நடுகைக்காரி!….தொடர் 20 ….. ( (குறுநாவல் ) ஏலையா க.முருகதாசன்.

![]()
இரண்டு குடங்களிலும் தண்ணியை நிரப்பிய ஞானம் பாறுவையும் கூட்டிக் கொண்டு போகையில் „நான் ஒரு குடத்தைக் கொண்டு வரட்டா என்னிடம் தாருங்கள் „ என்று பாறு கேட்க „தூக்க முடியுமா, கொஞ்சந்தான் குடத்தின் வாய் கையிலிருந்து வழுக்கினாலும் குடம் விழுந்து உடைஞ்சிடும் கவனம் ..ம்…தூக்குங்கள் „ என்று குடத்தைப் பிடித்தபடியே ஞானம் சொல்ல,குடத்தின் வாய்க்குள் கையைவிட்டு பாறு உறுதியாக பிடிக்க ஞானம் குடத்துக்குள்ளிருந்து கையை எடுக்கிறான்.
வேறு இடமாகவிருந்தால் ஞானம் பாறுவின் விரல்களை தொட்டு ஏதாவது செய்திருப்பான்.அப்படி சில்மிசம் செய்ய பாறு வெட்கத்தாலோ கூச்சத்தாலே பிடிச்ச பிடியைத் தளரவிட்டால் தண்ணிப் பாரத்துடன் இருக்கும் குடம் கீழை விழுந்து உடைந்துவிடும் என்று ஞானத்திற்குத் தெரியும்.
அதனால் குடத்துக்குள்ளிருந்து கையை எடுக்கும் போது „கவனம் இறுக்கிப் பிடியுங்கள் கையை எடுக்கப் போகிறன் „ என்று சொல்லிக் கொண்டே கையை எடுக்கிறான்.
தண்ணி நிரம்பிய குடத்தை இறுக்கிப் பிடித்த பாறு அதனை தூக்கிக் கொண்டே ஞானத்துடன் போய் குழிக்குள் தண்ணியை வார்க்க முயற்சிசிக்க’ பொறுங்கள் தண்ணி எப்படி வார்க்க வேண்டுமென்று காட்டித்தாறன்’ என்றவன், குடத்தைத் தூக்கி அதன் வயிற்றுப் பகுதியை இடது கையின் முன்கையில் வைச்சுக் இறுக்கிப் பிடிச்சபடி வலது கையால் குடத்தின் வாயைப்பிடித்து குழிக்கு நேரே பிடிச்சு விரல்களை விரிச்சு சரித்து தண்ணியை வார்த்தான்.
அதைக் கவனிச்சுக் கொண்டிருந்த பாறுவிடம் „இப்படித்தான் வார்க்க வேண்டும், அப்பதான் தண்ணி குழிக்குள் பரவலாக விழும் என்றான்.
ஞானம் தண்ணியை குழிக்குள் வார்த்துக் கொண்டே போக, பாறுவுக்கு இது பழக்கமில்லாததால் பானையை இறுக்கிப்
பிடிப்பதில் தட்டுத்தடுமாறி, ஐஞ்சாறு குழிகளுக்குப் பிறகு ஒழுங்காக வார்க்கத் தொடங்கினாள்.
தண்ணி வார்த்து முடிஞ்சதும்,அட்டாளைக்குப் போய் புடலங் கொட்டைகளை எடுத்து வந்த ஞானம்,’ பாறு இஞ்சை பாருங்கோ இப்படித்தான் கொட்டையை குழிக்குள் புதைக்க வேண்டும் „ என்று, ஒரு புடலங் கொட்டையை பெருவிரலாலும் சுட்டு விரலாலும் பிடித்து எடுத்து குழிக்குள் புதைச்சவன், நல்ல ஆழமாய் புதைக்கக்கூடாது, நீங்களும் புதையுங்கள் என்கிறான்.
துணியில் கட்டி வைச்சிருந்த புடலங் கொட்டைகளை இருவருமாக புதைச்சுக் கொண்டிருக்க’குழிக்குள்ளை இப்பிடித்தான் புதைக்க வேணுமா’ என்ற பாறு குறும்புச் சிரிப்புடன் அவனைப் பார்க்க „ம்…உந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியும் என்று அவனும் சிரிக்கிறான்.
வெயிலில் வேலை செய்தபடியால் கள்ளுக் குடிச்ச புத்தணர்ச்சி ஞானத்துக்கு குறையத் துடங்கியது.
புடலங் கொட்டைகளை நட்டு முடிய ஞானமும் பாறுவும் திரும்பவும் அட்டாளைக்குள்ளை வந்து உட்காருகிறார்கள்.
