கதைகள்

திரும்பிப் பார்க்கிறேன்!…. ( சிறுகதை )…. வி. எஸ். கணநாதன்.

முப்பத்தெட்டு ஆண்டுகளாகிவிட்டன. வேண்டாம் என்று கிளம்பி வந்திட்டோம். பின்னர் ஏன் இந்த தேவையில்லாத யோசனை? பிறந்து வளர்ந்த ஊரைப்பற்றி சிந்திக்கும் போது, பல பசுமை நினைவுகள், சில பயங்கர அனுபவங்கள். இவற்றை எம் ஆழ் மனதில் அமிழ்த்திவிட்ட போதிலும், ஏதும் ஒரு சிறு துளி இன்றைய எண்ண அலைகளில் மெதுவாக நீந்தி எம்மை ஆக்கிரமித்துக்கொள்ளும்.

இலங்கையில், கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தையில் எங்கள் வீடு இருந்தது. அன்றொரு நாள் காலை, எங்கள் மூன்றுகுழந்தைகளை வழக்கம் போன்று குளிக்கவார்த்து, தலைவாரிப் பின்னி, அவர்களுக்கு காலை உணவை ஊட்டினார் என் மனைவி சகுந்தலா. ஒவ்வொருத்தர் புத்தகங்களையும் அவரவர் பேக்கில் வைத்துவிட்டு வெளியே எட்டிப் பார்த்தார்.

தினமும் தவறாது ஏழுமணிக்கே வரும் எங்கள் டிரைவர் ஜெயதிஸ்ஸ, ஏனோ அன்று பணிக்கு வரவில்லையே என்று கவலைப்பட்டார். ஆகவே குழந்தைகளை அவர்கள் பயின்ற கொள்ளுப்பிட்டி மெத்தடிஸ்ட் கல்லூரிக்கு காரில் அழைத்துச்சென்றேன்.

அங்கே எனக்கோர் அதிசயம் காத்திருந்தது.

வழக்கத்துக்கு மாறாக, கல்லூரி வாயிலுக்கு வெளியே நின்ற கல்லூரித் தலைமை ஆசிரியை, வண்டிகளை உள்ளே விடாது தடுத்துக்கொண்டிருந்தார்.

“தயவுசெய்து உங்கள் குழந்தைகளை வீட்டுக்குத் திருப்பி அழைத்துச் செல்லுங்கள் தாமதிக்காமல்,” என்றார். அத்துடன் அருகே நின்ற ஒரு மாணவியை அணைத்து, “இந்தப் பிள்ளையை டிரைவர் ட்ராஃபிக் லைட் சந்தியில் இறக்கிவிட்டு சென்றிருக்கிறார். இவள் பாடசாலை கேட் அருகே வந்த பிறகுதான் என்ன நடந்தது என்று தெரிந்தது எனக்கு. தயவு செய்து இவளை வெள்ளவத்தையில் அவள் வீட்டில் இறக்குவீர்களா?” என்று என்னிடம் பணிவாய்க் கேட்டார்.

“ மேடம், போகிறவழியில் என் பிள்ளைகளை எங்கள் வீட்டில் இறக்கிட்டு, இந்தக் குழந்தையை வெள்ளவத்தைக்கு கூட்டிச் செல்கிறேன்,” என்றேன்.

தன் வீட்டு விலாசத்தை அந்தப் பிள்ளை எனக்குத் தெரிவித்தாள்.

நான் வீட்டில் எங்கள் குழந்தைகளை இறக்கும் போது, சகுந்தலா மிகவும் பதற்றத்துடன் வாசலுக்கு வந்தார். “நீங்கள் வெளியே சென்ற அடுத்த கணம் உங்கள் செல்வராணி அண்ணி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “உங்களுக்கு பொரல்லையில் நடக்கிற விடயம் தெரியாதா? ரிவி நியூஸ் பார்க்கிறதில்லையா?” என்று அவர் ஏசினதும்,

“எங்களுக்கு காலையிலேரிவி நியூஸ் பார்க்க நேரமில்லை,” என்றேன்.

“குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பினதும், நாங்கள் ஒஃபீசுக்குக் கிளம்பத் தயாராக வேண்டும்,” என்று நான் சொன்னதும், அவர் “இன்றுமுதல் வீட்டிலே எல்லாரும் முடங்கி இருங்கள்!” என்று கோபத்துடன் சொல்லித் தொலைபேசியை அணைத்தார்.

