” நாட்டை நினைப்பாரே…? எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே “ !…. முருகபூபதி.

( இலங்கை மலையகம் நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம் இம்மாதம் 17 ஆம் திகதி மெய்நிகரில் நடத்திய பாரதி நினைவு நூற்றாண்டு அரங்கில் நிகழ்த்தப்பட்ட தலைமையுரை )
இலங்கை மலையகத்தை பின்புலமாகக்கொண்டு இயங்கும் நிகர் சமூக கலை, இலக்கிய அரங்கினுக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்கின்றேன்.![]()
இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே, பாரதியின் நண்பர் வ.ரா.வைப்போன்று மற்றும் ஒருவர் வ.ரா.வுக்கு முன்பே 1920 காலப்பகுதியில் இலங்கைக்கு வந்தார்.
நான் குறிப்பிடும் வ. ராமசாமி அய்யங்கார் முன்னர் வீரகேசரி நாளிதழில் ஆசிரியராக பணியாற்றியவர். இவர் பாரதியின் நெருங்கிய நண்பர். இவர் எழுதிய மகாகவி பாரதி நூல் இன்றளவும் பாரதி இயல் ஆய்வாளர்களுக்கும் இலக்கிய மாணவர்களுக்கும் உசாத்துணையாக விளங்குகின்றது.
இச்செய்தி இவ்வாறிருக்க, 1921 இல் தேசநேசன் என்ற பத்திரிகையையும் வெளியிட்டிருக்கும் கோதண்டராம அய்யர் நடேசய்யர் (1887-1947)![]()
தஞ்சாவூரில் பிறந்தவர், பன்முக ஆளுமைகொண்டவர். தாம் பெற்ற கல்வியையும் அனுபவத்தையும் மூலதனமாகக்கொண்டு காப்புறுதி, வங்கி நிருவாகம், வர்த்தகம் முதலான துறைகளில் நூல்களும் எழுதியிருப்பவர்.
ஒரு வழக்கறிஞராக இருந்த வ.உ.சிதம்பரப்பிள்ளை எவ்வாறு பிரிட்டிஷாரை எதிர்த்து தமிழ்மக்களுக்காக கப்பல் ஓட்டினாரோ அவ்வாறே தமிழக மக்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு மாற்றீடாக வர்த்தகத்துறையில் மேம்படவேண்டும் என்று விரும்பியவர் நடேசய்யர். அதற்காகவே தஞ்சாவூரில் வர்த்தக மித்திரன் என்ற பத்திரிகையையும் வெளியிட்டவர்.
வர்த்தகர்களை ஒருங்கிணைத்து தொழிற்சங்கமும் அமைத்தவர். பிரிட்டிஷாரால் இலங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் மத்தியிலும் வர்த்தகத்துறையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் இலங்கைத்தலைநகர் வந்தார். ஆனால், இங்கு மலையகத்தில் இந்திய மக்கள் படும் துயர்கண்டதும் அவரது நோக்கத்தில் மாற்றம் உருவானது.
இலங்கைப் பொருளாதாரத்தில் 60 சதவீதமான அந்நிய செலவாணியை ஈட்டித்தந்துகொண்டிருந்த மலையக இந்தியவம்சாவளி மக்களின் வாழ்க்கைத்தரம் உயராமல், தேயிலைச்சக்கையாக அவர்களின் கடின உழைப்பு சுரண்டப்படுவது கண்டு கொதிப்படைந்திருந்த நடேசய்யர், ஒரு இந்தியப்புடவை வியாபாரி வேடத்துடன் மலையத்தில் நடமாடி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நடேசய்யருடைய செயல்பாடுகளுக்கும் பாரதியே துணைக்கு வந்திருக்கிறார்.
பிஜித்தீவில் கரும்புத்தோட்டங்களில் இந்திய மக்கள் படும் சொல்லொனா துயர் கண்ட பாரதி,
” நாட்டை நினைப்பாரே…? எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே,
அன்னை வீட்டை நினைப்பாரோ…?
அவர் விம்மியழுங் குரல் கேட்டிருப்பாய் காற்றே…! துன்பக்கேணியிலே எங்கள் பெண்கள்
அழுதசொல் மீட்டும் உரையாயோ…?
அவர் விம்மியழவும் திறங்கெட்டும் போயினர்”
என்று குமுறி எழுதியிருப்பதுபோன்று பின்னாளில் மூத்த இலக்கியவாதி புதுமைப்பித்தனும் இலங்கையில் மலையக மக்களின் ஆத்மாவை தமது துன்பக்கேணியில் கதையில் சித்திரித்திருக்கிறார்.
இந்தியத்தமிழர்கள் பிஜித்தீவில் கரும்புத்தோட்டங்களிலும் இலங்கைத்தீவில் தேயிலை, ரப்பர், கொக்கோ தோட்டங்களிலும் பட்ட துன்பங்களை வரலாற்றின் ஏடுகளில் நாம் காணமுடியும்.
தஞ்சாவூரில் பிறந்திருக்கும் கோ. நடேசய்யர், பாரதியையும் புதுமைப்பித்தனையும் போன்று எழுத்திலே அம்மக்களின் துயரத்தை பதிவுசெய்யாமல், நேரிலே வந்து துயர் களைவதற்காக போராடிய ஒரு கர்மவீரர்.
ஆயினும், அவர்களின் துயர் இற்றைவரையில் நீங்கவில்லை. லயன் குடியிருப்புகள் ஒழியவில்லை. மலையக மண்சரிவு அபாயங்கள் நீங்கவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை. அவர்கள் மத்தியில் புதிய புதிய தலைவர்கள்தான் தோன்றினார்கள். தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும்தான் பிறந்தன.
தேசம் விட்டு தேசம் உழைக்கவந்த பரதேசிகளான அம்மக்களின் உழைப்பைசுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கியது.
தொழிற்சங்கவாதியாக, தமிழ் அறிஞராக, பத்திரிகையாளராக, படைப்பாளியாக, பதிப்பாளராக, அரசியல்வாதியாக அயராமல் இயங்கிய நடேசய்யர், 1924 முதல் இலங்கை சட்ட சபையிலும் பின்னர் அரசாங்க சபையிலும் உறுப்பினராகவும் இருந்தவர்.
இந்தியாவிலிருந்து அடிமைகளாக இறக்குமதி செய்யப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் எழுப்பிய நடேசய்யரையும் அவரது மனைவி மீனாட்சியையும் நாடுகடத்துவதற்கு அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர் சதித்திட்டங்கள் தீட்டியதாகவும் அறியக்கிடைக்கிறது.![]()
தமிழகத்திலும் புதுவையிலும் மக்களிடத்தில் சுதந்திரவேட்கையை ஊட்டுவதற்காக பாரதி, பத்திரிகைகளை ஆயுதமாக்கினார். இலங்கை வந்திருக்கும் நடேசய்யரும் இங்கிருந்த மலையக மக்களின் அடிமை விலங்கை உடைத்தெறியப்பாடுபட்டவர். அதற்காகவே பத்திரிகைகளை தமிழில் (தேசபக்தன்) மாத்திரமின்றி ஆங்கிலத்திலும் (The Citizen ) தொடக்கினார்.
நடேசய்யர் – மீனாட்சியம்மா தம்பதியர் மலையகத்தோட்டப்புறங்கள் எங்கும் பாரதியின் எழுச்சிமிக்க பாடல்களை பரப்பியிருக்கிறார்கள். துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் தேசபக்தன் பத்திரிகை வாயிலாகவும் பாரதியின் விழிப்புணர்வுச்சிந்தனைகளை பரப்பியிருக்கிறார்கள்.
மலையகத்தின் முதல் பெண்மணி என்ற பெருமையைப்பெற்றிருக்கும் மீனாட்சி அம்மையார், தென்னிலங்கையில் இடதுசாரிகளுடன் இணைந்து மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியிருக்கிறார். பாரதியின் புதுமைப்பெண்ணாகவே அக்காலப்பகுதியில் இலங்கையில் வாழ்ந்திருக்கும் மீனாட்சி அம்மையார், தேசபக்தன் பத்திரிகையின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியவாறு, அதில் பெண்கள் பகுதியில் எழுதியும் வந்துள்ளார். ” மீனாட்சி அம்மையாரை ஒவ்வொரு ஆண்டும் வரும் அனைத்துலக பெண்கள் தினத்தில் நினைவுகூரவேண்டியது மலையக மக்களின் கடமை ” என்று
அந்தனிஜீவா, ஞானம் 2004 மார்ச் சர்வதேச மகளிர் தினச்சிறப்பிதழில் பதிவுசெய்துள்ளார்.
