கதைகள்

“பெட்பக் கலத்தல்”…. ( சங்கப் பாடல் சிறுகதை ) …. அண்டனூர் சுரா.

‘2019 -2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பாக ‘எத்திசைச் செலினும்’ சிறுகதை நூல் தெரிவு செய்யப்பட்டது.  நூலாசிரியர் அண்டனூர் சுரா அவர்களுக்கு , தலைமைச் செயலகத்ததில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்  பரிசும் பாராட்டுச் சான்றும் வழங்கினார்…. அக்கினிக்குஞ்சுவின் வாழ்த்துக்கள் அண்டனூர் சுரா.

 

“பெட்பக் கலத்தல்”…. ( சங்கப் பாடல் சிறுகதை )

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்த நாளன்றுதான், அவர் காணாமல் போயிருந்தார். அவர் தங்கியிருந்த அறைக்கு இருமாத வாடகையும், பல்கலைக்கழகத்திற்கும் வெளியே மேம்பாலத்தையொட்டிய சிற்றுண்டிக் கடையில் இருநூறு உரூபாயும் அவர் பெயரில் பாக்கிகளாக இருந்தன. அறையை வாடகைக்கு விட்டிருந்தவர், இதற்காகத்தான் வெளிநாட்டினர் யாருக்கும் நான் அறையே கொடுப்பதில்லை, என்பதாகப் வெதும்பிக்கொண்டிருந்தார். அவர், காணாமல் போனவர் மீது இரக்கமோ, அவர் என்னாகியிருப்பார், என்கிற கவலையோ அவரிடம் கிஞ்சிற்றும் இல்லை. ‘ ஒரு வாரகாலம் பார்ப்பேன், அதற்குள்ளாக வரவில்லையெனில், அறையிலுள்ள புத்தகங்களை அள்ளி வெளியே எறிந்துவிட்டு, அறையை வேறு யாருக்கேனும் கொடுத்துவிடுவேன்’ என்பதாகப் பொறிந்துகொண்டிருந்தார்.

சிற்றுண்டிக் கடைக்காரருக்கு, இதயம் கொண்ட இடத்தில் கொஞ்சம் ஈவும் இருந்தது. அவர், வைத்துச்சென்ற கடன்பாக்கியை ஒரு பொருட்டாக நினைக்காமல், அவரது பாவியங்களை நினைவுகூர்பவராக இருந்தார். ஞானசூரி காணாமல் போனச் செய்தியை எனக்கு முதலில் சொன்னவர் அவர்தான். அதைக் கேட்கையில், என் முன்கையிடத்து வளையல்கள் கைநழுவி கீழே விழுவதாக இருந்தன.

ஞானசூரி, தமிழ்ப்பல்கலைக்கழக மொழிப்புலம், முனைவர்பட்ட மாணவர். தமிழ் வேர்ச்சொல் ஆய்வு என்பதை பிறவிப்பெருங்கடல் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவாக யாரும் விரும்பி இறங்காதப் புலத்தில், வேர்ச்சொற்களைக் களைந்தெடுக்கும் தலைப்பின்கீழ், ஆய்வு செய்பவராக இருந்தார். ஓரிரு மாதங்களில் ஆய்வேட்டைச் ஒப்படைக்கும் இறுதி கட்டத்திற்கு அவர் வந்திருந்தார். அவரது வழிகாட்டுநர் பேராசிரியர் சோமசுந்தரம், எனக்கும் வழிகாட்டுநர் என்பதால், அவர் மூலமாக ஞானசூரி எனக்கு அறிமுகமானார்.