“ உடனே நான் ரீவி யை இயக்கிப்பார்த்து அதிர்ந்து போனேன். அரசாங்கமே பொரல்லை தாக்குதலுக்கு காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். நீங்கள் உடனே வண்டியை கராஜ் உள்ளேஇட்டு, கதவை இறுகச் சாத்தி, கேட்டைப் பூட்டுங்கள்,” என்றார் பதற்றத்துடன்.

“ சகு, இந்தக் குழந்தையை அவர்கள் வீட்டில் இறக்கிவிடுவேன் என்று பள்ளி அதிபருக்கு வாக்களித்திட்டேன்,” என்று அவர் பதிலுக்குக் காத்திராமல், பிள்ளையார் துணை என்று மனதில் வேண்டிக்கொண்டு, காரை வெள்ளவத்தைக்கு விரைந்து செலுத்தினேன். வழி நெடுக மக்கள் அல்லோலகல்லோலப்படுவது தெரிந்தது. அவலக் குரல் எங்கும் கேட்கிறது.

அந்தப் பிள்ளையை அவள் வீட்டில் இறக்கினதும், அவள் பெற்றோர் வெளியே ஓடி வந்தனர் எனக்கு நன்றி செலுத்த. ஆனால் அங்கே தாமதிக்காது, வண்டியைத் திருப்பி வீட்டுக்கு வேகமாய் ஓட்டினேன்.

வரும் வழியில் பம்பலபிட்டியில் அசோகா கார்டின்சுக்குச் சென்று சகுவின் பெற்றோர் வீட்டை அடைந்தேன். அப்போது மாமா வெளியே வந்து, “ தம்பி, இந்தப் பொல்லாத வேளையில் நீங்கள் ஏன் வெளிக்கிட்டீங்கள்?” என்று கவலைப்பட்டார். “காலையில் தொலைபேசி அடித்தாலும் நீங்கள் எடுக்கமாட்டீங்கள் என்று தெரிந்தும், நான் இரண்டு மூன்று தரம் போன் பண்ணினேன் உங்களை

எச்சரிக்க. எங்களுக்கு இப்போதைக்கு ஓகே. நீங்கள் சென்று வாருங்கள். ” என்றார் மாமா.

நான் வீடு திரும்பும் வரை எனக்கு என்ன நடந்திருக்குமோ என்று என் மனைவி அன்று பட்டபாடு இங்கே சொல்லிவிட முடியாது.

நான் வீட்டிலிருந்து துரைராஜா அண்ணா வீட்டுக்கு டெலிபோன் பண்ணினேன். ஆனால் போன் துண்டித்து இருந்தது. மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ளப் பார்த்தோம். அவர்களுடன் பேச முடியவில்லை. அவர்களுக்கு என்ன நடந்திருக்குமோ என்று கவலைப்பட்டோம்.

அன்று பின்னேரம் துரைராஜா அண்ணா எனக்கு டெலிபோன் பண்ணினார். கொஞ்ச நிமிடங்கள் அவருக்கு பேச்சு வரவில்லை. அடுத்து அவர் சொன்ன விடயம் கேட்டு அதிர்ந்து போனேன். தங்கள் வீட்டையும், வேறு பலவீடுகளையும் விவேகானந்தா ரோட்டில் தீக்கிரையாக்கிட்டார்கள் என்ற செய்தியைக் கொடுத்தார்.

“நாங்கள் பிரைட்டன் ஹோட்டலில் தற்காலிகமாகத் தங்கியிருக்கிறோம். நீ இங்கே வரவேண்டாம். எல்லாரும் கவனமாய் இருங்கள். ” என்றார்.

அண்ணியும் சகுவும் கதைத்த சொற்ப நேரத்தில் என்னவெல்லாம் துரைராஜா அண்ணா குடும்பத்துக்கு நடந்திட்டுது என்று அழுதோம்.

அன்று பூராவும் அடுத்த நாட்களிலும் என் மனைவியும் நானும் நெடு நேரமாக விவாதித்தோம். எங்கு செல்வதென்று விவாதித்தோம். சென்னைக்கா இங்கிலாந்துக்கா? இவ்விரு நாடுகளில் என் விருப்பம் இங்கிலாந்தே. நான் அங்கே பல வருடங்கள் இருந்த ஊர் நினைவுக்கு வந்தது. வேலை வாய்ப்பும் அதிகம் அங்கே.

ஆனால், எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தாள் என் மனைவி. கவலையுற்றாள். “மூன்று பெண் குழந்தைகளும் தமிழ் கலாச்சாரத்திலே வளரவேண்டும். ஆகவே சென்னைக்கு செல்வது தான் உசிதம்” என்றாள்.

