வெள்ளத்தின் கொடுமையை நான் உணர்ந்தவன்!… (கட்டுரை ) ….. ஏலையா க.முருகதாசன்

பெரும் மழையாலும் வெள்ளத்தாலும் தொடங்கியிருக்கும் நிவர் புயலாலும்; தமிழகம் திக்குமுக்காடி வருகின்றது.மக்கள் அடுத்து என்னென்ன நடக்குமோ என்று கலங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இயற்கை இடரில் அகப்பட்டு அதன் பிடிக்குள் சிக்கி அவதிப்படும் மக்களாக நாமிருந்தால் அதன் வலியை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.வெள்ளத்தினால் ஏற்பட்ட இடரின் வலி எனக்கும் உண்டு.
தமிழக அரசும் தம்மால் முடிந்தளவு வெள்ளம் வரும் முன் காப்போம் என்ற ரீதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள் எனக் காவல்துறையினர் அறிவுறுத்திக் கொண்டிருந்த போதும் அதைப்பற்றி எந்த அக்கறையுமில்லாமல் புதினம் பார்க்கவென மக்கள் வெளியே வந்து கொண்டுதானிருக்கிறார்கள.;
அவரவர் வீட்டுக்குள் வெள்ளம் புகாமல் இருக்கும் வரையும்,அவரவர் வீட்டுக்கு மேல் மரங்கள் முறிந்து விழாமல் இருக்கும் வரையும், அவரவர் வயல்களுக்குள் வெள்ளம் புகுந்து பயிர்களை நாசம் செய்யாமல் இருக்கும் வரையும் இயற்கைப் பேரிடர் அனர்த்தங்கள் யாவும் அவரவர்க்கு வெறும் காட்சிகள்தான்.
எமது நாட்டின் வடக்கு கிழக்கிலும் இந்த நிவர் புயலின் தாக்கம் இருக்கும் என்று சொல்லப்பட்ட போதும் இதுவரையில் செய்திகள் வாயிலாக மழை வெள்ளம் புயல் போன்றவற்றின் தாக்கம் பற்றிய விபரங்களை அறிய முடியவில்லை.
எனது முகநூல் வட்டத்தில் இருக்கும் நணபர்களுக்கு வெள்ளத்திற்குள் வாழ்ந்த அனுபவம் இருக்குமோ தெரியாது. ஆனால் எனக்கிருந்தது.
சிலபேர் அந்த இடர்களை சந்தித்திருந்த போதும் அதையேன் எழுதுவான் என யோசித்து அதைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கலாம்.அது அவரவர் விருப்பம்.
எமது வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ அவை எம்மோடு சார்ந்தவையாகவும் இருக்கலாம் அல்லது எம்மோடிணைந்த மற்றவர்கள் சார்ந்தவையாகவும் இருக்கலாம்.
அவை இனிமையான அனுபவங்களே.அவற்றைப் பதிவிடுவதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும்.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் பற்றிய செய்திகளை வாசிக்கும் போது.எங்கள் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்த சம்பவங்கள் ஞாபகத்திற்கு வரும்.
தெல்லிப்பழையில் மகாஜனக்கல்லூரிக்கு மிக அருகில் மேற்குப் பக்கத்தில் அம்பனைக் குறிச்சியில் எங்கள் வீடு இருந்தது.
நாங்கள் இருந்த காணிக்குப் பெயர் தோதரை.தோதரை என்றால் பயிர் வகைகளோ மரங்களோ இல்லாமல் வெறும் வளர்ந்த புற்களே இருக்கும் நிலத்திற்குப் பெயர்தான் தோதரை.
இப்படியான நிலத்தை அவை எங்கிருந்தாலும் தோதரை என்றுதான் அழைப்பார்கள்.நாங்கள் இருந்த காணிக்குள் கிட்டத்தட்ட 80 சென்ரிமீற்றர் உயரத்திற்கு ஒரு வகை புல்லு வளர்ந்திருந்திருக்கும்.
நெல்லுக்கதிர்கள் போல இந்தப் புல்லுக்கதிர்கள் வளைந்திருக்கும். புல்லுக்குள்ளால் நடந்து போனால் கதிரில் இருக்கும் கூரிய பகுதி குத்தும். உடைகளில் புல்லின் கூரிய பகுதி உடைகளுக்குள்ளால் குத்துவது மட்டுமல்ல உடைகளில் புல்லின் விதை குத்தியபடியே இருக்கும்.
நாங்கள் இருந்த காணி பள்ளக் காணி.நாங்கள் கட்டிய வீடு கிடுகால் வேயப்பட்டு அரைக்குந்து வைச்சு,தட்டிய கட்டிய வீடு(அந்த வீட்:டை பின்னர் அகலமாக்கியதும் „ட’ னா வடிவில் சீமெந்தில் விறாந்தை போட்டதும்,பிறகு அண்ணை கல்வீடு கட்டியதும் வேறொரு கதை) அடுப்படியை மண் போட்டு மேடாக்கி பனைமட்டை வரிச்சுத் தட்டி வீடு.உயரமான மேட்டில் கட்டிய போதும் நிறை வெள்ளம் அடுப்படிக்குள் கசிவை ஏற்படுத்தி நீர்த்தன்மையை உண்டாக்கி விடும்.
எல்லாருடைய வளவிலையும் பெய்கிற மழை, அவர்களின் வளவுக்குள் வருகிற வெள்ளம் என அனைத்து மழை நீரும் எமது வளவுக்குள் வெள்ளமாகி வீட்டுக்குள் புகுந்துவிடும்.
வெள்ளப் பிரச்சினை நடந்த காலம் அண்ணை கொழும்பிலை வேலை செய்த காலம்.
அப்பு ஒரு கட்டிலில் படுத்திருப்பார்.ஒரு சின்னக் கட்டிலை எடுத்து அதே நீளமான வாங்கினை ஒன்றோடு ஒன்றாகக் கட்டி அகலமாக்கிய கட்டிலில் அம்மாவும் நானும் படுப்போம்.
பகலில் வீட்டுக்குள் வெள்ளம் புகுவது போல இரவில் சத்தம் போடாமல் வெள்ளம் புகுவதும் உண்டு.
வெள்ளத்தின் அறிகுறிகுறிகளகை; கண்டு அப்பு அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடுவார்.மேலே குறிப்பிட்ட மாதிரி சின்னக் கட்டிலையும் வாங்கையும் இணைத்து பெரிய கட்டிலாக்கி விடுவார்.
ஒரு வெள்ளத்தின் போது வெள்ள நீர் வீட்டுக்குள் புகுவது சலசலவென்று கேட்டது.
வெள்ளம் கீழே நாங்கள் மேலே படுத்திருந்தோம்.அது பரிதாபத்திற்குரிய நிலை என்றாலும் அதிலும் ஒரு மகிழ்ச்சி இருந்தது, அதுவும் இனிய
அனுபவமாக உணர்ந்தேன் இப்பொழுதும் உணர்கிறேன்.நாங்கள் ஓலை வீட்டில் வாழ்கிறோமே என்று ஒருநாளும் கவலைப்பட்டதும் இல்லை தாழ்வு மனப்பான்மை கொண்டதும் இல்லை.
கொஞ்சம் அசைந்தாலும் வெள்ளத்துக்குள்; விழ வேண்டியதுதான்.ஆனால் உடம்புக்கு எச்சரிக்கை உணர்வு இருந்ததால் நானோ அம்மாவோ வீட்டுக்குள் நின்ற வெள்ளத்துக்குள் விழவில்லை.
எங்களுடைய வீட்டோடு சேர்த்து எட்:டு வீடுகள் ஒரு குறிப்பிட்ட சுற்றளவுக்குள்: இருந்தன. இரண்டு கல்வீடுகள் உயர்த்திக் கட்டியிருந்தாலும் வெள்ள காலத்தில் அவற்றின் சீமெந்து தரையும் ஈரப்பதமாகிவிடும்.
சிங்கப்பூரில் சிலகாலம் என்ற அங்கு எனக்கு ஏற்பட்ட உண்மையான அனுபவங்களை ஒளிவு மறைவின்றி எழுதி வருகிறேன்.வெள்ள அனுபவங்கள் நிறைய உண்டு என்பதால் பின்னர் எழுதப் போகும் அனுபவப் பகிர்வில் நான் அதை எழுத இருக்கிறேன்.
இப்பொழுது சுருக்கமாகவே பதிவு செய்கிறேன்.காலமையில் அம்மா வெள்ளத்தில் நடந்து அடுப்படிக்குள் போய் கசிந்த தரைக்கு மேல் குந்தியிருக்கும் பலகையைப் போட்டு இருந்து கொண்டு காலைச் சாக்கில் வைத்தபடி அடுப்பை ஊதி ஊதி எரித்து தேத்தண்ணி போட்டு அப்புவுக்கும் எனக்கும் தந்து தானும் குடிப்பார். பிறகு அப்பு வேலைக்கு போய்விடுவார்.
நான் ஏதோ ஒரு மாதிரி கிணற்றில் வெள்ளம் கசிந்து நிற்கும் தண்ணீரில் குளித்து கட்டிலில் ஏறி நின்று உடுப்பை மாற்றிக் கொண்டு தம்பித்துரை கடையில் அமஇமா பாண் வாங்கிக் கொண்டு வந்து தர வாழைப்பழத்துடன் சாப்பிட்டிட்டு பள்ளிக்கூடத்துக்கு போய் விடுவேன்.
அப்பு வீட்டிலிருந்தால் பிக்கான் எடுத்துக் கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து றோட்:டை வெட்டி வெள்ளத்தை வெள்ளவாய்க்காலுக்குள் பாயவிடுவார்கள்.
(இன்னும் நிறைய உண்டு எனினும் எனது அனுபவப் பகிர்வில் இதனையும் எழுதுவேன்)
![]()