தமிழ் மறுமலர்ச்சி, திராவிடம், திராவிட முன்னேற்றம், தமிழ் தேசியம்….. தமிழகம்!…. ( கட்டுரை ) ….. சங்கர சுப்பிரமணியன்.


தமிழ் அடிமைப்பட்டு தமிழரின் வாழ்வில் இருண்ட காலமாயிருந்தபோது ஆங்கிலேயரிடம் ஒட்டுமொத்த இந்தியாவும் அடிமைப்பட்டிருந்த காலத்தில்தான் தனித்தமிழ் இயக்கம் மூலம் தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. ஆனாலும் மற்ற மொழியினரின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் இருந்தது.
ஆதலால் இந்தியா தவிர்த்து மற்ற இடங்களான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களின்
சூழ்நிலையும் தமிழ்நாட்டில் வாழும்
தமிழர்களின் சூழ்நிலையும் ஒன்றல்ல. இந்த அடிப்படை தெரியாமல் எல்லோருமே அரசியல் பேச ஆரம்பித்து விடமுடியாது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில்
இந்தியாவை மூன்று பிரிவுகளாக பிரித்து ஆட்சி செய்தனர் ஆங்கிலேயர். அப்படி ஏற்பட்டதே மெட்ராஸ் மாகாணம் பம்பாய் மாகாணம் மற்றும் கல்கத்தா மகாணம்.
இப்படி பிரிக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணத்தில் இன்றைய கர்னாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அடங்கியிருந்தன. இதேபோல்தான் பம்பாய் மற்றும் கல்கத்தா மாகாணங்களில் அவற்றின் அருகிலிருந்த இன்றைய மாநிலங்கள் அடங்கியிருந்தன.
இந்த மாகாணங்களி்ல் மெட்ராஸ் மாகாணத்துக்கு மெட்ராஸ் தலைநகராகவும் மற்றும் முறையே பம்பாய் மாகாணத்துக்கு பம்பாயும் கல்கத்தா மகாணத்துக்கு கல்கத்தாவும் தலைநகராகவும் இருந்தன.
ஒவ்வொரு மாகாண தலைநகரத்திலும் ஆட்சி அலுவல்களுக்காகவும் தொழிலுக்காகவும் அண்டைய பகுதிகளில் இருந்து நிறைய மக்கள் வந்து குடியேறினர். அதன்படியே சென்னையில் தெலுங்கர்களும் கன்னடர்களும் மலையாளிகளும் வந்து குடியேறினர். இது தவிர்க்க முடியாத ஒன்று. இதற்கு ஓர் சரியான உதாரணத்தையும்
சொல்லமுடியும். இன்று தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், வேலூர், தர்மபுரி என்று எல்லா இடங்களிலும் இருந்து வந்து குடியேறி இருக்கிறார்கள் அல்லவா? இதுபோல்தான் அன்றும் நடந்துள்ளது.
இதுதவிர தமிழகத்தில் பாண்டியர் ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து களப்பிரர், விஜயநகர மன்னர்கள், திருமலை நாயக்கர் காலத்தில் மிகவும் அதிகமாக தெலுங்கர்கள் குடியேறியதால் தமிழரின் உரிமைகள் பறிக்கப்பட்டடு தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்தும்
நிலையை அடைந்தனர். இதை வரலாறு சொல்கிறது.
இந்தநிலை தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏற்படவில்ல. பம்பாய் மாகாணத்தில் இந்தி பேசும் மக்கள் உத்தரபிரதேசத்திலிருந்தும் பீஹாரிலிருந்தும் பெருமளவில் குடியேறியுள்ளார்கள். இதனால் அங்குள்ள மராட்டியர்களின் வேலைகள்
பறிபோனதால் இந்திபேசும் மக்களே வெளியேறுங்கள் என்று போராடத் தொடங்கினர். அங்குள்ள இந்தி பேசும் மக்களை வெளியேற்ற முடியாது. இன்னும் சொல்லப்போனால் இந்தி திரைபடம் தயாரிக்கும் பாலிவுட்டே மும்பையில்தான் இருக்கிறது. உ. பி. யிலோ பீகாரிலோ இல்லை.