பெயர்க்கேற்ப யாரையும் எளிதில் கவர்ந்திடும் முகம். முறுவல் பூக்கும் உதடுகள். கறள் நிறத்தவர். ஆதியில் தமிழன் இப்படியாகத்தான் இருந்திருப்பான், எனச் சொல்லும்படியான உடற்தினவு. துக்கம் ஓடிக்கிடக்கும் செந்நரம்புகளுக்கிடையில், நம்பிக்கைப் பூக்கும்படியான ஒளிவட்டக்கண்கள். அவரை நான் முதலில் பார்க்கையில், வேற்று மாநிலத்தவராக இருப்பாரோ என நினைத்து, கையை உயர்த்தி ‘ ஹாய்’ என்றேன். பதிலுக்கு அவர் கும்பிட்டபடி, ‘ வணக்கம்’ என்றார். அவரது வணக்கத்தில் அப்படியொரு நளினம், சுத்தம், சுபாவம். ஒரு முனைவர்ப்பட்ட ஆய்வாளரிடம் கொஞ்சமேனும் இருந்தாக வேண்டிய கர்வம் அறவேயற்று, முகிழ்நகை பெற்றமென இருந்தார்.

‘ இவள் பெயர் சுகந்தினி. இராமநாதபுரம். முனைவர்ப்பட்ட முதலாமாண்டு மாணவி ’ பேராசிரியர் அறிமுகப்படுத்தினார். ஞானசூரி என்னை ஆசிர்வதிக்கும் விதமாய், நெஞ்சுக்கு ஒரு கைக்கொடுத்து, குனிந்து நிமிர்ந்தவர், ‘ என்ன தலைப்பின் கீழ் ஆய்வு செய்கிறீர்கள்?’ எனக் கேட்டார்.

‘ ஈழத்தமிழில் ஆதித்தமிழின் மொழிச்சுவடுகள் ’

தலைப்பைக் கேட்டதும் அவரது இமைகள் நெற்றிக்கு ஏறின. ‘ உங்கள் வகிபாகத்தால் தமிழ் தமிழுறும்’ என்றவர் என்னைத் தீர்க்கமாகப் பார்த்தார்.

எங்களின் முதல் சந்திப்பு நடந்தேறிய இடம், ‘த’ வடிவக் கட்டிடமாக இருந்தது. கட்டிடத்தைச் சுற்றிலும் புதர், செடி, கொடிகள். கட்டிட சாளரம் வழியே மரக்கிளைகள், பூந்தாதுக்கள் தென்றலை வாரி

இறைப்பதாக இருந்தன. கட்டிடத்தின் வாயிலிடத்தில் ஒரு பூவரசு மரமிருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில், ஒரு குயிலும், அடைக்கலான் குருவியும் அருகருகே அமர்ந்தவாறு, தன் அலகுகளால் கொத்தி விளையாடுவதாக இருந்தன. ஞானசூரி, அவ்விரு பறவைகளையும் வைத்தக்கண் எடுக்காமல் பார்ப்பதாக இருந்தார். வேறினப் பறவைகள், இனம் மறந்து விளையாடியதைப் பார்க்க எனக்கும்கூட வேடிக்கையாகவே தெரிந்தது. என் குவிதல், அப்பறவைகளைப் பார்ப்பதைக் காட்டிலும், ஞானசூரி உச்சரித்த ‘வகிபாகம்’ என்கிற சொல் மீதே இருந்தது. ‘ வகிபாகம்’ என்னவோர் அழகான சொல், இதன் பொருள் என்னவாக இருக்கும்?

பேராசிரியர் என் சிந்தனையை அவர் பக்கமாகத் திருப்பினார். ஞானசூரியை அவருக்கும் அருகினில் அழைத்து, தோளிட்டபடி, எனக்கு அறிமுகம் செய்தார். ‘ இவரது பிறந்தகம் முள்ளிவாய்க்கால். யாழ்ப்பாண பல்கலைச்சாலையின் முன்னாள் மாணவர். இறுதிக்கட்டப் போரில் குடும்பத்தை இழந்து ஏதலியாக தமிழ்நாட்டுக்கு வந்தவர், இங்கேயே தங்கி ஆய்வு செய்து வருகிறார்..’

அவரை வியப்புடன் பார்க்க, ஒன்றுக்கும் மேற்பட்ட விடயங்கள் அவரின்பால் இருந்தன. நான் ஞானசூரியிடமிருந்து பார்வையை எடுத்து, பேராசிரியரைப் பார்த்தபடி, ‘ அப்படிங்களா சார்!’ என்ற நான், நாவை வலிக்கும்படியாக ஒரு கடி கடித்தவளாய், ‘ சாரி, அய்யா’ என்றேன்.

