சாமானியனின் சரடு…..17….. ( கட்டுரை ) …. சங்கர சுப்பிரமணியன்.

என் தாத்தாவுக்கு என்னை வைத்து பெருமை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கள் வீட்டில் கடிதம் வாசிக்க, எழுத என்று ஆட்கள் இருப்பார்கள். மாவட்ட நிர்வாகியிடம் மனு கொடுக்க வருபவர்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு சரி கவனிக்கிறேன் என்று சொல்லி அனுப்புவதைப்போல என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவருக்கு அப்படி ஒரு நினைப்பு.
ஊரிலிருந்து கடிதம் வந்து நாளாகிறது என்பவர்களிடம் ஒரு சில இடங்களில் இதே மாதிரியே கடிதம் வராமல் தாமதமாகி உள்ளது என்றும் கூடிய சீக்கிரம் என்ன காரணம் என்று கண்டுபிடித்து விடுவார்கள் உங்களுக்கும் கடிதம் வரும் என்று சொல்வேன். வள்ளுவர் நல்லதற்காக பொய் சொல்லலாம் என்றிருக்கிறார் இல்லையா?
சில வாரங்களில் அவர்கள் என்னைத்தேடி வந்து ரெம்ப நன்றி மருமகனே கடிதம் வரவில்லை என்றதும் நமக்கெதுக்கு வம்பு என்று இருக்காமல் அக்கறை எடுத்தீர்களே இந்த மாதிரி தங்கமான குணம் யாருக்கு வரும் என்று வாயார பாராட்டினார்கள்.
சில சமயங்களில் இதுமாதிரி எல்லாம் நட்பதுண்டு. தப்பு செய்தாலும் பாராட்டு கிடைக்கும். இதைத்தான் பெரியவர்கள் எல்லாம் நேரம் என்பார்கள். சனி ஞாயிறு நாட்களில் வீட்டில் பெண்கள் கூட்டம் அதிகமிருக்கும். நானும் அலட்டிக் கொள்வேன். அதுவெல்லாம் ஒரு தனி கலை. தானாகவே வரவேண்டும் காசு கொடுத்தெல்லாம் கற்றுக் கொள்ளமுடியாது.
கடிதம் எழுதுவதற்கு வரும் பெண்கள்
அவர்களது பெண்களையும் அழைத்து வருவார்கள். வரும்பெண்கள் பெரும்பாலும் எல்லாம் என் வயதுப் பெண்கள். அதில் சிலர் ஒன்றிரண்டு வயது சிறியவர்களாகவே பெரியவர்களாகவோ இருப்பார்கள். கிராமத்துப் பெண்கள் என்றாலும் அழகாக இருப்பார்கள். அதிலும் அப்பெண்களின் தாய்மார்கள் எல்லாம் எனக்கு அத்தை முறை. எனவே அந்த அத்தைகளெல்லாம் மருமகனே கடிதத்தை சரியாக எழுதிக் கொடுங்கள் என் மகள் சொரணம் உங்களுக்குத்தான் என் மகள் பத்மா உங்களுக்குத்தான் என்று சொல்லும்போது எனக்கு ஒருமாதிரியாக இருக்கும். அப்போது அப்பெண்களப் பார்ப்பேன்.
அப்பெண்களும் என்னைப் பார்ப்பார்கள். என்னைப் பார்த்தவுடன் அப்படியே நாணிக் கோணுவார்கள். உடனே இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் என் தாத்தா என்னம்மா பேசுறீங்க நீங்க, உங்க பெண்களெல்லாம் என்பேரன் பக்கத்துல் நிற்க முடியுமா அவனுக்கு நான் சீமையில இருத்து பெண்ணைக் கொண்டுவருவேன் என்று சொல்லி அப்பெண்களின் சொற்ப ஆசையிலும் எனது அற்ப ஆசையிலும் மண் அள்ளிப்போட்டு விடுவார். அவர் அப்படிச் சொன்னதும் அந்த பெண்மணிகளின் முகங்களும் வாடத்தொடங்கின. தாத்தா வேடிக்கையாகத்தான் சொல்வார்
என்றாலும் அவர்களுக்கு அது சிறிது வேதனையைத் தந்தது. உடனே அதை உணர்ந்த நான் அவர்களைச் சமாதானம் செய்வேன்.
கவலைப்படாதீங்க அத்தை. தாத்தா சொல்வதை பெரிதாக எதுவும் நீங்கள் எடுத்துக் கொள்ளவேண்டாம் நான் உங்கள் பெண்களை கட்டிக் கொள்கிறேன் என்றும் அப்பெண்களிடம் நீங்கதான் என் பெண்டாட்டி என்று சொன்னதும் அத்தைகளின் முகங்களில் புன்சிரிப்பையும் அப்பெண்களின் முகங்களில் வெட்கத்துடன் கூடிய புன்னகையையும் காணும்போது எனக்கு “ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து உன் எழில்தனைப் பாடவா தமிழைச்சேர்த்து” என்ற எண்ணம் ஏற்படும். அது ஒரு நிலாக்காலம் என்பார்களே அது இதுவாகத்தான் போலிருக்கிறது.
அன்று வழக்கத்துக்கு மாறாக எக்கச்சக்கமான கூட்டம். காரணம் ஊர்த் திருவிழாவுக்கு வரி ஓலை எழுதிவிட்டதுதான். வரி ஓலை எழுதுதல் என்பது ஊர்கூடி திருவிழாவுக்கான நாளை
முடிவுசெய்து திருவிழாவுக்காக மக்களிடம் வரி வசூலிப்பதை ஆரம்பித்து வைப்பதாகும். ஒவ்வொரு குடும்பமும் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து திருவிழாவுக்காக பணம் வசூலிக்க தொடங்கி விடுவார்கள். அப்படி வரி வசூல் ஆரம்பிக்க ஆரம்பித்தவுடனேயே ஊர்மக்கள் அனைவரும் வெளியூரில் இருக்கும் சொந்தபந்தங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி திருவிழாவுக்கு வரும்படி அழைப்பார்கள்.
அந்த காலத்தில் தொலைபேசி என்பதெல்லாம் பெரிய அளவில் கிராமப் புறங்களில் பயன்பாட்டில் இருந்ததில்லை. கிராமங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் தொலைத் தொடர்புக்கு கடிதம் ஒன்றுதான். வேறு ஏதாவது அவசரச்செய்தி சொல்லவேண்டுமானால் தந்தி கொடுப்பது ஒன்றுதான் இருந்தது. அதுவும் தபால் அலுவலகத்தில்தான் கொடுக்க முடியும். அப்படி தந்திகொடுப்பதில் பல நகைப்புக்குறிய நிகழ்ச்சி எல்லாம் நடந்திருக்கிறது. அதையெல்லாம் அப்புறமாக விரிவாகச் சொல்கிறேன்.
(தொடரும்)
-சங்கர சுப்பிரமணியன்.
![]()