கவிதைகள்

பட்டுத் தெரிந்து கொண்டேன்!… சங்கர சுப்பிரமணியன்.

தொட்டிலிட்டு தாலாட்டி அன்று தூங்கவைத்தேன்
வட்டிலில் சோறூட்டி வகையாய் ஊட்டிவிட்டேன்
பட்டுமேனியில் வெயில்படாது போர்த்தி விட்டேன்
தட்டுத்தடுமாறி நீ நடக்க கைபிடித்து நடக்கவிட்டேன்

எட்ட இருந்ததால் பள்ளிக்கு தூக்கி நடந்தேன்
கிட்ட இருந்து தெரியாததை கற்றும் தந்தேன்
துட்டில்லை என்றாலும் கடன்பட்டு படிப்பித்தேன்
இட்டபணி செய்யாதிடினும்
எதவும் நான் சொன்னதில்லை

கொட்டு மழையில் நனைந்தால் புடவையினால் மறைத்தேன்
விட்டுவிலகிடாது விழிதிறந்துமே காத்து வந்தேன்
புட்டுக்குழலில் இருந்து புட்டெடுக்க பொறுமையிழந்தாய்
தட்டிவிட்டு என்னைப் பார்த்து கைகொட்டி சிரித்தாய்

கட்டிலுக்கு கன்னியென கண்ணதாசன் சொன்னதுபோல்
கட்டழகி ஒருத்தியை உனக்கு
மணமுடித்து வைத்தேன்
தட்டாமல் தாய்சொல்லை மதிப்பாய் என்றிருந்தேன்
கிட்டாத வரமாய் உன்னைப் பெற்றதால் மகிழ்ந்தேன்

வட்டநிலா முழுதாய் வானில் மறைந்ததைப் போல
கெட்டநேரம் என எதுவும் எனை சூழ்ந்ததோ அறியேன்
விட்டு என்னை சென்று விட்டாய் என் அன்பு மகனே
பட்டுத் தெரிந்து கொண்டேன் இது ஓர் அனாதைஇல்லம் என்று!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *