இதயம் கனத்த ஈரேழு நாட்கள்!… ( சிறுகதை )…. கல்லோடைக்கரன்.

![]()
2020, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொவிட்-19 என்ற நோய்க்கிருமியின் பரவல் உலகின் எல்லாப் பகுதிகளிலும் மிக அதிகமாகவே விரவியிருந்தது. அந் நோய்க் கிருமியினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தன. அசாதாரணமான, அபாயகரமான, உயிர்பறிக்கின்ற இந்த நிலைமையின் காரணமாக உலக மக்கள் அனைவரும் பயங்கரம் மிகுந்த உணர்வினாற் கிலி பிடித்தவர்களாகக் காணப்பட்டனர்.
அனைத்து நாடுகளிலும் கடையடைப்புகள், ஊரடங்கு உத்தரவுகள் அடங்கிய முடக்கநிலை பிறப்பிக்கப்பட்டன. எல்லா மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்குமாறு அரசுகளினால் பணிக்கப்பட்டனர். நாடுகளின் சேவைகள், பணிகள் யாவும் இடை நிறுத்தப்பட்டன. இதனால் உலக மக்கள் அனைவரும் தமது அன்றாட வாழ்க்கைப் பொறி முறைகள் அனைத்தும் முடங்கிய நிலையில் மன உளைச்சலால் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
இந்த கொவிட்- 19 இன் மிக ஆபத்தான அச்சுறுத்தலினால் எல்லா மக்களும் சாதி, இன, மத பேதங்களை மறந்தனர், “ மனிதம் ஒன்றே “ என்ற தத்துவத்தின் பொருளைச் சரியாகப் புரிந்து கொண்டனர். பாதை தவறி வாழ்ந்த மனிதனைத் திருத்துவதற்காகவே கடவுள் இவ்வாறானவொரு கிருமியைப் பூமிக்கு அனுப்பி வைத்தார் என ஆன்மிகவாதிகள் நம்பினர்
இந்நிலை நீடிக்கவே வேற்று நாடுகளுக்குச் சென்றிருந்த மக்கள் அனைவரும் எப்படியாவது தத்தமது நாடுகளுக்கும், வீடுகளுக்கும் போய்ச் சேர்ந்து விட வேண்டுமென்று துடியாய்த் துடித்தார்கள்.
இதற்கு சிவகரன் மட்டும் விதிவிலக்கா என்ன ? தனது வதிவிடமான மெல்பேண் நகருக்குத் தனது மனைவியோடு புறப்படத் தயாரானான்.
2020, ஏப்ரல் மாதம், 4 ஆம் நாள் சனிக்கிழமை. இலங்கையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தது. ஆயினும் காவல் துறையின் அனுமதிப் பத்திரம் பெற்று மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் பயணிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.
இச் சூழலில் இன்று எப்படியாவது புறப்பட்டு, நள்ளிரவு 00:20 மணிக்கு மெல்பேண் செல்லும் சிறிலங்கன் எயார்லைன் விமானத்தைப் பிடித்து விட வேண்டும் என்ற
எண்ணமே மேலிடத் தனியார் வாகனமொன்றில் கட்டுநாயகா விமான நிலையத்தை நோக்கித் தன் துணைவியுடன் பயணமானான் சிவகரன்.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஊர்கள், நகரங்கள் பூரணமான அமைதியில் மூழ்கிக் கிடந்தன. அத்தியாவசிய சேவைகளோடு சம்பந்தப்பட்ட சில வாகனங்களை விட, வீதிகளில் வேறு வாகனங்களின் போக்குவரத்துகள் காணப்படவில்லை. இப்படியான நிலைமைகள் இலங்கை மக்களுக்குப் புதியவையல்ல. ஏறக்குறைய 30 ஆண்டுகள் யுத்தச் சூழலில் பழக்கப்பட்டிருந்ததால், இதைப் பற்றிப் பெரிதும் அலட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை.
சிவகரன் விமான நிலையத்தை அடைந்த போது மாலை 5 மணியாகியிருந்தது. வீதிகளில் வாகனப் போக்குவரத்துகள் இன்மையால் குறித்த நேரத்திற்கு 2 மணி நேரங்கள் முன்பதாகவே வந்து விட்டதாக வாகனச் சாரதி நண்பர் ரமேஷ் கூறினார். ஆனாலும் புதிய கொவிட்-19 விமான நிலையக் கட்டுப்பாடுகளின் நிமித்தம், விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பின்பு மாலை 7: 30 மணியளவில் அனுமதி கிடைத்து உள்ளே சென்ற போது சிவகரனுக்குப் பல அதிர்ச்சியான நிலைமைகள் காத்திருந்தன.