எனக்கும் அவள் சொன்னது நியாயமாகத் தோன்றியது. தவிர, தாய்நாட்டில் கடவுள் கிருபையால் ஓர் அளவு சுமுக நிலை திரும்பவும் ஏற்பட்டால், நாங்கள் கொழும்புக்கு வந்திடலாம் என்ற ஒரு நப்பாசை, ஒரு கனவு என்னுள்ளே இருந்தது.

1983 ஜூலை இருபத்தைந்தாம் திகதி இரவு பொரல்லையில் தொடங்கினார்கள் சூறையாட. அவற்றைத் தொடர்ந்து கொழும்பில் தமிழர் வீடுகளைத் தேடித்தேடி தீ வைத்து நாசமாக்கினார்கள். பட்டப் பகலிலும் கொள்ளை, கொலைகள் நடந்தன.

ஓர் இரவு அடுத்த தெருவில் ஒரு தமிழர் வீடு தீக்கிரையாகியது. அவர்கள் வீடெரியும் புகைமூட்டம் எங்கள் வீட்டுப் பக்கம் வந்தது. அவர்கள் அவலக் கூச்சல் உடம்பைச் சிலிர்க்க வைத்தது எங்களுக்கு. செய்வதறியாது சகு குழந்தைகளைக் கட்டி அணைத்து பின் அறைக்குள்ளே இருட்டில் அமர்ந்திருந்தாள். நான் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, யன்னல்களை, முன் கதவை இறுகச் சாத்தினேன். நெஞ்சு படபடத்தது.

அடுத்து, காடையர்கள் தெரு வழியே பெலத்த கோஷமிட்டு வந்தார்கள். அவர்கள் கோஷம் அண்மையில் கேட்டதும், என் உடம்பு முழுக்க நடுங்கத் தொடங்கியது. எங்கள் தெரு, அத்தெருவுக்கு இணைக்கோட்டில் இருந்தது. அவர்கள் நாற்சந்தியில் இடதுபுறம் திரும்பினால், எங்கள் தெரு. ஆனால் காடையர்கள் வலது புறம் திரும்பி எஸ். ஜே. வீ. செல்வநாயகம் ஐயா வீட்டுப்பக்கம் சென்றனர் என்ற செய்தியை பின்னர் அறிந்தோம்.

ஏதோ தத்து கழிந்தது இப்போதைக்கு என்று மன ஆறுதல் அடைந்த போதும், அடுத்து என்ன நேரப்போகுது என்ற ஏக்கம் எனக்கும் மனைவிக்கும். பிள்ளைகளை உச்சி முகர்ந்து, நித்திரையாக்கி இருட்டில் ஒரு பேச்சுமில்லாது ஆழ்ந்த சிந்தனையில் இருந்தோம். எங்கள் இருவருக்கும் இரவு முழுக்க கண்ணயர முடியவில்லை.

அடுத்த நாள் அதிகாலை எங்கள் முன்வாசலுக்கு வெளியே ஒரு ஜீப் வந்து நின்றது. மேல் மாடியின் முகப்பு வழியாக பயத்துடன் எட்டிப் பார்த்தேன்.

அப்போது எங்கள் டிரைவர் ஜெயதிஸ்ஸவின் சகோதரன், ஒரு போலீஸ் வண்டி டிரைவர் , “சமாவென்ன மாத்தையா ! “ என்று சிங்களத்தில் முகமன் செலுத்தி, தாங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றோம் “ என்று தகவல் கொடுத்தார்.

ஆச்சரியம் தாளாமல் உடனே நான் கீழே இறங்கி முன் கதவைத் திறந்து, “தயை செய்து உள்ளே வாருங்கள்” என்றழைத்தேன் சிங்களத்தில்.

அவரும் அவர் சகாவும் உள்ளே வந்து உட்கார்ந்தனர். “உங்களுக்கு ஏதும் பிரச்சனையென்றால் என்னுடன் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.” என்று தன் அவசர தொலைபேசி இலக்கத்தை நோட் பேப்பரில் எழுதித் தந்தார். நாங்கள் இருவரும் அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தோம்.

என் மனைவி அவர்களுக்கு சுடச்சுட தேநீரும் பிஸ்கட்டும் கொடுத்து உபசரித்தாள்.

“இப்போதைய நிலையில் உங்களுக்கு ஏதும் சாப்பாடு கிடைக்காவிடில் சொல்லுங்கோ. நாங்கள் அதற்கு உடனே ஏற்பாடு செய்கிறோம்,” என்றார்.

“ மிக்க நன்றி. ஆனால் எங்களுக்கு சாப்பாட்டுப் பிரச்சினை ஒன்றும் இல்லை ” என்றார் என் மனைவி.