பாறுவின் முகத்தைப் பார்த்த ஞானம் „உங்களுக்கு நல்லாய் வேர்த்துப் போட்டுது „ என்று சொல்லிக் கொண்டே அட்டாளைப் பரணிலிருந்து பெரிய துவாய் ஒன்றையும் கோம்பா சவர்க்காரத்தையும் எடுத்துக் குடுத்து,கிணத்திலை தண்ணி அள்ளி வாளிக்குள்ளை ஊற்றி அள்ளி முகத்துக்கு சவர்க்காரம் போட்டுக் கழுவுங்கள் „ என்று சொல்ல, „ இந்த வெக்கைக்கு குளிச்சால் நல்லது போல கிடக்குது’என்று பாறு சொல்ல’ குளிக்கப் போறியளா’ என்று கேட்ட ஞானம் நாலு திசையிலும் திரும்பிப் பார்க்கிறான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தத் தோட்டக்காரர்களும் இல்லையென்பதைக் கண்டதும், அட்டாளையிலையிருந்து கைலி ஒன்றை எடுத்துக் குடுத்து’ இதைப் பிறகு சட்டைக்கு மேலை கட்டுங்கள், சட்டையைக் கழற்றி வைச்சிட்டு சாரத்தை நல்லாய் மேலை கட்டிக் கொண்டு குளியுங்கள், ஆரேன் பார்க்க முந்தி
கெதியாய் குளியுங்கள் „ என்று ஞானம் சொல்ல, „ நீங்கள் முதலிலை தூரமாய் போய் இஞ்சை திரும்பிப் பார்க்காமல் நில்லுங்கள்’ என்று பாறு சொல்ல, ஞானம் எழுந்து புடலங் கொட்டை நட்ட தோட்டத்திற்குப் போய் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.
அட்டாளையின் கிழக்கப் பக்கமும் மேற்குப் பக்கமும் சாக்கால் மறைக்கப்பட்டிருப்பதால் பாறு கொஞ்சம் வளைந்து நின்றபடி அதற்குள் நின்று சட்டையை கழட்டி கைலியை மேலே கட்டியவள் வேகமாக கிணத்தடிக்குப் போய் வேகமாக குளித்து முடிக்கிறாள்.
புடலங் கொட்டை தோட்டத்திலையிருந்து ஞானம் திரும்பிப் பார்க்கையில்,பாறு குளிச்சு முடிஞ்சு அட்டாளைக்குள் குனிஞ்சு நுழைவதைக் கண்டதும் ஞானம் கொஞ்சம் தாமதிக்கிறான்.
ஐஞ்சு நிமிசத்துக்குள் உடையை மாற்றிய பாறு ஞானம் குடுத்த கைலியை சட்டைக்கு மேலே கட்டியபடி , அட்டாளைக்கு வெளியே வந்து தலை ஈரத்தை எடுத்துக் கொண்டு „ வாங்கோ „ என்று ஞானம் நின்றிருந்த திசையை நோக்கி கூப்பிட ஞானம் அவளை நோக்கி வருகிறான்.
அவளருகில் வந்ததும் „கோம்பா சவர்க்காரத்தின் வாசம் மூக்கைத் துளைக்கின்றதே „என்றவன் பாறுவின் முகத்தையம் நீர் சொட்டி நின்ற தலைமயிரையும் பார்த்தவன் „ இஞ்சை துவாயைத் தாங்கோ தலைமயிர் ஈரத்தைத் துவட்டி விடுகிறன் „ என்றவன் அவளின் பதிலுக்கு காத்திராமல், அவளிடமிருந்து துவாயைப் பறித்தெடுத்து, பாறுவின் சட்டையில் தலைமயிரின் ஈரம் படாதவாறு தூக்கி பிடித்தபடி பக்குவமாக ஈரத்தை துவட்டிக் கொண்டிருந்தான்
ஞானம் பாறுவின் தலைமயிரைத் துவாயால் துவட்டியபடியே „உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமே அக்காமார் இரண்டு பேரும் குமர்ப்பிள்ளைகளாய் வீட்டிலை இருந்த போதெல்லாம் நான் வீட்டிலை நிற்கிற நேரத்திலை பெரும்பாலும் நான்தான் அவைக்கு தலைமயிரத் துவட்டி விடுவன்,நான் கொஞ்சமும் ஈரமில்லாமல் துவட்டிவிடுவன்,அந்த நேரங்களிலை
அக்காமார் சொல்லுவினம்’ உனக்கு பெண்டாட்டியா வரப் போறவள் குடுத்து வைச்சவள்’ எனறு சொல்லிக் கொண்டே துவட்டிக் கொண்டிருந்தவன் அக்காமார் சொன்னது சரிதானே பெண்டாட்டிக்குத்தான் தலையீரத்தை துவட்டி விடுகிறன் என்கிறான்.
துவட்டி முடிய பாறு ஞானத்தைத் திரும்பிப் பார்க்கிறாள்.அவளின் கண்கள் இரண்டிலும் கண்ணீர் முட்டி நிற்பதைக் கண்டதும்’ ஏன் அழுகிறியள்’ என்று ஞானம் கேட்க „ ஒன்றுமில்லை’ என்று சொல்லிக் கொண்டே அட்டாளைக்குள் பாறு நுழைய ஞானமும் அவளைப் பின் தொடர்ந்து நுழைகிறான்.