மீனாட்சி அம்மையார் பாரதியின் சிந்தனைகளின் ஊடாக மலையக மக்களிடம் மேற்கொண்ட பல ஆக்கபூர்வமான பணிகளை லெனின் மதிவானம் , சாரல் நாடன் ஆகியோர் விரிவாக ஏற்கனவே எழுதியிருக்கின்றனர்.
இத்துடன் உங்களுக்கு மற்றும் ஒரு செய்தியையும் தெரிவிக்கின்றேன்.
செழுமை, குளிர்மை, பசுமை படர்ந்துள்ள மலையகத்தில் பதுளையில் பசறை வீதியில் 1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி பாரதி கல்லூரி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இக்கல்லூரியின் பத்தாவது ஆண்டு நிறைவுவிழா கொண்டாட்டத்திற்காக வருகை தந்திருந்தவர் பாரதியின் பேத்தி திருமதி விஜயபாரதி சுந்தரராஜன். இவரது கணவர் பேராசிரியர் கே. சுந்தரராஜன்.![]()
அந்த விழாவில் சுந்தரராஜன் பேசியபோது குறிப்பிட்டதாவது:
” நாங்கள் ஈழம் வந்ததிலிருந்து இதுவரை கலந்துகொண்ட பாரதிவிழாக்களில் எல்லாம் பாரதியாரின் உருவத்தையோ படத்தையோ அரையும் காலுமாகக்கண்டோம். எனினும் இப்பொழுது பதுளை பாரதி கல்லூரியால் அவருக்கு முழு உருவச்சிலை எழுப்பப்பட்டு சிறப்பான முறையில் மக்கள் பெருவெள்ளத்தில் விழா எடுக்கப்பட்டுள்ளது. இங்குதான் பாரதி விழா பூரணத்துவம் பெருகிறது என்பதை நாங்கள் உணர்கிறோம். இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அநேகமாக நான் சென்ற பல இடங்களிலும் கேள்விப்பட்ட ஊர்களிலும்கூட பாரதியாரின் பெயரில் ஒரு கல்லூரி இயங்குவதையோ அல்லது ஒரு கல்லூரிக்காவது பாரதியார் என்று பெயரிட்டோ உள்ளதாக நான் இதுவரையில் அறியவில்லை. அவர் பெயரில் பல மன்றங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு கல்லூரி இருப்பதாக நானறியேன். எனினும், பாரதியாரின் பெயரில் ஏழைக்குழந்தைகளின் பெயரில் கல்வி விருத்திக்காக இங்கு இக்கல்லூரி அமைந்திருப்பதைக்கண்டு எம் உள்ளம் பூரிக்கின்றது.”
(ஆதாரம்: பதுளையில் பாரதி நினைவாலயம் – பாரதி கல்லூரி – க.இரமசாமி பதுளை சிந்தனை ஒன்றியம் பாரதி நூற்றாண்டு மலர்)
இக்கல்லூரி பின்னாளில் தரமுயர்த்தப்பட்டதாக அறியக்கிடைக்கிறது. இவ்வாறு இலங்கையில் மலையகப்பிரதேசங்களான பதுளை,
பண்டாரவளை, அப்புத்தளை, இரத்தினபுரி, பலாங்கொடை, நாவலப்பிட்டி, கம்பளை, கண்டி, நுவரேலியா, தலவாக்கலை, புசல்லாவை உட்பட பல ஊர்களில் பாரதிக்கு விழா எடுத்தும் சிறப்புமலர்கள் வெளியிட்டும் பாரதியின் புகழையும் சிந்தனைகளையும் மலையகத்தமிழ் மக்கள் பரப்பி வருகிறார்கள். இம்மக்கள் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரால் அழைத்துவரப்பட்டவர்களின் சந்ததியினர்.
இந்தப்பிரதேசங்களில் இயங்கிய தற்பொழுதும் இயங்கிவருகின்ற அமைப்புகள் தொடர்ச்சியாக பாரதியை நினைவுகூர்ந்து நிகழ்ச்சிகளை முன்னெடுத்துவருகின்றன.
இந்த வரலாற்றுப்பின்னணிகளுடன்தான் உங்களது நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் பாரதி நினைவு நுற்றாண்டு செயற்பாடுகளை பார்க்கின்றேன்.
உங்கள் அமைப்பின் பணிகள், இந்த நினைவு நூற்றாண்டோடு மட்டும் நின்றுவிடாமல் மேலும் தொடரல் வேண்டும் எனக்கூறிக்கொண்டு இந்த அரங்கத்தினை தொடக்கிவைக்கின்றேன்.
—-0—
![]()