‘ ஏன் சாரி என்று, பொறுத்தருள்க எனச் சொல்லிருக்கலாமே’ என்றார் ஞானசூரி.

‘ மன்னிக்க வேணும்’ என்றேன்.

ஞானசூரி முன் உதடுகளால் சிரித்தார். மாந்தளிரில், அசோகந்தளிர் உரசுவதைப் போல அவரது உதட்டு அசைவுகள் இருந்தன.

என் ஆய்வு, ஈழத்தமிழுடன் தொடர்புடையது என்பதால் ஞானசூரியுடன் நித்தம் பேச வேண்டிய தேவை இருந்தது. அவர் உச்சரித்த வகிபாகம் சொல் குறித்து ஆராய விரும்பினேன். மொழிப்புல நூலக அகரமுதலிகளைப் புரட்டினேன். தற்கால, ஈழத்தமிழ், வேர்ச்சொல் அகரமுதலி…எனப் பலவற்றில் தேடியும் அச்சொல் காணக் கிடைக்கவில்லை. ஓர் ஆங்கில அகராதி, Role allocation என்பதற்கு வகிபாகம் ஒதுக்குதல் என்றும் Role of environment என்பதற்கு சூழல் வகிபாகம் என்றும விளக்கம் தந்திருந்தது. அவ்விளக்கம் எனக்குப் போதாமையாக இருந்தது.

இச்சொல் குறித்து, ஞானசூரியிடம் கேட்கலானேன். இச்சொல், பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி, தமிழுலகத்திற்குக் கண்டுகொடுத்தது என்றார். கொழும்பு இதழியல் கல்லூரி – ஊடகத்துறை தொடர்பான ஒரு நூலுக்கு அவர் அணிந்துரை எழுதுகையில், ‘ஏதேனும் ஒரு துறையில் யாரேனும் ஒருவர் முக்கிய பங்களிப்பு செய்வதை, வரலாற்று ரீதியாகக் குறிப்பிடுவதாக இருந்தால், அதனை வகிபாகம் என குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென’க் குறிப்பிட்டு எழுதியதை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

ஞானசூரியின் இத்தகவல், எனக்குத் தேவையான ஒன்றாக இருந்தது. இதுபோன்ற தகவலுக்காக அவரை நான் நித்தமும் சந்தித்து உரையாடத் தொடங்கினேன். நாங்கள் அதிகம் சந்தித்து, உரையாடிய இடம் பல்கலைக்கழக நூலகமாக இருந்தது. இந்திய பாராளுமன்றம் வடிவிலான கட்டிடம் அது. ஒரு நாள் பேச்சுக்கிடையில் என்னைத் திருத்தினார். ‘ பாராளுமன்றம் எனச் சொல்லாதீர். நாடாளுமன்றம் என்று சொல்லும்’

‘ ஏன், இரண்டும் ஒன்றுதானே?’

‘ எப்படி ஒன்றாக முடியும். பாராளுமன்றம் நம்மை ஆண்ட பிரிட்டிஷ் நாட்டினருக்குப் பொருந்தும். அவர்கள் பார் உலகையும் ஆண்டவர்கள். இந்தியா தன்னைத்தான் ஆண்டுகொள்கிறது அல்லவா’

‘ நன்றாகச் சொன்னீர்கள் சூரி ’

‘ இதை நான் சொல்லவில்லை, இராஜாஜி சொன்னார் ’ என்றார்.

சேடிஸ்ட் என்கிற சொல்லின் தமிழ்ப்பதம் அஞரி ; சர்ப் என்றால் பொங்கோதம்; ஒள்ளி என்பதே ஒளி என்றானது; மிசை என்பதே மீசை; இப்படியாக நிறைய தமிழ்ச்சொற்களைச் சொன்னவர் அவர். நான் எதையேனும் தவறாக உச்சரித்தால், என்னை முற்றாள், முற்றாள் எனத் திட்டுவார்.‘அய்யோ, முற்றாள் அல்ல, முட்டாள் ’ என்றேன்.

‘ எனக்கே, பாடம் எடுக்கிறாயா ’ என் ஒரு பக்கக் காது மடலைக் கிள்ளியவர், ‘ முற்றாள் என்பதே முட்டாள் என்றானது. அறிவுக்கே இடமில்லாமல் உடல் முழுவதும் வெற்று ஆள் என்பது அதன் பொருள் ’ என்றார். அனலி, ஓலக்கம், கறள், காலதர்,….இச்சொற்களை எனக்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். அத்தகையவரைத் தேடிக் கண்டுபிடிப்பது, என் மூளைக்கும், இதயத்திற்கும் தேவையாக இருந்தது.

இதற்கு முன்பு அவர் அறையெடுத்து தங்கியிருந்த பெரியகோவிலையொட்டிய அறையில் சென்று விசாரித்தேன். அவருக்கு நெருக்கமான நண்பர்கள் வல்லத்திலும், சூரக்கோட்டையிலும் இருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் என்றார்கள். நான் அவர்களது வீடுகளுக்குச் சென்று விசாரித்தேன். அவர் குறித்த நம்பிக்கையான செய்தி கிடைக்கவில்லை.

ஞானசூரியிடம் நான் நெருங்கிப் பழகியதன்பிறகு, எனக்குத் தெரியாது எந்தவொரு இரகசியத்தையும் அவர் தன் வசம் வைத்திருக்கவில்லை. அவர் கண் முன்னே சகோதரி சீரழிந்து, இராணுவத்தினரால் கொல்லப்பட்டத் துயரத்தைக் கூட என்னுடன் பகிர்ந்துகொள்ளவே செய்தார். என்னிடம் சொல்லாமல், அவர் எங்கேயும் சென்றதில்லை. அப்படியே சென்றாலும், பாம்பின் காலை பாம்பறிவதாய், அதை நான் அறிந்துவிடுபவளாக இருந்தேன். அவரது உள்ளத்தடாகத்திலிருக்கும் எண்ணச் சுவடுகளைக் கண்டுபிடிக்க முடிந்த என்னால், அவர் தொலைந்துபோன சுவடைக் கண்டுபிடிக்க முடியாத துயரம் என்னை அரிப்பதாக இருந்தது.

ஆளும் அரசு, இரண்டாம் முறையாக ஆட்சியமைத்த நாட்கொண்டு, அவர் டெல்லி அரசியலைக் கவனித்து வருபவராக இருந்தார். ஈழஅகதிகளை இந்திய அரசு, தன் குடிமக்களாக ஏற்கப்போகிறது, என்கிற செய்தியை யார் மூலமாகவோ தெரிந்து வைத்திருந்தார். அச்செய்தியை என்னிடம் பகிர்ந்துகொள்கையில், அகம் மலர்ந்து, ஆனந்த குதியாடல் கொண்டார். ‘ சாந்தினி, நானும் நீயும் நாமாகப் போகிறோம்’. என்றவரின் கண்கள் கலங்க, உதடுகள் கூட்டுக்காக ஏங்கும் இறகுகளாகத் துடித்தன.

‘ஒரு நாள் கரிகாற்சோழன் அரங்கத்தில் கவிதைப்படித்தேனே, நினைவிலிருக்கிறதா சுகந்தினி? நீ வசிக்க வீடு இல்லையென தவிக்கிறாய், நான் வாழ்வதற்கு நாடில்லையென தவிக்கிறன்’

‘ ஆம், இருக்கிறது சூரி’

‘ அக்கவிதை, பொய்த்துப்போக இருக்கிறது’. என்றவர், எனது இரு கைகளையும் பிடித்து, ஈரம் கசிந்த கண்களில் ஒற்றிக்கொண்டார்.

‘ நம்மை எல்லாரும் பார்க்கிறார்கள்’ என்றேன். அப்பொழுதும், என் கைகளை அவர் விடுபவராக இல்லை.

‘ ஒரு வேளை, நீங்கள் நினைப்பது நடக்காது போனால்?’ இதை நான் சொல்கையில், ஒரு நகரப் பேருந்து உரக்க ஒலியெழுப்பியபடி, சாலையில் செல்வதாக இருந்தது.

‘ என்னவோ கேட்டாயே?’

நான் சொன்னது அவருக்குக் கேட்டிருக்கவில்லை. ஒருவேளை கேட்டிருந்தால்; நாவைப் பற்களால் கடித்துக்கொண்டேன்.

‘ சரி, கிளம்பலாமா?’

ஞானசூரி, கைகளைத் தட்டிக்கொண்டு சிரித்தார். ஞானக்கூத்தன் வகைச் சிரிப்பு அது. இலட்சத்தில் ஒருவரால்தான் இப்படியாகச் சிரிக்க முடியும். ‘ இந்த பூமி சுற்றுவது உண்மைதான் சுகந்தினி’ என்றார். அவர் அப்படியாகச் சிரித்ததற்கும், சொன்னதற்கும் ஒரு காரணமிருந்தது.‘ சரி, கிளம்பலாமா?’ என்பது அவர் வழக்கமாக என்னிடம் கேட்பது. அன்றைய தினம் நான் கேட்டிருந்தேன்.

ஒரு நாள், ‘முள்ளிவாய்க்கால் முற்றத்திற்குப் போகலாமா?’ எனக் கேட்டார். நான் பார்க்காத இடமாகவும் அது இருந்ததால், ஒரு நகரப் பேருந்தின் கடைசி இருக்கையில், அமர்ந்தபடி, இருவரும் பயணித்தோம். முற்றத்திற்குள்ளாக காலெடுத்து வைக்கையில், வானத்தில் ஒரு ஜெட் விமானம் இரைந்து செல்வதாக இருந்தது. அவர் பதற்றத்திற்கு உள்ளானார். ‘ கிளம்பலாம் சுகந்தினி’ என்றார்.

‘ முற்றத்தைப் பார்க்காமலா?’

‘ வேண்டாம்’

‘ ஏன்?’

அவரால் ஒன்றும் பேச முடிந்திருக்கவில்லை, நிலைகுலைதலுக்கு உள்ளாகியிருந்தார். நான் ஓடி சென்று, அவரது கையைப் பிடித்து, அவரது முகத்தைப் பார்த்தேன். நச்சு மரத்தின் முற்றிய விதையினை உட்கொண்ட கலக்கம், அவரது முகத்தில் இருந்தது.

‘ ஞானசூரி,நானொன்று கேட்கலாமா?’

அவரது கண்கள் என் பக்கமாகத் திரும்பின.

‘ இன்னொரு முறை, இப்படியாக என்னை விட்டுவிட்டு வேறெங்கும் சென்றுவிட மாட்டீர்களே?’

அவர், முகத்தைச் சட்டெனத் திருப்பிக்கொண்டார். நான், என் தலையை அவரது தோளில் சாய்த்துக்கொண்டேன். அவரிடமிருந்து எழுந்த வியர்வை, உடலின் தகிப்பு, என் மூச்சுக்கு இதமாக இருந்தது. எங்கள் இருவரின் இதயத்துடிப்புகளும் ஒன்றுபோலத் துடித்தன.

அவரது தோளில் நான் சாய்ந்திருக்க, அவரது விரல்கள் என் கூந்தலைக் கோதிக் கொடுக்க, பேருந்து சாளரம் வழியே காட்சிகளைக் கண்டு ரசிப்பவளாக இருந்தேன். உடுக்கை இடையென வளைந்தோடும் காவிரி, காவிரி கரையோர ஞாழல் மரங்கள்; அதில் பூத்துச் சொரிந்திருக்கும் வெண்சிறு கடுகைப் போன்ற சிறு பூக்கள்; மருத மரத்தின் செம்மலர்கள், பழம், பூ, மீன் கடைகள்,…

அன்றைய நாள் முழுவதும், முல்லைக்கொடியும், மனைமரமென ஒரே இருக்கையில் அமர்ந்தபடி பயணித்தோம். இரவு மணி பத்து என்றாக, பேருந்து வெறிச்சோடியானது. ‘ கிளம்பலாம் சுகந்தினி?’