„தேத்தண்ணி போட்டுக் குடிப்போமோ „ என்று கேட்ட ஞானம், எட்டி கேத்தல் மூடியைத் திறந்து பார்க்கிறான் இருவருக்கு N;தத்தண்ணி போடக்கூடிய அளவில் நன்னாரிக் கிழங்கு வெந்த தண்ணி இருப்பதைக் கண்டவன் அடுப்பை எரிக்கத் தொடங்குகிறான்.
அட்டாளைக் கப்போடு சாய்ந்தபடி முன்பு வாசித்த சஞ்சிகையொன்றின் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்த பாறுவின் தலைமயிரை வயல்காற்று பறக்கவிட்டு அவளின் முகம் எங்கும் பரவ அவற்றை அடிக்கடி ஒதுக்கிவிட்டபடியே சஞ்சிகையை வாசிப்பதும் பக்கங்களை புரட்டுவதுமாக இருந்த பாறு, வயல்வெளியில் பறந்து கொண்டிருக்கும் உழவாரக் குருவிகளை பார்த்தவாறு அமைதியாக இருந்தவள் திரும்பி காதல் கனிவோடு ஞானத்தைப் பார்க்கிறாள்.
அவளையே கவனித்துக் கொண்டு தேத்தண்ணியைப் போட்டு மூக்குப் பேணியில் ஆத்தி அவள் கையில்’ இந்தாங்க குடியுங்கோ „ என்று குடுத்தவன் அவள் யோசித்தபபடியே வாங்குவதைக் கவனித்த ஞானம்’ என்ன பலமான யோசனை’ என்று கேட்க, „ஒன்றுமில்லை „ என்று பாறு சொல்ல,’இல்லை நான் நம்பமாட்டன் நீங்கள் எதையோ யோசித்துக் குழம்பிப் போயிருக்கிறீர்கள் எதுவென்றாலும் சொல்லுங்கள், நான் உங்கடை புருசன்தானே, எனக்குச் சொல்லலாந்தானே „ என்று ஞானம் சொல்ல எதுவுமே பதில் சொல்லாமல்
தேத்தண்ணியை குடிச்சு முடிச்சவள் சப்பாணிக் கட்டிக் கொண்டு தேத்தண்ணி குடிச்சுக் கொண்டிருந்த ஞானத்திடம் „ காலை நீட்டிக் கொண்டிருங்கள் „ என்று பாறு சொல்ல, ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் கைலியை கணுக்கால் வரையும் இழுத்து விட்டபடி காலை நீட்டுகிறான் ஞானம்.
ஞானமே எதிர்பார்க்கவில்லை பாறு அவனின் துடையில் கையொன்றை கன்னத்தில் வைச்சபடி சரிஞ்சு படுத்தவள் கண்களை மூட கண்கள் இரண்டிலிமிருந்து கண்ணீர் வடிந்து அவனின் துடையை நனைக்க அதன் சூட்டால் பாறு அழகிறாள் என்பதை உணர்ந்த ஞானம் அவளின் தலையை தன்னை நோக்கித் திருப்ப அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிய சொண்டுகள் துடிக்க’ நான் உங்கள் பெண்சாதிதானே,என்னைக் கைவிடமாட்டியள்தானே……நாங்கள் வேறை நீங்கள் வேறை ..அதுதான் பயமாயிருக்கு…நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விரும்பிற போது பிரச்சினையில்லை…ஆனால் கல்யாணம் என்று வரேக்கிலை என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயமாயிருக்கு…நீங்கள் கெதியிலை வேலைக்குப் போங்கள்…என்னைக் கூட்டிக் கொண்டு போங்கள் „ என்று பாறு விம்மி விம்மி அழ,’தேவையில்லாமல் கற்பனை பண்ணி அழாதீங்கள், நீங்கள்தான் என்ரை பெண்சாதி, யார் எதிர்த்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையே இல்லை, யோசிக்காமல் நிம்மதியாக இருங்கள் „ என்று ஞானம் சொல்ல „நான் நம்பிறன்’ என்ற பாறு கண்களை மூடியவாறு அவனுடைய மடியில் படுத்திருக்க, பாறுவின் தலையை வருடிக் கொண்டிருந்தான் ஞானம்.
தங்களுடைய தோட்டத்தை நோக்கி யாரோ வரும் காலடிச்சத்தம் கேட்கவே’ யாரோ வருகினம் போல’ என்று ஞானம் சொல்ல வேகமாக ஞானத்தின் மடியிலிருந்து தலையை எடுத்தாள் பாறு.
யாராக இருக்கும் என்று யோசித்தவாறு அட்டாளைக்கு வெளியே வந்த ஞானம்,எழும்பி வரவேண்டாம் என்று பாறுவுக்கு கையால் காட்டிவிட்டு நிமிர,காராளபிள்ளையின் மனுசிக்காரி வந்து கொண்டிருப்பதைக் காண்கிறான்.
(தொடரும்)
![]()