கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!…. 4 ….. ( கட்டுரை ) …. அவதானி.

இன்னொரு நாட்டினுடைய முழு விபரங்களையும் அறிந்து கொள்வதற்கு பல கட்டமைப்புகள் பல வடிவங்களில் இயங்குகின்றன.

உணவுச்சாலைகளை முதன்மைப்படுத்தி ஏன் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேனென்றால் உணவு இல்லையேல் மனிதனால் உயிர் வாழ முடியாது என்பதேயாகும். அவசர உலகத்தில் மனிதர்கள் அவசரம் அவசரமாக உண்டுவிட்டுப் போகும் உலகமாக இன்று காலம் மாற்றமடைந்துவிட்டது.

விஞ்ஞான வளர்ச்சிகள் மனிதனை உந்தித் தள்ளிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவசர உணவு என்பது இன்றிமையாததாகிவிட்டது.

மனிதர்களிடம் காணப்படும் இந்த அவசரமே உளவு பார்க்கும் நாட்டின் மூலதனம். அவசரமும் ஒரு சில நிமிடங்களுக்குள் கிடைக்கும் உணவு மூலம் இந்த அவசர மனிதர்களை ஒரு இசைவாக்கத்திற்கு உட்படுத்துவதில் வல்லரசு நாடு வெற்றிகண்டு முடித்துவிட்டது.

பெரும் போக்காக பொதுவாக யோசித்துப் பார்ப்பவர்க்கு உணவுச்சாலைகளும் உளவு பார்க்கும் நிறுவனங்களா என எண்ணத் தோன்றலாம்.

எந்த நாட்டிலிருந்து இந்த உணவுச்சாலைகள் இன்னொரு நாட்டில் அமைக்கப்படுகின்றதோ அந்த நாட்டுக்காக உளவு பார்த்தலை தேசிய உணர்வுடன் அதில் பணிபுரியும் அந்த நாட்டு அதிகாரிகள் செய்வார்கள்.

ஒவ்வொரு நாட்டு மனிதனும் தனது நாடே சிறந்தது என்று நினைப்பதில் வியப்பேதும் இல்லை.ஆனால் வல்லரசு நாடு உலகை தனது கைக்குள் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக, மற்றைய நாடுகளின் பலம் என்ன பலவீனம் என்ன என்பவற்றை அறிவதை முதன்மை வேலையாக மேற்கொள்கின்றது.

இராணுவ இரகசியங்கள் மட்டுந்தான் முக்கியமான இரகசியமல்ல.அதைவிட அன்றாட வாழ்வின் நடைமுறைகளை இயக்குவதன் மூலம் மக்களை அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் திட்டமிடலை கண்காணிப்பதே

முக்கியமானதாகும்.அவற்றை பலவீனப்படுத்துவது சிதைப்பது உளவு பார்க்கும் நிறுவனத்தின் முக்கிய திட்டமாகும்.

ஒரு குடிமகனின் மகிழ்ச்சியான வாழ்வே நாட்டின் இறுக்கமான தன்மைக்கு அத்திவாரமாகும். ஒரு தனிமனிதனின் தேவைகளை அரசு பூர்த்தி செய்யாது விட்டால் அவனுக்கு அரசு மீது வெறுப்பு உண்டாகும்.அவனிடமிருந்து தன் நாட்டையே வெறுக்கின்ற கோபமும், கண்டனங்களும், விமர்சனஙகளும் எழும்.

இவைதான் உளவு பார்க்கும் நாட்டின் பலம். தனது நாட்டைவிட வேறு எந்த நாடும் தன்னை மீறிய நிலைக்கு வந்துவிடக்கூடாதென்பதில் வெறுப்புற்ற கோபம் கொண்ட மனிதர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தமது சொந்த நாட்டுக்கு எதிராகவே திருப்பிவிடுவதில் மிகவும் நுட்பமாக வல்லரசு நாடுகள் அணுகும்.

உணவுச்சாலைகளில் பணிபுரியும் அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட ஒற்றர் வேலைகளை சில்லறைப் பணியாளர்கள் மூலமாக நிறைவேற்றிவிடுவார்கள்.

வல்லரசு நாட்டின் உணவுச்சாலை அதிகாரியுடன் கலந்துரையாடும் ஒரு சாதரண பணியாளன் தனது நாட்டின் சமூக பொருளாதார கட்டமைப்பின் பலவீனங்களையும் பலத்தையும் யதார்த்தமாக உரையாடலில் தெரிவிக்கும் போது அதைக் கவனத்தில் கொள்ளாதது போல இருக்கும் அதிகாரி அவன் சொன்ன தகவல்களை அவன் அறிந்து கொள்ளாத வகையில் சேமிப்பார். தனது நினைவுப் பகுதியிலம் அல்லது சட்டைப் பைக்குள்ளிருக்கும் கைத்தொலைபேசி ஊடாகவும்கூட இருக்கலாம்.

சில வேளைகளில் இந்தச் சில்லறைப் பணியாளனின் உறவினரோ அல்லது நண்பர்களோ வேறு ஒரு நிறுவனத்தில் அதிகாரிகள் இருப்பார்கள்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தமது திணைக்களம் சம்பந்தப்பட்ட இரகசியங்களை அல்லது கட்டமைப்புகள் பற்றிய விபரங்களை சொல்லியிருப்பார்களானால் அதனை தனது அதிகாரியுடன் பகிர்ந்து கொள்வான்.