அடுத்த சில மணி நேரத்தில் அவர்கள் திரும்பவும் வந்தனர். இரண்டு பெரிய பெட்டிகளை எங்கள் வீட்டுள்ளே தூக்கி வந்தனர். அவற்றுள்ளே ஒரு மாசத்துக்குப் போதுமான தேங்காய், சீனி, கோதுமை மா, அரிசி, மற்றும் பலவித மளிகைச் சாமான்கள் இருந்தன. அத்துடன் ஆறு loaves bread, நான்கு பால்மா ரின்கள், பத்து கோழி முட்டைகளும், இருந்தன.

அவர்கள் செய்கை எங்களைக் கண்கலங்க வைத்தது. அவர்களுக்கு மீண்டும் மீண்டும் எங்கள் நன்றியைத் தெரிவித்தோம். அங்கிருந்து அவர்கள் சென்றபின்னர், பக்கத்து வீட்டவர்களுக்கும் பெட்டியிலிருந்த சாமான்களைப் பகிர்ந்து உதவினோம்.

அன்று தொட்டு இரவில் பொலிஸ் ஜீப் கொள்ளுப்பிட்டி ரோந்தில் வரும் போது, தவறாமல் எங்கள் தெருவுக்கும் வந்து போவார்கள். அவர்கள் செய்கை எங்களுக்கு மட்டுமல்லாது, தெருவில் வசித்த மற்ற தமிழர்களுக்கும் ஆறுதல் அளித்தது.

அந்த ஜூலை கலவரத்தின் பின்னர், எங்கள் குழந்தைகள் பயின்ற பாடசாலையில் தமிழ் பிள்ளைகளுக்கு ஒழுங்காக பாடம் நடக்கவில்லை. ஆகவே, பிள்ளைகளின் படிப்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் நாங்கள் சென்னைக்குச் செல்லத் தீர்மானித்தோம். ஆனாலும் ஒருவர் பிறந்து வளர்ந்த நாட்டிலிருந்து வெளியேறுவது சுலபமான விடயம் அல்ல. எம்முடன் அதுவரை பயணித்த எத்தனையோ நினைவுகள், கனவுகள், ஏக்கங்கள், சுகதுக்கங்களை என்னவென்பது?

நான் பார்த்துப் பார்த்து கட்டிய அழகான வீடு. எங்கள் மூன்று குழந்தைகளும் பிறந்து வளர்ந்து ஓடி விளையாடிய வீடு. அதை விட்டுக் கிளம்ப மனமில்லை எங்களுக்கு. மேலும், என் பெரியண்ணா, டாக்டர் பொன்னுத்துரை, ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாது எங்கள் வீட்டுக்கு ஜா-எலவில் இருந்து வருவார். அவரை விட்டுப் பிரிய எங்களுக்கு மனக்கஷ்டமாய் இருந்தது. அப்போ பெரியண்ணா, “நீங்கள் அங்கே சென்ற பிறகு நானும் அங்கே வந்து சேருவேன்,” என்று சொன்னார்.

சகுவுக்குத் தன் பெற்றோரை விட்டுச் செல்ல மனவேதனையாய் இருந்தது. அவர் தகப்பன், “நீங்கள் போய் இறங்கிய அடுத்த சில

மாதங்களில், வீட்டை வாடகைக்கு கொடுத்திட்டு நாங்களும் சென்னைக்கு வருவோம்,” என்ற ஆறுதல் வார்த்தையை அளித்தார்.

சென்னையில் இருபத்தெட்டு ஆண்டுகள் இன்பமாய் வாழ்ந்து, அதைத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் அவுஸ்திரேலியா விக்டோரியாவில் வாழ்கிறோம். தாய்நாட்டிலிருந்து எங்களுடன் பயணித்தவர் பலர் இப்போ எம்மை விட்டுப் பிரிந்துள்ளனர் என்று கவலையுற்ற போதும், பதிலுக்கு இங்கே புதுப் புது உறவுகள், நிறைய சிநேகிதர்கள் கிடைத்துள்ளனர் என்று நாம் ஆறுதல் அடைந்துள்ளோம்.

அவுஸ்திரேலியா ஓர் அமைதிப் பூங்கா. பல்லினத்தோர் இங்கே ஒற்றுமையாக வசிக்கின்றனர். இளைப்பாறிய காலத்தில் பயமின்றி இரவில் நிம்மதியாகத் தூங்க முடியும். நாம் சிந்திக்க, சிலவற்றை அலசி ஆராய, தெரிந்தவற்றை ஒருவர் தைரியமாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது இந்தப் பொன்னான நாடு.

பின்னர்என்ன, ஊருக்குப் போகும் எண்ணமே கனவாகிப் போனது!

 

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *