“அடையாளம்” ….. ( சிறுகதை ) ….. பகுதி 1….. ஏலையா க.முருகதாசன்.

![]()
எதையோ தேடுவது போல வேப்பமரத்தின் பட்டையை கைகளால் தடவிக் கொண்டே தவிப்புடன் நின்ற சரஸ்வதி வேப்பமரக் கிளையில் தடித்த கயிறுகளால் இரண்டு சுற்றுச் சுற்றி மரக்கிளையின் கீழ்ப்பகுதியில் முடிச்சுப் போட்டு அந்த முடிச்சிலிருந்து இரண்டு கயிறுகள் வந்ததற்கான அடையாளமாக அரை மீற்றர் நீளமான கயிறுகள் கீழ்நோக்கித் தூங்கிக் கொண்டிருப்பதை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதும் பிறகு வெடிப்பு வெடிப்பாக இருந்த வேப்பமரப் பட்டைகளைப் பார்ப்பதுமாக இருந்தாள்.அதைப் பார்த்ததுமே அவளின் கண்களில் கசிவு ஏற்பட்டது.
கட்டப்பட்ட கயிற்றின் சுற்றுக்கள் கிளையின் தடிப்புக்கு ஏற்றவாறு கயிறுகள் இளகி பட்டைகளின் வெடிப்புகளுக்குள் செருகி நின்றன.
சரஸ்வதியின் நினைவுகள் போல சுற்றிய கயிற்றின் வட்டம் சிதிலமடைந்தாலும் மரத்தின் கிளைகளோடு இருந்தன.
இளவாலை என்ற கிராமத்தைவிட்டு அவள் கிளிநொச்சிக்குப் போய் முப்பந்தைந்து வருடங்களாகிவிட்டன.பத்தொன்பது வயதில் இந்த ஊரே வேண்டாம் என்று அழுத கண்ணீருடனும் வயிற்றில் ஒரு குழந்தையுடனும் பெற்றொருடன் போனவள் பெற்றோர் இறந்தபின் ஐம்பத்தினாலாவது வயதில் திரும்பி வந்திருக்கிறாள்.
சரஸ்வதி நின்றிருக்கும் இந்த இடம் அவள் இளவாலையை விட்டுப் போகும் போது புழுதி ஒழுங்கையாகவிருந்தது.அப்பொழுது மின்சாரமும் இல்லை.அந்த ஒழுங்கை பண்டத்தரிப்பு வீதியை ஊடறுத்து சேத்தான்குளத்தடி கீரிமலை வீதியைச் சென்றடையும் சித்திரமேழி என்ற பகுதியில் மேற்காக ஆரம்பித்து மாதகல் வீதியை தொடுத்து நிற்கும் ஒழுங்கைதான் அது.
இப்பொழுது அந்த ஒழுங்கை தார்போட்ட வீதியாகி மின்சாரம் பெற்ற ஊராகி முன்னூறு மீற்றர் தூரத்திற்கொன்றாக மின்சாரக் கம்பங்கள் வீதியில் நடப்பட்டு இரவு நேரங்களில் வீதிக்கு வெளிச்சம் கொடுக்கும் இடமாக மாறிவிட்டது.
வீதியின் இருமருங்கிலும் கல்வீடுகள் இப்பொழுது காட்சியளிக்கின்றன.முன்பு ஓலைவீடுகளாகவும் மண்சுவருடன் இருந்த வீடுகள் கல்வீடுகளாக மாறியுமிருக்கின்றன.அந்தப் புழுதி ஒழுங்கையோடு இருந்த பலர் வெளிநாடுகளுக்குப் போனதால் செல்வந்தர்களாகி வெறும் காணிகளை வாங்கி வசதியாக வீடுகள கட்டியுமிருக்கிறார்கள்.
முன்பு ஆங்காங்கே பனங்கூடல்கள்; இருந்தன,அவை இப்பொழுது இல்லை.அவற்றையும் தறித்து வீழ்த்தி காடழித்து வீடுகட்டும் மனிதர்களாக மாறி வெளிநாட்டுப் பணத்துடன் போட்டி போட்டு அங்கேயே பணம் சம்பாரிச்சவர்கள் உப்பரிகையுடன் வீடுகள் கட்டியுமிருக்கிறார்கள்.
சரஸ்வதி நிற்கும் இடத்தில் இப்பொழுது ஒரு பேருந்து நிலையம் வந்துவிட்டது. இப்பொழுது அவ்வீதி வழியாக பேருந்தும் ஓடத் தொடங்கியுள்ளது.மாதகலில்
இருந்து யாழ்ப்பாணம் போகும் பேருந்துக்காக காத்திருக்கிறாள் சரஸ்வதி.அவளின் முன்தலைமயிர்கள் ஒருசில நரைத்திருந்தாலும் அவளின் வைராக்கியம் போல தலையின் மற்றைய இடங்களில் தலைமயிர்கள் கறுகறுத்திருந்தன.தலையை வாரி இழுத்து குடும்பி முடிந்திருந்தாள்.பேருந்து நிலையத்திற்கு எதிரே ஒரு தேநீர்க்கடை முளைத்திருந்தது.அவள் ஊரைவிட்டுப் போகும் போது தேநீர்க்கடை இருக்கும் காணிக்குள் நாகதாளியும் எருக்கலம் செடியுமே இருந்தன.
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு மாணிக்கம் ஒரு இளைஞன், அப்பொழுது அவனுக்கு வயது இருபது.இப்பொழுது ஐம்பந்தைந்து வயது.தகப்பன் நல்லப்பு நடத்திய தேநீர்க்கடையை, அவர் இறக்க மகன் மாணிக்கம் நடத்துகிறான்.
கடைக்குள் நின்றவாறே மாணிக்கம் பேருந்துக்காக காத்திருக்கும் சரஸ்வதியைப் பார்த்தவன் எடுத்த எடுப்பில் அவனால் அவளை அடையாளம் காண முடியவில்லை. ஒரு சைக்கிளில் ஒருவர் காண்டிலில் இருக்க இன்னொருவர் ஓட்டிவர வந்த இருவரும் அவனுடைய கடையடியில் இறங்கி உள்ளே போகும் பொது மாணிக்கம் அவர்களிடம் ஏதோ சொல்வது போலத் தெரிகின்றது.அந்த இருவரும் பேருந்து நிலையத்தை திரும்பிப் பார்த்தவாறே கடைக்குள் போகிறார்கள்.
சரஸ்வதி கiடைக்குள் நிற்பவரைப் அடிக்கடி பார்த்துக் கொண்டாலும், அவன் மாணிக்கமாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டாலும்,அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
கடைக்குள் போன இருவருக்கும் தேநீரைக் கொண்டு போய்க் கொடுத்த மாணிக்கம் குனிந்து அவர்களிடம் ஏதோ சொல்லவிட்டு திரும்பி வந்து பட்டடையில் இருந்தவன் பேருந்து நிலையத்தை பார்த்துக் கொண்டே இருந்தான்.
பத்து நிமிசத்துக்குள் தேநீரைக் குடிச்சு முடிச்ச அந்த இரண்டு இளைஞர்களும் சைக்கிளை உருட்டிக் கொண்டு வீதியைக் கடந்து பேருந்து நிலையத்தடிக்கு வந்தவர்களின் ஒருவன் சரஸ்வதியிடம் தயங்கித் தயங்கி, „அக்கா நீங்கள் சரஸ்வதிதானே’ எனக் கேட்க, „ம்’ என்று மட்டும் சொன்னவள் „ ஏன் கேட்கிறியள்’ என்று அவள் கேட்க’சும்மதான் கேட்டனாங்கள் கோபிக்கதையுங்கோ’ என்று சொல்லிவிட்டுச் சைக்கிளில் ஏறப் போனவர்களிடம்’ தம்பியவை அந்தத் தேத்தண்ணிக் கடைக்காரன் மாணிக்கந்தானே’என்று சரஸ்வதி கேட்க, „அவர்தானக்கா’ என்று ஒரேசேர இரு இளைஞர்களும் பதிலளிக்க’ அந்த நாய் இன்னும் உயிரோடைதான் இருக்கிறானோ, அவனும் இந்த வேப்பமரத்திலை தூங்கிச் செத்திருக்கலாந்தானே, குறுக்காலை போவான்’ என்று சரஸ்வதி கோபத்துடன் திட்ட, பயந்து போன இளைஞர்கள் சைக்கிளில் ஏறி கடையடியால் போகும் போது மாணிக்கத்தை பார்த்து ஓம் என்பது போல தலையாட்டிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் போனவர்கள் சரஸ்வதியை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுப் போனார்கள்.
அதற்குப் பிறகு மாணிக்கம் சரஸ்வதியின் பக்கம் திரும்பவே இல்லை.தற்செயலாகத்தானும் திரும்பிப் பார்ப்பதை பிரயத்தனப்பட்டு தவிர்த்த மாணிக்கம் என்ன நினைத்தானோ தெரியாது வேகம் வேகமாக தனது கடையைப் பூட்டிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு அவசரமாகப் போவது போலப் போனான்.
சரஸ்வதி மெலிதாக ஆனால் ஏளனமாக அருவருப்புக் கலந்து சிரித்தாள்.பேருந்துவர இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன.அப்பப்ப வீதியால் நடந்து போவோரையும் சைக்கிளில் போவோரையும் பேருந்து நிலையத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
பேருந்து நிலையத்திலும் அவளைத் தவிர யாருமே இல்லை.பேருந்து நிலையத்தோடு இருந்த வேப்பமரக் கிளையில் சுற்றியிருந்த வட்டமான கயிற்றின் அடையாளத்தைப் பார்ப்பதும், வேப்பமரப் பட்டைகளில் எதையோ தேடுவதுமாக இருந்த சரஸ்வதியின் கண்கள் கனக்கத் தொடங்கியது.
முட்டிநின்ற கண்ணீர் கன்னங்களில் வழிய அழுகையை அடக்க முயற்சித்தும் முடியாமல் போகவே சீலைத்தலைப்பால் கண்களை துடைத்தபடி திரும்பும் போது „பிள்ளை சரசுதானே’ என்று சொல்லிளயவாறு அவளருகில் மார்க்கண்டு வந்து நிற்க வலிந்து புன்னகைத்து தலையை மட்டும் ஆட்டினாள் சரசு.’எவ்வளவு காலமாச்சு உன்னைப் பார்த்து, உன்ரை கொப்பா கொம்மா இறந்த போது அவர்களின் காரியம் இங்கை இந்த ஊரிலை நடக்கும் என்று எதிர்பார்த்தம் அதுவும் இஞ்சை நடத்தேலை கிளிநொச்சியிலை செய்திட்டாய்,உனக்கு ஒரு பொம்பிளைப் பிள்ளை பிறந்தது என்று கேள்விப்பட்டம், அதின்ரை சாமத்தியச் சடங்கைத்தன்னும் இஞ்சை உன்ரை இந்தச் சொந்த ஊரிலை செய்வாய் என்று நினைச்சம், அதையும் நீ செய்யேலை பிறகு மகளின்ரை கலியாண வீட்டைத்தன்னும் இஞ்சை செய்வாய் என்று நினைச்சம் அதையும் இஞ்சை செய்யேலை…சரி ஊரைப் பார்க்கவெண்டு இப்பவாவது வந்திருக்கியே…என்று அவர் சொல்லி முடிக்கமுந்தி …’ நான் ஊரைப் பார்க்க வரவில்லை….