மராட்டிய திரைப்படமும் மராட்டிய மொழியும் மராட்டியரின் தலைநகர் மும்பையில் இரண்டாம் இடத்தில்தான் உள்ளது. சென்னையில் அந்நிலை இல்லை. அதேபோல் கல்கத்தாவுக்கும் அஸ்ஸாமுக்குமிடையே பிரச்சனை இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
எனவே இந்திய அரசியலைப்பற்றி
முழுதாகத் தெரிந்து கொள்ளமல் இந்தியத் தமிழரை இன்றைய நிலைக்காக குறைகூற
முடியாது.
இயல்பிலேயே வந்தாரை வாழவைப்பவர்கள் தமிழர். இதில் அரசியல் நிலைப்பாடுகளால் ஏற்பட்ட குடியேற்றமும் சேர்ந்து கொண்டது. இதற்கெல்லாம் காரணம் ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவின் பெருநகரங்களாக மெட்ராஸ், பம்பாய், மற்றும் கல்கத்தா மூன்றுமே இருந்தன. அதனாலேயே மாகாணங்களின் தலைநகரமாகி அண்டைய பகுதிகளில் இருந்து மக்கள் குடியேறினர்.
அன்று ஏற்பட்ட நிலைக்கு இன்றுவரை இந்த மூன்று நகரங்களும் பின்விளைவுகளை சந்தித்து வருகின்றன.
ஆதலால் இந்தியாவில் தமிழருக்கு மட்டும் பிரச்சனை இல்லை. மராட்டியருக்கும் வங்காளிகளுக்கும் இந்த பிரச்சினை இருக்கவே செய்கிறது.
தமிழகத்தில் தீண்டாமை, சாதிக்கொடுமை, மற்றும் பெண்ணடிமைத்தனம் போன்றவை ஆங்கிலேயர் காலத்திலும் அதற்கு முன்பும்
தலைவிரித்து ஆடியது. இவற்றைக் களைய நீதிக்கட்சியும் அதனைத் தொடர்நது திராவிடர் கழகமும் தோன்றின. இப்படி தோன்றிய அமைப்புக்களில் ஏற்கனவே தமிழகத்தில் இருந்த தெலுங்கர் ஆதிக்கத்துடன் கன்னடர் மற்றும் மலையாளிகளும் இருந்தனர். இப்படி உருவான திராவிடர் கழகத்தால் தீண்டாமை, சாதிக்கொடுமை, மற்றும் பெண்ணடிமைத்தனம் ஓரளவு குறைந்தது.
இந்த கொடுமைகள் ஒழிய காரணமாயிருந்த அமைப்பைத்தான் பார்த்தார்களே ஒழிய அதில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தமிழர் பார்க்கவில்லை. அப்படி பார்க்கும் நிலையும் ஏற்பட்டிருக்கவில்லை. எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல் வாழ்ந்தனர். அதன்பின் வாக்கு அரசியலுக்காகவும் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டாலும் மற்றும்
இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களாலும் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது.
அண்ணா தலைமையில் தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டதாலும் நல்லாட்சி நடந்ததாலும் தமிழர் மகிழ்ந்தனர். தம்மை யார் ஆள்கிறார்கள் என்றெல்லாம் எண்ணிப் பார்க்கவில்லை. அண்ணாவின் மறைவிற்குப்பிறகு தி. மு. க. வும் தி. மு. க. வில் இருந்து பிரிந்து எம். ஜி. ஆர். துவக்கிய அ. தி. மு. க. வும் மாறி மாறி ஆண்ட ஐம்பது ஆண்டுகால ஆட்சியில் லஞ்சம்தான் பெருகியதே ஒழிய தமிழ்நாட்டின் உரிமைகள் யாவும் காவு கொடுக்கப்பட்டன.
இதற்கு சான்றாக கச்சத்தீவு, நீட், காவிரியில் நதிநீர் உரிமை போன்றவற்றைச் சொல்லலாம். இது தவிர தமிழருக்கு எதிராக தீங்கான நடவடிக்கைகள் நடைபெறவும் இந்த இரு கட்சிகளும் துணைபோயின. இதற்கும் சான்றாக மீத்தேன், ஸ்டெரிலைட், அனுமின் நிலையம், எட்டுவழிச்சாலை போன்றவைகளைக் கூறலாம்.