எனக்கும் அவருக்குமான உறவுக்கு என்ன பெயர்? அருள் என்பதா, அன்பு என்பதா? தொடர்பில்லாதவரிடம் உண்டாகும் இரக்கம் அருள் என்றும், தொடர்புடையாரிடம் உண்டான காதலுக்கு அன்பு என்றும் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்களே, நான் அவரின்பால் கொண்டது அருளா, அன்பா? அருளெனும் அன்பீன் குழவியோ நான்?

‘ அவருக்கும் உனக்கும் என்னடி?’ என் தோழிகள் கேட்டார்கள்.

‘ அவருக்கு நான் குருதிப்பூ ’ என்றேன்.

என் தோழிகள், முத்துசிந்துவதெனச் சிரித்தார்கள். ‘ அவர், கையையும், காலையும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவையடி நீ’. அப்படியாகச் சொல்கையில், என் காது மடல்கள் நாணுவதாக இருந்தன.

என் பெயரை அவர் அளவிற்கு அத்தனை அழகாக யாராலும் உச்சரிக்க முடியாது. அவரது நா, என் பெயரை உச்சரிப்பதற்கென்று, படைக்கப்பட்டதாகவே நினைத்தேன். ஆற்றொழுக்கான எங்கள் பயணத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறுக்கீடு என்றானது. என்றைக்கு அப்படியொரு சட்டம் பேசும் பொருளானதோ, அதன்பிறகு என் பெயரை அவர் உச்சரிக்க மறந்தே விட்டார். எந்நேரமும்

டெல்லி, டெல்லி என்றேதான் இருந்தார். ஒருநாள் கேட்டே விட்டேன். ‘நீங்கள் என்னைக் காதலிக்கிறீங்களா, டெல்லியைக் காதலிக்கிறீங்களா?’

‘ என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் சுகந்தினி?’

‘ என்னை ஏமாற்றிவிடுவீர்களோ, பயமாக இருக்கிறது சூரி?’

‘ எனக்கும் கூட அப்படியாகத்தான் இருக்கிறது, டெல்லி என்னைக் கைக்கழுவி விடுமோ என்று…’

அன்றைய தினம், என்னிடம் அவர் சரியாக முகம் கொடுத்துப் பேசிடவில்லை. அவரது பார்வை, கவனம், ஏக்கமெல்லாம் டெல்லியின் மீதே இருந்தது.

ஞானசூரி காணாமல் போனச் செய்தி, பல்கலைக்கழகத்திற்குள் பேசும் பொருளானது. அவரைத் தேடி பலரும் மொழிப்புலத்திற்கு வருவதாக இருந்தார்கள். ஒருநாள் ஒரு வட்டிக்கடைக்காரர் வந்தார். அவரது கையில் ஞானசூரியின் கடவுச்சீட்டு இருந்தது. அதைக் காட்டியபடி, இதை அடமானம் வைத்து, தேர்வுக்கட்டணம் இன்னும் பிற செலவுக்காக இருபதாயிரம் உரூபாய் கடன்வாங்கியதாகவும், இதுநாள் வரை வட்டித் தரப்படவில்லை எனவும், சொல்லிக்கொண்டிருந்தார். ‘இதெல்லாம் உனக்குத் தெரியுமா?’, எனக் கேட்பதைப் போல என் தோழிகள் என்னைப் பார்த்தார்கள். நான் மடவம் ஆக மடந்தையென உதடுகளைச் சுழித்தேன்.

ஞானசூரியின் முகநூல் பக்கம் முடமாகி இருந்தது. கடைசியாக அவர் இடுகை செய்த, ‘விரைவில் ஒரு நற்செய்தி’ என்கிற பதிவுடன் அப்படியே இருந்தது. அதற்கு அறுபத்து ஏழு விருப்பங்கள் விழுந்திருந்தன. ஒன்றிரண்டு பேர் கருத்துகள் பதிவிட்டிருந்தார்கள். அவரது உள்பெட்டிக்கு முடங்கல் நான் தொடர்ந்து அனுப்புவதாக இருந்தேன். என் தோழிகள், புலனத்தின் வழியே, அவரது புகைப்படத்தைப் பதிவிட்டு, இவர் கொஞ்ச நாட்களாகக் காணவில்லையெனவும், இவரை எங்கேயேனும் பார்க்க நேர்ந்தால், தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.

