எதிர்பார்க்கும் வகையில் வளர்ச்சியடையவில்லை . அதற்கு தென்னிந்திய தமிழ்ப்படங்களின் வருகையும் ஒரு காரணம். எனினும் நாம் மேலும் கடுமையாக இந்தத்துறையில் உழைக்கவேண்டும். அத்துடன் நாமும் தென்னிந்தியப் பாணியிலேயே படம் தயாரிப்பதை விடுத்து, எமது நாட்டின் சூழலையும் எமது மக்களின் ஆத்மாவையும் பிரதிபலிக்கும் கதைகளை தெரிவுசெய்து தரமான படங்களை தயாரிக்கவேண்டும். தோட்டக்காரி இங்கு வெளியான முதலாவது தமிழ்த்திரைப்படம். இந்த நாட்டிலும் தமிழ்ப்படங்களை தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையை எமக்கு ஊட்டிய படம். எனவே இந்த நம்பிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு நாம் தீவிரமாக உழைக்கவேண்டும். ”
அந்தச்சந்திப்பில் நான் எதுவுமே பேசவில்லை. ரகுநாதன் பணியாற்றிய அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது
கனகராஜனிடம் சொன்னேன்:- “ ரகுநாதனை இலங்கை கலையுலகம் காப்பாற்றவேண்டும். அவரை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.”
ஆனால், எனது விருப்பம் நிறைவேறவேயில்லை. பல ஆண்டுகளின் பின்னர் பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழநேர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 22 ஆம் திகதி கொவிட் பெருந்தொற்றினால் மறைந்த ரகுநாதனைப்பற்றி அவுஸ்திரேலியாவிலிருந்து எழுதவேண்டிய துன்பியல் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்.![]()
நாம் புகலிட நாடுகளில் எமது இருப்பை பல வழிகளிலும் பேணவேண்டும் என்பதற்காக உழைத்துக்கொண்டிருக்கின்றோம்.
அத்தகைய உழைப்பாளர்களின் முன்வரிசையில் கலைஞர் ரகுநாதன் திகழ்ந்தார்.
உள்ளார்ந்த கலையாற்றலும் இலக்கிய படைப்பாற்றலும் மிக்க ஒருவர் இந்த பூமிப்பந்தின் எந்தத் திக்கிற்குச்சென்றாலும் தமது ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார் என்பதற்கும் ரகுநாதன் முன்னுதாரணமாகியிருந்தவர்.
அவரது நிர்மலா திரைப் படத்தை பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இது 1968 ஆம் ஆண்டில் வெளியானது. அப்பொழுது நான் பாடசாலை மாணவன். ஆனால், அதில் ஒலித்த ‘கண்மணி…ஆடவா… என்ற பாடலும் அதற்கு அமைக்கப்பட்ட இசையும் இன்றும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன.![]()
அவரது ‘தெய்வம் தந்த வீடு’ படத்தை கொழும்பில் செல்லமஹால் திரையரங்கில் பார்த்தேன். இந்தப்படத்திற்காகவே அந்த நிறுவனம் சினிமாஸ்கோப் ( அகலத்திரை ) திரையை உருவாக்கியிருந்தது. ஒரு இலங்கைப் படத்திற்காக பல திரையரங்குகளில் அவ்வாறு அகலத்திரைகள் உருவாக்கப்பட்டதும் அதுதான் முதல் தடவை என நினைக்கின்றேன்.![]()
இலங்கையில் தமிழ்ப்படங்களை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தயாரித்து வெளியிடும்போது பல திரையரங்குகளில் தமிழக முன்னணி நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆரின் படங்களைத் திரையிட்டு எமது கலைஞர்களின் உழைப்பில் உருவான படங்களை ஓரம்கட்டிவிடும் கலாசாரம் அன்று இருந்தது.
அதுமட்டுமல்ல சிலோன் தியேட்டர்ஸ், சினிமாஸ் லிமிட்டட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தமிழர்களாக இருந்தும் அவர்கள் தயாரித்து வெளியிட்ட படங்கள் அனைத்தும் சிங்களப் படங்களே. இவ்வாறு சிங்கள திரைப்பட ரஸிகர்களை
திருப்திப்படுத்திக்கொண்டிருந்த அந்த வர்க்கம், மறுபுறத்தில் தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களை தருவித்து போட்டிபோட்டுக்கொண்டு வருவாய் தேடியது. இலங்கையில் திரைப்படக்கூட்டுத்தாபனம் தோன்றும் வரையில் அந்த முதலைகள்தான் கொடிகட்டிப்பறந்தார்கள்.
சரி, திரைப்படக்கூட்டுத்தாபனம் தோன்றிய பிறகாவது இலங்கையில் தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக முன்னெடுக்கப்பட்டதா? அதுவும் நடக்கவில்லை.
இந்தப்பின்னணிகளுடன்தான் நாம் கலைஞர் ரகுநாதனின் அன்றைய உழைப்பையும் அவரது கலைத்தாகத்தையும் பார்க்கவேண்டும்.
1974 இல் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை கொழும்பில் நடத்தியபோது, அதற்கு முன்னோடியாக நாடுதழுவிய ரீதியில் பல சந்திப்புக்கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்தியது. அச்சமயம் கொழும்பு தப்ரபேன் ஹோட்டலில் கலைஞர்களுடனான ஒரு சந்திப்பு நிகழ்வும் நடத்தப்பட்டது. அதனை முன்னின்று நடத்தியவர் கலைஞர் ரகுநாதன். அவருக்கு இலங்கை தமிழ்த்தேசியத்திலும் நம்பிக்கை இருந்தது. அதேசமயம் தேசிய ஒருமைப்பாட்டிலும் நம்பிக்கை இருந்தது.
ஒரு நல்ல கலைஞன் சிறந்த படைப்பாளி அப்படித்தான் இருப்பான். பலரும் இச்சந்திப்பில் உரையாற்றினார்கள். ரகுநாதன் இலங்கையின் அனைத்து இனக்கலைஞர்களின் சார்பிலும் அதேசமயம் அவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாகவும் உரையாற்றினார். எமது குரல்கள் எப்படித்தான் ஒலித்தபோதிலும் அவை அரசின் காதுகளுக்கோ அதிகார வர்க்கங்களுக்கோ எட்டுவதில்லை. அல்லது எட்டுவதற்கு தாமதமாகலாம். எனினும் கலைஞர்களும் படைப்பாளிகளும் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுத்தே வந்திருக்கின்றனர்.
1983 ஜூலை கலவரத்தின்போது கொல்லப்பட்ட பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் வெங்கட், பிறப்பால் தமிழராக இருந்தபோதிலும் அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் சிங்கள திரைப்படங்களே. சினிமாஸ் லிமிட்டட் நிறுவனத்தின் உரிமையாளர் குணரட்ணம் அவர்களின் வத்தளை ஹெந்தளையிலிருந்த விஜயா ஸ்ரூடியோ சிங்கள தீயசக்திகளினால் தீயிட்டு கொளுத்தப்பட்டபோது அங்கே இருந்த எண்ணிலடங்கா திரைப்படச்சுருள் பெட்டிகளும் எரிந்து சாம்பராகியது. இதனை அறிந்த சிங்கள திரைப்பட கலைஞரும் தமிழர்களின் அபிமானம் பெற்ற அரசியல் வாதியுமான விஜயகுமாரணதுங்கா வீட்டிலிருந்து உடுத்த உடையுடன் (சாரத்துடன்)
விஜயா ஸ்ரூடியோவுக்கு ஓடிச்சென்றார். ஆனால், அந்தத் திரைப்படச்சுருள்களை அவரால் காப்பாற்ற முடியாதுபோய்விட்டது. அதிலே பல ஈழத்து சிங்கள, தமிழ்ப்படங்கள் உட்பட தென்னிந்தியப்படங்களும் தகனமாகி சாம்பராகிவிட்டன.
இந்தப்பின்னணிகளுடனும் ரகுநாதனின் வாழ்வையும் பணிகளையும் நாம் பார்க்கவேண்டும்.
1980 களில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ரகுநாதனின் கலைப்பணியைப் பாராட்டி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அது அவருடனான எனது இரண்டாவது சந்திப்பு. பின்னாட்களில் அவர் தமிழ்நாட்டுக்கும் அதன்பிறகு ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்றுவிட்டார்.