எங்களோடு ஒட்டியிருந்த ஒன்றை வெட்டிப் போட்டுப் போகத்தான் வந்தனான்’ என்று சரசு வேகமாகச் சொன்னதைக் கேட்ட மார்க்கண்டு „ ஒட்டியிருந்ததை வெட்டிப் போட்டு போக வந்ததாகச் சொல்கிறாளே எதுவாக இருக்கும் என்று யோசிப்பதற்கு முன் „என்னுடைய பெயரிலை இருந்த காணியை வித்து அந்தக் காசை தெல்லிப்பழை துர்க்கம்மை கோவில் நடத்துகிற அனாதைச் சிறுவர் மடத்துக்கு குடுக்கத்தான் வந்தனான், வித்து காசையும் குடுத்திட்டன், இந்த ஊர் எனக்குச் செய்த அவமானம் போதும்…’ என்று சரசு கொஞ்சம் கோபமாகச் சொல்ல, அமைதியாகவிருந்த மார்க்கண்டு „அந்தச் சண்டாளன் செய்த வேலைக்கு ஊரையேன் பிள்ளை குறை சொல்லுறாய்’ என்று பூட்டியிருந்த தேநீர்க்கடையைக் காட்டி மார்க்கண்டு சொல்ல, „ஏன் நீங்களுந்தானே அவன் சொன்னதற்கு தாளம் போட்டனீங்கள்’ என்று சரசு சொன்னதும், மார்க்கண்டுவால் எந்தப் பதிலுமே சொல்ல முடியவில்லை,’வாறன் பிள்ளை „ என்று அந்த இடத்தைவிட்டு மெதுவாக நடந்தார்.
மார்க்கண்டு உட்பட அந்த ஊரில் பலர் வாய்க்குவந்தபடி கதைச்சதால்தான் குமுறிய வேதனையுடனும் அவமானத்துடனம் ஒரு உயிரை இந்த வேப்பமரத்திற்கு பலி குடுத்துவிட்டு சரஸ்வதியும் பெற்றோரும் இந்த ஊரைவிட்டே போனார்கள்.
அரை மணித்தியாலத்திற்கு ஒரு தரந்தான் பேருந்து அந்த வீதியால் போவதும் வருவதுமாகும்.சரசு வேப்பமரத்தில் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பார்ப்பதும், வேப்பமரப் பட்டையைப் பார்ப்பதுமாக தவித்தாள்.
அந்த ஊரைவிட்டே கெதியிலை பொய்விட வேண்டும் பேருந்தைக் காணவில்லையே என்ற அவளின் தவிப்புக்கு தூரத்தில் பேருந்து வருவது தெரிந்ததும் மனம் ஆறுதலைடைந்தது.
பேருந்தில் ஏறி அமர்ந்த அவள் ஒருமுறை உள்ளுக்குள் நோட்டம் விட்டாள்.யாருமே தெரிந்தவர்களாக இல்லை.அப்படி யாராவது இருந்தாலும்கூட அவள் இந்த ஊரைவிட்டுப் போய் முப்பத்தைந்து வருடங்களாகவிட்டதால் பலரின் உருவமே மாறியிருக்கும்.அதனால் இவர் இன்னார் என்பதைக்கூட கண்டுபிடிக்க முடியாதபடி அவர்கள் இருப்பார்கள்.
சரசுவையும் யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.ஊரைவிட்டு பேருந்து போகப்போக பழைய நினைவுகள் முண்டியடிக்கத் தொடங்கின.
சரசுவின் வீடும் செந்தில்குமாரின் வீடும் பக்கம் பக்கமாக இருந்த வீடுகள்.இரு குடும்பத்தினரும் உறவினர்கள் அல்ல, ஆனால் நல்ல நண்பர்கள்.உறவு நிலைக்குட்பட்ட எந்த உறவுத் தொடர்பகளும் அவர்களிடம் இருக்கவில்லை.
சரசுவும் செந்திலும் சின்ன வயதிலிருந்தே ஒன்றாகத்தான் திரிவார்கள் ஒன்றாகத்தான் விளையாடுவார்கள்.பல நாட்:களில் சரசு செந்திலின் வீட்டில்தான் நேரத்தைப் போக்குவாள்,அங்கேயே சாப்பிடுவாள்.
அதைப் போல செந்திலும் பல நாட்களில் சரசுவின் வீட்டிலேயே அதிக நேரத்தைப் போக்குவான்,அங்கேயே சாப்பிடுவதும் உண்டு.
அயலட்டையில் உள்ளவர்கள் செந்திலும் சரசுவும் ஒன்றாகத் திரிவதைப் பார்க்கும் போதெல்லாம் „புருசனும் பெண்சாதியும் போகினம்’ என்றெல்லாம் கிண்டல் கேலி செய்வதுடன் செந்திலிடம் „ நீ சரசுவையா கட்டப் போகிறாய்’ என்று கேட்பது போல சரசுவிடம் „நீ செந்திலையா கட்டப் போகிறாய் „ என்று அவர்களை ஒழுங்கையிலும் அவர்கள் அப்பா அம்மாவாக ,மண்ணை சோறென்றும் இலைகுழைகளை கறியென்றம் சமைத்து விளையாடும் வேப்பமரத்தடியில் வைத்தும் ஊரவர்கள் கேட்கும் போதெல்லாம் இருவருமே எந்தத் தயக்கமும் இல்லாம் ஓம் என்று சொல்வார்கள்.
சிறவர் சிறுமிகளென அந்த அயலட்டையில் உள்ள ஏழெட்டுப் பேர் வேப்பமரத்தடியில் ஒன்றாக விiயாடினாலும் எப்பொழுதும் சரசுவும் செந்திலும் ஒன்றாகவே இருப்பார்கள்.மாணிக்கராசாவும் அவர்களுடன் விளையாடினாலும்,சரசு அவனைப் பற்றி அக்கறை கொள்வதே இல்லை.
மாணிக்கராசா பலமுறை தன்னுடன் விளையாட வருமாறு சரசுவைக் கூப்பிட்ட போதும் ஏனோ சரசுவுக்கு அவனைப் பிடிக்காததால் அவள் அவனுடன் விiயாடுவதில்லை,உன்னுடன் விளையாட மாட்டன் என்று சொல்வாள்.
செந்திலின் தகப்பன் சிறுவர்களுக்கு வேப்பமரக் கிளையில் ஒரு ஊஞ்சலைக் கட்டிவிட்டிருந்தார்.ஒரு நாள் செந்தில் ஊஞ்சலாடி விழுந்துவிட அவனின் முழங்கால் பகுதியில் குறுணிக் கற்கள் உரஞ்சி இரத்தம் வழிய ,அதைப் பார்த்த சரசு ஓவென்று அழுததுடன் அங்கிருந்த செடிகளின் இலைகளைப் பிடுங்கி உள்ளங்கையில் வைத்து கசக்கி அந்தக் காயத்துக்கு மேல் வைச்சு தனது பின்னலில் இருந்த றிபனை அவிழ்த்தெடுத்து கட்டிவிட்டவள்,நொண்டி நொண்டி நடந்த செந்திலின் கைகளை எடுத்து தனது தோளில் மேல் போட்டபடி கூட்டிக் கொண்டு போகும் போகும் போது நோவினால் அழுத செந்திலின் கண்ணீரைத் துடைத்தபடி „அழாதை செந்தில் உனக்கு நானிருக்கிறன் „ என்று சொன்னது அந்தச் சிறுமியின் வாயிலிருந்து வந்த எதார்த்தமான வார்த்தைதான்.
ஆனால் அந்த வார்த்தைக்குப் பின்னால்……..
(தொடரும்)
![]()