கவிதைகள்
பேதலிக்கும் அடியவரைப் பேணிடுவாய் முருகையா!… ( கவிதை ) கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

நல்லூரான் தேரிழுக்க நாடெல்லாம் வந்திருக்கும்
எல்லையில்லா மகிழ்வுடனே எல்லோரும் வடம்பிடிப்பார்
அல்லலினை அகற்றுவென அடியார்கள் வேண்டிடுவார்
நல்லநிலை அகன்றதனால் நாட்டுமக்கள் கலங்குகிறார் !
தேரென்று சொன்னாலே ஊர்முழுக்கக் கூடிநிற்கும்
யார்யாரே வருவார்கள் தேரிழுத்துத் தரிசிப்பார்
ஊர்முழுக்க ஆவலுடன் ஒன்றுகூடி வந்துநின்று
தேரிழுக்க முடியாமல் திணறுகிறார் இவ்வருடம் !
காவடிகள் வீதியெலாம் கணக்கின்றி வந்துவிடும்
காளையரும் கன்னியரும் களிப்புடனே குவிந்திடுவார்
குழந்தைகளின் குதூகலத்தால் கோவில்வீதி களைகட்டும்
கோவில்வீதி கட்டுப்பாட்டில் தேரோட்டம் நிகழ்கிறதே !
வாய்கட்டு கைகட்டு வயிற்றையும் கட்டென்றார்
வாழ்வெல்லாம் சுகமாக வாழ்ந்திடலாம் எனவுரைத்தார்
எதையுமே கேட்காது எப்படியோ நாம்நடந்தோம்
வாய்கட்டி கையட்டி வகையறியா நிற்கின்றோம் !
தேரேறி வருங்குமரா திருவருளைத் தந்திடுவாய்
ஊரெல்லாம் உனையணுகி உவந்தேற்ற விரும்புகிறார் 
பேரரக்கர் பெருந்துயரை வேரோடு அழிந்தவனே
பேதலிக்கும் அடியவரைப் பேணிடுவாய் முருகையா !
நல்லூரான் தேர்காண நாளெண்ணிப் பலரிருந்தார்
நல்லூரில் பண்ணிசைக்க பலபேர்கள் காத்திருந்தார்
அத்தனையும் நிறைவேறா ஆக்கிவிட்ட காலமதை
அகற்றிடுவாய் முருகையா அடிபணிந்து இறைஞ்சுகிறோம் !
![]()