காங்கிரசை போண்டியாக்கிய சித்து!

பி.கமல் பிரகாஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் கொடிகட்டிப் பறந்தவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து. அந்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், அரசியலில் குதித்தார்.

முதலில் பா.ஜ., கட்சியில் சேர்ந்தவர், அமிர்தசரஸ் லோக்சபா தொகுதியில் இருந்து, மூன்று முறை எம்.பி.,யாக தேர்வானார். இதன்பின், காங்கிரசில் இணைந்தார். என்று காங்கிரஸ் கட்சியில் இவர் இணைந்தாரோ, அன்று முதல் பஞ்சாப் மாநில காங்.,கில் குழப்பம் ஆரம்பமானது.

தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதற்காக, கட்சித் தலைமைக்கு எதிராக மட்டுமின்றி, பஞ்சாப் மாநில முதல்வராக பதவி வகித்த அமரீந்தர் சிங்கிற்கு எதிராகவும் அரசியல் செய்து வந்தார். அதன் பலனாக, பஞ்சாப் மாநில காங்., தலைவர் பதவியையும் பிடித்தார்.

இருப்பினும், மாநிலத்தில் முதல்வர் பதவியை பிடிக்க ஆசைப்பட்டார். அதற்காக இவர் நடத்திய நாடகங்களின் பலனாக, முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் நீக்கப்பட்டு, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் நியமிக்கப்பட்டார்.

சரி சட்டசபை தேர்தலுக்கு பிறகாவது முதல்வராகி விடலாம் என, இவர் கண்ட கனவு நனவாகவில்லை.
சமீபத்தில் நடந்த பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்ஜோத்சிங் சித்து தோல்வி அடைந்தார்.

அதுமட்டுமின்றி, நீண்ட காலமாக பஞ்சாபில் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியும் வீழ்ந்து விட்டது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி பலத்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்து விட்டது.

பஞ்சாப் மாநில காங்., தலைவராக இருந்த சித்து, கட்சியில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை அரவணைத்து செல்லாதது, முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கு எதிராக குரல் எழுப்புகிறேன் என்ற பெயரில், காங்கிரசின் உட்கட்சி பூசல்களை அம்பலப்படுத்தியது உட்பட பல தவறுகளால், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்று தேடும் நிலைமையை ஏற்படுத்தி விட்டார்.

காங்கிரஸ் மேலிட தலைவர்களும், இவர் ஊதிய மகுடிக்கு ஏற்ற வகையில் ஆட்டம் போட்டதால், பரிதாபமான தோல்வியை கட்சி சந்திக்க நேரிட்டுள்ளது.

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி… நாலாறு மாதமாய் குயவனை வேண்டி… கொண்டு வந்தான் ஒரு தோண்டி… அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி…’ என்ற பாடல் வரிகளை மெய்ப்பித்து விட்டார், சித்து. காங்கிரசை போண்டியாக்கி விட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *