வாழ்ந்திடவே வாழ்த்துவோம்!…. சங்கர சுப்பிரமணியன்.

வித்தொன்றை இட்டால் அது
மற்றொன்றாயும் முளைக்குமோ
சத்தொன்றும் இல்லாவிட்டால்
சாத்திரங்கள் அது சொல்லுமோ
அக்கினிக்குஞ்சென்ன ஒளிராதிருக்குமோ
ஆற்றுகின்ற பணிகளிலது
சளைத்துத்தான் போகுமோ
எரிகின்ற தணலிலே எல்லாம்
பொசுங்கிப் போகாதது போல்
சங்கு சுட்டாலும் வெண்மை
தந்தது மிளிருமாம்
இங்கு ஒளிபட்டாலும் உண்மை ஒன்றே துலங்குமாம்
கார்முகிலை விலக்கி நீந்தம்
வெண்மதிபோல
பார்புகழ அக்கினிக்குஞ்சும்
பத்தாமாண்டில் மலர்கிறதே
ஏர்பூட்டிய நிலமெல்லாம் இன்பமயமாய் விளைதல்போல
சேற்றில் நட்ட நாற்றாய் நின்று சிறப்பாய் செய்தி தந்திடுதே
ஊரிலுள்ள மக்களெல்லாம் ஓடி வந்து போற்றவே
பாரிலுள்ள நிகழ்வு யாவும் பக்குவமாய் தந்திடும்
யாருமிங்கே இதன் பெருமை ஏற்றிவைத்து இயம்பாமலே
மேரு மேலிட்ட தீபம்போல மேன்மையோடு ஒளிருமே
பத்தாவது ஆண்டிலே தடம் பதிக்கும் வேங்கையாம்
சொத்தாக நமக்கிருந்து வளம் கொழிக்கும் பாங்குடன்
வித்தாயிட்டவிதை வீரியமாய் வளர்ந்து நிற்குதே
பத்தாம் ஆண்டின் வளர்ச்சி கண்ட நாமெலாம்
இத்தரையில் சிறக்கவென்று
வாழ்ந்திடவே வாழ்த்துவோம்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()