ஒருநாள் காவல்துறையினரின் விசாரணைக்கு நான் அழைக்கப்பட்டேன். அவர்கள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், என் பெயரைச் சேர்த்துக்கொண்டார்கள். நாங்கள் கைகோர்த்துக்கொண்டு உலாவிய கோவில், குளம், பூங்கா, நூலகம்…எல்லாம் அவர்களின் கேள்விகளாக வந்து விழுந்தன. அவருக்கு நானும், எனக்கு அவரும் அனுப்பிய குறுந்தகவல்களை எடுத்து வைத்துகொண்டு, காவல்துறையினர் கேட்ட புல்லுரை கேள்விகளால், என் அம்மா இரு காதுகளையும் இறுகப் பொத்திக்கொண்டு கதறினாள். ‘இதையெல்லாம் கேட்கவா, உன்னை முனைவராய்வு படிக்க அனுப்பி வைத்தேன்’ என்றவாறு தலையில் அடித்துக்கொண்டாள்.

‘ அவனிடம் எதையடி கண்டு மயங்கினாய்?’ அம்மா, அவரை அத்தனைத் திருத்தமாக, அவன் என விளித்திருக்க வேண்டியதில்லை. அம்மாவின் கேள்விக்கு எதை நான் பதிலாகச் சொல்வேன். ‘ அவர் பேசும் மொழிதான்ம்ம்மா’

‘அய்யோ, என் மகள் பேசுவதைப் பாருங்களே!’ தலையை அவள் சுவற்றில் முட்டிக்கொண்டாள். அம்மாவின் பார்வையில் நான், வண்டுகள் உழுக்கிய குவளை மலரென ஆகிவிட்டிருந்தேன்.

ஒருநாள், இராசராசசோழன் சிலையின் காலடியில் அமர்ந்து, கடல் கொண்டும், காலம் கொள்ளாத சோழனையும் ஞானசூரியையும் ஒருசேர நினைத்து கலங்கினேன். இன்னொரு நாள், பெரியகோவிலுக்கும் பின்புறம், துணங்கைக் கூத்து வீதியில், ஓர் ஆடுகளத்திற்குரிய மகளாக நின்றுத் தேடினேன். தேடியென்ன, அலைந்தென்ன, பார்க்க யாரும் அவரைப் போலவே தெரிகிறார்களே தவிர, அவராகத் தெரியவில்லை.

இத்தனை நாட்கள் அலைந்தும், அவருக்காக மெலிந்தும், அவர் மீது எனக்கு ஏன் வெறுப்பு வரவில்லை?. என் மீதே எனக்குக் கோபம் வந்தது. அவரை நான் மறக்க நினைக்க, நினைக்க பச்சைப் பாம்பினது சூலின் முதிர்ச்சியைப் போன்று எனக்குள் அவர் வளரவே செய்தார்.

ஒரு நாள், என் தோழிகள் எனக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு வீட்டுக்கு வந்தார்கள். என் மெலிந்த உடலைப் பார்த்து இரங்கியவர்கள், ‘ என்னடி ஆகிவிட்டது உனக்கு, அத்திப் பழத்தை ஏழு நண்டுகள் சிதைத்ததைப் போலிருக்கிறாய், இது என்னடி கன்னத்தில் காயம்?’

‘ இந்த கைநகக்குறி அவரை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. இந்தக் குறிக்குக் காரணமான நகம் என்னை அவருக்கு ஞாபகப்படுத்துமா?’ என்றேன்.