அதிகாரியாக அனுப்பப்படுபவர்கள், உணவு நிறுவனத்தின் வியாபித்தலை மட்டும் அல்ல தனது நாட்டுக்காக உளவு பார்த்தல் என்ற ஒற்றர் வேலையையும் செய்வார்கள்.

வெளித்தோற்றத்தில் பணிபுரிநிலையில் அவர் அதிகாரியாகத் தோற்றப்படினும் அவர் ஒற்றர் வேலையையும் செய்கிறார் என்பதை எவராலுமே கண்டுபிடிக்க முடியாது.

அந்த அதிகாரி உரையாடும் போது இரகசியங்களை உள்வாங்கும் மனிதராக இருக்கிறாரோ என எவராலுமே கண்டுபிடிக்க இயலாது.

ஏனெனில் வல்லரசு நாட்டின் மத்திய ஆய்வு ஒருங்கமைப்பில் அவர் அதற்கான பயிற்சினைப் பெற்றவராக இருப்பார்.

பணிபுரியும் சில்லறைப் பணியாளர்களின் குணவியல்புகள் அவரவர் எந்த நாட்டுக்குரியவர்களோ, அதற்கமைந்த பண்பாட்டுக்குரியவர்களாகவே இருப்பார்கள்.

வேறு வேறு பண்பாடு உடையவர்களை எவ்வறெல்லாம் இறால் போட்டு சுறாப் பிடிக்கும் தந்திரோபயத்திற்கமையவே அவர்களை அணுகுவார்கள்.

உதாரணமாக ஒரு போலந்து நாட்டவனுடன் உரையாடும் அதிகாரி போலந்து நாட்டின் முக்கியத்துவத்தை அதில் உள்ள பண்பாட்டு விழுமியங்களை தனித்தன்மை வாய்ந்த உணவுகளை வாயாரப் புகழ்வது போல புகழ்வார்.

அதனைக் கேட்டு உச்சிகுளிர்ந்து போகும் சில்லறைப் பணியாளன் தான் பணிபுரியும் நாட்டினுடைய, தான் அறிந்து கொண்ட இரகசியங்களை மட்டுமல்ல தனது நாட்டின் இரகசியங்களையும் யதார்த்தமாகச் சொல்லுவன்.அதிகாரியும் தனக்கு இதில் ஆர்வமில்லாதது போல கேட்பார்.

ஒரு சில்லறைப் பணியாளன் மூலமாகப் பெறப்படும் தகவல்களின பெறுமதியைப் பொறுத்து அந்தப் பணியாளன் தனது பணியில் உயர்த்தப்படுவான்.

பணி உயர்த்தப்படுதல் என்பது அப்பணியாளனின் கடுமையான உழைப்புக்கு கொடுக்கப்பட்ட உயர்வு என்ற மாயத் தோற்றம் உருவாக்கபட்டுவிடும்.

இத்தகு பணியாளன் அதிகாரி என்ற ஒற்றன் விரித்தவலையில் சிக்கிக் கொண்டவனாகிறான். அவனுக்கு சக பணியாளர்களுக்குத் தெரியாமலே பல சலுகைகள் வழங்கப்படும்.

தனியாக அவனை அழைத்து விருந்து கொடுத்தல், சுற்றுலா செல்லுதல் போன்றவை மட்டுமல்ல தொடர்ச்சியாக அவன் கொடுக்கும் தகவலைப் பொறுத்து நிதி அன்பளிப்பும் செய்யப்படும்.

முக்கிய திணைக்களங்களில் பணிபுரியும் அவனுடைய நண்பர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ பெறப்படும் தகவல்கள் அதிகாரிகளுடன் வேறு ஒரு இடத்தில் சந்திப்பில் வைத்து அவனால் சொல்லப்டும்.

மனிதர்கள் மூன்று முக்கியமான பலவீனங்களுக்கு உட்பட்டவர்கள்.பலரை இப்பலவீனங்களே ஆட்டிப்படைக்கின்றன. பெண்ணாசை, பொருளாசை, மண்ணாசை போன்றவையே அவை.

பயிற்றப்பட்ட தேர்ந்த அதிகாரி ஒருவருடன் உரையாடும் போது அவருடன் இருக்கும் இல்லாமையையும் பலவீனத்தையும் அறிந்து கொள்வான்.

அது அவனைக் கையாளும் நெம்புகோல் போன்றது.தன்னுடைய பலவீனத்தை காட்டிக் கொள்ளாமலிருக்கும் பணியாளன், அதிகாரியின் பார்வைக்குள்ளும் உரையாடலுக்குள்ளும் அகப்பட்டு தனது பலவீனத்தை வெளிக்காட்டிவிடுவான்.

அவனின் தேவை அதிமுக்கியமானது என்றால் அவனின் பலவீனம் அதிகாரியினால் நிவர்த்தி செய்யப்படும். அதிகாரி நேரிடையாகவும் அதனை நிவர்த்தி செய்யமாட்டார். வேறு ஒருவரால் அவை செய்யப்படும்.

அன்றாடம் நாம் காணும் சாதாரண செயல்பாடுகள் அன்றாடம் நடக்கும் இயல்பானவை என சாதரண மனிதர்களுக்குத் தோன்றலாம், அன்றாடம் வரும் பத்திரிகைச் செய்திகள் வெறும் செய்திகளாக வாசிப்பவனுக்குத் தோன்றலாம். ஆனால் அவை யாவும் உளவு பார்க்கும் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய இரகசியங்களே.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button