என்றுமில்லாத வகையில் விமான நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. வழமையான சனக் கூட்டமோ, களை கட்டிய வியாபார நிலையங்களோ, கலகலப்பான சூழ்நிலையோ எதுவுமே காணப்படவில்லை. வெறுமையாகிப் போன விமான நிலையத்தைப் போல, சிவகரன் தம்பதிகளின் உள்ளங்களும் வெறுமையால் விரிந்தன.
மெல்பேண் செல்லும் யூஎல் 604 இலக்க விமானத்தைத் தவிர, ஏனைய அனைத்து விமானப் பயணங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. கடவுள் செயலே இந் நிகழ்வுக்குக் காரணம் என்று எண்ணமிட்டபடி, இருவரும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர்.
2020, ஏப்ரல் மாதம், 5 ம் நாள், ஞாயிற்றுக்கிழமை. பிற்பகல் 2:50 க்கு விமானம் மெல்பேணில் தரையிறங்கியது. விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தின் உள்ளே நுழைந்த போது, அங்கு என்றமில்லாத புதியமுறையிலான வரவேற்புக் காத்திருந்தது.
24 மணி நேரமும் திறந்திருக்கும் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து மட்டும் ஒரே ஒரு விமானமே தரையிறங்கியதனால், அதில்
பயணித்திருந்த பயணிகள் சிலரைத் தவிர, வேறு பயணிகள் காணப்படவில்லை.
கொவிட்-19 கிருமிப் பரவலைக் கண்காணிக்கும் கருவிகள், பரிசோதனை செய்யும் வைத்திய அதிகாரிகள், பயணிகளை உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கும் போக்குவரத்துத் துறைப் பணியாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்று பலரும் பாதுகாப்புக் கவசங்களை அணிந்தவாறே வரிசைக் கிரமமாக நின்று கொண்டிருந்தனர்.
பரிசோதனைகள், பதிவு செய்கின்ற பணிகள் யாவும் நிறைவடைந்ததும், பயணிகள் மெல்பேணிலுள்ள விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பலமான கட்டுப்பாட்டு ஒழுங்குகளுடன் சிவகரன் தம்பதிகளையும், மேலும் மூன்று குடும்பத்தவர்களையும் தாங்கிய சொகுசு பஸ் ஒன்று, மெல்பேண் நகரின் மத்தியிலுள்ள விடுதி ஒன்றினை நோக்கிச் சென்றது.
அன்று மாலை ஐந்து மணி ! விடுதி வாசலை பஸ் சென்றடைந்தது. ஒருவர் பின் ஒருவராக பஸ்வண்டியிலிருந்து இறக்கப்பட்டனர். அங்கிருந்த உத்தியோகத்தர்கள் பயணிகள் எல்லோரும் இன்றிலிருந்து 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவுள்ள நடைமுறை சம்பந்தமான விளக்கங்களை விபரித்தனர்.
“ பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தல் “ என்ற வாக்கியம் சிவகரனின் சிந்தனையைத் தட்டி, கம்பனின் பக்கம் இழுத்துச் சென்றது.
“ தனது மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும், இராமனைப் பதினான்கு ஆண்டுகள் அயோத்தியிலிருந்து தனிமைப்படுத்திக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தசரதனிடம் கூறிய கைகேயி, இராமனைப் பார்த்து “ …..ஏழிரண் டாண்டில் வா “ என்கிறாள்.”
கைகேயி சொன்னது ஆண்டுகள், இவர்கள் சொல்வது நாட்கள் ! ஆனாலும் இந்த “பதினான்கு“ என்ற ஒருமைப்பாட்டைச் சிந்தித்தவனாக, ஆண்டுகள் அல்லவே நாட்கள் தானே என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றனர் சிவகரன் தம்திகள்.
MERCURE HOTEL, MELBOURNE, சிவகரன் தம்பதிகளின் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறை ஆரம்பமானது.
நாற்புறமும் அடைக்கபட்ட ஒரு சிறிய அறை. இருவர் படுத்துறங்கும் ஒரு கட்டில், ஒரு சிறிய அலுமாரி, ஒரு மேசை, ஒரு கதிரை, இருவர் அமரும் ஓர் ஆசனம், இணைக்கப்பட்ட ஒரு மலசல கூடம், இவ்வளவுதான் அந்த அறையின் அமைப்பு.
இந்த 14 நாட்களுக்கான நடைமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் யாவும் துண்டுப் பிரசுரங்களாக அறைக் கதவின் இடுக்குகளினூடாகத் தரப்பட்டன.
இந்த ஒரே அறைக்குள்ளேயே பதினான்கு நாட்களையும் கழித்தாக வேண்டும். அறைக் கதவைத் திறக்கவோ, வெளியில் செல்லவோ முடியாது. பயணிகள் தங்க வைக்கப்பட்டிருந்த அறைகளின் முன்னால் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் 24 மணி நேரமும் பாதுகாப்புக் கடமையில் இருப்பார். அவரை மீறி எவரும் அறையை விட்டு வெளியே வர முடியாது. மீறி வந்தால், 20.000 டொலர் தண்டப்பணம் அல்லது சிறைத் தண்டனை என்று அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
மூன்று நேர உணவும் உரிய நேரத்தில் அறைக் கதவுக்கு வெளியே வைக்கப்பட்டன. உணவு, மருத்துவம், கழிவகற்றல், சுத்தம் பேணுதல் சம்ந்தப்பட்ட விடயங்கள் தீர்த்து வைக்கப்பட்டன. ஆனால் அனைத்து தொடர்பாடல்களும் தொலைபேசியின் ஊடாக நடைபெற்றனவே தவிர, எந்த உரையாடல்களும் முகத்திற்கு முகமாக, நேரடியாக நடைபெறவில்லை.
அடைக்கப்பட்ட அறையில் முதல் நாள் !
என்ன செய்யலாம் ? ஏது செய்யலாம் ? என்று சிவகரனின் சிந்தனை சற்று நேரம் அலை பாய்ந்தது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஓர் எழுத்தாளனால் என்ன செய்ய முடியும் ? எழுதத்தானே முடியும் ? அவன் எழுத்துப்பணி ஆரம்பமானது ! மனைவியோ புத்தகங்களுடன் சங்கமமானாள் !
இதயம் கனத்த ஈரேழு நாட்கள் என்ற தலைப்பில் அனுபவங்கள் பதிவாகின.
சிவகரனின் இதயம் இந்த எதிர்பாராத பல்வேறு நிகழ்வுகளினால் சற்றே கனத்துப் போயிருந்தது. திட்டமிடப்படாத நிகழ்வுகளும், பூமி எங்கணும் நிலவுகின்ற கொவிட்-19 பரவலும், அதனாலேற்பட்ட உயிரிழப்புகளும், ( ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் 11/04/2020 ல் பதிவாகியது ) 14 நாட்கள் தனிமைப் படுத்தலும் அந்த இதயக் கனப்புக்குக் காரணங்களாக அமையவே, “ இதயம் கனத்த ஈரேழு நாட்கள் “ என்ற தலைப்பில் எழுதவாரம்பித்த சிவகரனின் சிந்தனையில் கவிதையும் ஊற்றெடுத்து, வெண்பாக்களாக வந்து விழுந்தன :
கொல்வதற்கு வந்தாயே கொள்ளை நோயே
வல்லவனாய் அல்லவோ வந்தாய் — தொல்லுலகு
சின்னா பின்னமாய்ச் சிதறித்தான் போனதே
உன்னா லிழந்தோமே உயிர் !
தொடர்ந்து கவிதை எழுத முடியவில்லை. ஓட்டமும் தடைப்பட்டது. எழுதுகோலும் எழுத மறுத்தது. மனைவி என்ன செய்கிறாள் என்று பார்த்தான் சிவகரன். அவளுக்கும் புதினங்கள் வாசித்து அலுத்து விட்டது. செய்வதறியாதவளாய்க் கட்டிலில் வலிந்து உறக்கத்தை வரவழைத்துக் கொண்டு, புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.
தொலைக் காட்சி பார்க்கவே வேறுப்பாகவிருந்தது. எந்த அலைவரிசையைத் திருப்பினாலும் “ கொறோனா கொறோனா கொவிட்- 19 “ என்ற சொற்களே ஒலித்துக் கொண்டிருந்தன. அதைக் கேட்டதும் உலக மக்களைப் பற்றிய கவலையும் பிடித்துக் கொண்டது அவனுக்கு !
கண்களை மூடி உலக மக்களுக்காக இறைவனை வேண்டிக் கொண்டான். தேவாரத் திருப்பதிகங்களைப் பாராயணம் செய்தான். நோய்கள், கொடிய விடங்களை நீங்கும் சம்பந்தர் திருக்கடைக்காப்புகளை மனதிற்குள் பாடினான்.
“ இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க, ஓம் சாந்தி சாந்தி சாந்தி “
நாட்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. உடல்கள் அந்தச் சிறிய அறையைச் சுற்றிச் சுற்றி வந்தாலும், உள்ளங்கள் அந்த அறைக்குள் கட்டுப்பட விரும்பாமல் உலகத்தையே சுற்றி வந்தன. உடற் பயிற்சி இல்லாத உடல், பசிக்காமல் சாப்பிட வேண்டிய நிலை, சில நேரங்களில் பொருந்தாத/விரும்பாத உணவுகள், இயற்கையான காற்றைச் சுவாசிக்க முடியாததால் உருவான ஒரு பாரமான சுவாசச் சுற்று, சிறு தூரமாவது வெளியில் நடந்து வர முடியாத இறுக்கமான நிலைமை என்று பல வேறுபட்ட அசாதரணமான சூழ்நிலைகள் இருவரையும் வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தன. ஆயினும் அந்தப் பதினான்கு நாட்கள் அந்த அ (சி) றை வாசம் எப்படியாவது “ சுகமாக “ முடிந்து விட வேண்டுமென்ற பிரார்த்தனையே அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது !
ஏப்ரல் 10 ஆம் நாள், பெரிய வெள்ளிக்கிழமை !
சிவகரன் சைவத்தின் வழி நின்றாலும், ஏனைய சமயங்களையும் மதித்து நடக்கவேண்டுமென்ற சைவத்தின் கொள்கையையும் ஏற்பவன். பெரிய வெள்ளி என்றதும் அவன் வலது கரம் எழுதுகோலை மீண்டும் ஏந்தியது.
“ கிறித்தவப் பெருமக்களுக்குப் பெரிய வெள்ளிக்கிழமை துக்கம் மிக நிறைந்த நாள். மக்களுக்காக, மக்களின் துன்பம் போக்குவதற்காகச் சிலுவை சுமந்து, சொல்லொணாத் துயரங்களைச் சுமந்து, இறுதியில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைப் போலவே, இன்று இந்த உலகமெங்கும் உள்ள மக்கள் கொறோனா என்ற கிருமியினால் படுந்துயரமும், மூன்றாம் நாள் அவரது உயிர்த்தெழலோடு தீர்ந்து விடும் என்று நம்புவோமாக ! “ என்று எழுதினான்.
ஏப்ரல் 12 ஆம் நாள், உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை. தொலைக்காட்சியைப் பார்த்த போது, மனம் வெறுமையும், விரக்தியும் கலந்தவோர் இனம் புரியாத உணர்வுக்குள் சிக்கித் தவித்தது.
அவுஸ்திரேலிய நாடு பூராகவுமுள்ள கிறித்தவத் தேவாலயங்கள் எல்லாம் மக்கள் எவருமின்றிமின்றி வெறிச்சோடிக் கிடந்ததையும், முக்கியமான சில தேவாலயங்களிலிருந்து அருட்தந்தையர் ஓரிருவர் மட்டும் காணொளிகளூடாக ஆராதனைகளை நடாத்தியதையும் கண்ணுற்ற போது, இதயம் மேலுங் கனத்தது ! இன்றாவது கர்த்தரே இங்கு வந்து பிறக்க மாட்டாரா அல்லது இறைத்தூதர் ஒருவரை அனுப்பி வைக்க மாட்டாரா என்ற ஆதங்கத்தோடு கண்களை மூடிய சிவகரன் மெதுவாகத் தூக்கத்திலாழ்ந்தான் !
ஏப்ரல் 13 ஆம் நாள், திங்கட்கிழமை.
“ இன்று சித்திரைப் புதுவருடம் பிறக்கிறது “ என்றாள் மனைவி. வழமையான மகிழ்ச்சி கலந்த, குதூகலமான குரலாய் அது ஒலிக்கவில்லை. அவளது ஈனமான அக்குரலுக்குப் பின்னால் மறைந்திருந்த ஆயிரம் அர்த்தங்கள் சிவகரனுக்கு நன்றாகவே புரிந்தது.
அவன் மீண்டும் எழுதத் தொடங்கினான் ;
“ பூட்டிய அறைக்குள்ளே புத்தாண்டு பூத்தது
கூட்டிய உணர்வெலாம் கொத்தாகச் செத்தது
காட்டிய முறைகளும் கனவெனக் கலைந்தது
வாட்டிய சிந்தனை வலிகளால் நிறைந்தது – பூட்டிய அறைக்குள்ளே
புத்தாண்டு பூத்தது !!
