கவிதைகள்

வளர்வது…. கவிதை…. முத்தழகு கவியரசன், திருநெல்வேலி

பிறக்கும்போது அறுக்கிறார்கள்.
தொப்புள்கொடி. அறுத்தப் பிறகு தான் தெரிகிறது
அது கொடி இல்லை வேர்.

தாய் மடி தான் முதல் தேசம்.
அங்கே பசி இல்லை. பயம் இல்லை.
கண்ணீருக்கு கூட அர்த்தம் இருந்தது.
சிரித்தால் உலகம் சிரிக்கும்.
அந்த தேசத்தில் இருந்து
எல்லோரும் ஒருநாள் நாடு கடத்தப்படுகிறார்கள்.
வளர்ச்சி என்ற பெயரில்.
படிப்பு என்ற பெயரில்.
பிழைப்பு என்ற பெயரில்.
பிறகு வாழ்நாள் முழுக்க
அந்த மடியை தேடி அலைகிறது மனசு.
காதலில் தேடுகிறது, நட்பில் தேடுகிறது,
கோவிலில் தேடுகிறது, குடியில் தேடுகிறது – கிடைப்பதில்லை.
ஏனென்றால் தேடுவது இடம் இல்லை.
இடம் தந்தவள்.
அம்மா செத்தப் பிறகு தான் தெரிகிறது,
அனாதை இல்லம் என்பது
அரசாங்க கட்டிடம் இல்லை.
அம்மா இல்லாத வீடு தான்.
உலகத்திலேயே பெரிய அனாதை இல்லம்.
அங்கே சோறு இருக்கும். சொந்தம் இருக்காது.
கட்டில் இருக்கும். தூக்கம் இருக்காது.
உயிர் இருக்கும். வாழ்வு இருக்காது.

அம்மா இல்லாத ஒரு நாள்.. வீடு இயங்குமா? 😢❤️#Amma #TamilShorts #MotherLove  #FamilyStory #KadhaiFactory - YouTube

இரவானால் ஒரு பயம் வரும்.
யாருக்காக வீடு திரும்புகிறோம்?
யார் கதவு திறப்பார்கள்?
யார் சாப்பிட்டியா என்று கேட்பார்கள்?
பதில் இல்லாத கேள்விகள்
நெஞ்சுக்குள் பூட்டிய அறையாகின்றன.
அந்த அறைக்கு தாழ்பாள் இல்லை.
திறக்கவும் முடியாது. ஏனென்றால் திறக்க வேண்டிய கை
மண்ணுக்குள் உறங்குகிறது.

எல்லா ஆண்களும் ஒருநாள்
நள்ளிரவில் குழந்தையாகிறார்கள்.
தலையணையைக் கட்டிக்கொண்டு
அம்மா என்று உளறுகிறார்கள்.
விடிந்ததும் மீண்டும் ஆணாகிறார்கள்.
வெட்கத்தை மறைக்க கோபமாக கத்துகிறார்கள்.
கல்லாக நடிக்கிறார்கள். ஆனால் கல்லுக்குள்ளும்
ஒரு நதி ஓடும். அதன் பெயர் தாய்ப்பாசம்.
அப்பாசம் வெளியே முகம் காட்டினால்
ஆண்மை அழிந்துவிடும் என்கிற பயம்.
மறைத்துக் கொண்டால் மனிதன் செத்துவிடுவானென்ற நிஜம்.

ஏனென்றால் அவள் போன பிறகு
அந்த வார்த்தையை சொல்ல
இந்த பிரபஞ்சத்தில் யாருமே இருக்க மாட்டார்கள்.
கத்தினாலும் கேட்காது.
அழுதாலும் திரும்பாது.
தொப்புள்கொடி அறுந்த அன்றே
எல்லாரும் அனாதை தான்.
அம்மா இருக்கும் வரை அது தெரிவதில்லை.
அவ்வளவு தான் வித்தியாசம். வாழ்க்கை முழுக்க
அறுந்துபோன ஒரு கொடியை நெஞ்சோடு வைத்துக்கொண்டு
‘வலிக்கவில்லை’ என்று பொய் சொல்ல
பழகுவதற்கு பெயர் தான்
வளர்வது.

முத்தழகு கவியரசன், திருநெல்வேலி

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button