கலைத்தாகத்துடன் ஒரு நாடோடியாக தமிழகம் – ஐரோப்பா என அவர் அலைந்தபோதிலும் தமிழ்ப்படங்கள் குறும்படங்கள் தயாரிக்கவேண்டும் என்ற உணர்வு மட்டும் அவரிடம் தணியவே இல்லை.
எனினும் அவர் தமது கலைத்தாகத்தை வற்றச்செய்யாமல் தொடர்ந்தும் திரைப்படங்கள், குறும்படங்கள் தயாரிப்பதிலும் இயக்குவதிலும் ஈடுபட்டார். கலையரசு சொர்ணலிங்கத்தின் பிரதம சீடராகவும் விளங்கினார். அவரை நன்றியுணர்வோடு என்றென்றும் நினைவுகூர்ந்தவர்தான் ரகுநாதன். தமது தெய்வம் தந்த வீடு படத்திலும் கலையரசு அவர்களை ஒரு காட்சியில் நடிக்கவைத்திருந்தார்.![]()
இலங்கையில் அவர் பல மேடை நாடகங்களிலும் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றிருந்தார்.
ரகுநாதன் நடித்த ஈழத்து திரைப்படங்கள் : கடமையின் எல்லை, நிர்மலா, தெய்வம் தந்த வீடு, புதிய காற்று, நெஞ்சுக்கு நீதி.
ஐரோப்பாவில் அவர் நடித்து வீடியோ ஒளிநாடா வடிவில் வெளியான சில படங்கள் : இன்னும் ஒரு பெண், முகத்தார் வீடு, நினைவு முகம், பரமபதம், தயவுடன் வழிவிடுங்கள்.
சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா மெல்பனில் நடந்த குறும்படவிழாவுக்கு வருகைதந்த அவர், குறிப்பிட்ட குறும்பட அரங்கு நிகழ்ந்த மண்டபத்தில் என்னை நீண்ட காலத்துக்குப்பின்னர் சந்தித்து மார்போடு அணைத்துக்கொண்டார்.
அப்பொழுது அவர் தமது மானசீக குரு கலையரசு சொர்ணலிங்கம் அவர்களைப்பற்றிய விரிவான நூலொன்றையும் எனக்குத்தந்தார்.
உலகின் எந்த திக்கிற்குச்சென்றாலும் தமது குருவை மறக்காமல்தான் தமது ஒவ்வொரு பணிகளையும் தொடர்ந்தவர் ரகுநாதன்.
கலைஞர் ரகுநாதன் எத்தனையோ சோதனைகள், தடைகள், நட்டங்களை எதிர்நோக்கியவாறும் தொடர்ச்சியாக எதிர்நீச்சல் போட்டவர்.
இறுதியாக, அவரை 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிரான்ஸுக்கு சென்றபோது அவரைச்சந்தித்தேன்.
சிறுநீரக சிகிச்சைக்குட்பட்டிருந்தார். என்னைக்கண்டதும் உற்சாகமாக பேசினார். உரத்த குரல் எடுத்து, நிர்மலா, தெய்வம் தந்த வீடு திரைப்பட பாடல்களை பாடினார்.
அதுவே அவருடனான இறுதிச்சந்திப்பு.

அவரது ஆளுமைப் பண்புகளைப்பற்றி அவரை நன்கு அறிந்த பலர் எழுதிய ஆக்கங்களுடன், அவர் முன்னர் ஐரோப்பாவிலிருந்து வெளியான தமிழன் பத்திரிகையில் எழுதிய ஓர் ஒப்பனை இல்லாத முகம் தொடரின் 25 அங்கங்களை உள்ளடக்கியதுமான இதே பெயரில் வெளியாகியிருக்கும் நூலின் வெளியீட்டு அரங்குகள் இம்மாதம் 24 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கம் விநோதன் மண்டபத்திலும், லண்டன் ஈலிங் அம்மன் ஆலய மண்டபத்தில் இம்மாதம் 30 ஆம் திகதியும் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளன.
இந்நூலை மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் தொகுத்துள்ளார். இந்நூல் வெளியாவதற்கு பெரிதும் துணை நின்ற ஊடகர் எஸ்.கே. ராஜெனுக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
பூபாலசிங்கம் புத்தகசாலை இந்நூலை வெளியிட்டுள்ளது.
—-0—-
![]()