சார்வரி வருடம் இன்று பிறந்த போது, உலகம் முழுவதுமே துக்கத்திலும், துயரத்திலும் ஆழ்ந்திருந்தது. உலகமெங்குமுள்ள இந்துக்களும், இலங்கைத் தீவின் சிங்களவர்களும், உலகின் அனைத்து மக்களும் கொறோனா என்ற கொள்ளை நோய்க் கிருமியின் கொடூரக் கரங்களின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவிக்கின்ற போது, சார்வரி எப்படி சந்தோசம் தரும் ? அடியவர்களுக்கு அடைக்கப்பட்ட ஆலயங்கள், ஆலயங்களினுள்ளே ஆச்சார்யர்கள் மட்டுமே நடாத்திய ஆராதனைகள், புத்தாடைகள் இல்லை, கைவிசேசமில்லை, பல்வகைப் பலகாரங்களில்லை, உறவுகளின் உறவாடலில்லை, குழந்தைகளின் கும்மாளமில்லை என்று ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்க இதயம் மேலும் கனக்கிறது. சார்வரி வருடம் சங்கடம் தீர்க்குமா ? சந்தோசம் தருமா ? ”
இறைவனை மனதார வழிபட்டுப் புத்தாண்டுப் பிறப்பைத் தனது மனதுக்குள்ளேயே முடித்துக் கொண்டான் சிவகரன்.
அவனது தாரக மந்திரம் மனதிற்குள் சற்றுப் பலமாகவே ஒலித்தது : எதுவும் நடக்கும் அதுவும் கடக்கும் !
நாட்கள் நகர்ந்தன. அதே அறை, அதே உணவு வகைகள், அதே சூழல், ஆனால் உணர்வுகள் மட்டும் நாளுக்கு நாள் மாறுபட்டுக் கொண்டே இருந்தன. சாதாரண மனோநிலை, அசாதாரண மனோநிலை என்று உணர்வுகளுக்கேற்ப மனோ நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வாறு மாறுபட்ட மனோ விகாரங்களுக்கு மத்தியிலும் அவர்கள் இருவரின் அந்த வித்தியாசமான சிறை வாழ்க்கை தொடர்ந்தது. அவர்கள் இருவரும் சிறகுகள் இருந்தும் பறந்து திரிய முடியாத, சுதந்திரமிழந்த பறவைகள் ஆனார்கள். அவர்கள் மட்டுமா ? இன்னும் ஆயிரமாயிரம், அங்குமிங்குமாக, இந்த உலகமெங்கும் !
“ குயிலைப் புடிச்சிக் கூண்டிலடைச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயிலைப் புடிச்சிக் கால ஒடைச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படிப் பாடுமய்யா ? அது எப்படி ஆடுமய்யா ?”…..
வாலியின் வரிகள் அப்போதுதான் அர்த்தமுள்ள வரிகளாக சிவகரனின் மனதில் வந்து மோதிச் சென்றன. தங்களது ரசனைக்காக மட்டும் பறவை இனங்களைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து அழகு பார்க்கும் மனிதர்ளை அவன் மனம் எண்ணிப் பார்த்தது. உயிர்களின் துன்பத்தில் இன்பம் காணும் இரக்கம் இல்லாத கல் நெஞ்சக்காரர்களாகவே அவன் கண்களுக்கு அவர்கள் காட்சியளித்தார்கள் !
ஏப்ரல் 19 ஆம் நாள், ஞாயிறு ! ஆமாம், இன்று அவர்களுக்கு விடுதலை நாள் ! பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தல் என்ற அஞ்ஞாதவாசம் நிறைவடைந்த நாள்! விடுதலை பற்றிய இறுக்கமான அறிவுத்தல்கள் அனைத்தும் பல பக்கங்களாலான கடிதம் மூலம் அறைக் கதவிடுக்கினூடாக வழங்கப்பட்டிருந்தது.
அவற்றை ஆர்வத்தோடு படித்தார்கள். இன்று பிற்பகல் மூன்று மணி அவர்களுக்கான விடுதலை நேரம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மனதில் மெல்லியதான இதமான ஒரு விடுதலை உணர்வு விரிந்து பரந்தது.
“ விடுதலை விடுதலை விடுதலை…. “ என்ற பாரதியின் வரிகள் எண்ண அலைகளாக வந்து மோத விக்டோரிய அரசுக்கும், சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்கும் மனமார நன்றி கூறியவர்களாக, கூடு நோக்கிப் பறக்கும் பறவைகளென, தங்கள் வீடு நோக்கிய தங்களது பயணத்தை அவர்கள் தொடர்ந்தனர் ! ஆனாலும் அடுத்த ஆண்டும் இதைவிடவும் துன்பகரமான நிகழ்வுகள் இந்தவுலகில் நிகழப் போகின்றன என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவே இல்லை.
எதுவும் நடக்கும் அதுவும் கடக்கும் !
—0—
sermajana@yahoo.com.au
![]()