தமிழரின் உரிமைகள் பறிபோயின. தமிழருக்கு எதிராக தமிழ்நிலத்தை அழிக்கும் அபாயகரமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழர்களுக்கு எதிராக அண்டை மாநிலங்களில் ஏற்படும் அநியாயங்களை தட்டிக்கேட்காமல் தமிழக அரசு மெத்தனப்போக்காய் இருந்து வருகிறது. மாநில உரிமைக்காக குரல் கொடுக்காமல் மெத்தனமாகவும் இக்கட்சிகளும் இருந்து வந்தன. இதற்கெல்லாம் இரண்டு காரணங்களே இருந்தன.

அந்த இரு காரணங்களில் ஒன்று லஞ்சம். இந்த இருகட்சிகளும் எக்கச்சக்கமாக லஞ்சம் வாங்கியிருப்பதால் தமிழர் உரிமைக்காக போராடமுடியாது. மீறிப் போராடினால் லஞ்சவழக்கு பாய்ந்து சொத்துக்கள் பறிபோய் சிறைசெல்ல நேரிடும். மற்றொன்று தமிழர் மண்ணை தமிழர் ஆளாமல் இருப்பது. தமிழன் ஆண்டால் அவனுக்கு தன் இனத்தின் மீதும் தனது மண்மீதும் பற்று உண்டாகும். ஆதலால் தமிழ்நாட்டை தமிழன் ஆளாதது இன்னொரு முக்கிய காரணம். ஆனால் இப்போது தமிழ்நாட்டை தமிழர்தானே ஆள்கிறார்கள் என்கிறீர்களா? ஆனால் லஞ்சம் வாங்கியுள்ளார்களே. எப்படிப் போராட முடியும். மடியில் கனமில்லை என்றால்தானே வழியில் பயம் இருக்காது?
இந்த சூழலில் தமிழ்தேசியம் பேசுபவர்கள் ஒரு மாற்று அரசியலை கொண்டு வந்து தமிழ்நாட்டை தமிழர் ஆண்டால்
தமிழ்நாட்டுக்கும் தமிழருக்கும் நல்லது என்று எண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் யாரையும் குற்றம் குறைகூற முடியாது. இத்தனை ஆண்டுகள் நம் மொழியிலே படித்து நம்மொழியே பேசி நம்முடனே வாழ்பவர்களை வெறுக்கவும் முடியாது. நம் தமிழரும் அண்டை மாநிலங்களில் வாழ்கிறார்கள். நம் தமிழருக்கு அங்கு அரசியலில் இடமில்லை என்றால் அந்த நிலைப்பாட்டை நாமும் தமிழ்நாட்டில் எடுக்கலாம். தமிழரை தமிழரே தேர்ந்தெடுக்காமல் பணத்தை வாங்கிக் கொண்டு தமிழரல்லாதவர்க்கு வாக்களித்து விட்டு அப்புறம் தமிழ்மண்ணை அவன் ஆள்கிறான் இவன் ஆள்கிறான் என்று சொல்வது பிதற்றலாகும்.
இதுதான் தமிழ்நாட்டு நிலை. இதை உணராமல் இந்தியாவுக்கு வெளியே உள்ள
நாடுகளின் தேசிய தமிழினங்களோடு ஒப்பிட்டு நோக்கமுடியாது. ஒவ்வொரு இடங்களிலும் வாழும் தமிழரின் நிலையை அவர்கள் கடந்தவந்த பாதை அங்கு அவர்கள் மற்ற இனங்களுடன் சேர்ந்து வாழும் நிலை ஏற்பட்டதா இல்லையா என்பதை எல்லாம் அறிந்தே ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.
இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் தமிழ்நாட்டுத் தமிழர் வேண்டுமென்றே எல்லா இனத்தையும் தமிழ்நாட்டுக்குள் விட்டதாக எண்ணுவது சரியல்ல. ஆட்சியும் அதிகாரமும் நம் கையில் இல்லை என்றால் கட்டாய குடியேற்றத்தை தடுக்கமுடியாது என்ற படிப்பினையை உணர்ந்து இனிமேலாவது தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()