‘ சாந்தினி, வீணாக அவரை நினைத்துக் குழப்பிக்கொள்ளாதே. அவர் எங்கேயும் போயிருக்க மாட்டார். அவரது கடவுச்சீட்டு அடமானம் இருக்கிறது. அவரால் வெளிநாட்டுக்கு விமானத்தில் ஏறி பறக்க முடியாது. அவர் படித்த பட்டச் சான்றுகளெல்லாம், பல்கலைக்கழகம் வசம் உள்ளன. அஃதில்லாமல், வேறொரு பல்கலைக் கழகத்தில், சேர்ந்திருக்கப் போவதில்லை. கள்ளத் தோணியில் பிறந்தகம் செல்ல வாய்ப்பே இல்லை. இரு நாடுகளும் கடலோர கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. காலால் நடந்தே கடலைக் கடக்க அவரொன்றும் சித்தரோ, ராமரோ அல்ல. அவர் ஏதிலி என்பதால், மாநில எல்லையைத் தாண்டிச் செல்ல முடியாது. அப்படியே சென்றால், காவல்துறையினர் பிடிக்கவே செய்வார்கள்.

தூதரகத்திலிருந்து ஏகப்பட்ட நெருக்கடிகள். கடலோர காவல்படையினர் தெருத்தெருவாகத் தேடி வருகிறார்கள். வெளியுறவுத் துறை, உள்துறையிடம் ஞானசூரியைத் தேடி கண்டுபிடித்து தரச்சொல்லி கேட்டிருக்கிறது. அவர்கள் நாடு, மலை, பாலையென எங்கும் தேடுவதாக இருக்கிறார்கள். இது ஒரு புறமிருக்க, கடவுச்சீட்டை நம்பிக் கடன் கொடுத்தவர் ஆள் வைத்து ஊர், ஊராகத் தேடிவருகிறார். நாங்கள், உறவினர்கள் மூலமாகத் தேடி வருகிறோம். ஒரு வாரமாகவே பத்திரிகைச் செய்திகளில் ஞானசூரிதான். போதாக்குறைக்கு, தொலைக்காட்சிகள் ஞானசூரி எங்கேயென விவாதம் நடத்தத் தொடங்கிவிட்டன. இவ்வளவு தேடலுக்குப் பிறகும் ஞானசூரி நமக்குக் கிடைக்காமல் போய்விடுவாரா? ’ என்றவாறு என்னைத் தேற்றினார்கள்.

‘ அவரது இந்நிலைக்கு நான்தான் காரணமென, அலர் தூற்றித் தூற்றி இந்த ஊரும், தெருவும் இன்புறுகிறதடி’ என்றேன்.

‘ சீதையைத் தூற்றாதத் தூற்றலா? வாரும், இராமேஸ்வரம் சென்று, இராமனும் சீதையும் பிரிந்து ஒன்று சேர்கையில், ஒன்றாக வழிபட்ட சிவனை நாம் வழிபட்டு வருவோம்..’ என அழைத்தார்கள்.

நான் தோழிகளுடன் கோவிலுக்குச் சென்றேன். கோவில் வாயிலிடத்தில், ஒரு கட்டுவிச்சி கைப்பிரம்புடன், சோழிகளை உருட்டிக்கொண்டிருந்தாள். அவளிடம் என்னை அழைத்துச் சென்று, என் உள்ளங்கையை நீட்டச் சொன்னார்கள். கட்டுவிச்சி, என் ரேகையைப் பார்த்து, இராமன்சீதையை நெஞ்சுருகப் பாடி, கண்களை இறுக மூடி, சோழிகளைக் கண்களுக்குக் கொடுத்து உருட்டினாள். நான்கைந்து உருட்டல்களிலும் சோழிகள் ஒற்றைகளாக விழுந்தன. அதை அள்ளி, உள்ளங்கைக்குள் குலுக்கியபடி ‘ வரும் பௌர்ணமிக்குள், கைவிட்டு சென்ற பொருள் கைகூடும் ’ என்றவாறு, மடிக்குள் கையை விட்டு, திருநீற்றை அள்ளி, என் நெற்றியில் பூசி, வாய்க்குள் ஒரு கீற்று உதறினாள்.

நான் எழுந்து, ஒரு பக்கத் திசையைப் பார்த்தேன். மேகத்திரட்டுக்குள் ஆதிசூரியன் மறையவும், மீளவுமாக இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *